ஞாயிறு, 21 மார்ச், 2021

தென்னாடு என்றாலே சண்டைக்களம்.

 தென்னாட்டுப் போர்க்களங்கள் என்றொரு நூலை, பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் எழுதினார். தனித்தனிச் செய்யுள்களை வாசிக்குங்கால் தென்னாட்டில் பலப்பல போர்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிந்தாலும், இந்த நூலை வாசிக்கும்போதுதான் போரே ஓர் இணையற்ற ஈடுபாடாகத் தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்முன் ஒரு திரைப்படம்போல் கொண்டுநிறுத்தப்படுகிறது என்னலாம். போரைத் தொழிலென்றே கூறுவதுமுண்டு.

வாழ்க்கை இவ்வாறு ஓடியதால்,  தமிழர்களிடை மிகப்பெரிய ஒற்றுமைக்கேடு மலைபோல் வளர்ந்திருந்தது என்பது தெளிவாகின்றது.

போர்மறவரிடைப் பல தரநிலைகளும் படிநிலைகளும் நிலவியபடியால் மொத்தமாகத் தமிழரிடைப் பெரியவர்,  அதற்குக் கீழுள்ளவர்,  அதற்கும் கீழுள்ளவர் என்று ஏற்றத் தாழ்வுகள் தோன்றி  அவை போர் முடிந்துபோனபின் முடிந்துவிடாமல் இன்றளவும் தொடர்ந்தன. இவற்றுள் பல சாதிகளாக மாறிவிட்டன.

தென்னிலம் என்ற சொல்லே தமிழில் "போர்க்களம்" என்ற பொருளைத் தருகிறது.   பல ஊர்கள் "கோட்டைகள்" என்ற அடைமொழி பெற்றுள்ளன. எடுத்துக்காட்டு:  புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை,  கள்ளிக்கோட்டை,  கந்தருவகோட்டை, பாளையங்கோட்டை  என்பன காண்க.  இவையெல்லாம் வீரத்தை ஒருபுறம் முன்வைத்தபோதும்  விரிசல்களையும் விரித்துவைத்தன.

தென்னிலம் போர்க்களம் ஆதலால் போர்கள் பெருந்தொழில்கள் ஆயின.

அறிக மகிழ்க.



சனி, 20 மார்ச், 2021

சாய், சமர்ப்பித்தல்

 ஓர் அரசு அதிகாரியிடம் போய் ஒன்றை வாய்மொழியாய்த் தெரிவித்து, எனக்கு உதவுங்கள் என்று வேண்டிக்கொள்ளலாம்.  அவரும் அவசரத்தில் சரி சரி என்று புகன்றுவிட்டுப் போய்விடக்கூடும். அவர் ஒன்றும் செய்யாமல் ( மறந்து) விட்டார் எனில், இன்னோர் அதிகாரியிடம் கூறுகின்ற போது,  வாயால் சொல்லிக்கொண்டிருந்தால் ஆகாது, எழுதிக்கொடுங்கள் என்று அவர் கேட்டால் அதையும் செய்தால் அப்போது அது மனுவாகிறது.   மன்னுதல் எனில் நிலையாக  இருத்தல். இங்கு நிலையாக முன்வைத்தல்.  வாய்ச்சொற்கள் சுவடின்றி மறைந்துவிடும்.  எழுத்து கொஞ்சநாள் நிற்கும்.  ஒரு தாளில் எழுதிக் கொடுக்க, அது மனு ஆகிறது.  ஒரு மனுவுக்கு இருப்புக்காலம் வாய்மொழியினும் நீண்டதாகும்.

ஞானம் வாய்க்குமொருமனு வெனக்கிங் கில்லாமை யொன்றினையும் என்றார் தாயுமான சுவாமிகள்.  

மன்னுதல் :  ஏவல்வினை: மன்னு.   மன்னு என்பது முதனிலைத் தொழிற்பெயர். மன்னு என்பது  மனு என்றது இடைக்குறை.    என்னும் > எனும் என்ற தொகுத்தல் போலவே.

நிலையாக இருக்கும் காலம் என்பது பொருளுக்குப் பொருள் வேறுபடும். நிலையானது என்றால் உலகம் முடியும் வரை நிலையானது என்பது பொருளன்று.

ஒரு மனுவை  அலுவல்மேலாளர் ஒருவர்முன் கிடத்துதலே சமர்ப்பித்தல்.   இது அமர்த்தல், அமர்த்துதல், அமர்ப்பித்தல் > சமர்ப்பித்தல் என்று  அமைகிறது.  அகர வருக்கம் சகர வருக்கமாகும்.  இதற்கு எடுத்துக்காட்டு:  சமர் > சமர்,  அமைத்தல் > சமைத்தல் என்று பல.  பல இடுகைகளில் இது கூறப்பட்டுள்ளது. ஒரு தாளில் எழுதுங்கள், மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்.

சில  இறைப்பற்று உய்விப்பாளருக்குச் சாய் என்ற சொல் வழங்கும். எடுத்துக்காட்டு:  சாய்மாதா.     ஆய் - சாய்.    இது தாய் ,  அதாவது பற்றின் ஊற்று என்று பொருள்படும்.  இது அயலிலும் சென்று நன்கு வழங்குவது.


கொண்டிகளும் கொட்டிகளும். போர்க் கொள்வனை

போருக்கு முந்தின களிப்பாட்டம் 

அரசர்கள் காலத்தில் போர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளுடனும் பூசைபோடுதல் மாலையணிதல், கள்ளருந்துதல், உணவுகள் பரிமாறுதல், குளியல்கள், கோலாகலங்கள் ஆகியவற்றுடனும் நடைபெற்றன. போருக்குப் போய் மடியும் நிகழ்வுகளும் பல.  மீண்டுவருதல் மறுபிறவிதான்.   ஆகவே போர்மறவர்கள் எல்லா விதங்களிலும் நுகர்ந்து மகிழுமாறு அரச அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர். இவ்வாறில்லையாயின் படைக்கு ஆள்கிட்டுவதும் குதிரைக்கொம்பு  ஆகிவிடும்.  

இயலாமை அரசன்

போதுமான உணவு இருப்பு இல்லாத நிலையில் போர் தம்மீது சுமத்தப்பட்டுத் தவிக்கும் அரசனின் நிலை வேறு.  சவுக்கடி கொடுத்தாவது படையில் பலரையும் பணியவைத்துப் போருக்குத் துணியவைக்க வேண்டியும் அவ்வரசனின் நிலைமை கட்டாயம் ஆகிவிடும்.  இது தமிழ அரசன், சீன அரசன், யப்பானிய அரசன் , வெள்ளைக்கார அரசன் என்ற பாகுபாடின்றி யாவர்க்கும் பொதுப்பாடமாகுமன்றி ஒரு புதுப்பாடமன்று.  அவர்களை இப்போது போரில்லாக் காலத்தில் தாக்கி எழுதுவதில்  ஒரு பயனும் இல்லை.  வரலாறு மீண்டும் மீண்டும் அதே பாடத்தைப் புகட்டவல்லது என்பது ஓர் ஆங்கில அமுதமொழி. History repeats itself. (English ).

சமையல்,  ஆக்கிகள் > ஆச்சிகள்

படை நகரும்போது ஒரு சமையல்காரப் படையும் பின்னே நகரவேண்டும்.  போர் ஆயுதங்களைக் கொண்டுசெல்லும் வழிகள் எப்போதும் திறந்தே இருக்கவேண்டும்.

ஆக்கிப் போடுகிறவர்கள்  ஆக்கிகள்  அல்லது  ஆச்சிகள் எனப்பட்டனர்.  க - ச போலியாகும்.  ஆய்ச்சிகள் என்பது வேறுசொல் எனினும் அதுவும் திரிந்து ஆச்சி என்று குழப்பமுண்டாக்கலாம்.  சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைக் கொண்டு உணவு சமைத்துண்ணல் சற்று ஆபத்தானது.  உலகில் போர்கள் பல செய்த புகழின் உச்சியில் இன்றுமுள்ள ஒரு படைத்தலைவருக்கு நஞ்சிடப்பட்ட இறைச்சி தரப்பட்டு அவர் சின்னாட்களில் மறைந்தார். பெயர் யாதும் குறிப்பிடப் படாது.

வெற்றி பெற்ற மன்னன் பெண்டிரொடு நுகர்ச்சி:

போரில் வெற்றியடைந்த மன்னன் தோற்ற நாட்டிலிருந்து பெண்களைக் கொண்டுவந்து தக்க இடத்தில் சிறைவைப்பான். இந்தப் பெண்கள் மன்னனின் படையணிகட்குச் சமர்ப்பணம்  ஆகிவிடுவர்.  சிறந்த அழகியை அவன் வைத்துக்கொள்வான்.  இவ்வாறு அட்டிலா த ஹன் என்று வரலாறு கூறும் ஒரு ஹான் இனத்துப் போர்ப்புயலோன்  ஒரு கைதிப்பெண்ணை அணுகிய ஞான்று,  அவன் அவளால் கொல்லப்பட்டான்.  சீனாவிலிருந்து ஹங்கேரி வரை நெடுந்தொலைவு படைநடத்திய ஈடு இணையற்ற மறவன், இப்படியா மடியவேண்டும்?  இவ்வாறும் நிகழ்ந்ததுண்டு வரலாற்றில். வெற்றியடைந்த ஒவ்வொரு போரிலும் அவன்றன் நுகர்ச்சி நிறைவேற்றிய அழகிகள் அனந்தம்.


கொண்டிகள்  - கொட்டிகள்

 இவ்வாறு சிறைபிடிக்கப்பட்ட பெண்கள் " கொண்டிமகளிர்" எனறு தமிழில் கூறப்பட்டனர். இவர்களை ஆடவைத்து அரசியல் அதிகாரிகள் களிப்பதுண்டு. இவர்கள் ஆட்டத்துக்கு மேளம் கொட்டியவர்கள் " கொட்டிகள்"   எனப்பட்டனர். போர்முடிந்த நிலையில் புகுந்த இவர்களும் ஆங்காங்கு ஏனை மக்களுடன் வாழ்ந்தனர். இவர்கள் அந்நாளையச் சிறையதிகாரிகளின் அரவணைப்பில் தனிப்படுத்தப் பட்டுக் குடிகளிடைக்  குடியமர்ந்தனர். 

அயல் நாட்டுப் பெண்கள் உள்நாட்டு மக்களிடைக் கலப்பாவதற்குப் போர்களே பெரிதும் உதவின. அழகிய  நிறப் பெண்டிரை நிரவி வாழ்விக்கப் போர்கள் சிறந்த வழிமுறைகளைத் தந்தன.  தனித்தனியாகப் போய் அயல் அழகிகளைப் பெண்கேட்டால் கிட்டுமா என்ன?

அறிக மகிழ்க.


குறிப்புகள்

கொண்டவிடு ரெட்டிகள் --புவனகிரி வேளமாக்கள் என்போர் போல  இடையிடையே விஜயநகரப் பேரரசுக்கு  (கிருஷ்ணதேவராயர்) எதிராகக் கிளர்ச்சி செய்தவர்கள். .

கொள் + தி:  கொண்டி.  ( கொள்ளப்பட்டோர் -  கைது செய்யப்பட்டவர்கள்.) கொண்டவிடு:  கைது செய்து பின் விடுவிக்கப்பட்டவர்கள்.


மெய்ப்பு பின்னர்.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடிக்க.