வெள்ளி, 16 ஜூலை, 2021

வாக்கில் - வக்கீல். மற்றும் ஒரு வழக்குமன்ற நிகழ்வு.

 இரவு நேரங்களில் சில அயல்மொழிப் பாடல்களையும் கேட்டு நான் ஆனந்தமாக இருப்பேன்.  சொற்களை இசையுடன் இணைத்து எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைச் சுவையுடன் எடுத்தறிவதுதான் என் நோக்கம்.  வீட்டில் நாய்க்குட்டி இருந்த காலங்களில் அதுவும் அமர்ந்து கேட்கும். "என் இயமானனின் குரல்" என்று அது நினைத்துக்கொண்டது போலும்.  பாட்டுகளைக் கேட்டு முடித்துவிட்டு  அதற்குப் பாலூற்றினால் நன்கு குடித்துத் தன் விழிகளினால் ஒரு நெஞ்சுநிறைவைப் புலப்படுத்தும்.    பாடல்களில் சீன மொழியிலும் நெரடுதலான வரிகளும் கையாளப்படுகின்றன.  மலாய்  மொழியிலும்  இவ்வாறு உள்ளன. "பூருங்க்  காக்கத் துவா" என்ற மலாய்மொழிப் பாட்டு அரசியல் அறிஞர் திரு. லீ குவான் யூவையும் கவர்ந்திருந்தது என்று சொல்கிறார்கள். மனித வாழ்வில் இசையுடன் மகிழ்தலும் வசைகெட வாழ்தலும் அல்லனவாய்ப் பிறிதோர் ஊதியம் இலது  காண்க.

உருதுமொழிப் பாடல்களை அம்மொழிக்காரர்கள் சுவைத்துப் போற்றுகின்றனர். சிலர் தங்கள் பின்னூட்டங்களில் வானளாவப் புகழ்கின்றனர்.  உருது இனிமை என்னும் இது உண்மை என்றே தெரிகிறது.  அவ்வம்மொழிக் காரர்களுக்கும் அவர்கள் மொழி இனிது என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. நாம் கேட்பதற்கே மிக நன்றான பல பாட்டுகள் உள்ளன.

கால ஓட்டத்தில்,  உருது என்பது ஓர் இளமை தோய்ந்த மொழியாகும். வக்கீல் என்ற சொல்  உருதுச் சொல் என்று சிலர்  கூறியுள்ளனர்.  வக்கீல் என்னும் சொல்லின் உள்ளறைகளை யாவை என்று புகுந்து அகழ்ந்து காண்போம். அதன்முன்  வக்கீல் தொழிலில் சொல்வன்மையையும் சிறிது காண்பதை மேற்கொள்வோம்.

சொல் ஆய்வு எவ்வாறாயினும் ஒரு வழக்கின் வெற்றி வக்கீலைச் சுற்றியோடும் திசாபுத்திகளைப் பொறுத்துத்தான் அமைகிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடும். அவர்தம் வாதத் திறனே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்பீர்கள். இருக்கலாம்.

ஒரு வழக்குக்காக நீதிமன்றில் இருந்தோம்.  காலையில் 9.30 மணிக்கு வரவேண்டிய வக்கீல் பத்தரை மணிக்குத்தான் வந்து சேர்ந்தார். மன்றம் தொடங்கிய வுடன்,  அவர் எழுந்து, ஒரு  சாலையின்  பெயரைச் சொல்லி அங்கு வாகன நெருக்கடி நேர்ந்துவிட்டது என்றார். அதற்கு நீதிபதி, "  அதுதான் தினமும் நடக்கிறதே.  அதற்கென்ன"  என்றார்.  அதற்கு வக்கீல்,  சில கல் தொலைவு அந்த நெரிசல் நீண்டுவிட்டது என்றார்.  " அதுதான் தினமும் நடக்கிறதே.  ஏன் அதைச் சொல்கிறாய் ?"  என்றார்.  " அங்கு,  காவல் துறையினர் யாரும் வரவில்லை!" என்றார் வக்கீல்.   அதற்கு நீதிபதி, "அதைப் பற்றி எல்லாம் எனக்கென்ன கவலை?"  என்றார்.   அதற்கு வக்கீல்,  " இது நாட்டிலே தினசரி நிகழ்வாகி விட்டது.  பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்! " என்றார்.  " நான் போய் சாலைப் போக்குவரத்தைச் சரிசெய்ய முடியாது.  என்னுடைய வேலை என் முன் இருக்கும் வழக்கை விசாரிப்பதுதான் அதற்கான முடிவைத் தெரிவிப்பதுதான்.  தொடர்பற்ற செய்திகளை என் முன் வைக்கவேண்டாம்!"  என்றார்.  "நான் சொல்வதைக் கொஞ்சமும் செவி சாய்க்க மாட்டேன் என்று நீதிமன்றம் என்னிடம் சொல்கிறது!" என்றார் வக்கீல்!

"இதோ பாருங்கள்  திருவாளர் வக்கீல்! நீர் ஒன்பதரைக்கு இங்கு வந்திருக்கவேண்டும்.  நீர் குறித்த நேரத்தில் வரவில்லை என்று குறித்துக்கொண்டேன்.  நீர் இந்த வழக்கில் இல்லை. உம்மை இல்லாமல் இந்த வழக்கு நடைபெறும்!  நீர் கிளம்புவீரா இருப்பீரா என்பதைப் பற்றி நீதிமன்றத்துக்குத் தெரியாது.  நான் ஏற்கெனவே  நீர்  வாராத நேரத்தில் நீர் வராவிட்டாலும் வழக்கை நடத்துவது என்று தீர்மானித்துவிட்டேன்! இந்த வழக்கு எண்ணிறந்த முறைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  நீர் செய்யவேண்டியதெல்லாம் இனி  உம் விருப்பம்!" என்றார் நீதிபதி.

" இது காரண காரியங்களைப் புரிந்துகொள்ளாத நீதிமன்றம்.  நான் எனது எதிர்ப்பையும் மறுப்பையும் பதிவிட விரும்புகிறேன்!" என்றார் வக்கீல்.

"நீர் பதிவிட விரும்புவதை நான் குறித்துக்கொள்ளவில்லை!" என்றார் நீதிபதி.

" நானே இவ்வழக்குக்கு வக்கீல். என்னை இல்லாமல் எப்படி இது போகும்? " என்றார் வக்கீல்.

" நீர் குறித்த நேரத்தில் வரவில்லை.நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நீர் இதில் இல்லை. போவீரோ இருப்பீரோ, நீதிமன்றம் இதில் கவலை கொள்ளவில்லை!" என்று சொல்லிவிட்டு,  வழக்குரைஞரைப் (பிராசிக்யூட்டர் ) பார்த்து,  " உன் சாட்சியைக் கூப்பிடு" என்றார் நீதிபதி.

இப்போது மக்கள் பார்வை வரிசைகளில் இருந்தவர்கள் அனைவரும் விழிக்கத் தொடங்கிவிட்டனர்.

வழக்குரைஞர் அப்போது எழுந்து கொஞ்ச நேரம் ஒத்திவைக்கும்படி கேட்டார். அதற்குப் பத்து நிமிடங்கள் வழங்கியது நீதிமன்றம்.

வழக்குரைஞர் வக்கீலிடம் போய், " என்னய்யா இது! மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வழக்கை நடத்துங்கள் " என்றார்.

" இந்த நீதிபதி வீணாக என்னை அலைக்கழிக்கிறார்" என்றார் வக்கீல்.

" இல்லை! இல்லை.  நீர்தான் இந்த வழக்கில் குற்றவாளிக்காகத் தோன்றுகிறீர். இன்று நீர் வாகன நெருக்கடியில் மாட்டிக்கொண்டதனால் மன்னிக்க இப்போது  வேண்டுகிறீர்.  வழக்கை நடத்தவேண்டி அனுமதி கேட்கிறீர்----- என்று இதுவரை சொல்லவில்லையே!" என்றார் வழக்குரைஞர்.

" ஆ!  அதைச்சொல்ல மறந்தேன்.  இந்தச் சாலை நெரிசல்கள் உயிரை வாங்கி நம்மை எல்லாம் தடுமாற்றம் அடையச் செய்பவை " என்று வழக்குரைஞரிடம் சொன்னவர் , மன்றம் மீண்டும் கூடியவுடன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு,  அவரே நெருக்கடியில் மாட்டிக்கொண்டதையும் விவரித்தார் வக்கீல்.

" சரி, ஏற்றுக்கொள்கிறோம். எப்படியானாலும், நீர் மன்றத்துக்கு நடந்து வருவீரா பறந்துவருவீரா, எங்களுக்குத் தெரியாது. வரும் வழியை நீர்தாம் தீர்மானிக்கிறீர்.  அது எங்கள் கையில் இல்லை!" என்று நீதிபதி சொல்ல, அதன் பின்பு,   வழக்கு  அட்டவணையில் கண்டபடி -- ஆனால் காலம்தாழ்ந்து தொடங்கிற்று.

இவ்வாறெல்லாம் இருப்பினும்,  குமுகத்தில் வக்கீல்களுக்கு இருக்கும் மதிப்பு அதிகமாகும். ஆனால் பலர் வாதங்களில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். புத்தகம் படிப்பது வேறு. வாதத் திறன் வேறு ஆகும்.

வழக்கின் வெற்றி பல காரணங்களால் தீர்மானம் அடைகிறது.  அது வக்கீலின் வாக்கில் அமைந்துள்ளது என்போமா?  இருக்கலாம். வக்கீலின் வாதம், இருண்ட அறையில் ஒரு விளக்கு என்றனர் பெரியோர்.

வழக்கின் வெளிச்சமும் வெற்றியும்,  நம்      நோக்கில்,   வக்கீலின் வாக்கில்  உள்ளது என்பது  எவ்வாறோ உண்மைதான். அதனால், இங்கு  வாக்கில் என்ற சொல்தான் வக்கீல் என்று அமைந்துள்ளது என்று சொல்வோம். 

வாக்கு இல் என்றால் வாக்கு என்பதன் இல்லம் வக்கீல். இது திரிந்து வக்கீல் ஆனது. வாக்கு - means arguments      இல் (residence of those arguments)

ஈல் என்று நாம் நீட்டி ஒலித்தாலும் பலர் வாக்கில் என்றும் சொல்கிறார்கள்.

வாக்கு என்பது தமிழிலும் சங்கதத்திலும் உள்ள சொல்தான்..  

இது உருதுக்குச் சென்றாலும் பெரிதும் திரியாத ஒரு சொல் என்னலாம். தமிழில் பொருள் தருகிறது. பிற மொழிகளுக்குத் தாவி இருக்கலாம்.  வாக்கு என்பது தமிழ் சங்கதம் இரண்டிலும் உள்ள சொல்தான்.

வாய்க்கு > வாக்கு. இடைக்குறை யகர ஒற்று. வாய்க்கு  வருவதே வாய்மொழி. இதுபோன்ற யகர மெய் குறுகிய இன்னொரு சொல் வாய்த்தி > வாத்தி > வாத்தியார் ஆகும்  உப அத்தியாய >உபாத்தியாய என்பது வேறு. வாய்த்து >வாத்து என்பதும் காண்க. வாய் நீண்ட பறவை.

இல் -  இருக்கும் இடம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வியாழன், 15 ஜூலை, 2021

பகை, பரம்பு, வரம்பு

பரம்பு  என்றாலும் வரம்பு  என்றாலும் ஒன்றுதான். இரண்டும் தமிழில் உள்ள சொற்கள்.  திரிபு விதிகளின்படி  பகரம் வகரம் ஒன்றுக்கொன்று மாற்றீடு கொள்ளும்.  இங்குப் போலி என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.  போலி என்பதற்கு நாட்டில் மோசடி செய்யும் மனிதன் என்ற அர்த்தம் ஏற்பட்டுவிட்டது. ஒன்றுக்கு ஒன்று போலி என்று  விளக்கும்போது,  அது எப்படி?  இரண்டும் போலி என்று சொல்கிறீர்?   அப்போது உண்மையான மூன்றாவது எங்கே என்று கேட்கிறார்கள்.இது வாழைப் பழக்கதை போலாகிவிடுகிறது.  சிலர் போலி என்பதை வைப்பாட்டி என்ற பொருளில் வழங்குகிறார்கள்.  இவள்தான் அசல், மற்றவள் போலி என்கிறார்கள். போலியை முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை. தற்காலிக நிறுத்தம்தான்.

பகை என்பது வகை எனற்பாலதை நோக்க போலித்திரிபு வகையினது,   ஆனால் போலி அன்று.  பகை என்பது எதிரித்தன்மை கொண்டோரிடம் நிலவும் சூழலைக் குறிக்கும். இரு குழுக்களாகவோ அல்லது அவற்றுக்கு மேலாகவோ பிரிந்து நிற்கின்றார்கள்,  அடிக்கடி விரோத குரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பொருள்.  பகுதல் வினைச்சொல்.  பகு> பகு+ ஐ > பகை.   பகு <> வகு,   வகு+ ஐ > வகை எனல்  கண்டுகொள்க. இதனை நம் தமிழறிஞர்கள் சென்ற நூற்றாண்டுக்கு முன்னரே எடுத்துக்காட்டியுள்ளனர். வசந்தம் > பசந்த் என்று பிறமொழிகளில் வழங்கும்.  பிறமொழிகளில் பெரும்பாலும் அம் விகுதி இராது. வ என்ற முதலெழுத்து ப என்றாகும்.  இத்தகைய  ப -வ திரிபு இந்திய மொழிகளல்லாத பிற உலக மொழிகளிலும் உள்ளபடியால் இதனை "not language specific"  என்று மொழிநூலறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். எனவே இது பன்மொழிப் புழக்கப் போலித்திரிபு  எனலாம்.

சொல்லமைப்பில் பாகுபாடு என்றுமட்டும் பொருளுடைய பகை என்னும் சொல்,  அதனினும் மேலானதும் விரிந்ததுமான பொருளைத் தரும் சொல்லாக இன்றிருப்பதால்,  அதைத் தொல்காப்பிய முனிவரின் இலக்கணப்படி, திரிசொல் என்றே சொல்லவேண்டும். பகு என்ற சொல்,  பல்கு (பல்குதல்) என்ற வினையுடன் தொடர்பு கொண்ட சொல்.  பல்கு என்பதில் ல் என்னும் லகர ஒற்று இடைக்குறைந்துவிட்டால் அது பகு  ஆகிவிடுதல் தெளிவு ஆகிறது. ஒன்று பலவாதல் உட்பகவினால் ஆவதொன்றாய்க் கொளற்கும் உரித்தாம். பாகுபாடு என்ற சொல், இரு முதனிலை த்திரிபொட்டுச் சொல் ஆகும்.

இணைந்திருங்கள். நன்றி.

உரையாடலை இன்னோரிடுகையில் தொடர்வோம்.

Edited 1746  16072021 edits lost

To be reviewed.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.





 

உலாச்செல்வோர் தங்கிடத்தின் அழகு.

 இந்த இடம் சுவிட்சர்லாந்தில் உள்ளது.  "சாத்தூ டி ஷில்லியோன்"

chatteau de chillon

இது கோட்டையின் வெளியழகைப் புகழும் கவிதை.

----------------------------------------------------------------------------------------

பேராற்றின் கரைபாதி

நீரோட்டம் மருவிமகிழ்

ஊறாத தரைதன்னில்

நேருயர்ந்த நெடுங்கோட்டை.  1


பேராறு - பெரிய ஆறு.

ஊறாத தரை - ஆற்றுநீர் புகாத தரை.


முன்மாந்தர் முடித்துவிட்ட

மண்காணாச் சாளரங்கள்!

தண்காற்று நாள்முழுதும்!

வெண்ணீரில் இரவிமுகமே. 2


முன்மாந்தர்- பழங்கல மக்கள்  (ஆட்சியாளர்கள்.)

தண் - குளிர்ந்த

மண்காணா - நீரைமட்டுமே காணக்கூடிய

சாளரங்கள் - சன்னல்கள்

இரவி - சூரியன்

வெண்ணீர் - வெள்ளை நீர்


ஊறிமலைப் புறத்திருந்து

ஓடிவரும் நீரின்மிகை

மீறிவரும் காற்றினிலே

ஆடியகல் சிற்றலைகள்  3


ஆடி அகல் - ஆடிக்கொண்டு அகன்று செல்லும்

மீறி -  கூடுதலாக

நாற்புறமும் சாய்கூரை

நடுவிலெழும் கூர்முகமே

மேற்புறத்து நெடுங்கூடு

கொடும்புயலில் மடங்காது.   4


இது ஓர் எழும் கூடுபோன்ற கட்டிட அமைப்பு

இது மேற்பறந்து பார்க்கையில் தெரியும் காட்சி


உலாவருவோர் தங்குதலை

வளாகமெனில் கலாச்சுவையே..

எலாயிரவும் நிலாவெனவே

சொலாமகிழ்வு மெய்துவரே.   5


தங்கு - தங்கும்.

தலை வளாகம் - தலைமையான கட்டிடம்.

எலாயிரவும் - எல்லா இரவும்.

நிலா - சந்திரன்.

சொலாமகிழ்வு - சொல்லவியலாத ஆனந்தம்.

எலாயிரவும் ( இல்பொருள் உவமையின்பால்படும்)

கலாச் சுவை -  கலையழகு தரும் இரசனை.