ஞாயிறு, 14 மார்ச், 2021

ஆன்மீகத்தில் "சாக்கிரம்" : கேவலக்கிடை.

 ஆன்மாவென்பது இவ்வுலகில் உடலுடன் கூடி வைகும் காலத்தில் பல அவத்தைகளில்  ( அவஸ்தை அல்லது துன்பங்களில் ) ஆழ்ந்து தவிக்கிறது.  அது உயிர்த்த குழந்தையாய்க் கருவில் வளரும் காலத்தில் ஓர் அவத்தையில் துவள்கிறது.  அதிலிருந்து நீங்கி வெளிவருகையில் பிறப்பு என்று  ஓர் அவத்தையில் அழுகிறது.   இவ்வாறு ஏழு அவத்தைகள் உள்ளன. இறுதியில் மரண அவத்தையும் நரக அவத்தையும் வந்துவிடுகின்றன. இத்தகு அவத்தைகளையெல்லாம் வென்று  அது பேரான்மாவாகிய இறைவனை அடையவேண்டுமே!  இவ்வேழும் ஆன்மா கடந்து செல்லவேண்டிய படிநிலைகள் என்பர்.

ஆன்மா இவ்வுலகில் உடலுடன் உள்ள போது அது மூன்று நிலைப்பாடுகளை உடையதாகிறது. இவை சாக்கிரம்,  சொப்பனம்,  சுழுத்தி என்பனவாகும்.

உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பது  குறள்.   உறங்கச் செல்லும் மனிதன் சாவினில் கிடப்பவன் போலாகிறான்.  அதனால் ஆன்மீக நெறியில்  இதனைக் கேவலக்கிடை  என்றனர். அதனின்று மீளுதலும் அதிலடங்கும்.  

கேவலம் என்பது  :  கேடுவலம்.  அதாவது கேடு வலிமைபெற்ற நிலை.  கிடை என்பது கிட+ ஐ = கிடை,   அதாவது கிடத்தல்.   கேடுவலமென்பதில் டுகரம் கெட்டுக் கேவலம் என்ற சொல் அமைந்தது.  இதுபோன்ற இன்னொரு சொல்:  பீடு+ மன் = பீமன்> வீமன்.  கேடு+ து >  கேது ( நிழற்கோள்) என்பதும் அறிக. கெடு என்பதைப் பகுதியாய்க் கொண்டு  டுகரம் கெட்டு விகுதி பெற்று  முதல் நீண்டதெனினும் அமையும்.

தூங்கச் சென்றவன். தூங்கி அதனின்று விழித்தெழவில்லையென்றால் மரணத்துட் படுகின்றான்.  (மரண அவத்தை).   தை என்பது விகுதி.  அவம் = கேடு. அவம் + தை =  அவத்தை > அவஸ்தை.  அவமாவது : அவிந்து கெடுதல். இனி, அவி > அழி  போலியும் ஆகும்.  சொல்லமைப்பில் அவம் என்பது அவிதல் வினையினின்று தோன்றியிருப்பினும்  பின் சொற்பயன்பாட்டில் ( வழக்கு) அஃது கேடு என்னும் பொதுப்பொருளில் வழங்கியுள்ளது  மொழியில்  இயல்பு ஆகும். "நாணம் அவம்"  என்னும்போது  நாணம் கெடுக என்பதே பொருள். நாணம் நீராவியில் அவிந்திடுக என்பது  பொருந்தாது.  அப்படிக் கூறினும் அதற்கு ( நாணம் ) விலகுக என்றே பொருள்கொள்ளவேண்டும்.

இந்தக் கேவலக்கிடையே சாக்கிரம். சாவுக்குக் கிடத்தல்  என்றிதனைப் புரிந்துகொள்ளுங்கள்.  சா + கிட + அம் >  சாக்கிடம் > சாக்கிரம்.  டகரத்துக்கு ரகரம் போலியாகும். அதாவது டகரம் ரகரமாய்த் திரியும்.   எடுத்துக்காட்டு: மடி > மரி.

இவ்வாறே திரிந்த போதும் நுண்பொருள் வேறுபாடு எய்திய சொற்கள் : இடு > இரு.  இரண்டும் இகரச் சுட்டடிச் சொற்கள்.  இடுவது ஒன்றை ஓரிடத்தில் இருத்துவது.  பொருள் இடப்படுமிடத்து இருக்கும். அட என்பதே அர,  அரே, ஹரே என்றெல்லாம் திரிந்தது. சோப்டா > சோப்ரா.  இவ்வாறு பல சொற்கள் கிட்டும்.  அவற்றுள் செல்லாது திரும்புவோம்.  விடி > விரி.  விடிதல் ஒளி விரிதல்.  உணவிற் சில விடுதலே விரதம்.   விடு> (விடதம் )> விரதம்.  இன்னொரு வழியில்:  விடு> விரு > விரதம்.  அது  : இடைநிலை. அம் விகுதி. பழைய இடுகைகளிற் காண்க. 

சாக்கிரமென்பது அழகிய திரிசொல்.  கருத்து : சாவிற் கிடத்தல் போலும் நிலை.  கேவலமான நிலையிற் கிடத்தல்.   விழித்தெழும் வரையில் ஐம்புலன் களும் இறந்தவன் அடைந்த நிலையிற்போலுமே துன்புறுவன.  ஆதலினால் கேவலம் ஆயிற்று.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

முகக் கவசம் அணிந்து

இடைவெளி கடைப்பிடித்து

நோயைத் தடுத்துக்கொள்ளுங்கள்.

இங்கு ஆய்வு செய்த சொல் சாக்கிரம்.  இது சாகரம் என்று காணப்படின்

திருத்தி வாசிக்கவும். வழுவிருப்பின் திருத்தப்பெறும்.  நன்றி/

எழுத்துப் பிழை இருப்பின் வருந்துகிறோம்.

 

கோவிட் நீங்க ஆலயப் பிரார்த்தனை

 கோவிடென் றெண்ணும்  மகுடமுகி நோய்த்தொற்று

மேவிடும் என்னும்  அகடுவருத் தச்சமுண்டே!

ஆயினும் உள்ளில் சிவராத்திரி போற்றிடுமே

தாயென  மன்னும் சிவதுர்க்கை ஆலயமே.









கோவிடென்றெண்ணும் - கோவிட் என்று  அறியப்பட்ட
கணக்கிடப்பட்ட எனினுமாம். முன் வந்த இவ்வகை நோய்கள்
இதற்குப் பெயரிட்ட போது கணக்கிடப்பட்டன என்று அறிக.

அகடு வருத்து அச்சம் -  வயிற்றை வருத்திடும் பயம்.

உள்ளில் - கோவிலுக்குள் ( அழைக்கப்பட்டோரை வைத்து) 

மன்னும் -  நிலைகொள்ளும்.


காணொளி - உதவியவர்:   திருமதி சி. லீலா

வியாழன், 11 மார்ச், 2021

தமிழ் மூலச்சொற்கள்

{ சுல் என்ற மூலச்சொல்லை ப் பற்றி :  இது இம்முன்னுரைக்கும் பின்னர் எழுதப்பெறும். }

தமிழில் இன்னும் தொல்பழங்காலத்து மூலச்சொற்கள்  கிடைப்பதானது  ஒரு வகையில் நமது பாக்கியமே ஆகும்.  தமிழின் மூலச்சொற்கள் ஆய்வில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட  அருந்தமிழ்ப் புலவர்களின் ஆய்வு நூல்கள் எல்லாமும் நம்மை வந்தடைந்துவிடவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கை ஞானப்பிரகாச அடிகளாரின் சொல்லாய்வுகள் வெளியீடு  1940க்கு முன் வெளிவந்ததாகத் தெரிகிறது.  இந்த வெளியீடுபற்றிய சில குறிப்புகள் சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த புதிய உலகம் இதழொன்றில் குறிக்கப்பட்டுள்ளன.  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தாருக்கு  இவ்வாய்வு முழுதும் கிடைத்துள்ளதா என்று தெரியவில்லை. மறைமலையடிகளாரிடம் ஒரு நூற்படி ஆசிரியரால் தரப்பட்டது என்று தெரிகிறது.  இந்த நூற்படி ஒரு வேளை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கக் கூடும்.  இது இன்னும் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை.  இதற்குமுன்  புலவர்கள்  சிலர் சுட்டடிச் சொல் ஆய்வில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.  அவர்களின் ஆய்வுகள் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருக்கலாம்.  வேங்கடராஜுலு ரெட்டியாரின் சொல்லாய்வுகள்  இப்போது கிடைக்கவில்லை. இவர் தம் நூலொன்றில்  "எழுதருகை " என்ற பழந்தமிழ்ச் சொல்லே " எச்சரிக்கை" என்று திரிந்ததாக ஆய்ந்து வெளியிட்டிருந்தார்.  அரியபல ஆய்வு  முடிவுகளை இவர் வெளியிட்டிருந்ததாகத் தெரிகிறது. இவர்தம் நூல்கள் இங்குக் கிட்டவில்லை.

(  சொல்:   எச்சரிக்கை.  ஒப்பீடு:   முடிச்சறிக்கை -  முச்சறிக்கை (  டிகரம் மறைந்த சொல் . ழ - ட போலி  எ-டு: பாழை -  பாடை,   அயல்திரிபு:  பாஷை)

பிற்காலத் தமிழர் என்போர் பெரும்பாலும் தமிழார்வம் மற்றும் மொழியறிவு குன்றிய ஒரு கூட்டத்தாரே என்று நாம் கருத்து மேற்கொள்ளலாம். இவர்கள் தம்முள் கலாய்த்துக்கொள்ளும் குணம் உடையார்.   தம் முன்னோர் தந்த அறிவுச்செல்வங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் திறம்  உள்ளவர்கள் என்று எண்ணத்தோன்றவில்லை. சென்ற இரு நூற்றாண்டுகளில் வெளிவந்த பல நூல்களே இல்லாதனவாயின. திரைப்படங்களில் மிக்க ஆர்வமுடையார் தமிழர் என்ற போதும்  "காளமேகம்" என்ற திரைப்படத்தின் நிழற்படிகள் இப்போது கிட்டவில்லை.  இதை வெளியிட்டவர்கள் காளமேகப் புலவரின் வாழ்க்கை வரலாற்றினை ஆய்ந்து இக்கதையை எழுதியிருந்ததாகத் தெரிகிறது.   இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்களால் பல பழைய நுல்கள் அச்சிட்டு வெளிடப்பட்டன.  இவற்றுக்காக நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் உடையோம் என்க.  அகராதிகள் -( அகரவரிசைகள்)  தொகுத்தமைக்கும்  அவர்கட்கு நம் நன்றி.

தென்றிசைக் கலாநிதியான சாமிநாத ஐயரின் உழைப்பு இல்லாதிருந்தால் இற்றைக்கு உலவும் பழந்தமிழ் நூல்கள் பல கவனிப்பாரற்று ஒழிந்திருக்கும். 

அன்பர்கள் ஒருசிலர் செய்யும் விளம்பர ஒலிகளால்  தமிழைப் பற்றிய ஆர்வம் மிக்கிருப்பதாக  நீங்கள் எண்ணினால்,  இது ஒரு சிறு கூட்டத்தாரின் எழுச்சிக்குரல்களே ஆகும்.  அவ்வப்போது இவ்வொலி எழுச்சிகள் ஏற்பட்டாலும் பின்னர் அவற்றால் பெரும்பயன் ஒன்றும் விளைதல் இல்லை. அரவங்கள் அடங்கிவிடுகின்றன.  சென்ற இருநூறு ஆண்டுகட்குள் தனிப்பட்ட முயற்சிகளால்  வெளிவந்து மாய்ந்துவிட்டனவாகத் தோன்றும் வெளியீடுகள் எவையும் மறுவெளியீடு கண்டனவென்று கூறற்கியலவில்லை.  இக்கூட்டத்தாரே வெளியிட்ட சிலவற்றையும் வாசிப்பாரில்லை.

இப்போது கூகிளின் ஆதரவினால் இங்கு வெளியிடப்பட்ட ஆய்வுகள் பல உங்களுக்கு இலவசமாகக் கிட்டுகின்றன. இவை எப்போதும் கிட்டவேண்டும் என்பதே நமது அவா எனினும் அவர்களுக்குப் பணச்செலவு ஏற்படுதலால் இவை எவ்வளவு காலம் இவ்வாறு கிட்டுமென்பதை  அறிந்துரைக்க இயலவில்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்