வியாழன், 5 ஆகஸ்ட், 2021

பேய்மாதம் வந்துகொண்டிருக்கிறது.

 சீனர்களின்  " காலகண்டரில்"  ( காலத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஏடு அல்லது பொருளடைவு ) சொல்கிறபடி  அவர்களின் ஏழாவது மாதம் ஒரு பேய்மாதம். அது வந்துகொண்டிருக்கிறது.

அதற்கு முன்னறிவிப்பாக, பேய்க்காற்று  வீசுகிறதாம்.  அதைப் பற்றிய ஒரு செய்தி அண்மையில் வெளிவந்தது.  அதனைப் படித்துப்பாருங்கள்.


https://theindependent.sg/eerie-wind-sound-captured-on-video-reminds-netizens-the-seventh-month-ghost-day-is-nearing/

எது எப்படி இருந்தாலும் முடிமுகி நுண்மிநோய் ( கோவிட் 19 கொரனா) கூடிவிடாமல் இருந்தால்  அது நம் முன்னோர்செய் தவப்பயன் ஆகும்.

பேய் -- வர எண்ணலாம்.  ஆனால் சிங்கப்பூருக்கு வருவதாய் இருந்தால் அதற்கு கடவு ஏடு ( பாஸ்போர்ட்) வேண்டும். அப்புறம் இரண்டு வாரமாவது தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். சும்மா கைவீசிக்கொண்டு வந்துவிட  முடியுமா என்ன ---  என்று நம் இணையமகார்கள்  ( நெட்டிசன்) கேட்டுள்ளார்கள்.    

கட்டுரை ஆங்கிலத்தில்:  குமாரி பீட்ரிஸ் டெல் ரொசாரியோ.

கூகுள் தமிழாக்கம் செய்துகொள்ளலாம்.


செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

'தெய்வன்' 'தெய்வி' தெய்விகம்

 தேவன், தேவி என்ற சொற்கள் பலபொருட் சொற்கள். தேவன் கடவுளையும் குறிக்கும். தேவி என்பதும் கடவுளைப் பெண்ணாகக் கொண்டு குறிக்கும். தேவன் தேவி என்பன மனிதருள் அரச பதவி உடையோரையும் குறிக்கும்.  இவையல்லாமல்,  இயற்பெயர்களாகவும் வரும்.  ஒரு குழுவாரிடைப் பட்டப்பெயராகவும் வரும்.  இச்சொல் தன் அன் விகுதியை இழந்து தேவ் என்று மட்டும் வழங்கும்.  தமிழ் ஆய்வாளர்கள்,  தேய் என்பதே இச்சொற்களுக்கு அடிச்சொல் என்று முன்னர் விளக்கியிருக்கிறார்கள். பிசைந்த மாவை மீண்டும் பிசையத் தேவையில்லை என்பதுபோல்,  இவை தமிழிற் போந்த சொற்களென்பதை முன் ஆய்வுகளே விளக்குவதால், நாம் அவற்றை மீண்டும் செய்வது  பகர்ப்புச்செய்தலாக (  காப்பி )  இருக்கலாமே அன்றி அது புது ஆய்வாக இருக்க இயலாது.

தெய்வம் என்ற சொல்லிருப்பதால் தெய்வன் என்ற வடிவமும் அமையும் தரத்தது என்று நாம் முடிக்கலாம் எனினும்,  தெய்வன் என்ற சொல்லை அகரவரிசைகளில் காணமுடியவில்லை.  தெய்வி என்ற சொல்லையும் நாம் காண்பதற்கில்லை என்று தோன்றுகிறது.

இப்போது இவை தொடர்பான சில திரிபுகளை நோக்குவோம்.

செய்தி என்ற சொல்.  சேதி என்று திரிகிறது. இரு நண்பர்கள் முன்னர் சந்தித்துக்கொண்டால், என்ன சேதி,  நலமா என்று கேட்டுக்கொள்வதில் சேதி என்ற சொல் வந்துவிடுகிறது. ஆங்கிலப் படிப்பு மிகுந்துவிட்ட இக்காலையில் இதை அவர்கள் தமிழில் சொல்லப்போவதில்லை. ஆகையால் சேதி என்ற சொல்லினாட்சி குறுகிவிட்டிருக்கும்.  இருப்பினும் இன்னும் இது வழக்கில் உள்ளது.

செய்தி என்பது சேதி என்று திரிவதால்,  செய்> சே விதியின்படி, தெய்வி என்பது தேவி என்று திரியவேண்டுமே!

தேய் > தேய்வு > (தெய்வு) > (தெய்வி )

இவற்றுள் பின்னை இரண்டும் மொழியின் சொற்றொகுதியில் எம்மால் காணப்படவில்லை.  எல்லாச் சொற்களையும் நாம் அகரவரிசையில் எழுதி வைத்துக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட வில்லை.  சில அகப்படாமல் ஒழிந்தன.  வேடன் எல்லா முயல்களையும் கண்டுவிட முடிவதில்லை. சில ஒளிந்துகொண்டுவிடுகின்றன.  இருப்பினும் முயல் வாழும் குழித்தோடு காணப்படுவதால், அவை ஓடிவிட்டன என்று கணக்கிட்டுக்கொள்ள வேண்டியதுதான்.   ஆகவே மீட்டுருவாக்கம் செய்வதில் தவறில்லை.  அவை மீட்டுருவாக்கங்கள் ஆகும்.

செய்தி என்பது சேதி என்று திரிவதால்,   தெய்வி என்பதும் தேவி என்று திரிதல் ஏற்புடைத் திரிபுதான். இதேபோல் தெய்வன் என்ற மீட்பு வடிவமும் தேவன் என்றாகும்.

இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பெய்தல், பெய்தி > பேதி என்பதாகும்.  நீராய் மலக்கழிவு. பெய் என்பது நீரானதைக் குறிக்கிறது.

இனி தேய்வு என்பதைத் தெய்வு என்று மீட்காமல்,  தேய்வு > தேவு என்று இடைக்குறை வடிவாகக் காணலாம்.  தேவு என்ற வடிவம் இருக்கின்றது; அது பாட்டிலும் வந்துள்ளது.

செந்தமிழ்மணி நாட்டிடை உள்ளீர் - 

சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர் 


என்று பாரதியார் பாடுகிறார்.


 தெப்பக் குளமும் கண்டேன் -  சுற்றித்

தேரோடும் வீதி கண்டேன்,

தேவாதி தேவனை--- எங்கும் 

தேடியும் கண்டிலேனே 

என்பது கவிமணி தேசிகவிநாயகனாரின் பாடல்.

இவ்வடிவங்களை,  தேய்வு > தேவு,  தேவு > தேவி என்று காணுதல் மற்றொரு வழியாகும்.

இப்படி இரண்டாவதொரு வழியிலும் இதனைக் காட்டலாம் என்பதை முன்வைக்காமல் இதை முடித்திருக்கலாம்.  சில வேளைகளில் ஒன்று மட்டுமே கூறிப் பிற கூறாதும் விடுக்கலாம்.  ஆயின் அதை நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம். 

இவ்வாறு இடைக்குறையான நல்ல சொற்கள் பல.  சுற்றிலும் அடுத்த நிலத்தொடர்பு நீங்கிவிட்ட ஒரு நிலத்துண்டினை,  தீவு என்கிறோம்.  தீர்வு> தீவு ஆனது:  நிலத்தொடர்பு தீர்ந்த ஒரு நிலத்துண்டு என்று பொருள். இதை dheevu  என்று எடுத்தொலிக்காமல் தீவு என்றே ஒலித்துத் தமிழாதல் காண்க. இப்படி எடுத்தொலித்தால்,  தேன் என்பது ஜேனு என்றன்றோ பிறமொழியில் வருகிறது. ஆயின் தேன் தமிழில்லையோ?  உயர்ச்சி, உயர்த்தி என்பது ஒஸ்தி என்று வந்தால் தமிழன்று என்று ஆகிவிடுமோ? இந்த வேற்றொலிகளெல்லாம் மூஞ்சியில் மாவு பூசுவதைப் போன்றது. கழுவிக் கருத்துடன் காண்க.

இதைப்பற்றி மேலும் அறிய:

தேவன், துரை :

https://sivamaalaa.blogspot.com/2020/11/god.html

தீயைப் பற்றி   https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_5.html

தெய்விகம், தெய்வீகம்.

தெய்விகம் என்பதே சரி என்று கூறுவதுண்டு.  ஆயினும் தெய்வீகம் என்பதும் எழுத்தில் வந்துள்ளது.

தெய்விகத்தைத் தேவகம் என்றும் எழுதியுள்ளனர். ஆனால் இந்த வடிவம் இப்போது பயன்பாடு குன்றிவிட்டது.

தெய்விகம் என்பதற்கு மூர்த்திகரம் என்றும் ஓர் ஒப்புமைச்சொல் உள்ளது. தெய்விகமான இடம் என்னாமல் மூர்த்திகரமான இடமென்றும் கூறலாம். மூர்த்தி என்பதில் தி விகுதி.  முகிழ் என்பதே மூர் என்று திரிந்துள்ளது.  முகிழ்த்தலாவது தோன்றுதல். தோன்றும் கடவுள் வடிவம் மூர்த்தி.   முகிழ்> மூர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது நாம் அடிக்கடி கேள்விப்படும் வாக்கியம்.  இதில் கீர்த்தி என்பது சீர்த்தி என்பதன் திரிபு.  ச- க போலி.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.



திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தோரணமும் தொங்கரணும்

 தொங்கு என்ற சொல் இன்னும் தமிழில் வழங்கிக்கொண்டுள்ளது.  "இந்தத் தையல்காரனிடம் இரவிக்கையைத் தைக்கக் கொடுத்தால் கிடந்து தொங்கிக் கொண்டிருந்தால்தான்  அது திரும்பிவருகிறது" என்பது நம் செவிகளை எட்டும் உரையாட்டின் பகுதி ஆகும்.  என்ன செய்வது?  தீபாவளி பொங்கல் என்று வந்தால்தான் தையற்காரரிடம் தையலார் சென்று எதையும் தைக்கக் கொடுக்கிறார்கள்.  மைவிழியார் முதல் மெய்விழியார்வரை அப்போதுதான் அங்குச் செல்வதால், பாவம் இந்தத் தையற்காரர்கள் அப்போதுதான் கடின உழைப்பில் களைத்துப்போகிறார்கள். அது நிற்க.

தொங்கு என்பதைப் பற்றிப் பல சொல்லலாம்.  எல்லாவற்றையும் எழுதினால் மோசமாகிவிடும்.1  ஆதலால் சில சொல்வோம். "பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற சில சொல்லத் தேற்றாதவர் என்றார் தம் குறளில் நாயனார். இது ஈண்டு கடைப்பிடிப்போம்.  தொங்கு என்பது துங்கு,  தூங்கு என்பவற்றோடும் தொடர்புடையது என்று பேராசிரியர் மு. அரசங்கண்ணனார் கூறினார். ( 23.10.1956 சிங்கப்பூரில் மந்திரி ஹாஜீ ஜூமாட் அவர்கள் தலைமையில்  அப்பேராசிரியருக்கு  நடந்த வரவேற்புரையில் )  "தூங்குக தூங்கிச் செயற்பால" என்று தொடங்கும் குறளையும் மேற்கோளாக ஓதினார் அப்பேராசிரியர். இது தொங்கு துங்கு தூங்கு என்பவற்றினை நீங்கள் ஆராய ஓர் உந்துதலாகும்.

இவைபோல யாரும் சொல்லாவிட்டாலும் ஆய்வுக்கண்ணுடன் அனைத்தையும் நோக்குதல், விழிப்புற்ற தமிழ் மாணவற்கு வேண்டியதோர் அணுகு முறையாகும்.

பழங்காலத்தில் மனிதன் அல்லது மனிதக் குடும்பம் குடியிருந்த மரத்தின் பக்கக் கிளைகளில் தொங்கரண்கள் இருந்தன.  இந்த அரண்களில் ஒரு குரங்கையோ ஒரு பையனையோ ஒலியெழுப்பும் பறவையையோ  வைத்திருப்பர். கொடிய காட்டுவிலங்கு குடிமரத்தை அணுகுமாயின் இவர்கள் ஒலிசெய்து கவனத்தை  ஏற்படுத்துவர்.  அப்போது மைய மரத்தில் இருக்கும் மனிதர் எழுந்து தயாராய்விடுவர்.  

இப்படி ஒரு காவலுக்காக வைக்கப்பட்ட தொங்கரண்கள்  பிற்காலத்தில் அலங்காரப் பொருட்களாகித் தோரணங்கள் என்று அறியப்பட்டன.

தொங்கு >  தொகு > தோ.    ஓ.நோ:   பகு> பகு(தி) > பா(தி)

அரண் >  அரணம்.   அம் விகுதி.

தோ + அரணம் >  தோ(வ)ரணம் > தோரணம்   ஆயிற்று. 

இதைச் சுருக்கமாக,  தோ + ரணம் >  தோரணம் என்று விரைவிலறியக் காட்டினும் பேதமில்லை.  பேச்சில் வந்த இச்சொல்லை இப்படி அறிதல் எளிதாம். இலக்கணத்துடன் ஒப்ப முடிக்கவென்று சிலர் ஆசைப்படுவர். இலக்கணத்தை ஆதரித்துச் செல்வதும் பழுதின்று.

தொங்கரண் என்பது தொங்குஅரண் - வினைத்தொகை. 


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

குறிப்புகள்:-

மற்ற சொல்லாய்வுகள்:

மோசம் : https://sivamaalaa.blogspot.com/2018/05/blog-post_94.html

நாசம்:  https://sivamaalaa.blogspot.com/2020/04/blog-post_35.html

தீபத்தம்பம் https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_21.html

கடப்பல்> கப்பல்,  அடங்கம் >  அங்கம் என்பனவும் காணலாம்.  இடைக்குறை. கடல்கடக்க உதவுவது.  பன்னிரண்டு.

இதிலேதான். மேற்படி https://sivamaalaa.blogspot.com/2020/11/blog-post_21.html.

அனைத்தும் அறிந்து மகிழ்க.