சனி, 10 ஜூலை, 2021

மழையா வெயிலா யார் தீர்மானிப்பது?

 

மழைத்தூர்ந்து நெருங்கிய மால்நிறத்தின் 

முகிற்கூட்டம்

இழைத்தார்ந்த இடுவிரை வாலெடுத்தேன் 

உலராடைகள்

நனைத்தோய்ந்து செலுமுகில் நான்படுவேன் 

அதற்கென்ன

நினைத்தோய்ந்து நிலைகொள வைத்தனைநீ   

நின்மலனே.


இதன் பொருள்

மழைத்து  ஊர்ந்து ---  மழை வருவதுபோல் சுற்றுச்சார்புகள் குளிர்ந்து,

நெருங்கிய மால் நிறத்தின் -  வானில் கிட்ட வந்த  கருநிற முடைய;

முகிற்கூட்டம் ---  மேகப்  பெருந்திரள்கள்;


இழைத்து ஆர்ந்த ----  உண்டாக்கி நிறைவுசெய்துவிட்ட;

இடு விரைவால் -  என்மேல் ஏற்படுத்திய (என் செயல்) வேகத்தால்;

எடுத்தேன் உலராடைகள்  --  ஓடி அகற்றினேன் உலர்ந்துகொண்டிருந்த ஆடைகளை;


நனைத்து ஓய்ந்து செலும் முகில் -   எடுக்காவிட்டால்  துணிகளை நனைத்துவிட்டு

சிறிது நேரத்தில் பொழிதல் ஓய்ந்து முகில் அப்பால் எங்கோ போய்விடும்;

அதற்கென்ன நான் படுவேன்  -  அந்த முகிலுக்கு என்ன நட்டம்;  அவற்றை மீண்டும்  காயவைக்க நான் அன்றோ முயற்சி மேற்கொள்ள வேண்டும்?

நினைத்து  ஓய்ந்து  -  (  எடுத்த பின்னர் ) இப்போது  இருந்து சிந்திக்குமாறு செய்து,

நிலைகொள வைத்தனை நீ  -   இறைவனே,  நீதான் தீர்மானிக்கிறாய் என்பதில்

ஒரு மாற்றமில்லை என்று நிலைநிறுத்தினாய்,

நின்மலனே -  குற்றமொன்றும் இல்லாதவனே.


நிர்மலன் -  விளக்கம்:  https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_11.html






வியாழன், 8 ஜூலை, 2021

உகரம் அகரமாகும் என்றால் ஐயமா?

 அகரத்தில் தொடங்கிய ஒரு சொல் திரிந்து உகரமுதலாகுமா என்று உங்களைக் கேட்டால்,   அதற்கு ஆம் என்று நீங்கள் பதிலளிக்கலாம்.  எடுத்துக்காட்டுக்காகக் காத்திருக்காமல் " அம்மா - சொல்வடிவங்கள்" என்ற நம் இடுகையை எடுத்துக் கேட்டவர் முன் வைக்கலாம். சொல்லாய்வு பற்றிய சிந்தனை உடையவரானால் கேட்டவர் உடன் ஒப்புவார். தெரியாதவரானால் அவர் படித்தறிந்து ஒப்புவதற்கு நீங்கள் சிறிது கால இடைவெளியை அவருக்களிக்கலாம்.  இங்குக் குறிப்பிட்ட இடுகை இதோ:

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_68.html 

இன்னொன்று சொல் பார்க்கலாம்,  இது ஒரு விதியாய் அமையவேண்டுமானல் ஒன்று இருந்தால் போதுமா என்று வினவலாம்.  அவர்க்கு இன்னொன்றும் தருவோம்:

உவித்தல்  -  அவித்தல் என்பது இன்னொன்று.

இவ்வேளையில் அதழ் இதழ் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஞெகிழ் அதழ்க் கோடலும்  என்கின்றது கலித்தொகை. 101.  இங்கு நெகிழ் என்பது ஞெகிழ் என்றுமாகும் என்பதைக் குறித்துக்கொள்க.  நயம் என்பது ஞயம் என்று வரவில்லை?    " ஞயம்பட உரை".

தமிழ் கவிதையிலே வளர்ந்த மொழியாதலால்,  இத்தகைய பரிமாற்ற வடிவங்கள் பாவலர்க்குப்  பயன் பெரிது விளைத்தன எனற்பாலது சொல்லித் தெரியவேண்டாத ஒன்றாகும்.

அம்மா என்பது உம்மா என்று வருமென்றால்,  உம்மா என்பது உமா என்று குறையுமென்றால்,  இருத்துக மனத்திலே.

செந்தமிழ் வாழ்க.  அடுத்து :  சபலம் என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு காட்டுவோம்.  ( அடுத்து வரும் இடுகைகளில் ஒன்றில்)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




புதன், 7 ஜூலை, 2021

அம்மா - சொல் வடிவங்கள்.

 அம்மா என்ற சொல் தமிழர்க்கு  வீட்டில் வழங்கும்  ஒரு சொல் ஆகும். இச்சொல் தமிழ்நாட்டைத் தவிரப் பிற இடங்களிலும் வழங்குகிறது.  மேலும் அம்மா என்றே வழங்காமல் திரிந்தும் வழங்குகிறது.

உம்மா என்றும் இது சில இடங்களில் வழங்கும்.  இச்சொல்லே இடைக்குறைந்து உமா எனவும் வழங்கும்.    அம்மை >  உம்மை > உமை என்றும் இடைகுறைந்து வழங்குதலும் உண்டு.

இந்தியாவிலே இது சில மாநிலங்களில் இ-மா என்றும் வழங்கும்,   குறிப்பாக கிழக்கு இந்தியாவில் இதைச் செவிமடுக்கலாம்.

போலினிசிய மொழியாகிய மலாய்மொழியில் இ-மாக்  என்று வழங்கும்.  இதுதவிர,  ஈபு  என்ற சொல்லும் வழங்குகிறது.

சமஸ்கிருதத்தில் மாதா என்ற சொல் வழங்குகிறது.  இச்சொல்லில்  அம்மா என்ற சொல்லின் இறுதி  முதலாகவும்,   தாய் என்ற சொல்லின் முதலெழுத்து  அதில் இறுதி எழுத்தாகவும் இருப்பதால்,   மாதா என்பது பகவொட்டுச் சொல் .

இலத்தீனில் இது மாற்றர் (mater)  ஆகிறது.  (அல்மா மாற்றர் என்ற தொடர் காண்க).

வயதான பாட்டியைச் சீன மொழியில்  "அம் "  என்று பணிவுடன் சொல்வர். அம்மாவை  Mǔqīn (மூச்சின்) என்று சொல்வர் எனினும் லாபு என்ற சொல்லும் உள்ளது (கிளைமொழியில்).  இது சிலவேளைகளில் "நாபுவே" என்று திரித்தும் உச்சரிக்கப் படுவதுண்டு.

பாரதிதாசன் தமிழ்ப்பற்று

பாவேந்தர் என்று பாராட்டப்பெற்ற பாரதிதாசன்:

"அமைவாம் உலகின் மக்களை எல்லாம்

அடிநாள் ஈன்ற அன்னை தந்தை

தமிழர்கள் கண்டாய்  அறிவையும் ஊட்டிச்

சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு"

----  என்று பாடி,  தமிழரே மூத்த இனத்தினர் என்று இசைக்கிறார். பாரதியாரும் இவ்வாறே "தொடக்கம் அறிய முடியாதவள் எங்கள் தாய்"  என்று தமிழைப் புகழ்கிறார்.    அம்மா என்பது தமிழ் வார்த்தை என்று கவியரசர் கண்ணதாசான் சொல்கிறார். பல மொழிகளையும் ஈன்றது தமிழ் என்று சொல்வதால் அம்மா என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கலாம். மேலும் சிவனுக்கு அம்மையப்பன் என்ற பெயரும் உள்ளது. புறநனூறு என்ன சொல்கிறது என்பதை நம் அன்பர்கள் அறிந்துள்ளனர்.  தமிழ்ச்சொற்கள் உலகெங்கணும் வழங்குகின்றன,  நண்ணிலக் கிழக்கு ( மிடில் ஈஸ்ட்),  ஆப்ரிக்க மொழிகள்,  அஸ்திரேலியப் பழங்குடிகள் மொழி,  தென் கிழக்காசிய மொழிகள் முதலியவற்றிலும் சான்றுகள் கிட்டியுள்ளன என்பர். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.