கோவிலில் ஒரு சிலைக்குப் பூசனைகள் ஆகம விதிகளின்படி செய்து வைத்தார்கள் என்றால் அது அப்புறம் வைத்த இடத்திலிருந்தே நகர்வதில்லை. நகர்த்தப்படுவதும் விலக்கப்பட்டுள்ளது. அப்படியில்லை என்றால் எவனும் அதை நகர்த்தித் தான் உறங்குமிடத்துக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்வான். [ சிலைத்திருட்டு ] விட்டால் என்ன தான் செய்யமாட்டான் மனிதன்? அப்படிச் செய்ய நினைப்பவன் உலகில் இல்லை என்று யாராலும் உறுதியாகக் கூறவியலாது. அதை மாற்றிடத்தில் வைப்பதென்றால், கோவில் அலுவலர்கள் அதை முடிவு செய்து இடமும் முறைப்படி தேர்வு செய்து, மீண்டும் பூசனைகள் இயற்றி, அப்புறமே நகர்த்தவேண்டும். இது பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
சிலை கடவுள் இல்லை என்று சொல்லலாம். கடவுள், தான் எங்கெல்லாம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறாரோ அங்கெல்லாம் இருப்பார். அந்தச் சிலையில் உள்ளிருப்பேன் என்று எண்ணிவிட்டால், அவர் அங்கிருப்பார். அவருக்கு நாம் ஒன்றும் அக்கா தங்கை இல்லையென்பதால் அது நமக்கும் தெரியாது. தெரியும் என்போனுக்கும் தெரியாது. அவருக்கு நாம் வரையறைகள் செய்யமுடியுமானால், நாம் கடவுள்களாக வேண்டும். அதனால்தான் அவர் எல்லாம் வல்லார் என்கின்றோம். இப்போது மீண்டும் சிலைக்கு வருவோம்.
சிலை அமர்த்தப்படும் இடம், அதனை விடுக்கும் இடம். "அவர்" விடப்பட்ட இடம். அது விடுக்கும் இடத்தில் இருக்கும். விடுக்கும் என்ற எச்சத்தில் முக்கிய எழுத்துகள் விடு + கு இவைதாம்.
விடு + கு + இரு + அகம் > விடுக்கிரகம் > விக்கிரகம். ஆகும்.
வினைப்பகுதியிலிருந்து விகுதி சேர்த்து அமைக்கப்படுவது சொல் என்பது அரிச்சுவடிப் பாடம். அதிலிருந்து மேல் எழ வேண்டும்.
இங்கு டு என்ற கடின ஒலி விலக்கப்பட்டுச் சொல் அமைந்துள்ளது இது கடின ஒலிச்சொற்களில் இயல்பாக நடைபெறுவது. க ச ட த ப ற கடின ஒலிகள். இவற்றை எடுத்துவிட்டுச் சொல் அமைப்பது நமது முன்னோர் கண்ட தந்திரம்.
கடின ஒலிகள் விலக்கச் சொற்கள் பல முன் இடுகைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. படித்துப் பட்டியல் இட்டுக்கொள்ளவும்.
இதைச் சரியாகப் புரிந்துகொள்ளான், இதன் அமைப்பை அறிந்துகொள்ளான்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.