வெள்ளி, 2 ஜூலை, 2021

சோடு, சோடனை, சோடித்தல்.

 சோடு என்பது தமிழில் இணை என்று பொருள்படுகிறது.  உயரம், உடல்வாகு முதலியவற்றில் பெரிதும் வேறுபடாத இருவர்,  "(இருவரும்) ஒரு சோட்டு ஆள் " என்று குறிக்கப்படுவதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  மூலச்சொல்லின் பொருண்மையால்  மட்டுமின்றிக் காலணிகளும் எப்போதும் இணையாகவன்றிப் பயனின்மையால்,  இது இரண்டு என்ற பொருளினைக் காட்டுகிறது.. 

தெய்வச்சிலைகள் பெரும்பாலும் இணையாகவே அலங்காரம் பெற்றுப் பற்றரின்முன் வைக்கப்படுவன.  இதனால் சோடனை  ( சோடு+அன் + ஐ)  என்ற கவின்பாடு அறிவிக்கும் சொல் அமைந்தது..  சோடு> சோடித்தல் என்ற வினைச்சொல்லும் அமைந்தது.

இதன் மூலச்சொல்  ஓடு என்பது.  ஓடு என்பது உடன் என்று பொருள்பட்டு ஒரு பொருளோடு இன்னொன்று,  ஒருவரோடு இன்னொருவர் என்று இரண்டு என்ற பொருளை வெளிப்படுத்துவது ஆகும்.  அகர வருக்கத்துத் தொடக்கமுடைய சொற்களில் பல சகர வருக்கமாக ஆகிவிடுதல் போல்,  ஓடு என்பது சோடு என்று திரிந்தது.   ஆனால் பொருளில் பெரிதும் வேறுபடவில்லை.  சோடனை சோடித்தல் என்பவற்றிலே அச்சொல் ( சோடு) சற்று விரிவுற்றது.

ஓடு > சோடு.

இது திரிபில்  அமணர் >  சமணர் போல்வது. இவ்வாறு திரிந்த இன்னொரு சொல் அடுதல்,  அடு > அட்டி> சட்டியென்பதும் அன்னது  ஆம்.  அடுதலாவது, சமைத்தல்.

இணையாக அணியப்படும் பாதுகையும்  பல வேளைகளில் அலங்காரங்கள் உடையனவாய் உள்ளபடியால்  சோடனை சோடித்தல் முதலிய சொற்கள் பொருள்விரிவு அடைந்தமையில் வியப்பில்லை. கால்களும் அணிபெறுவன.


இதில் இன்னும் சிலவுள எனினும் பின்னர் உரையாடுவோம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


வியாழன், 1 ஜூலை, 2021

குழைச்சு - எலும்பின் பொருத்து.

 குழைதல் என்பது சோறு பருப்பு போலும் பொருட்கள் சமைக்கப்பட்டு மென்மையாதலை குறிக்கிறதென்பது நாம் அறிந்ததே.   ஆனால் இதனுடன் தொடர்புடைய குழுவுதல் என்ற சொல்லுக்கு: கூடுதல், சேர்தல், கலத்தல் முதலிய பொருள்கள் உள்ளன.  இவ்விரண்டு ( குழை, குழுவு ) வினைச்சொற்களும் பிறப்பியல் தொடர்புடையன என்பது விளக்கமின்றியே பலருக்குப் புரியக்கூடியதாம்.

குழைச்சு என்ற சொல் எலும்பின் பொருத்தைக் குறிக்கக் கூடியது.  இது சிற்றூர்களில் வழக்கிலிருந்தது. பிறமொழிக் கலவைப் பயன்பாட்டின் காரணமாக, இப்போது  வழக்கிழந்திருக்கலாம்.  பலரும் "எலும்போட ஜாய்ன்ட்" என்று பேசுவதைத்தான் இக்காலத்தில் செவிமடுக்க முடிகிறது. "ஜாயின்ட்டில் வலி" என்கிறார்கள்.   குழைச்சில் வலி என்பதை அண்மையில் கேள்விப்படவில்லை.

குழுவுதல் என்பது வினைச்சொல்.

குழுவு என்பதில் வு இங்கு வினையாக்க விகுதி.  அடிச்சொல்  குழு என்பதுதான். குழு என்றால் சேர்ந்திருப்பது.

குழுவு :   குழு + ஐ + சு.

எலும்புப் பொருத்துகள் சேர்ந்திருப்பவை.

இங்கு ஐ இடைநிலை.  சு என்பது விகுதி.   முடிபுற்ற சொல்: குழைச்சு.   இச்சொல்லின் ச் என்ற மெய் புணர்ச்சியில் தோன்றிய எழுத்து.

ஜாயின்ட் என்று சொல்லாமல்  குழைச்சு,  பொருத்து என்ற சொற்களைப் புழ ங்கலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


செவ்வாய், 29 ஜூன், 2021

அக்காள் (த) - சேச்சி ( மலை)

 அக்காள் -  தங்கை என்பது மிக்க நெருக்கமான,  பெரும்பாலும் மனநிறைவு அளிக்கும் ஓர் உறவு ஆகும்.  அக்காள் தங்கைகள் சிலர் சண்டை போட்டுக்கொண்டிருக்கலாம்.  திருமணமாகிப் புக்ககம் புகுந்துவிட்ட பின் வந்த சண்டைகளாக இவை இருக்கலாம். இன்னும் தாய்வீட்டில்தான் இருக்கிறார்கள் என்றால், மீண்டும் ஒன்றுசேர்வது மிகவும் எளிதன்றோ?  அக்காள் கணவர், தங்கை கணவர் முதலியோர் பின் புலத்தில் இருந்து சண்டையை ஊக்குவித்துக்கொண்டிருந்தால், நிலைமை சற்றுக் கடினமாகிவிடும்.

சண்டை இல்லாமல் யாவரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே. சிலர் சண்டை போட்டுக்கொள்வதைப் பார்த்தால் நமக்குக் கவலையாக இருக்கின்றது.  அரசியல்வாதிகள்தாம் பலவிதச் சண்டைகளைப் போட்டுக்கொள்கிறார்கள். அமைதிப்பூங்காவாக ஆகட்டும் இவ்வுலகம்.

சண்டை இன்மை காண்பதே  நம் மாந்த நாகரிகத்தின் தலையாய நோக்கமென்று ஒருசில கூறினோமாயினும், இன்று நாம் எடுத்துக்கொண்டது அக்காள், தங்கை என்ற சொற்களைப் பற்றியும், தமிழின் இனமொழியாகிய மலையாளத்தில் உள்ள 'சேச்சி "என்ற சொல்லைப் பற்றியும்தாம். ஆகவே நாம் தலைப்புக்குரிய பொருளுக்குச் செல்வோம்.

அக்காள் என்பதன் நல்வடிவச் சொல் அக்கை என்பதுதான்.  அம்மா என்ற விளிவடிவுக்கு எவ்வாறு அம்மை என்பதே எழுவாய் வடிவமாக வருகிறதோ, அவ்வாறே  அக்கா என்ற விளிவடிவுக்கு  அக்கை என்பதே எழுவாய் வடிவம் ஆகும்.  விளிவடிவு என்பது ஒருவரை அழைக்கும்போது வரும் வடிவச்சொல்.

(அம்மை என்பது ஒரு நோயின் பெயருமாகிவிட்டபின் அவ்வடிவம் மக்களின் பயன்பாட்டில்  தன் பிடியை இழந்துவிட்டதென்று தெரிகிறது. எனினும் இலக்கிய வழக்கில் அது தொடர்ந்தது. ) 

கண்ணன் என்பது எழுவாய் வடிவம், அது கூப்பிடும் (விளிக்கும்) வடிவத்தில் கண்ணா!  என்றோ,  கண்ணனே என்றோ வரும். சிலவேளைகளில்  " ஓ கண்ணன்,  ஓ கண்ணா" என்று நிலைமைக்குத் தக்க,  ஓ, ஆ, ஏ, என்றெல்லாம் விளியானது வெளிப்படும். இவற்றில் சில இலக்கண நூல்களில் விதந்து சொல்லப்படாதனவாய்  ஒழியும்.  மற்ற மொழிகளிலும் ஆ, ஏ, ஓ என இவை வருவதுண்டு.

நந்தலா கோபாலா ஜெய பிருந்தாவன லோலா

என்பதில் விளிவடிவங்கள் இருந்தால் கண்டுபிடியுங்கள். கருத்துரை இடுங்கள்.

எழுவாய் என்றால் வாக்கியத்தில் பேசுபொருளாய் வருவது.  நத்தை நகர்கிறது என்பதில் நத்தையே நாம் காணும் பேசுபொருள் .  நத்தையே  வாக்கியத்தில் "சப்ஜெக்ட்" (subject) என்பர். "நத்தையே நகராதே"  என்பதில் நத்தையே என்பது விளிவடிவம். Vocative case.  இதை விளிவேற்றுமை என்றும் கூறுவர்.

அக்கை என்பதே எழுவாய் வடிவில் அம்மை என்பதுபோல் இருக்கிறது.  (ஐகாரத்தில் முடிபவை)

அக்கையே, எண்ணெய் வாங்கினேன், ஆனால் புட்டியின் தக்கையை மறந்தேனே.

தங்கையே      நீ மறப்பதே உனக்கு வாடிக்கையாகிவிட்டது, உன்னை அறைகிறேன்.

அக்கை என்பது விளியில் அக்கா என்றும் வரும்.  அக்காவே என்று இரட்டை விளிவடிவிலும் வரும்.  இரட்டையாக வரக்காரணம்  அக்கா என்ற சொல் விளிவடிவில் இருந்தாலும் தன் விளிப்பொருளை இழந்து  எழுவாய்வடிவினது போல் உலகவழக்கில் எண்ணப்படுகிறது.  அக்கா என்பது இக்கோளாற்றால், எழுவாயிலும் அக்கா, விளியிலும் அக்கா ஆயிற்று.

அக்கை + ஆள் >  அக்காள்.  இது  ஏற்கெனவே பெண்பாலாய் உள்ள அக்கை என்ற சொல்,  ஐ இறுதி கெட்டு,  ஆள் என்ற இன்னொரு பெண்பால் விகுதி பெற்று  அக்காள் ஆகிவிட்டது.

இது பெண் என்ற சொல்,  ஆள் விகுதியைப் பெற்று:-

பெண்ணாளே பெண்ணாளே கருமீன் கண்ணாளே கண்ணாளே!

என்றும் பாட்டில் வருவது போலுமே.

அம்மை என்பது அம்மாள் என்று வருவது போல். எ-டு. இரமணி அம்மாள்.

"அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்." ---  இந்த வாக்கியத்தில் உள்ள அம்மை என்பதே எழுவாய் வடிவம்.  அது அப்பா என்ற விளிவடிவத்துடன் கலந்து  ஒரு சொன்னீர்மை அடைந்து இரண்டும் விளித்தன்மை அடைதல் காணவேண்டும்.

இனி,  அக்கை என்பது அக்கைச்சி என்று வந்து  சி என்ற பெண்பால் விகுதி பெற்றும் வரும்.

தங்காள்  என்னும் வடிவமும் "அக்காள்" என்பதற்கு ஒப்புமையாக நிலவினாலும் அது "நல்லதங்காள்" கதை மூலமே நமக்கு வருகிறது.  பெண்டிர் தமக்குள் ஒத்துப் போகாமை பற்றிய கதைகளை எழுதிக் குவித்துக் களிப்பதென்பது ஆடவர்க்கு வாடிக்கை என்பதை இங்குச் சொல்ல வேண்டுவ தில்லை.

வடிவங்களில் குழப்படி இருந்தாலும் அவை இலக்கியத்தில் இடம்  பெற்றுவிட்டால் அவற்றை விலக்க முடியாது.  தவறாயின் வழுவமைதியாய் ஏற்றுக்கொள்ளப்படும்.

இனிச் சேச்சி என்ற மலையாள வடிவத்திற்கு வருவோம்.  இது உண்மையில் சேட்டத்தி என்ற சொல்லின் தேய்வும் திரிபும் ஆகும்.   சேட்டம் என்றால் வலிமை, பெருமை.  இங்குச் சேட்டத்தி என்ற சொல்லில் மூப்பு குறித்தது.

சேட்டம் > சேட்டத்தி > ( சேத்தி) >  சேச்சி   ஆயிற்று.   இடைக்குறையும் திரிபும் உள்ளன.  சேத்தி என்பது வழங்கவில்லை.  சேத்து என்ற சொல் உறவுடைய சொல். ஒப்புடையது என்று பொருள்படும்.  சேட்டத்து > சேத்து. ( இடைக்குறை). இதைப் பின்னர் அறிவோம்.

இதில் தகர சகர மாற்றீடு இருப்பதை நுட்பமாய் அறிக.

இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். அன்பர்கள் உடன் நின்று ஆய்வினை முடித்தமைக்கு எம் நன்றியும் வணக்கமும்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்