வெள்ளி, 23 ஜூலை, 2021

முன்றில், முற்றம், பாகவதர்

 ஒரு வீட்டின் முன்பக்கத்தைக் குறிக்க ஒரு சொல் தேவைதான். இல்லாவிட்டால் வீட்டின் முன்பக்கம்,  இல்லத்தின் முகம்  என்று வேறு மாதிரி சொல்லி அதைக் குறிக்கப் பேசுவோர் முயற்சி செய்வார்கள்  ஒரு மொழியைக் கூடுமான வரை இடர்ப்படாமல் பயன்படுத்த வசதிகள் செய்து தருவது கற்றோர் கடன். இல்லாவிட்டால் மக்களே புலவர் உதவியின்றிச் சொல்லாக்கம் செய்ய வேண்டிவரும்.  இப்படி மக்களால் படைக்கப்பட்ட சொற்கள்  ஒன்றிரண்டு இங்குத் தரப்பட்டுள்ளன 

https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_10.html  சொல்:  (இ)டற்பம்.

இவ்வாறு மக்களால் அமைந்த சொல் இன்னொன்று:   (இ)டப்பா என்பது ஆகும்.

இந்த டப்பாக்கள் முதலில் மருந்து முதலியன இட்டு அப்பிவைக்க உண்டான சிறு உள்ளடைப்பிகள்.  இந்த இடு+அப்பிகள்,  இடப்பி என்று அமைந்து டப்பி என்றாயின.  அடைப்பிகளும் டப்பி என்று திரிதல் கூடுமாதலால் இது ஓர் இருபிறப்பி ஆகும்.

மீண்டும் முன்றிலுக்கு வருவோம்.  இதில் முன் உள்ள சொல் முன் என்பதேதான்.

முன் + து + இல் >  முன்றில்.

இச்சொல் பின் வல்லொலி பெற்று,  முற்றில்  ஆனது.

இன்னொரு விளக்கம். 

முன் என்பதன் மூலச்சொல் முல் என்பது.   முல் என்றாலும் முன் உள்ளது என்பதே.

முல் + து + அம் >  முற்றம்.

முல் + து + இல்  >  முற்றில்.

இவற்றில் து என்னும் எழுத்து இடைநிலையாய் வந்துள்ளது.

து (துகரம்) இடைநில்லாமல்  முகு+ இல் >  முக்கில் என்று அமைத்திருக்கலாம். முக + இல் > முகவில் என்றும் அமைந்திருக்கலாம். இவ்வடிவங்கள் அமையவில்லை ஆதலின்,  இனிப் புதிய அறிவியல் பொருட்களுக்கோ அல்லது புதிய புழக்கப் பொருட்களுக்கோ பெயர்களாக அமைக்கச் செயலிடம் உள்ளது.  முகு+ அம் > முகம் என்பதும்   முன்+ சி >  மூஞ்சி (முன்> மூன்>மூஞ்சி முதனிலை நீட்சிப் பெயர்), மூஞ்சூறு  (  மூஞ்சியானது உறுதல்,  உறுதலாவது மிகுதலே) என்பதும் முன்னரே அமைந்துவிட்ட பெயர்கள்.  ஒருவீட்டுக்கு முன் பாகம்  நீண்டிருந்தால் மூஞ்சூறு  என்று பெயர்வைப்பது சொல்லமைப்புப் பொருள் என்ற அளவில் சரியானது ஆயினும் வழக்குடன் ( அதாவது நடப்பில் உள்ள பெயருடன்) மாறு கொள்தலால் அது கூடாமை உணர்க. (கொள்தல்  > கோடல்).  நாலுகால் உள்ள ஒரு புதிய விலங்கு கண்டுபிடிக்கப் பட்டால், அதை நாம் "நாற்காலி" என்று பெயரிடுதல்  தவறு. காரணம் வேற்று வழக்குண்மைதான்.

து இடைநிலையாக வருவதுபோல  அது, இது உது என்பனவும் சொல்லாக்கத்தில் இடைநிலைகளாக வரும்.   எடுத்துக்காட்டு:  பருத்தல் என்ற வினையிலிருந்து,  பரு  + அது + அம் =  பருவதம் ( மலை).

இனிப் பாகவதர் என்ற சொல்லிலிலும் அது வந்துள்ளது.  ஒரு நீண்ட சமயச் சரிதையைப் பல  அல்லது சில பாகங்களாகப் பிரித்துப் பாடி மக்களுக்கு அல்லது மன்னர்களுக்கு / பிறர்க்கு உணர்த்துகிறவர்.

பாகம் +  அது + அர் >  பாக + அது + அர் >  பாகவதர். அதர் ( அது அர்) என வரவேண்டியது, ~வதர் என்று வருவது புணர்ச்சியினால் .  ( வகர உடம்படுமெய்).  இது விட்ணு கதை சொல்வோருக்கு வந்து, இப்போது பிற தெய்வ வணக்கத்தினருக்கும் பயன்படும் சொல்.

பாகவதம் என்பதினின்று வந்த சொல் இது என்பாரும் உளர்.  

[ து, அது முதலிய சொல்லாக்க இடை நிலைகள் இந்தச் சொற்களில் கருதப்பட்டன.  ]


பாகவதம் என்பதும் பாகங்கள் பல உள்ளதுதான்.

பகவானும் மன்னுயிர்க்கு வேண்டியதைப் பாகங்களாக்கி அவரவர்களுக்கும் உரித்தானதை வழங்குபவன் தான். (பகவு அன்,  பகவு ஆன்).

எப்படிச்சொன்னாலும்  பகு > பாகம்  (முதனிலை நீட்சித் தொழிற்பெயர்). ஓடமுடியவில்லை இதிலிருந்து.


பொழிப்பு:

இடு அப்பி  >  இடப்பி   டப்பி > டப்ப > dabba

அடைப்பு >  அடைப்பி > டப்பி >  dabba




அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.



பாரோ கிருஷ்ணையா: பொருள் தமிழ்

 இந்தக் கர்நாடகப் பாட்டின் பொருளைத் தமிழில் தருகிறோம்:

இதன் மூலப்பாடலைப் பாடியவர் கனகதாசன் என்னும் கருநாடக இசைப் பண்டிதர். (1509 – 1609).. இந்த மூலம் கீழே தரப்படுகிறது.


பாடல் சொல்வது:

வாராய் கிருஷ்ணையா

பக்தரின் மனைக்கேக, வாராயோ ( வாராய் கிருஷ்)


வாராய் முகம்காணத் தாராய் உன்நிகர் யாரோ

செகதலச் சீலனே ( வாராய் கிருஷ்)


அணிந்தபா துகைமற்றும் கால்களில் சிறு கச்சை

திம் திமி திமி திமி திமி என்னுதே

பொன் குழல் ஊதுக-வா ராயோ (வாராய் கிருஷ்)


பொன்னொளி வீசும் வளையல்களே அணிந்தாய்

கிண்கிணி கிணிகிணி கிணி என்னுதே

பொன் குழல் ஊதுக வாராயோ (வராய் கிருஷ்)


உடுப்பிலி வாசனே நிலையாதி கேசவனே

உன் பாத தாசன் பாததாசன் பாத தாசன் பாததாசன்

கனகன் வாராயோ



பொருள்


மனைக்கேக -  (பற்றரின் வீட்டுக்கு   வர).


(மூலம்)

பல்லவி

பாரோ கிருஷ்ணய்யா பாரோ கிருஷ்ணய்யா பக்தர மனகீகா

அனுபல்லவி

பாரோ நின்ன முக தோறோ நின்ன சரி யாரோ ஜகதர ஷீலனே

சரணங்கள்

அந்துகே பாதுகவு   காலந்துகே கிறு கஜ்ஜெ திம் திமி

திமி திமி திமி எனுதா பொங்குளலூதுத பாரையா    ( பாரோகிருஷ்ணய்யா)

கங்கண கரதள்ளி பொன்ங்குற ஹொளெயுத கிங்கிணி கிணி 

கிணி கிணி எனுதா பொங்குளலூதுத பாரையா  ( பாரோ கிருஷ்ணய்யா)

வாச உடுப்பிலி நெலயாதி கேசவனே தாச நின்ன பாத தாசா பாத தாச 
நின்ன பாததாச கனகனு பாரய்யா


அருஞ்சொற்பொருள்:  24072021

கிரு =  சிறு

கங்கணம்  -  காப்பு , வளையல்

மெய்ப்பு : 1700      24072021 


திங்கள், 19 ஜூலை, 2021

விரைவு, அதிரடி, திடீர்

 திடீர் என்ற சொல் மிக்க அழகாக அமைந்த சொல்போல் தோற்றமளிக்கின்றது.  பல்வகை உணவுகளில் இந்தத் திடீர் என்ற சொல் வந்து இணைந்துகொண்டு, திடீர் சாம்பார், திடீர் இட்டிலி,  திடீர்த் தோசை   என்று ஒரு கவர்ச்சியையும் உண்டாக்குகிறது.  திடீர் நடவடிக்கையும் உள்ளது. இப்போது  "அதிரடி" என்ற சொல் அதிகமாகப் புழக்கம் காண்கிறது.  பலகாலம் ஆலோசனையிலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகூட, ஊடகவியலாளர்களுக்கு "அதிரடி" யாகத் தோன்றலாம்!  படிப்போரையும் கேட்போரையும் கவர்வதற்காக இந்தச் சொல் பயன்படுத்தப் படுவதாகவும் இருக்கலாம்.  

ஒரு பொருளின் விலையை " அதிரடியாய் இருக்கிறது" என்று சொல்லலாம் என்பது சென்னைப் பல்கலைக் கழகக் கல்வியாளர்களின் கருத்து என்று தெரிகிறது.  பொய்யையும் அதிரடி என்னலாமாம்.  அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும் என்று இணைத்துச் சொல்லப்படுவதுண்டு.  சொப்பனம் தான் சொற்பனம்.  ( உளறும் உறக்கம்).  அதிர்ச்சிதரும்படி பேசுபவன் அதிரடிக்காரன்.

அதிர்வு, அடித்தல் என்ற இரு கருத்துக்களும் அதிரடியில் உள்ளன.  திடீர் என்பது உள்ளறுத்து விளக்கச் சற்றுக் கடினமுடையதாய் இருக்கலாம்.

நீர் திடுதிடு என்று கொட்டியது என்பதில் வேகமும் மிகையும் தெளிவாகத் தெரிகிறது. திடீர் என்பதில் இந்தக் கருத்து இன்னும் இருக்கின்றது.  ஈர் என்ற இறுதி,  இவ்வேகத்தையும் மிகுதியையும் ஈர்க்கத் தக்க ( இழுக்க அல்லது உண்டாக்கத் தக்க ) தன்மையைக் காட்டுகிறது. எதிர்பாராமையும் விரைவும் திடீர்த்தன்மையில் முதன்மை பெறுகின்றன.  எ-டு:  பெண்ணுக்குத் திடீர்க் கல்யாணம்  என்ற வாக்கியத்தைக் காண்க. குப்பென்று,  திடுதிப்பென்று, திடுமென்று என்றெல்லாம் செயலடைகள் பேச்சிலும் எழுத்திலும் வருவன.

சட்டென்று என்பதும் விரைவுக்குறிப்பு.  ஆங்கிலத்தில் sudden என்பது இதுபோல் அமைந்த சொல். இத்தகைய விரைவுணர்ச்சி, அவ்வம்மொழியிலும் தோன்றியிருக்கலாம். டபார் என்ற வெடிப்பு.  "daab! There was an explosion" என்பன நீங்கள் செவிமடுத்திருக்கலாம்.  இயல்பாகவே இதுபோலும் கதைசொல்பவர்களிடம் இவற்றைக் கேட்கவேண்டும். சடார்  படார் என்பவும் அவ்வாறே.

சட்,  சடு, சடுதி என்பனவும் உள. சடுதி - ஜல்தி அணுக்கமுடையவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.