திங்கள், 6 செப்டம்பர், 2021

அர்ப்பணிப்பு - அற்பணிப்பு விளக்கம்.

 இன்று அர்ப்பணிப்பு என்பதன் பொருளை உணர்வதுடன்,  இதை அற்பணிப்பு என்று எழுதின் பொருள் என்னவாகும் என்பதையும் இன்னொரு திரிபையும் அலசுவோம்.

அர் என்ற அடிச்சொல் ஒலித்தொடர்பைக் காட்டுவதாகும்.  அர் -  அரட்டு என்பதில் ஒலி மேலிடுவதையும் அதனால் அச்சம் உறுத்துவதையும் தொடர்பு காட்டும்.   இந்தச் சொல் அதட்டு என்று திரியும்.  இங்கு ரகர தகரத்  திரிபு நம்முன்  வருகிறது .  சொற்களெல்லாம் ஒலியினால் ஆனவை என்பதால்,  ஒலிக்குப் பொருளை உணர்ந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  அதனால்தான் " அர்த்தம்" என்ற சொல் உலவுகின்றது.  அர்ச்சனை என்றும் அருச்சனை என்றும் சொல்வது.  ஒலியுடன் கூடிய ஒரு தொழுகைமுறையைக் காட்டுகிறது.  அர் > அராகம் என்ற செய்யுள் உறுப்பும் ஒலியைச் சுட்டுவதே ஆகும்.  அது பின் இராகம் என்று திரிந்து பாடும் முறையையும் குறிக்கும்.  இகரம் இழந்து ராகம் என்றும் அது உலவும்.

அர் - அரவம் என்பது ஒலியைக் குறிக்கும்.

சில ஒலிகளை எழுப்பியவாறு ஒரு பொருளை ஒரு தொழுகையில் முன் வைத்தல் அர்ப்பணிப்பு என்று உணரலாம். பிற்காலத்தில் ஒலியுறவு ஏதுமின்றி அவ்வாறு முன் வைத்தலையும் குறிக்கப் பொருள் விரிந்தது. இச்சொல் பின் பொருள்விரிந்து ஒலியின்றி முன்வைத்தலையும் குறித்தது இயல்பே ஆகும்.

இதனை இவ்வாறு செய்க என்று ஏவப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ளும் செயலைக் குறிக்கவும் "பணிப்பு" என்பது வழங்கும்.  " இதைஎழுதப் பணித்தனர்" என்ற வாக்கியத்தில் இப்பொருள் காணலாம்.  அவ்வாறானால் அற்பணிப்பு என்பது பணிப்பு அற்றநிலையில் ஒன்றைச் செய்தலைக் குறிப்பது தெளிவாகும்.  ஆகவே  அர்ப்பணிப்பை   அற்பணிப்பு என்று எழுதினால் பொருள் மாறிவிடும்.  அல்+ பணிப்பு > அற்பணிப்பு, அதாவது பணிப்பு இன்மை நிலை.

இன்மை அன்மை இவற்றிடை ஒரு நுட்ப வேறுபாடு உள்ளது.

ஓர் அரிய பணிப்பு என்று பொருள்படுவதே  அருப்பணிப்பு  ஆகும்.   அருமை+ பணிப்பு  >  அரும்பணிப்பு,  இது வலித்துவரின் அருப்பணிப்பு என்னலாம்.  இப்புனைவு எங்கும் கையாளப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே  அர்ப்பணிப்பு,  அருப்பணிப்பு,  அற்பணிப்பு,  அரும்பணிப்பு  என்ற ஆக்கங்களைக் கண்டு இன்புறுக.

இவற்றுள் அர்ப்பணிப்பு என்பதே பயன்பாடு கண்டுள்ளது.ஏனைத் தொடர்புடைய சொற்கள் ஈண்டு உட்பாடு காணவில்லை: அவை அர்ப்பணம் எனற் றொடக்கத்துச் சில..



அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மருத்துவமனை சென்றுகாணல்

இந்தக் கோவிட் காலத்தில் வெளியிற் செல்லமுடியவில்லை.   யார் நோய்வாய்ப் பட்டிருந்தாலும் தெரியவந்தால் சென்று ஆறுதல் கூறுவது ஒரு  நல்வினை ஆகும்.  கோவிட் காரணமாக இந்நல்வினையை ஆற்றமுடியவில்லை.  அதைக் கூறி வருந்துகிறது இப்பாடல்.


எங்கும்  போக முடியாத இவ்வேளை

எந்நோயும் வாரா  முன்னம்,

நன்கு   தூய்மை  நாட்டினது  நோய்மனை 

அங்கேனும்  போவோம்  என்றால்,

கண்கள்  காலொடும்  அணியமே ஆனாலும்

எண்ணுங்கால் தடையுண் டேகாண்,

பண்ணென்    றியாரும்  பகிராத தொன்றுண்டு

பாவிமுடி   முகியாம்   தொற்றே.   1

 

நோய்மனை - மருத்துவமனை

அணியமே  - தயார்  ( ஆங்கிலம்  ரெடி)\

எண்ணுங்கால் -  கருதும்போது

முடிமுகி -  கோவிட் 19

தொற்று - தொற்றுநோய்.

பண்ணென்று  -  இசை என்று

பகிராத -   தம்முள் ஏற்றுக்கொள்ளாத

முடிமுகி -  மகுடம்போன்ற முகத்தை உடைய கோவிட் நோய் நுண்மி.


இது கோவிட்டுக்கு முன்னுள்ள நிலைமை:

வீட்டில்நாம்  தூங்குதல் விடுத்தாங்கு   நோயுற்றார்

தமைச்சென்று காணல் நன்றே

கூட்டில்  இருப்பெனக் கூவித்தான் வருந்திடுவர்

குறையில்லை காணின்  அன்னார் 

வாட்டும் நோயினில் வாழ்த்தொலி போய்த்தந்தால்

வான்நலமே  அதுவே  என்றே

ஊட்டுக உணவினை நாட்டிடுக நற்செயலே

ஈட்டிடுக நல்ல  பயனே.        2


கூட்டில் இருப்பு =  ஒரு அடைக்கப்பட்ட இடத்தில் இருப்பது

வருந்திடுவர் -   அடைபட்டுக் கிடக்கிறோம் என்று துயர்ப்படுவர்.

வான்நலமாம்  - உயர்ந்த நன்மை

ஊட்டுக உணவினை = அவர்களுக்கு உணவு தருக என்பது.

மற்றவை எளிய சொற்கள். அவற்றின் பொருள் நீங்கள்

அறிந்தது.


வாசித்து மகிழ்க. 

மெய்ப்பு பின்னர்


ஆசிரியர் குறிப்புகள்

இவ்வரிகள் நீக்கப்பட்டன.

{என்னென்    றியாரும் எட்டவேஓ   டுந்துன்ப

இயல்பினதா   முண்டோ மற்றே.}


2                    2            3                    3

3                    2                2

2                    2            3)                    3



சனி, 4 செப்டம்பர், 2021

அதரம், இதழ், பாலிகை.

 அதரம் என்ற சொல் முன்னர் நம் வலைப்பூவில் விளக்கம் பெற்றது.  அது இங்கு உள்ளது.  சொடுக்கி அதில் கூறப்பட்டுள்ள யாவையும் அறிந்துகொண்டு மேலே தொடர்வது மேலும் தெளிவைத் தரும் என்பது எம் நம்பிக்கை.  அவ்வாறின்றிக் குழப்பம் ஏதும் விளைந்தால் நீங்கள் பின்னூட்டம் இடுங்கள்.

சொடுக்குக:

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_23.html

அதரம் என்பதற்கு இன்னொரு பெயர் உதடு அல்லது உதடுகள் ஆகும். மேலுதடு, கீழுதடு என்று இரண்டு கடைப்பாகம் ஒட்டி முடிவதால் சிலர் பன்மையில் கூற விழைதல் கூடும். உதடு என்றாலும் உதடுகள் என்றாலும் யாம் ஒப்புவோம். கண்களைப்போல் உதட்டுக்கு இடைவெளி அதிகமில்லை.  இருபகுதிகளும் இணைப்புறுபவை.

உதடு சொல்லமைப்பு:

உதடு என்ற சொல்லினமைப்பைக் கண்டுவிட்டு அப்பால் பாலிகை என்பதன் விளக்கத்தைக் காண்போம்.

உதடு என்ற சொல்லின் உது அடு என்று இரு உள்ளுறைவுகள் உள்ளன.  உது என்பது சுட்டடிச்சொல்.  உ - முன்னிருப்பது.   து என்பது விகுதி.  இச்சொல் உதடு இரு பகுதியான உறுப்பு என்பதைத் தெரிவிக்கிறது.  இத்  து  விகுதியுடன் அ என்ற பன்மை விகுதியும் இணைகிறது.  இதனால் இது உத என்ற நிலையை அடைகிறது.   அடு என்ற சொல் தொடர்ந்து வந்து,  இரண்டும் அடுத்தடுத்து இருப்பன என்பதைத் தெளிவு செய்கிறது.

உ + து + அ + அடு >  உது + அ + ( அ ) டு  >  உதடு ஆயிற்று.  இங்கு ஓர் அகரம் கெட்டுச் சொல் அமைந்தது காண்க.

பாலிகை

பால் என்பது பகுப்பு என்று பொருள் படும் சொல்.  உதடு என்ற உறுப்பு   இருபால் பட்டு நிற்கிறது. ஒவ்வொரு பகுதியும் பல்வரிசையை மூடிக்கொண்டு நிற்கின்றது.  எனவே உதட்டுக்கு இன்னொரு பெயர் அமைக்கவேண்டுமானால் அதற்குப் பால் என்பது பொருத்தமான சொல்லே.

பால் - பகுதி.

பாலி  -  இகரம் பகுதியை உடையது என்ற பொருளைத் தரும்.

கை  -  இது ஒரு  விகுதி.  அல்லது சொல்லிறுதி.

பாலிகை என்பது இரு பகுப்பு உடைய உறுப்பு என்பதையே கோட்டிட்டுக் காட்டுகிறது.

எனவே  பாலிகை உதட்டுக்கு நல்ல இன்னொரு பெயராய் அமைந்தது காண்க.

இது காரண இடுகுறி ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.