செவ்வாய், 13 ஜூலை, 2021

மாலும் மாரியும் ( திருமால், மாரியம்மன்).

 திருமாலும் மாரியம்மனும் தெய்வங்களாக வழிபடப் படுபவை. இந்த இடுகையில் இவர்களிடையே உள்ள சொல்லமைப்புத் தொடர்பினை ஆய்வினுக்கு எடுத்துக்கொள்வோம்.  தொன்ம வரலாற்றில் இவர்களுக்கிடையில் உறவுமுறைகள் உள்ளன.  அவற்றை விரித்துரைக்கும் நூல்களும் இடுகைகளும் இணையத்திற் கிட்டுவன ஆதலின் ஈண்டு நாம் அவற்றினை எடுத்துரைத்தலில் ஈடுபடுதல் வேண்டாதது  ஆகும்.

மால் என்பது திருமாலைக் குறிக்கும்.  இவர் பலரால் விரும்பிப் போற்றப்படும் தெய்வம்.  திருமாலுக் கடிமைசெய் என்பது  தமிழில் ஆட்சிபெற்ற ஒரு வாக்காகும்.  இவருக்கு இந்திரைகேள்வன் என்ற பெயரும் உளது.  இதன்பொருள் இலக்குமியின் கணவர் என்பதாகும்.  உலகளந்தான் என்றும் பெயர் கூறுப.  சிறுபாணாற்றுப்படை (205).  "கடவுள் மால்" என்று வருணிக்கின்றது.  கருடவாகனன் என்றும் பெயர் சொல்வர்.  கருடனில் ஆர்ந்து1 ஊடுசெல்பவர் ஆதலின் கருடாரூடன்2 என்றும் போற்றுவர்.  கார்வண்ணன்3 என்பது பலரும் அறிந்த பெயர்.  இவர் கருநிறம் உடையவர் என்பது இச்சொல்லின் பொருள்.  சக்கர முடையவராதலின் சக்கரதாரி, மற்றும் திகிரியான்.  சுந்தரத் தோளன்.  அழகிய தோள்கள் உடையவன்.  மறுமார்பன். செல்வமுடையான்  ஆதலின் திருவன்.  தெய்வச்சிலையான்.  நெடியோன்.

இவர் ஐம்படைக்கையர். ( பஞ்ச ஆயுதம்).  புணரியிற்றுயின்றோர்.4

மால் பற்றிய  மேன்மை பலவாதலின்,  மாலிமை என்ற சொல் "கௌரவம்"  "மதிப்பு" என்ற பொருட்களைப் பெறுவதாயிற்று.

எனினும், மால் என்பது கருப்பு என்றே பொருள்தரும்.  கருப்பு நிறமுடைமையின் இவர் ஆரியக்கடவுள் என்பது புனைவு.  கருப்பரான இவர் கருப்பர்களின் கடவுளே ஆவார்.   ஆகாயமும் கருமையே.( விண்ணின் நிறமும் இதுவே.  )  மீனவரால் வணங்கப்பட்டுப் பின்னரே இவர் ஆயர்களால் வணங்கப்பெற்றிருத்தல் கூடும்.  பரதவர் என்பது மீனவரைக் குறிக்கும் சொல், இறுதியில் பாரதம் கூறும் வரலாற்றுக் கதைக்கு வழிசெய்தது. பரதவர்> பாரதம்.  பரவை - கடல்.  பர + அது + அம் > பாரதம்,  முதனிலை நீண்ட தொழிற்பெயர்.5  கிருஷ்ணன், கிருட்டினன், கிஷன் என்பனவும் கருமை நிறம்பற்றிய பெயர்களே ஆகும்.

இவர் கடல்மேவிய,  வானமேவிய செல்வம்.  இது இயற்கையைப் பற்றிய சமயக் கோட்பாட்டையே அடிப்படையாக நமக்குக் காட்டுகிறது.

மால் என்பது லகர ரகரத் திரிபினால் மார் என்றும் மாறும் சொல். இதில் இகரப் பெண்பால் விகுதி சேர்ந்தே மாரி என்ற சொல்லும் அமைந்தது.  மாரி என்பது மழை என்றும் பொருள்படுவதால்,  இவ் வம்மை மழைக்கடவுளும் ஆகும்.

மால்  > மார் > மாரி.

இவ்விரு தெய்வங்கட்கும் தொடர்பு கூறும் புராணத்தில் உண்மையுள்ளது, பெயர்களில் அமைப்பினால்.

சுந்தர மூர்த்தி நாயனார் கூறுவதே உண்மை:

ஊனாய்உயிர் ஆனாய்உடல்    

  ஆனாய்உல கானாய்    

வானாய்நிலன் ஆனாய்கடல்    

  ஆனாய்மலை ஆனாய்

என்பார் அவர்.   6


 இவைகளிற் கடவுளை உய்த்துணர்ந்து, பின்னர் அவரை வணங்கியது

இம்மதம் ஆகும்.


தொன்ம வரலாற்றை அவற்றுக்குரிய நூல்களிற் கண்டுகொள்க. இது பெயர்பற்றிய இடுகையே ஆகும்.

அறிக மகிழ்க.

குறிப்புகள்:

1   ஆர்ந்து  -  உட்கார்ந்து  ( உள்+கு+ ஆர்ந்து> உட்கார்ந்து)

2   கல > கலுழன் > கருடன்.  நிறக்கலப்பு உடைய பறவை

3   கரு> கார்  [ கருப்பு ]

4   புணரி - கடல். புணரியில் துயின்றோன்.  (பாற்கடலில் பள்ளிகொண்டோன்)

5   தொழிற்பெயர் :  A noun formed from a verb.   e.g.  govern > government.  விகுதி - suffix. Here - ment is the suffix.

6   தழலாய் நின்ற தத்துவனே பாழாம் வினைக ளவைதீர்க்கும் பரமா 





மெய்ப்பு பின்.


திங்கள், 12 ஜூலை, 2021

பறக்கும் நீர் - இயற்கைக் காட்சி.

மழையின்போது இயற்கைக்காட்சி 

வெட்டவெளிப் பறக்கின்ற நீர்த்துளிக ளாலே

வேண்டியதொன்  றைப்பார்க்க வீண்முயற்சி  ஆச்சே!

ஒட்டியுடன் விழுகின்ற கனத்திவலை கண்டேன்

ஒட்ப திட்பம் எலாம்சமைந்து வெப்பம்தணி மாரி.


இருளுடனே ஒளிகதிர்கள் இறுகிநின்ற வானில்

இரவுபகல் கலந்தமைபோல் கரவுதரும் காட்சி

பிறவிபல உருண்டுசெலப் பெற்றிடினும் ஈண்டிப்

பெருவியப்பின் உருவனைத்தும் பெருக்கியுணர் வேனோ?


அரும்பொருள்:

இது உரை போலன்றி விளக்கத்தின் பொருட்டுத் தரப்படுகிறது ]

வேண்டியதொன்று -  காணவேண்டி நோக்குகையில் தெரியாமலிருப்பது.

ஒட்பம் -  ஒளியுள்ள நிலை.

திட்பம்  -  திண்மையான வெளிப்பாடுகள்.

பறக்கின்ற நீர்த்துளிகள் -  இவை பக்கவாட்டில் வந்து நேர்கொட்டுதலைக்  கடந்து பறந்தவை.

கனத்திவலைகள்:  இவை கனமுள்ள பெருந்துளிகள் மேலிருந்து கீழாகக்

நேர்படக் கொட்டியவை.

ஒட்டி -  மேல்கீழ் கொட்டுதலைச் சந்தித்த பக்கவாட்டுச்  சிறிய துளிகள்.

வெப்பம் தணி:  இது பரவியிருந்த வெப்பத்தின் அளவைக் குறைத்துவிட்டது.

மாரி -  மழை.


இருளும் ஒளியும் கலந்து நின்ற காட்சியை அடுத்த பாடல் விவரிக்கிறது.  

இறுகி -  மிக்க நெருக்கமுடன்

கரவு -  இரவா பகலா என்ற வெளிப்படை இன்மை.

செல -  செல்ல ( தொகுத்தல் )

ஈண்டு - இங்கு  ;  ஈண்டு + இப்

உருத்தல்:  தோன்றுதல். உருவனைத்தும் -  காட்சியளித்தவை எல்லாவற்றையும்.

பெருக்கி  -  ஒன்று சேர்த்து

மெய்ப்பு பின்

எந்த மொழி பேசினாலும்.

 எந்த மொழி  பேசினாலும்  என்ன தம்பி

இருக்கின்ற இடத்தினிலே ஏற்கப் பட்ட

விந்தைமொழி சொல்வதிலே விளக்கம் உற்றால்

வேறென்ன வேண்டுவதோ வினைவெற்  றிக்கே.

-----  சிவமாலா.



 [  இந்தக் காணொளியில் திரு குமரன் பிள்ளை அவர்கள் சீனமொழியில் வாழ்த்துக்கள் சொல்லி பழங்களைப் பரிசளிக்கக் காணலாம் ]

சிவமாலா வலைப்பூவின் வாழ்த்துக்களும் உரியவாகுக.