செவ்வாய், 8 ஜூன், 2021

சுலோகம் என்பதில் லோகம் இல்லை.

 சில மொழிகளில் சுலோகங்கள் உள்ளன.  ஆயின் இச்சொல்லில் ஒரு பகுதி லோகம் என்று முடிகிறது.  லோகம் என்பது உலகம் ஆதலின், இதில் உலகம் என்னும் கருத்து உள்ளதாக நீங்கள் நினைக்கலாம்.  இச்சொல்லில் உலகம் இல்லை.  

இங்கு வரும் சுல என்பது உண்மையில் சொல் என்ற பதத்தின் திரிபுதான். [ பொருள் பதிந்தது பதம் .  பதி+ அம்.]

சொல் + ஓங்கு + அம்

>  சொல் + ஓகு + அம்  

>  சொலோகம் 

> சுலோகம்.

சொல்லப்படும் எதுவும் ஓர்   உயர்ந்த -  மேம்பட்ட நிலையை அடையுமானால்,  அது ஓங்கிய சொல் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். "சொலோகங்கள்" என்பவை கருத்துக்களை நன்கு எடுத்துரைப்பவை.

இச்சொல் ( சொலோகம் > சுலோகம் )  மிக்க அருமையாகவே அமைக்கப்பட்டுள்ளது.  இதுவும் பாராட்டக்கூடிய வகையிலேதான் அமைப்புற்றிருக்கிறது.

எனினும் இதன் அமைப்பை அறிந்தார் ............

இச்சொல் சிற்றூராரிடை வழங்குவதை  அறிந்துள்ளோம்.

" அந்தக் காலத்தில் சொலோகம் சொல்லுவாங்க......." என்று தொடங்கி, ஒரு கதையைச் சொல்லுவார்கள்.  எனவே இது ஒரு பேச்சுவழக்குச் சொல் .  பின்னர் மற்ற இடங்களிலும் பரவி உயர்நிலை அடைந்துள்ளது.

ஓங்கு என்ற சொல் ஓகு என்று வருவது இடைக்குறை.  இது அம் விகுதி பெற ஓகம் ஆகும்.

சொல் என்ற சொல் அல்லது பதம், வு என்னும் தொழிற்பெயர் விகுதி பெற்று சொலவு என்று வரும்.  இச்சொல்லை யாம் சில இடுகைகளில் பயன்படுத்தியுள்ளோம்.   சொற்களை ஆய்ந்து காணாருக்கு இது ஒரு கடினச் சொல்லாய்த் தெரியும்.  மிக்க எளிய சொல் இது.

ஆய்வு செய்யச்செய்ய பல்லாயிரம் சொற்கள் உங்களின் வயப்படும்.  எனினும் சிறந்த உரைநடை  வரைவு ஆவதற்கு நல்ல ஆசிரியர்களின் நூல்களையும் கற்கவேண்டும்.  எடுத்துக்காட்டு:  நச்சினார்க்கினியரின் உரைநடை.  அடியார்க்கு நல்லார் உரைநடை.  இவை இணையத்தில் கிட்டுகின்றனவா என்று தெரியவில்லை.

சொல்+ ஓகு+ அம் என்பதை சொல்ல + ஓங்கு + அம் >  சொல ஓகு அம் > சொலோகம் என்று காட்டினாலும்  இதுவுமதே.  ஒன்றும் வேறுபாடில்லை. யாரேனும் சற்று வேறுபடக் காட்டினால் அது வேறு என்று நினைத்துவிடவேண்டாம்.

இந்தச் சொல் ஆங்கில மொழிவரை சென்றுள்ளது.  ஆங்கிலத்தில் slogan  என்ற சொல் உள்ளது.  ஏனை ஐரோப்பிய மொழிகளிலும் இதன் மாறுதல் இருந்தால்அவை சென்றேறிகளே.  slogorne,  sluagh,  sluagh, slough என்று வேறுபட்டுக் காணப்படலாம்.  ஆய்வாளரையும் மருட்டலாம்.

ஓங்குக,  வெல்க என்பனவெல்லாம் கரையொலிகளாகலாம்.  அவை பயன்படுத்துவார் செயலைப்  பொருந்திவரும்.    கரை (வி) -  ஒலி, அழை.


மிகப் பாராட்டத்தக்க நிலையில் அமைந்தது என்று மேலே சொன்னோம்.  ஓங்கிய சொல் -  ஓங்கும் சொல் .   இங்கு  ஓங்கும் என்பதை  இடைக்குறைப் படுத்தினால்  ( ஓ[ங்கு]ம்) >  ஓம் என்றாகிவிடும்.   உயர்மந்திரத்தை உள்ளடக்கியது சுலோகம்  என்னும் சொல்  என்பது இதன் குறிப்பாகிறது.  இதைப் போலவே  "சொலோகம்" என்பதிலும் வேறுபடவில்லை.   "ஓகம்" என்னும் இறுதியைச் சுருக்கினாலும் "ஓம்"  வருகிறதென்பதை உணர்க.


சுலோகம் என்ற சொல்  சுலவம் என்ற வடிவத்தையும் அடையும்,   இஃது  சொலவு  >  சொலவம் > சுலவம் என்பதன் திரிபு.   சுலோகத்தைச் சுலவடை என்றும் சொல்வதுண்டு.   சொல்லுவது எதுவும் உடனே அதன் உயர்நிலையை அடைவதில்லை.  நாளடைவில் பலகாலும் புழங்குவதால் ஒரு மாற்றமற்ற நிலையை அடைகிறது.   அடைவதனால்  சொலவு+ அடை என்று கூட்டப்பெற்று சொலவடை >  சுலவடை   ஆகிறது.

சொலவு என்பது தொழிற்பெயர் ஆகிவிட்டது,  காரணம் வு என்ற விகுதியையும்  லகர ஒற்றை அடுத்து  அகர இடைநிலையையும் அது பெற்றுள்ளது.  இந்நிலையில்  சுலவு என்ற வினைச்சொல்லும் உள்ளது.   இது ~தல் என்னும் விகுதி பெற்றுச்  சுலவுதல் ஆகும்.   இஃது    உலவு > சுலவு  என்று பிறந்தது.  அகர வருக்கத்துச் சொற்கள்  சகர வருக்கமாகத் திரியும்.  எடுத்துக்காட்டு:  அமணர் - சமணர் எனக் காண்க.  இதுபோலும் பல சொற்களைப் பன்முறை பழைய இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளபடியினால்,  இங்கு அவற்றை மீண்டும் எடுத்துரைக்க வேண்டியதில்லை.  இது  உலவு > சுலவு என்றும்  சொலவு > சுலவு என்றும் இருவகையாகவும் விளக்கம் பெறற்குரியது ஆகும்.  சுட்டடிச் சொற்களை நன்கு அறிந்திடில் உல் என்பதே மூலச்சொல் என்பது தெற்றெனத் தெரிந்துகொள்ளலாம்.  உல் > ஒல் > சொல் என்றும்  உல்> உலவு > சுலவு என்றும் எளிதின் உணரற்பாற்று.   இனிச் சுலவுதல் என்பது சுலாவுதல் என்றும் திரிதற்குரியதாகும்.   சொல் என்பதும் பலர்மாட்டும் புழக்கத்தில்  இருப்பது. இருக்கவே,  சொல் உலவும் தன்மை உடையது.  எல்லோரிடத்தும் சென்று சுற்றுவது.  யாம்  வாய்திறந்து  அம்கும் என்றால் அப்படி ஒரு சொல் தமிழில் இல்லை.  ஆகவே அது சொல் என்னும் தகுதியில்லாத வெற்று ஒலி.  அதற்கு ஒரு பொருளும் இல்லை.  அமைக்கும் என்று சொல்வோமாயின் அது சொல். அது பொருளுடையது.  ஒரு வாக்கியத்தில் அதைப் பயன்படுத்தலாம்.  பிறரும் அறியவும் ஒலித்துப் பொருளறிவிக்கவும் முடியும் என்பது அறிக.  ஆகவே சொல் என்பது மக்களிடை நிலவுவதும் உலவுவதும் ஆகும்.   உல் என்ற அடிச்சொல்லின் பொருளுடன் அது இயைகின்றது. மற்றவை பின்பு ஓர் இடுகையில் அறிவோம்

அறிக மகிழ்க


குறிப்புகள்

முன்னர் வரைந்த குறிப்பு: இதை எழுதி முடிப்பதற்குச்

 சில தடைகள் விளைகின்றன.  ஆகையால் இதைப் பின்னர் முடித்திடுவோம்.

இப்போது முடிக்கப்பெற்றது.  09062021 1236  

தட்டச்சுப் பிறழ்வுகள் .

மெய்ப்பு  பின்.







 


திங்கள், 7 ஜூன், 2021

ஆயுர்வேத சக்திக்கு அடிபணியும் வைரஸ் கிருமி | Dr Meera sudheer | ayurvedi...

எழுதுகோல் பெயர்கள்: தூவி , குன்றிக்கோல்.

 எழுதுகோலுக்குத் தமிழ்ப் பெயர்கள் சில காட்டப்பெற்ற இடுகையை நீங்கள் இங்குப் படித்திருப்பீர்கள்.  அதை இன்னொரு முறை வாசித்துக்கொள்ளலாம்.

https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_30.html

எழுதுகோலுக்கு இன்னொரு பெயரும் உண்டு.  அதுதான் "தூவி"  என்பது.   தூவி என்ற சொல் இறகு என்றும் பொருள்படும்.  சிலகாலம் சிலர் எழுதுகோலைத் தூவி என்றும் குறித்ததுண்டு.

சித்திரம் அல்லது ஓவியம் வரைவதற்குப் பயன்படுத்தும் கோலை  ஓவியத் தூவி எனலாம் என்று நினைக்கின்றோம். இதைத் தூரிகை என்பது பெரும்பான்மை.

வரைதல் என்பது எழுதுவதைக் குறித்தாலும்,  ஓவியம் வரைதலையும் குறிக்கும். எனவே  வரைகோல் என்பது இருவகை வேலைகளையும் செய்வதற்குரிய கோலின் பொதுப்பெயர் என்று தெரிகிறது.

"சாக்" என்பது இன்னும் கிடைக்கிறது.   அதை மாக்கோல் என்று கூறலாம்.

குன்றி என்ற சொல் பல சொற்களில் பயன்பாடு கண்டுள்ளது.  அவற்றை எல்லாம் இங்குத் திரட்டிக் கூறுவதற்கில்லை.   இது நண்டுக் கண்ணையும் குறிப்பது.  சிறிய பந்துபோல் வெளியில் வந்து காண உதவுகிறது. பின்னர் உள்ளே பதிந்துகொள்ளும்.  இச்சொல் (குன்றி)  குஞ்சி என்றும் திரியும்.  கரிய ஒரு பருப்புவகை கருங்குன்றி ( துவரைக் குன்றி) எனவும் சுட்டப்படும். சங்க இலக்கியமான  குறிஞ்சிப் பாட்டிலும் வந்துள்ளது  ( 72).  இவற்றைக் கருத்தில் கொண்டு "பால்பென்"  என்பதைக் குன்றிக்கோல் என்றும் குறித்தல் பொருந்தும்.  குன்றிமணி (குண்டுமணி) என்பதும் கருதுக.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்