வியாழன், 16 செப்டம்பர், 2021

சிங்கப்பூர் கோவிட்நிலவரம்

 [Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 17]


செப்டம்பர் 16, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 837 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 77 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், 98.2 விழுக்காட்டினருக்கு மிதமான அல்லது அறிகுறிகள் ஏதும் இல்லை; 1.6 விழுக்காட்டினருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 0.1 விழுக்காட்டினர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்; 0.0 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். 

  

செப்டம்பர் 15 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 82 விழுக்காட்டினர் முழுமையாக/இரண்டு தடுப்பூசிகளைப்  போட்டுக்கொண்டுள்ளனர்; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


செப்டம்பர் 16 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 910 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh160921

மக்களைக் கவராத படைப்பாளிகள் --- சிதறல்

 இவையெல்லாம் மக்களுக்கு விரித்துவைத்தேன் எடுத்துரைப்பேன்,

நவையில்லா  நற்கருத்தே  நானுரைத்தேன்  என்றிருப்பான்

அவையென்றும்  அஃதில்லா  இடங்களிலும்  எழுத்தறிஞன்;

"சுவைதந்தேன்  கற்பவர்க்கே"   எனஇவைக்கு  மகிழ்பவனாம்.


மக்களென்ற பேருலகோர்  மயங்கிவிடார் இவைகளிலே;

தக்கதிததாம்  என்பதிலே  தயங்கிநின்றே இயங்கலின்றி .

ஒக்கவுறை   தலைப்பினையே ஒருமுறைதான் பார்த்தபடி,

மிக்கபிற  பாற்செல்வார்  படைப்பாளன் உடைப்புறவே..


இந்தச் சிறுகவிதை எளிமையாக உள்ளது.  கடினமொழிகள் எவையும் இல்லை. சில சொற்களின் பொருள்:  நவை -  குற்றம்    அவை - சபை.   அஃதில்லா - சபை இல்லாத.   இயங்கலின்றி -  படித்துவிட்ட பொருளறிய முற்படுதல் முதலிய முயற்சிகள்.  ஒக்கவுறை  -  உடன் இருக்கின்ற.  மிக்க பிற -  கூடுதலான மற்றவை.. படைப்பாளன் -  எழுத்தாளன், கவிஞன் முதலியோர்.  உடைப்புற - தன் திண்மை அல்லது ஊக்கம் அழியும்படி.

 


முல்லை நிலம்: பெயரமைவு

முல்லைப் பூ மிக்கச் சிறப்புடையது என்று தமிழிலக்கியம் பாராட்டுகிறது. முல்லைப்பாட்டு என்பது பத்துப்பாட்டுகளில் ஒன்று, சங்க இலக்கியம் மூலமாகத் இற்றைத் தமிழர் பெற்ற நற்பேறு அல்லது பாக்கியமாகும். பாக்கியமென்பதே  பகு+ இயம் > பாக்கியமென்று முதனிலை நீண்டு உருப்பெற்ற தொழிற்பெயராகும். பகுத்துணரப் பட்டவற்றுள் சிறப்பானதே பாக்கியம் என்று வரையறவு செய்து அதன் உயர்வை உணர்தல் தலையாம்.

மேலும் முல்லைப்பூ என்பது கற்பின் காட்சி  ஆகும்.  இப்பூ வெண்மை நிறம். மனவெண்மை நடத்தையில் தூய்மை.  முல்லையின் பெருமையைப் பலர் எழுதியுள்ளமையின், அதை ஆங்குக் கண்டுகொள்க.  இவற்றைக் கவனிக்கவும்.

முல்லை காடுறை உலகின் காட்சிப்பூ.  காடுகள் குறுகியே நாடுகளும் நகர்களும் தோன்றின.  காடுடைய நிலம் முல்லை நிலம். இந்நிலங்கள் தமிழரிடை  முன்மைத்தன்மை பெற்றன.

முல்  -  முன்னே உள்ளது.

முல் > முள் :  முன்னிருப்பதால் குத்துவது. அல்லது முன்னே கூர்மையுடைத்தாய்க் குத்துவது.   அடிப்படைக் கருத்து முன் என்பதே ஆகும்.

முல்  > முன்  லகர 0னகரப் போலி.

முல் > மூல்  (  சொல் நீட்சி),   அம் விகுதி பெற்று மூலம் ஆகும்.

முல் > மூல் > மூளுதல்.  மூளுவதென்பது தோன்றுவது.  தோன்றுதலில் முன்மைக் கருத்து உள்ளுறைவு  ஆகும்.

இவற்றை இங்கு விரிக்கவில்லை.  சென்ற நூற்றாண்டில் அறிஞர் பலர் இதனை விரித்துரைத்துள்ளனர்.  அங்குச் சென்று காண்க.

எனவே முல்லை நிலம் என்றால் முன்மை வாய்ந்த நிலம் என்பதுணர்க.  மனிதரும் விலங்குகளும் வாழ்தலுக்கு ஏற்ற நிலம்.  மற்றவை ஏற்புடையன அல்ல என்பது பொருளன்று.  மனிதன் அண்டிவாழ ஏற்ற முதன்மைவாய்ந்த நிலம்.  ஆதியில் மனிதன் அங்கிருந்த மரங்களில் வீடுகள் கட்டிக்கொண்டு,  கொடிய விலங்குகளிடமிருந்து தப்பி, காய்களும் கனிகளும் உண்டு பின்னர் முன்னேறி, நகரவாழ்நன் ஆனான்.  இதை விரித்துணர்ந்து கொள்க.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

=====================================================================


பின்னிணைப்பு:-

கோவிட் பற்றிய செய்திகள்:

கோவிட் ஆய்வில்,  தொடர்புற்றவை தொடர்பற்றவை என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியதில்லை என்று இப்போது நம்பப்படுகிறது. இதைப் பற்றிய செய்தியை இங்கு வாசித்தறியுங்கள்.


 https://theindependent.sg/experts-say-no-need-to-distinguish-linked-and-unlinked-covid-19-cases-during-endemic/


வேலையிடங்களில் சில மாற்றங்கள் நடப்புக்கு வருகின்றன என்று அறியப்படுகிறது.  மருத்துவமனைகள் கோவிட் நோயாளிகளால்  படுக்கை வசதிகள் முதலியவற்றில் நெருக்கடியைச் சந்திக்கக்கூடும்.

சந்தைகளில் காய்கறிகளைத் தொட்டுத் தேர்ந்தெடுப்பவர்களால் கிருமி பரவக்கூடுமென்று இப்பொழுது கருத்துகள் தோன்றியுள்ளன.


[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 10]


செப்டம்பர் 9, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 664 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 26 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


மொத்தத்தில், புதிதாக 457 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

செப்டம்பர் 8 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்*; 83 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


_*இரண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டோர், அல்லது குணமடைந்து, பின்னர் ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டோர்_


go.gov.sg/moh090921