பூவம்பர் என்றால் அது ஒரு வாசனைத் திரவியத்தைக்1 குறிக்கும். இச்சொல்லைத் திருக்காளத்தி புராணத்தில் (7.55) அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூ என்ற மலரைக் குறிக்கும் சொல்லுடன் அம்பர் என்ற சொல் சேர்ந்து இப்பெயர் அமைந்துள்ளது. அம்பர் என்பதும் ஒரு வாசனைத் திரவியமே. அம்பர் என்ற சொல் அம் விகுதிபெற்றுக் கோயில் என்றும் பொருள்தரும். கோவில் எப்போதும் தூய்மையாகவும் மணமுடனும் திகழ்வது இதன் காரணமென்று அறிவதில் ஏதும் இடரிருக்காது. அம்பலம் > அம்பரம் என்று திரியும். எடுத்துக்காட்டு: சிற்றம்பலம் > சித்தம்பரம் > ( இடைக்குறைந்து ) சிதம்பரம் ஆகும்.
இறைவன் உலகமுழுதும் நிறைந்துள்ளான். " எங்கும் நிறைந்தவன், எங்கோ மறைந்தவன்" என்றும் பாராட்டிப் பாடுவதுண்டு. " எங்கும் உனைநான் தேடி அலைந்தேனே" என்று மனம் கவல்வதுண்டு. (கவலை கொள்வதுண்டு). மறைவாய் இருத்தலாவது இறைவனின் ஐந்தொழில்களில் ஒன்று. ஐந்தொழில்களாவன: படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மற்றும் மறைத்தலாம்.
இனி, அம்பரம் என்பது கோவிலையே யன்றி எப்பொதுமன்றத்தையும் குறிப்பதும் உண்டு.
அம்பர் என்ற சொல்லில் இரு துண்டுச் சொற்கள் உள்ளன. அம் என்றால் அழகு. அம்மை அழகு. பர் என்பது பர (பரத்தல், பரவுதல் ) என்பதன் கடைக்குறை. பரம் பர் ஆனது. இறுதி அம் கெட்டது (௳றைவுற்றது). இவ்வாறு நோக்குங்கால் அழகிய பரந்த இடமென்றும் பொருள்படும். கோவில், மன்றம் முதலியன இதற்குத் தகுதிபெற்று நிற்பனவாகும். வாசனை என்னும் மணப்பொருளும் பரவுதற்குரியது. ஆகவே வாசனை என்ற பொருளும் சொல்லினின்று புறப்பட்டது ஏற்புடையதே ஆகும்.
பாவச் செயல்களும் பரவக் கூடியவையே. காரணம் அவற்றைச் செய்யும் தீயவர்கள் சிந்தித்துச் செய்பவர்கள் அல்லர். ஒருவன் செய்த பாவச் செயலில் இன்னொருவன் கேட்காமலே கலந்து மகிழ்வதைக் காணலாம். பாவுதல் என்றாலே பரவுதல் என்பதே பொருள்,. நெசவில் நெட்டாக விடும் நூலைப் பாவுநூல் என்பர். நடவு நடுதலில் பாவுதல் என்ற சொல் பயன்படுவதுண்டு. பரவு > பாவு > பாவம் என்பது காண்க. நல்லனவற்றை அவ்வளவு விரைவாக யாரும் கைக்கொள்வதில்லை. ஆன்மாவிற்குக் கெடுதல் பரவுவதாலும் அது பாவம் எனப்படும். தீமை, கருமம் முதலியவை செயல் இன்று ஆவியையும் பற்றி அதன் துய்மையில் பரவித் தீய்த்துக் கெடுக்கிறது. இக்கருத்துண்மையாலும் பரவுதற் கருத்து வருதலை அறிக.
வாசனை பரவும் பொருளாவதை, புனுகு, பொன்னம்பர், பூவம்பர் பொங்கவே என்ற தொடர்வாயிலாக உணர்க. புழுகு > புனுகு. பொங்குதல் - பரவுதல் வகை.
ஓர்க்கோலை என்ற கடல்படு திரவியமும் அம்பர் எனப் பெயர் பெறும். பிசின் நெகிழ்ந்து இழைந்து பரவுதல் உடைத்தாதலின் அம்பராகும்.
ஆனால் சிதம்பர் என்ற சொல் உயர்வற்ற தீயோரைக் குறித்தற்குரிய சொல். இது சிதம்பரம் என்ற சொல்லின் கடைக்குறையன்று. ஆதலின் சிதம்பரம் என்ற சொல்லைச் சிதம்பர் என்று குறுக்குதல் தவறு. சிதம்பர் என்பது சிதை+வம்பர் என்ற இருசொற்களின் மரூஉ ஆகும்.
மனிதனுக்குரிய நலங்கள் சிதையப்பெற்றோராய் வம்பராய் உலவுவோருக்கு அது பெயராகிறது.
சிதை வம்பர் > சிதவம்பர் > சிதம்பர் என்றாகும். சிதை என்பதில் ஐகாரம் குறுகி, வகரமும் கெட்டு அமைந்த சொல். ஐகாரக் குறுக்கம் தொல்காப்பியர் காலத்தின் முன்பிருந்தே உள்ளது. வேலவன் > வேலன் என்பதில் வகரம் இயல்பாகவே மறைந்தது. [ வேல்+ அ + அன் ; வேல் + அன்] இது ஒரு முயற்சிச்சிக்கனம் ஆகும். இதைப் பகவொட்டு என்பதும் சரியாகும்.
அறிக மகிழ்க.'
மெய்ப்பு பின்
உலகின் சில நாடுகளில் இப்போது மீண்டும் மகுடமுகித் தொற்று மிகுதல் கவலையை அளிக்கிறது,
முகக் கவசம் அணிந்து
நோய்க்கு இடம் கொடுக்காமல் இருங்கள்.
குறிப்புகள்:
1. திர+ இ+ அம் = திரவியம். திரண்டுவந்த போற்றத்தக்க பொருள். இ இடைநிலை. அம் விகுதி. இயம் ஈறு என்றும் கூறலாம். எடுத்துக்காட்டு: நாகமணி. திரு இயம் > திரவியம் என்பாரும் உளர்.