ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அரோகம் - சுகம், அசுகம் இரண்டும்

 சிலர் எப்போதும் " சுகமாகவே" இருக்கிறார்கள்.  சிலர் சிலவேளைகளில்தான் சுகம் காண்கிறார்கள்.  வாழ்வின் பேரளவு துன்பத்தில் அவர்கட்குச் சென்றுவிடும் போலும். எல்லாம் இன்பமயம் என்பார் ஒருபுறமிருக்க, எல்லாம் துன்பமென்பாருமுண்டு.  வேறுசிலர், தத்துவக் கருத்தாக, இன்பம் யாவுமே பின் துன்பமாகிவிடும் என்றும் கூறுவதுண்டு.  இன்பம் துன்பமிரண்டும் ஒரே கிணற்றில் ஊறிய மட்டைகள் என்னலாம் போலிருக்கின்றது.

சிலருக்கு இன்பம் அரிய பொருள் ஆகிவிடுகிறது.  அரியது என்றால் அடிக்கடி கிட்டாதது.  சிலருக்குத் துன்பம் அரியது.

துன்பம் வாராமல் காத்துக்கொள்தல் எவ்வாறு என்று புத்தர்பிரான் அருளியிருக்கிறார்.  பிறரும் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

எது சரி, எது தவறு என்பதைவிட, ஒவ்வொருவரும் தாம் பட்டறிந்த படியே இதில் எண்ணுவர் என்பதே உண்மை.

சுகம் என்பது ஓர் உகந்த நிலை.   உக >  சுக > சுகம்.  அகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பது சொல்லியலில் தெளிவான முடிபு ஆகும்.

சுகம் அல்லாதது அசுகம் என்பர்.   அல் ( அல்லாமை) > அ ( கடைக்குறை ) > அ + சுகம் >  அசுகம் ஆகும்.

இன்று நாம் அரோகம் என்ற சொல்லை  அறிந்துகொள்வோம். 

இன்பம் துன்பம் என்பவை, சிலருக்கு அரியவை;  சிலருக்கு அவ்வாறு அல்லாதவை.

ஓங்குவதென்பது,   மிகையாவது.  ஓங்கு(தல்) >  ஓகுதல் > ஓகு+ அம் > ஓகம் ஆகும்.

அரிதாக ஓங்குவது அரு+ ஓகம் > அரோகம்.  அது துன்பமாகவும் இருக்கலாம்; இன்பமாகவும் இருக்கலாம்.  நோய் - துன்பம் ஆகும்.

ஓகம் இடைக்குறைச் சொல்.

ஆகவே அரோகம் என்ற சொல்லுக்கு இருபொருளும் உள.  ஒன்று சுகம், இன்னொன்று அசுகம் அல்லது நோய்.

ஆகவே அரோகம் என்பது இரண்டும் குறிக்கும் பொதுச்சொல்.  இன்பம் துன்பம் அவ்வப்போது ஓங்கி நிற்கும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சனி, 21 ஆகஸ்ட், 2021

அம்மா அருள் பொழிக




படம் எடுத்தவர்  திரு ஜீவா கரு.


கவிதை:



சிந்துகவி


விதிமுறைகள் 
(கோவிட் கட்டுப்பாடு):


 புதிய விதிகளைக் கண்டனர் ----  நோய்ப்

போக்கின் கடுமையை   வென்றிட,

இதுவே செலும்வழி என்றனர் ---  பிறர்

எவரும் வராநிலை கொண்டனர்.    (1)


பூசை நடத்தல்


சிலவரே ஆதரித்  தோர்வர  --- பூசை

செவ்வனே சென்றதே துர்க்கையின்,

மலரழ கேயலங்  காரமே --- கண்டு

மலைத்தன நம்மனோர் உள்ளமே!     (2)


அம்மனை வேண்டுதல்


நோய்வரும்  வாயடைப் பாய்நலம் ---  அம்மா!

நுடங்கா  மலேவரச் செய்திடு!

வாய்வயி றானவை நெஞ்சுடன் ---  நல்ல

வன்மை அடைந்திட நல்குவாய்.    (3)


பூசை முடிவு


ஆவன செய்தனர் பூசைஓர் --- மணி

அடுத்து வராமுனம் ஆனதே!

மேவு மகிழ்வொடும் வந்தவர்  ----  அருள்

பெற்ற நிறைவொடும் ஏகினர்.  (4)


சிவமாலாவின் கவிதை.


பொருள்:

செலும் - செல்லும் (தொகுத்தல் விகாரம்)

நோய் வரும் வாய் - நோய் வரும் வழி.

நலம் - எல்லா நலமும் அல்லது பிற நன்மை யாவும்

நுடங்காமலே - உடல்நலம் கெடாமல்.

பிற நலம் வந்தாலும் உடல்நலம் கெட்டால் பயனில்லை.

வராநிலை -  தடை.

வராமுனம்  -  வரா முன்னம்.   (முன்னம் -  முன்பு.)

நம்மனோர் -  நம் மக்கள்




அறிக மகிழ்க.

மீள்பார்வை பெறும்.

   

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

மழை வெள்ளம் சிங்கப்பூர்

 

நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்

மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்

வாரி சூழுல கில்காண் வருத்தும்

மாறு பாடுகள் மலைவுறப் பலவே.


நிரப்போர் -  கெஞ்சுவோர்

பொழிவு - கொட்டுதல்

வாரி - கடல்

மாறுபாடுகள் -  எதிர்மாற்றங்கள்

மலைவு - கடவுள் ஓரிடத்தில் ஒன்றை அதிகமாகவும் 

இன்னோரிடத்துக் குறைவாகவும் தருதல் ஏன் என்னும்

ஐயப்பாட்டு நிலை  உண்டாகுதல்.





கொஞ்ச நேர மழை.  வெள்ளப்பெருக்கு.  தொடர்வண்டி மேம்பாலம் அருகில்.




For more news on this topic:  pl click,