வெள்ளி, 19 மார்ச், 2021

இம்மா என்ற தொடர்

 இம்மா என்பது  இ + மா என்ற இருசொற்கள் கொண்ட தொடர்.

இ = இங்கு , இது சுட்டுச்சொல்.   (ஓரெழுத்துச்சொல்).

மா என்பது அளவு என்று பொருள்தரும் ஓரெழுத்துச்சொல். ஒரு மா நிலம் என்பதில் மா என்பது ஒரு நில அளவையைக் குறிக்கிறது.  இப்போது மா என்னும் கணக்கில் நிலம் அளக்கிறார்களா என்று தெரியவில்லை.  ஏக்கர் (acre) என்ற ஆங்கிலச் சொல் புழங்கப்படுகிறது.  மா என்பது பெரிது என்றும் பொருள்தருவது.  மாமனிதர் என்ற தொடரில் இப்பொருள் வெளிப்படுகிறது.  மா என்பது மகா ( மஹா ) என்ற பொருளில் வருவதும் ஆகும்.

இம்மாஞ்  சோறு சாப்பிட்டாள் -  வாக்கியம்.  இம்மா : இந்த அளவு (கைகளால் அளவைக் காட்டுவார்கள்).  இப்படிப் பேசுவோர்  மூத்தோர் சிலர். இப்போது இத்தகு தொடர் வழக்கில் மிகக் குறைந்துவிட்டது.

பேச்சு வழக்கில் vவரும் இது  இவ்வளவு தெளிவாகப் பொருள் தரினும்  இ ( இந்த )  மா( அளவு) என்பவை உண்மையில் இலக்கியங்களில் மிக்க வழக்குடையவையே  ஆகும்.

மாதிரி என்பது  அளவாகச் செய்யப்பட்டது என்ற பொருளில் வரும் கூட்டுச் சொல்.   திரித்தல் -  மாற்றமாகச் செய்தல்.  பெரிதைச் சிறிதாக்குவதும் சிறிதைப் பெரிதாக்குவதுமான மாற்றான ஆக்கங்கள்.  மாதிரி உருவம், மாதிரிப் பொம்மை எனக் காண்க.

மற்ற தொடர்புடைய இடுகைகள்:

மகம் :  https://sivamaalaa.blogspot.com/2014/02/makam-star-name-derivation.html

மகம்  மாகம்  https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_97.html 

இவற்றையும் வாசித்தறிக.


---------------------------------------------------------------------------------------------------

நோயிலிருந்து காத்துக்கொள்ளுங்கள்.

நம் நேயர்களில் மூத்தோர் அதிகம்.  யாவரும் நலமுடன் இருக்க

இறைவனை இறைஞ்சுகிறோம்.

மெய்ப்பு  பின்னர்.


மற்றவை:

ட > ஷ :  https://sivamaalaa.blogspot.com/2019/01/blog-post_63.html

கத்திரிக்கோல்:  https://sivamaalaa.blogspot.com/2015/05/blog-post_16.html


பிறகடனம் புறகடனம் ப்ரகடனம்.

 "ப்ரகடனம்" என்ற சொல்லினை அறிவோம். இதற்கு வேறு விளக்கங்களும் இருக்கலாம் என்றாலும் நாம் வெறுமனே அந்த மொழி, இந்த மொழி என்று தடுமாறாமல் மூலச்சொற்களை  ஆராய்ந்தறிவோம்.  அதுவே சொல்லமைந்த  கருமூலத்தைச் சுட்டவல்லது ஆகையினால்.

ஒன்றை நாம் வெளியிடுவதானால் அது அக்கருத்துத்  தோன்றிய இடத்தினின்று புறப்பட்டுச் சில எல்லைகளைக் கடந்து அப்பால் செல்லுகிறது என்று அறிதல் உண்மைகாண்டற்கு வழிசெய்யுமென் றறிக.   எல்லை,  வகுக்கப்படாத எல்லையும் ஆகலாம்.   (காண்டல் = காணுதல்)

எனவே நாம் முதலில் "கட " என்ற சொல்லின்பால் கவனத்தைச் செலுத்தவேண்டும்.  இது கட+ அன் + அம் > கடனம் ஆகிறது.  ஒரு சொல்லாக்கத்தில் வரும் இடைநிலையானது வெறும் சொல்லமைவுக்கு வழிசெய்யும் இடைச்சொல் ஆகலாம்,  அல்லது அதற்கு ஒரு பொருளும் இருக்கலாம்.  இருந்தால் அதுவும் நன்றே எனலாம். 

அன் என்ற பகுதிச்சொல் அனைத்து என்ற சொல்லில் இருப்பதனால்,  இடைநின்ற -   யாவருமறிந்திடக் கடந்து சென்ற ஒரு செய்தி என்றபடி வைத்துக்கொள்ளலாம்.  அம் என்ற இறுதிநிலை,  அமைவு குறிக்கும் விகுதி ஆகும்.

பிரகடனம் என்ற சொல்லில் ."கடனம்: என்ற சொல்பகுதி  தெளிவாகவே பொருண்மையுடன் மிளிர்கின்றது.  ஒருவன் கடன்வாங்கினால் அதைத் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டியது அவனின் கடமை என்ற பொருளில் "கடன்" என்ற சொல் வழங்கிவருவது நாம் அறிந்தது.  அந்தக் "கடன்" எனற்பால சொல்லுடன் இந்தக் கடனம் என்ற சொற்பகுதியும் தொடர்புடையதாய் நிற்றல் நம் தேடுகையை எளிதாக்குகிறது என்பதும் குறிப்பிடத் தக்கதாம்.

இனிப் ப்ர, பிர என்ற முன்னியைந்த சொல்லுக்கு வருவோம்.   இது பிற, புற என்ற இரண்டுக்கும் பொருந்தி வருகிறது.  வீட்டின் அல்லது செய்தி தோன்றிய இடனுக்கும் புறத்தே செல்வது,  பிறரிடம் செல்வது  அதாவது பிறரறியச் சொல்லப்படுவது என்று இருவகையிலும் இது பொருந்துவதாகிறது.  ப்ர என்பது ஒரு முன்னொட்டு என்று முன்னர் முடிபு பெற்றிருப்பினும், அத்தகு முடிபினால் நம் ஆய்வுச்செலவு பாதிக்கப்படாது நின்றமை காண்க.

இவ்வாய்விடுகையை முடித்து நிறுத்தும் உத்தி கருதி,  யாம் இங்கு "புற" என்பதைத் தேர்வு செய்வாம்.  ஆயினும் பிற எனற்பாலதும் பொருந்துவதே. இதை வாசிப்போர் இவற்றுள் எதையும் முற்பகுதியாய்க் கொள்க.  அதனால் பங்கமொன்றும் இல்லையாதல் உணரற் பாலது.

புற பிற என்பன நீங்கப் பிர என்று வந்தது வழக்கில் மெலித்தல் என்பதே உண்மை.  இடையினப் படுத்தி ஒலி மெலித்தலாம்.

எந்தச்  செய்தியும் அல்லது நிகழ்வும் பிறரையும் கடந்து புறத்தே செல்லவேண்டும்.  அப்போதுதான் அது பரவும், இச்சொல்லமைவு அதனைத் தெளிவுபடுத்துகிறது.  பிற புறம் என்ற இரண்டும் ஈண்டு குலவுகின்றன. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


Cursor jumps to unknown spots whilst editing.

Will review.

Any error pl inform us. Thank you.

மெய்ப்பு: 20032021






புதன், 17 மார்ச், 2021

அதிகம். அதிகம்.

 உங்கள் வீட்டிலிருந்த வாறே வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.  சற்று தொலைவில் தண்ணீர் பெருகிநிற்பது தெரிகிறது. நீங்கள் காண்பது சில மரங்களுக்கும் புல்வெளிக்கும் அப்பால். தண்ணீர் அங்கேதானே கிடக்கிறது. ஒன்றும் இடரில்லை என்று ஒருவாறு உங்கள் மனம் அமைதிகொள்கிறது. அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கிடக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்..

கொஞ்ச நேரம் வேறு சில வேலைகளை முடித்துவிட்டு  மீண்டும் வெளியில் பார்க்கிறீர்கள்.. உங்கள் மனத்துள் எதை ஓர் எல்லையாய்க் கருத்திக்கொண்டு இருந்தீர்களோ அந்த எல்லையைக் கடந்து நீர் மேலேறிக்கொண்டிருக்கிறது. அப்போது நீங்கள்   அது இகந்துவிட்டது என்று சொல்கிறீர்கள்.

இகந்துவிட்டது என்றால் என்ன?  தமிழ்தான்.  ஆனால் இன்று இயல்பான பயன்பாட்டில் இல்லாத சொல்.  எங்கோ இலக்கியத்தில் நம் நற்பேற்றின் காரணமாக நாம் இன்னும் காணமுடிந்த சொல்.

அது இகந்துவிட்டது.  அது இக அம் >   அதிகம்.  மிக்க எளிமையாக, அதாவது வகர உடம்படுமெய் உள்ளே புகாமல் வந்த சொல்.  அந்த மெய்யெழுத்து வந்திருந்தால் அது + இக + வ் + அம் = அதிகவம் என்று வந்திருக்கும்.   இன்னும் ஓர் உடம்படுமெய்யைப் புகுத்தி  அது + வ்  + இக + வ் + அம் =  அதுவிகவம்! ஏன் இத்தனை உடம்படுமெய் வரவேண்டும்.  இரண்டு உடம்படுமெய்களை ஒரே சொல்லில் புகுத்தினால் காசா கிடைக்கிறது.  வேறு வேலை இல்லையா?  வெட்டு,  வெட்டு.  அது + இக + அம் >  அத் + இக + அம் >  அதிகம்!!  அது என்பதிலிருந்து தொத்திக்கொண்டிருந்த உகரத்தையும் வீசி எறிந்துவிட்டோம்.

சுருக்கமான ஒரு சொல்.

அது என்ற சுட்டுப்பெயருடன் சேர்ந்து அமைந்த அருமையான சொல்.

இங்கு என்பதை எடுத்து, அதற்குள் இருந்த ங் என்ற எழுத்தை எறிந்துவிட்டால்,  இங்கு என்பது இகு ஆகிவிடும்.  இப்போது இகு என்பதன் இறுதி உகரத்தை எடுத்து ஓர் பேரொலியுடன் வீசுங்கள்.  அத் + இக் + அம் =  அதிகம்!!

ஆங்கு கிடந்த நீர் பெருகி இங்கு வந்துவிட்டது.  நமக்குத் தேவையில்லாத நீர் வீட்டுக்குள் வரப்பார்க்கிறது.  இது அதிகம் தான்.

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில்  ................

(பாரதி பாடலின் சில வரிகள் ).

சுட்டுப்பெயர்களைக் கொண்டு அமைக்கப்பட்டு  து,  அம் முதலியன இணைந்த இச்சொல் அழகாகவே இருக்கிறது.

அதிகவம்,  அது இக வி அம் >  அதுவிகவம் என்றெல்லாம் வரவேண்டியதை இப்படி வெட்டலாமா என்றால் கவலை வேண்டாம், உலகத்தில் நீங்கள் பெயர் வைக்கத் தொடங்காத பல பொருள்கள் பற்பல கலைத்துறைகளில் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு இப்புதுப்பதங்களைப் பெயர்களாக்கிவிடலாமே.  என்ன நட்டம்? 

இன்று அதிகமானது கொரனாதான் என்பன நம் இந்தியத் தாளிகைகள்.

அறிக மகிழ்க.

கொரனாவிற்குக் கவலை கொள்க. செயலில் இறங்குக.

மெய்ப்பு பின்னர்.

மெய்ப்பு    1227 11122021 பார்க்கப்பட்டது