வெள்ளி, 18 ஜூன், 2021

நண்டு பெயர் எப்படி வந்தது?

இதை வெகு சுருக்கமாகவே சொல்லிவிடுவோம்.  

நண்டின் உடம்பைப் பார்த்தால் அது இரு கூறாக இருக்கும்.  கீழ்ப்புறத்தில் ஓட்டில் நடுவில் ஒரு குழிவான கோடு இருக்கும்.  கோவணம் போன்ற மூடிய பகுதியும் இருக்கும்.

தமிழில் நள் என்பது நடு என்று பொருள்படும்.  நள்ளிரவு என்றால் நடு இரவு.  நள்ளாறு என்றால் நடு ஆறு.  நண்ணிலக்கோடு -  equator. ( பூமத்திய இரேகை என்பதும் உண்டு).  நண்ணிலக்கடல் - Mediterranean sea.

நள்+ து >  நண்டு  ஆயிற்று.   நடுப்பிரிவுக் கோடு உடைய உயிர். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்,

திருத்தப் பார்வை: 21062021 1220


நண்டுக்குள் ஒரு குன்று .....

 நண்டு என்பது  நீர்,  நிலம் என ஈரிடவாழ் உயிரி ஆகும்.  நண்டு என்பது ஞண்டு என்றும் எழுதவும் பேசவும் பட்ட சொல்.  இத்திரிபு  ( ந > ஞ) நயம் -  ஞயம் என்பது போலவே யாம்.  "ஞயம்பட உரை"  என்ற ஓளவையின் அமுதம்  நீங்கள் அறியாததன்று.

நண்டுக்குள் கை, கால், சதை, ஓடு இவையெல்லாம் உள்ளது.  ஆனால் அதற்குள் குன்று ஒன்று மறைவாக இருப்பதை நீங்கள் அறியீர்  என்பது எம் துணிபு  ஆகும்.

இதை அறிந்துகொள்ள, எகுன்று என்ற சொல்லை  ஆய்ந்திடுவோம்.  இச்சொல்லில் இறுதியில் நிற்கும் பகுதி  "குன்று" என்பது.  குன்று என்பது ஒரு சிறுமலையைக் குறிக்கும்.  குன்று என்பது அம் விகுதி பெற்று, குன்றம் என்றும் வருதற்பாலது.  எடுத்துக்காட்டு:  திருப்பரங்குன்றம்.

எகுன்று என்பதற்கு  "நண்டுக்கண்"  என்று பொருள்.  நண்டு என்றவுடன் தொலைவில் நிற்கும் நமக்கு இச்சொல் பழக்கமில்லாமல் இருக்கலாம். நம் வட்டாரத்திலும் புழக்கமும் இல்லாமல் இருக்கலாம். நண்டுகளை அடிக்கடி பிடித்துப் பழகியவர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும்.

எகுன்று என்ற நண்டுக்கண்ணுக்கு இன்னொரு பெயரும் உண்டு.   அதுதான் " குன்றி"   என்பது.   இச்சொல்லுக்குப் பிற அருத்தங்களும் (அர்த்தம்)  உள்ளன.

நண்டுக்கண் நண்டுக்கு வேண்டும்போது வெளியில் சற்று நீட்டி  எதையும் பார்ப்பதற்கும் வேண்டாதபெழுது உள்ளிழுத்துக் கொள்ளவும் ஆன திறம் பெற்றது .  வெளிநீட்சியிலிருந்து குன்றுவித்து  ( குறுக்கி) உள்ளே பதிந்து கொள்ளும் அதன் வல்லமையினால் அதற்குக்  குன்றி என்ற பெயர் வந்தது.

குன்றுதலை உடைய எதுவும் விரிந்துதான் பின் குன்றும்.  இல்லையேல் குன்றுதல் என்ற சொல் அந்த நிலைக்கு பாவிக்கப்படாது..1.  ஆகவே விரிவும் சொல்லமலே அதிலடங்கிவிடுகிறது.

ஆனால் சிலர் இந்தக் குன்றுதல் எழுதலின்பின் நடக்கிறது என்று தெளிவுபடுத்த இன்னொரு சொல்லைக் கையாண்டனர்.  அது எழுகுன்று.  நண்டுக்கண் எழுவதும் குன்றுவதுமாக உள்ள உறுப்பு -  எனவே  எழு குன்று ஆகிறது.  இது இருவினையொட்டுப் பெயர்  அல்லது இரு முதனிலையொட்டு.

எழுகுன்று என்பது ழுகரம் இடைக்குறைந்து,  எகுன்று ஆயிற்று.  

இடை வரும் ழுகரம் குன்றிய இடைக்குறைச்சொற்கள் பல தமிழில் கிட்டும்.  சுருக்க விளக்கமாக, ஒன்று காட்டுவோம்:

விழு + புலம் >  விழுபுலம் >  விபுலம்.

இங்கு விழு என்பது சிறப்பு என்னும் பொருளது.

வேறு எழுத்துகளும் குறைவதுண்டு.  எ-டு:

தப்புதல்  தாரம் (  தாரம் தப்புதல் )  >  தப்பு+ தாரம் > தபுதாரம் .

இச்சொல் தொல்காப்பியத்தில் உளது. கண்டுகொள்க.

ஆகவே எழுவதும் குன்றுவதுமாகிய நண்டுக்கண் எகுன்று என்று பெயர் பெற்றது இனிதே ஆயிற்று.

எழுங்கால் அக்கண்  ஒரு குன்றுபோன்றது என்று நீங்கள் விளக்க நினைத்தாலும் அதுவும் சற்றுப்பொருத்த முடைத்தே யாகி, நண்டுக்குள் ஒரு குன்று என்ற தலைப்புக்கு ஒரு வன்மை சேர்க்கவே செய்யும் என்பதும் அறிவீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு.

குறிப்பு

1. பரவு > பாவு > பாவி(த்தல்).  காட்சிக்கு மட்டுமுள்ள ஒரு பொருள் பயன்படுத்தப் படுமானால்,  அதனை மனிதன் கையாளுதல் நிகழ்ந்து  செயல்பாடு பாவுதல் - பரவுதல் . பாவித்தல் நிகழ்கிறது.  அதனால் பாவித்தல் என்பது பயன்படுத்தல் என்ற பொருளை உறழ்கிறது. 

  

வியாழன், 17 ஜூன், 2021

சமத்கிருதத்தில் தமிழ்ச் சுட்டடிச் சொற்கள்.

 தமிழில் பெரும்பாலான சொற்கள் சுட்டடியில் தோன்றியவை எனபதில் ஆய்வுவல்லோர் வேறுபடவில்லை.  நம் இடுகைகளில் சுட்டடிச் சொற்கள் மூலமாக வரும்போதெல்லாம் அவ்வுண்மையைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை,  நீங்கள் அறிந்த ஒன்றிரண்டு சொற்கள் தவிர.  தமிழினோடு பலவகைகளில் ஒத்தியங்கும் சமத்கிருதத்தில் சுட்டடிச் சொற்களின் ஆட்சி தெளிவாகவே முன் நிற்கின்றது.

அ, இ, உ என்பவை சுட்டெழுத்துக்கள்.  அஃறிணை ஒருமையில் இவற்றோடு து விகுதி இணைக்கப்படும்.  மூன்று சுட்டுக்களுக்கும்,  அது, இது, உது என்று வரும். பன்மையில்  அவை, இவை, உவை என்று வரும்.

 பிறைக்கு முன்னுள்ள நிலவு  உவா எனப்படுகிறது. இதுவும் ஒரு சுட்டடிச் சொல்லே ஆகும். அதுவே அமாவாசை என்று சொல்கிறோம்.  பின்னரே நிலவு படிப்படியாக வளர்ந்து இறுதியில் முழு நிலவாகிறது.  அமாவாசை என்பதன் முழுவிளக்கம் இங்கு உள்ளது.  அதைச் சொடுக்கி வாசிக்கலாம்.

அமாவாசை  https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

பேச்சுச் சொல்  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html

இப்போது எப்படி சுட்டுச்சொல் சங்கதத்தில் வருகிறது என்று பார்ப்போம்.

நந்தனுதே

ஜிஷ்ணுனுதே

பூரிக்ருதே

ஷைலஸுதே

இவ்வாறு வருவனவற்றை : (விளிவடிவம் )  எ-டு:  நந்தன்+உதே  என்று பிரிக்கலாம்.  பிறவும் அத்தகையனவே. வேறு முடிபுகளும் உள.

உது என்ற சொல்  ஏகாரம் பெற்று உதே என்று வந்தது.  அம்மொழிப் புலவர் இவ்வாறு பிரித்துக்காண்பதில்லை. உண்மை உணர்த்திச் சுட்டடிகள் அங்கும் புகுந்துள்ளன என்று அறிவுறுத்த இவ்வாறு காட்டினோம்.

தமிழ்ப்பேச்சிலும் இது உது என்னும் சுட்டுச்சொற்களைக் கேட்கலாம். 

"யாரோட கைக்குட்டை?"

" இது  ங்கொப்பனுது"  என்ற பதிலை நோக்குங்கள்.

உகரச் சுட்டு முன் என்றும் பின் என்றும் இரு பக்கங்களையும் குறிக்கவரும். "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற திருக்குறள் தொடரில் அது பின்பக்கம் குறித்தது.  உவா என்ற சொல்கூட, அமாவாசையைக் குறிக்கிறதா அல்லது முழுநிலவைக் குறிக்கிறதா என்பதை இடன் கண்டு அறியவேண்டும்.   இடம்= இடன்.  பகு+ அம் = பக்கம் என்றும் பகம் என்றும் இருவகையிலும் வரும்.  தகு+ அ = தக்க என்பதுபோல் இரட்டிக்கும் என்றும் அறிந்துகொள்க.  தகு+ அ > தக என்பதுமாம்.  இவை புணரியலுள் கூறப்படும் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகள் அல்ல.  ஈற்று அகரம் வருமொழியன்று. இவண் மொழி என்பது முழுச்சொல். இதை உணரவேண்டும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்/