திங்கள், 12 ஜூலை, 2021

பறக்கும் நீர் - இயற்கைக் காட்சி.

மழையின்போது இயற்கைக்காட்சி 

வெட்டவெளிப் பறக்கின்ற நீர்த்துளிக ளாலே

வேண்டியதொன்  றைப்பார்க்க வீண்முயற்சி  ஆச்சே!

ஒட்டியுடன் விழுகின்ற கனத்திவலை கண்டேன்

ஒட்ப திட்பம் எலாம்சமைந்து வெப்பம்தணி மாரி.


இருளுடனே ஒளிகதிர்கள் இறுகிநின்ற வானில்

இரவுபகல் கலந்தமைபோல் கரவுதரும் காட்சி

பிறவிபல உருண்டுசெலப் பெற்றிடினும் ஈண்டிப்

பெருவியப்பின் உருவனைத்தும் பெருக்கியுணர் வேனோ?


அரும்பொருள்:

இது உரை போலன்றி விளக்கத்தின் பொருட்டுத் தரப்படுகிறது ]

வேண்டியதொன்று -  காணவேண்டி நோக்குகையில் தெரியாமலிருப்பது.

ஒட்பம் -  ஒளியுள்ள நிலை.

திட்பம்  -  திண்மையான வெளிப்பாடுகள்.

பறக்கின்ற நீர்த்துளிகள் -  இவை பக்கவாட்டில் வந்து நேர்கொட்டுதலைக்  கடந்து பறந்தவை.

கனத்திவலைகள்:  இவை கனமுள்ள பெருந்துளிகள் மேலிருந்து கீழாகக்

நேர்படக் கொட்டியவை.

ஒட்டி -  மேல்கீழ் கொட்டுதலைச் சந்தித்த பக்கவாட்டுச்  சிறிய துளிகள்.

வெப்பம் தணி:  இது பரவியிருந்த வெப்பத்தின் அளவைக் குறைத்துவிட்டது.

மாரி -  மழை.


இருளும் ஒளியும் கலந்து நின்ற காட்சியை அடுத்த பாடல் விவரிக்கிறது.  

இறுகி -  மிக்க நெருக்கமுடன்

கரவு -  இரவா பகலா என்ற வெளிப்படை இன்மை.

செல -  செல்ல ( தொகுத்தல் )

ஈண்டு - இங்கு  ;  ஈண்டு + இப்

உருத்தல்:  தோன்றுதல். உருவனைத்தும் -  காட்சியளித்தவை எல்லாவற்றையும்.

பெருக்கி  -  ஒன்று சேர்த்து

மெய்ப்பு பின்

எந்த மொழி பேசினாலும்.

 எந்த மொழி  பேசினாலும்  என்ன தம்பி

இருக்கின்ற இடத்தினிலே ஏற்கப் பட்ட

விந்தைமொழி சொல்வதிலே விளக்கம் உற்றால்

வேறென்ன வேண்டுவதோ வினைவெற்  றிக்கே.

-----  சிவமாலா.



 [  இந்தக் காணொளியில் திரு குமரன் பிள்ளை அவர்கள் சீனமொழியில் வாழ்த்துக்கள் சொல்லி பழங்களைப் பரிசளிக்கக் காணலாம் ]

சிவமாலா வலைப்பூவின் வாழ்த்துக்களும் உரியவாகுக. 

ஞாயிறு, 11 ஜூலை, 2021

நிர்மலன் நின்மலன் அமைந்தவிதம்

இப்போது நிர்மலம் என்ற சொல்லி  னமைப்பினை உணர்வோம்.

இதில் மலம், நிறுத்துதல் என்ற இருசொற்கள் உள்ளன.

மலமாவது ,  1.  அழுக்கு,  2.  ஆணவம் ( ஆணவமலம் ), 3 கருமம் ( கன்மம்),  4 மாயை ( மாயா), 5 கற்பூரம்  7. பாவம்  ( பாவச்செயல்).  எனப் பல்பொருள் உடையது .

மல் என்னும் அடிச்சொல் நிறைந்திருப்பது, மலிந்திருப்பது  என்னும் பொருள் உடையது.  இச்சொல்லிலிருந்து மலம் என்ற சொல் வரக்காரணம், உலகை நாம் காணுங்கால் எங்கும் பாவச்செயல்களும் முறைப்பிறழ்வுகளும் தீமைகளும் இன்ன பிறவும் மிகுந்து கட்டுக்கடங்காமல் கிடக்கின்றன.  உடலின் அழுக்கும் சில நாட்கள் உள்ளே கிடந்தே வெளிப்படுகின்றது,  அதனால் அதுவும் மிக்குக் கிடப்பதொன்றேயாகும்.  ஆகவே மலம்  எனற்கு முற்றும் பொருந்துவனவாகும் என்று உணரவேண்டும்.

இவ்வுலகம் நன்மை குறைவானது;  தீமை மிக்கு நிற்பது.

மலம் ஊறித் ததும்பும் உடலை மெய் என்று கொள்கிறோம்  (தாயுமானவர் மொழிந்தது).  மெய் என்றால் உண்மை என்கின்றோம்;  இது உண்மையும் அன்று, நன்மையும் அன்று.

பெருகும் எதுவும் தன்  இடம் விட்டுப் பிற இடங்களையும் பொருள்களையும் பீடிக்கும். அவ்வாறுதான் அது பெருகமுடியும். இருக்குமிடத்திலே இருந்துவிட்டால் எவ்வாறு பெருகும்?  ஆகாது.   இதே பொருண்மையால்தான் மற்போருக்கும்  " மல் " என்ற பெயர் வந்தது.  வலிமையினால் பிறனிடத்தில் சென்று அடித்தும் பிடித்தும் அவனை அடக்காமல் இருந்துவிட்டால்  " மல் " இல்லை. மல் என்னும் போரில் வன்மை பெருகிப் பிறன்பால் செல்லுதல் பொருளாகிறது.

மல் என்பதிலிருந்து வந்த மல்குதல் என்ற சொல்லும் ' நிறைவு, மிகுதி' குறிக்கும் என்பதுணர்க. பல்குதல் -  மல்குதல் திரிபணுக்கமும் பொருளணுக்கமும் கருதுக.

மல் - மலிதல் :( வினைச்சொல்.)    பொருள்: பல்குதல், மிகுதல்,  எங்கும் உளதாதல்.

மல் - மலம்  -- என்பதை நிறுத்துவோன் ஒருவனே. அவன் கடவுள்.  படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் .அருளல் என்ற ஐந்தொழிலால் மலம் அணுகாமல் அல்லது அணுகினாலும் நம்மை ஒழிக்காமல் அழிக்காமல் அவன் நிறுத்துகிறான். அவன் தானும் மாசின்மையில் திகழ்கிறான்.

நிறு + மலம் >  நிறுமலம் >  (திரிந்து ) :  நிர்மலம்  ஆகும்.

நிறுத்து என்ற சொல்லின் அடிச்சொல் "நிறு" என்பது.

நில் + மலம் >  நின்மலம்  ( மலத்தை நில்லென்று நிறுத்தும் திறம்).

று என்னும் எழுத்து வந்த சொற்கள் ர் என்று திரிந்தன உள. அவற்றைப் பழைய இடுகைகளில் காண்க.  நில் > நிறு;  நில் > நின்.

நிர்மலம் - நின்மலம் திரிபு எனினுமாம்.  (  திரிபுண்மையால் இருபிறப்பி).

நினைவில் இக்கால் நிகழும் எடுத்துக்காட்டு:

வெறுத்துப் பேசிப் பகைமை பாராட்டுவது  வெறு + ஓது + அம் > வெறோதம்  இது திரிந்து விரோதம் என்று வழங்குகிறது.  ( எழுத்துகள் ஒலிப்பு முதலியவை திரிந்தன).  தெரிந்துகொள்ளுங்கள்.  ஓதுதல் - ஒலித்தல் , வெளிப்படுத்துதல்.

வெறு > வெர் > விர்.   ஒ.நோ:  நிறு > நிர்.

பெருகுவது கெடு குணங்கள்;  அருகுவது நற்பண்புகள்.

இவை இல்லாதவன் இறைவன்,  ஆதலின் நின்மலன்.

சென்ற இடுகையில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருந்தோம்.  அது இங்கே:

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_10.html  

மேற்படி இடுகையில் கவிதையின் கடைசி வரியில் இச்சொல் காண்க.

Nir(u)malam has the same meaning as "immaculateness" or the state of being spotlessly clean.

மலங்களால் பீடிக்கப்படாதவன் அவன்;  நம்மையும் அது பீடிக்காமல் காக்கின்றான் என்றவாறு.

அறிக மகிழ்க.

ஏனை மதங்களிலும் இக்கருத்து காணலாம்.  ஒருவன் நபிபெருமானைக் கேட்டான்:  பாவம் செய்யாமல் வாழமுடியுமா என்று.  அதற்கு அவர் விடை:  உலகில் தரை தண்ணீர் பெருகி இருக்கையில் கால் நனையாமல் நடக்கமுடியுமா?  முடியாது.   அதுவேபோல் எவ்வாறெனினும் பாவம் நிகழுமாறு கண்டுகொள்க. (  இறைத்துணைகொண்டு அது விலக்கி ஒழுகுதல் வேண்டும் என்பது).

Deliver us from evil Amen என்பது  கிறிஸ்துவ வேண்டுதல்.

மெய்ப்பு பின்.

மெய்ப்பு பார்க்கப்பட்டது:  0700 11072021    0624 12072021