செவ்வாய், 2 மார்ச், 2021

தமிழ் ஆங்கில இலக்கியங்கள் ஒப்பீடு

 தமிழிலக்கியம் ஆங்கில இலக்கியத்தினின்று சற்று வேறுபட்டதென்பதைத் தமிழறிஞர்கள் நன்கு உணர்ந்து எழுதியுள்ளனர். இரண்டு இணையற்ற பேராசிரியர்கள் இதைத் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு வரைவுகள் சமர்ப்பித்தனர். இவர்களுள் தனிநாயக அடிகளார் மேலை மொழிகள் பலவும் கற்று அறிந்த பெரும்புலவர். தம் வாழ்க்கைத் தொழிலில் இலத்தீன் முதலிய  மேலை மொழிகளைத் தினமும் பயன்படுத்தும் வசதிகளை உடையவராய் இருந்தார்.

இவர்கள் கூறினார்கள் என்பதற்காக அன்றி,  நாமே ஆங்கில இலக்கிய வகுப்பில் சென்று படிக்கும்போது,  இயற்கையைத் தனிப் பாடுபொருளாக வைத்துப் பாடிய பல கவிஞர்களைக் காண்கின்றோம். அத்தகைய கவிதைகளைத் தமிழில் அண்மைக் காலத்துத் தமிழிலக்கியங்களிலன்றிக் காண முடிவதில்லை. ஆற்று வெள்ளம் என்று எடுத்துக்கொண்டால்,  "ஆற்று வெள்ளம்போல் பாயும் உன்பால் எனக்குள்ள காதல்" என்று தமிழ்க்கவி பாடுவான்.  இது அப்பொருளை ஓர் உவமையின் பொருட்டுப் பயன்படுத்திக் கொண்டதே அன்றி வேறில்லை.  ஷெல்லி முதலியோர்  சருகுகள் இலைகள் முதலியவை காற்றில் புரள்வதைத் தனிப்பொருளாய்ப் பாடினர். இயற்கையை இவ்வாறு தனிமேடையில் வைத்துப் பொருட் கலப்பின்றிப் பாடிய கவிதைகள் தமிழில் தேடிப்பிடிக்கவேண்டும்.  ஆகவே இயற்கை தனிப் பாடுபொருளாய் அமைதல் அருகி நிற்பதால் அதை ஓர் இலக்கியப் பண்பாடாய்க் கருத  இயலவில்லை.   

இயற்கையுடன் மனிதன் என்றும் சமமாக நிற்க இயலாது.   மகுடமுகி (கொரனா )  நோயில் பலர் மடிந்துவிட்டனர்.  ஆனால் அதனால் இயற்கைக்கு ஒன்றுமில்லை.  எப்போதும்போல் காலைக் கதிரவன் செவ்வொளியைச் செலுத்திக் கடற்பரப்பில் எழுகின்ற காட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மனிதன் இயற்கையின் ஒரு பகுதிதான்.  அதை ஆள்வதாக அவன் நினைத்துக் கொண்டாலும்  இயற்கைக்கு உட்பட்டு அவன் மாய்பவன் தான்.  அவன் செய்யும் காதல் உட்பட்ட எந்தத் தொழிலும்  அவன் இயற்கையின் கொத்தடிமை என்பதையே மெய்ப்பித்துக் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.

ஒரு தட்டச்சுப் பிழை திருத்தப்பட்டது.

எழுத்து பிழைகளைச் சுட்டிக்காட்டி உதவுங்கள்.

நன்றி.



திங்கள், 1 மார்ச், 2021

அழைக்கும் வடிவச் சொற்கள்

  விளிச்சொற்கள் என்பவை அழைக்கும் அல்லது கூப்பிடுவதற்கான சொற்கள்.  கந்தனே,  அம்மையே என்ற சொற்களில் ஏ வருகிறது.  இது விளித்தல் அல்லது அழைத்தலைக் குறிக்கிறது.

மலையாள வழக்கில் விளித்தல் என்ற சொல் அன்றாட வழக்கில் அல்லது பயன்பாட்டில் உள்ளது.  தாய்த்தமிழிலே விளித்தல் என்றால் அகரவரிசை பார்த்துத்தான்  அறிந்துகொள்வர் நம் தமிழர்.  அந்நூலை வைத்துப் பார்க்கும் தமிழர் குறைவு.  இன்று இணையம் இருப்பதால் ஒருவேளை அதில் பார்த்து அறிகின்றனரோ அறியோம்.  அவ்வாறு பார்க்கின் நாம் மகிழற்குரியதே ஆகும்.

வேற்றுமை என்பது ஓர் இலக்கணக் குறியீடு. நாயைக் கடித்தான் எனில்,  இவ்வாக்கியத்தில் வரும் ஐ (  நாயை) ஒரு வேற்றுமை உருபு.  இலத்தீன், சமத்கிருதம்  ஆகியவற்றிலும் வேற்றுமையும் அதற்கான உருபுகளும் உண்டு.

கந்தா  வந்தருள்  என்ற வாக்கியத்தில்  கந்தா என்று அழைத்துப் பேசியதால் அது விளிவேற்றுமை.  கந்தனே என்பதும் விளிவேற்றுமை.  (ஏ) - முன் கூறினோம்.

சமத்கிருதத்தில்  விளியில் அன் முதலிய விகுதிகள் தவிர்க்கப்பட்டு விளியாகும்.

வரதனே.   வரதே   இங்கு அன் விகுதி இல்லையாயிற்று.

பரதனே  பரதே  இதுவுமது.

புனிதனே   புனிதே  இதுவுமது.

அம்மொழியில் அன் விகுதி வருதல் இல்லை.  விதிவிலக்காய் வரின் கண்டுகொள்க.

வனிதை :   வனிதையே (தமிழ்)    வனிதே ( அயல்).

லலிதை:    லலிதையே  லலிதாவே    -  லலிதே!

பெண்பால் ஐ விகுதி கெட்டது.  லலிதா என்பதும் விளியே ஆயினும் எழுவாய் வடிவம்போல் உலகவழக்கில் வரும்.

அன், அள் முதலிய தமிழுக்குரியன. 

லலிதையே.  லலிதே என்ற இரண்டிலும் ஏ என்ற விளி வருகிறது.  அயலில் பெண்பால் ஐ விகுதி தவிர்க்கப்பட்டது.  ஆண்பாலுக்கும் அவ்வண்ணமே முடியும்.

அறிக மகிழ்க.

உடல்நலம் காத்துக்கொள்க.

மெய்ப்பு பின்


சனி, 27 பிப்ரவரி, 2021

ஜகதாம்பாவும் பரத்துவாசரும்.

 அத்து என்ற சாரியை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  

பெரும்பாலும்  அம் என்ற இறுதிபெற்ற சொற்கள் வருமொழிச் சொற்களுடன் புணர்கையில்  அத்துச் சாரியை வரும்.  இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக   மடம்+ சாமியார் =  மடத்துச் சாமியார் என்று அத்துச் சாரியை வரும்.  அதுபோலவே இடம்+ பெரியவர்  என்று புணர்த்தின் இடத்துப் பெரியவர் என்று வரும்.  இதில் கவனிக்கவேண்டியது இன்னொன்று.   அத்துச் சாரியை இல்லாவிட்டால்  " மடச் சாமியார்" என்றும்  இடப்பெரியவர் என்றும் வந்து  வேறு பொருண்மை காட்டும் சொற்றொடர்களாக மாறிவிடக் கூடும்.  மடத்துச் சாமியார் என்பது மடச் சாமியார் என்று வரின் அறிவில்லாத சாமியார் என்று வேற்றுப்பொருள் விரவுதல் கூடும்.  இடப் பெரியவர் என்பது ஐயமிடப் பெரியவர் என்று பொருடருதலும் கூடும்.  ஆதலின் அத்துச் சாரியைக்கு பொருள்விளங்க நிற்குமாற்றலும் உண்டு என்று தெரிகிறது.

ஆயின் அத்து எனற்பாலது,  அது என்ற சொல் இரட்டித்துப் பிறந்த சொல்லே என்று அறிக.



ஜகதாம்பாள் என்ற பெயரின் பொருள் உலகின் அன்னை என்பதுதான். ஜக +அம்பாள் என்ற இரு சொற் புணர்வில், ஓர் அது என்ற சுட்டுப்பெயர் இடைப்புகுந்து, ஜக + அது + அம்பாள் என்று தோன்றி, பின்னர் அகரம் ( அது என்பதன் முதலெழுத்து) மறைந்து, தகரம் இரட்டித்து, ஜகத்து அம்பாள் ஆகி, உலகின் அன்னை என்று பொருள் பயந்து, ஜகத்தம்பாள் என்பது ஜகதாம்பாள் என்று தகர ஒற்றுக் கெட்டும் தகர உயிர்மெய் தாகாரம் ஆகி நீண்டும் இனிமை தோன்ற அமைந்துள்ளது. ஜகத்தம்பாள் எனின் நாவிற்கு ஓர் தடையுணர்வு தோன்றியவதனால் ஜகதாம்பாள் என்று இனிது அமைதல் காண்க. இஃது உண்மைநெறி விளக்கமே அன்றிப் பிறநூலார் அமைப்புரை அன்று என்று அறிக. மாற்று விளக்கம் வந்துழி நோக்கக் கடவது.




அது இது உது என்பன யாண்டும் விரவியுள்ளமையும் தமிழ் மொழியின் பரந்த பயன்பாட்டு எல்லையை ஆய்வார்முன் நிறுத்தவல்லது.



பரத்துவாசர் என்ற சொல்லிலும் அது வந்துள்ளது. பரம் என்ற அம் ஈறுபெற்ற சொல்லானது, அத்துச் சாரியை தமிழ் முறைப்படி பெற்றாலும் அயற்செலவில் பரத்துவாஜ் என்று மாறியபோது அத்து என்பது த் என்று குறுகி நின்றதே அன்றி அதன் தாக்கம் முற்றும் நீங்கிற்றில்லை என்று உணரவேண்டும். தகர சகரப் போலி: ( பதி >) வதி > வசி > வசி+ அம் = வாசம்> வாசர் எனற்பாலது முதனிலை நீண்டு விகுதி பெறல். பரத்து என்பது பரத் ஆனது. பரத்துவாசர் எனில் பரந்த மண்டலங்களில் வாழ்பவர் என்று தமிழில் பொருள்படும். பரத்து என்பது பரத் என்று நின்றமைபோலும் ஜகத்து என்பது ஜகத் என்று குறுகி மிளிரும்.

சொற்களின் அயல் உலாவில் பொருள் சற்றே திரிதலும் ஒலித்திரிபுகள் போலுமே அமைந்திடும்.

மாவிலிட்ட கருப்பஞ்ச்சாறு போலுமே தமிழினிமை யாண்டும் பரவிற்று காண்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.

முகக் கவசம் அணிந்து

இடைத்தொலைவு கடைப்பிடித்து

நோய் வருமிடர் தவிர்த்து

நலமே வாழ்வீர்.




குறிப்புகள்

அத்து ( உத்து ) என்பதும் சொல்லிறுதியிலும் வரும். அப்படி வந்த ஒரு சொல்தான் ரத்து என்ற தலையிழந்த சொல். இது இறு + அத்து என்பதிற் பிறந்தது. இறத்து > இரத்து > ரத்து. இதை விளக்கிய இடுகை இங்குக் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_8.html

இதை அத்து என்று இணைத்துச் சொல்லாமல் அ+ து என்று பிரித்து, அ - சொல்லாக்க இடைநிலை, து விகுதி என்று கூறினும் அதுவே. ஒன்றைப் பல்லாற்றானும் விளக்குதல் கூடும்.