பெரும்பான்மை உலகின் சிறந்த நீதிமன்றங்களில் ஆங்கு வழக்குக் கலை வல்ல அறிஞர்கள் மூவகை விளக்க முறைகளைப் பயன்படுத்துவர். முதலாவது ஒரு சொல்லைப் பொருளறிய வேண்டுமெனில் பயன்பாட்டுநெறியில் அச்சொல் எவ்வாறு எப்பொருளில் வழங்குகிறதோ அவ்வாறேதான் அச்சொல்லை எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது. (Literal Interpretation) எடுத்துக்காட்டாக, வீடு என்பது கூரை மேல் வேயப்பட்டு சுற்றுச்சுவரின் உள் இருக்கும் இடமே ஆகுமென்பது. மற்றும் அது வீடு என்னும் இடத்துக்கு வெளியில் உள்ள திண்ணையையோ மரத்தடியையோ பூந்தோட்டத்தையோ ஏனை அகநிலத்தையோ குறிக்காது என்று எடுத்துக்கொள்ளவேண்டுமென்பது.
ஆகவே சாட்சி வீடு என்று சொன்னால் அது மேற்கண்டவாறே கொள்ளப்படும். இதை உறுதிப்படுத்த, வழக்குரைஞர் சாட்சி ஒரு வரைபடத்தில் அவன் எங்கிருந்தான் என்பதைக் குறிக்கச் சொல்லவும் கூடும். இதன் மூலம் "வீட்டிலிருந்தான்" என்பது திட்டவட்டமாக எங்கு என்று நீதி மன்றம் அறிந்துகொள்கிறது.
இங்கிலாந்தில் ஒரு காலத்தில் விபசாரிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு நடப்புக்கு வந்திருந்தது. அச்சட்டம் விபசாரிகள் வீதிகளில் நின்றுகொண்டு தம் தொழிலுக்கு ஆள்பிடித்தலை மேற்கொள்ளுதல் குற்றமென்று சொன்னது. இவ்வாறிருக்க, ஒரு விபசாரி ஒரு வீட்டின் சுற்றுவேலியின் உட்புறத்தில் நின்றுகொண்டு அவ்வழியிற் செல்வோரைத் தொந்தரவு செய்துகொண்டிருந்தாள்.காவல் துறைக்குத் தகவல் செல்லவே, அவர்கள் வந்து அவளைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.
அவள் தன் தற்காப்பில், தான் நின்றது ஒரு வீட்டின் பகுதிக்குள் என்றாள். ஆகவே அது "பொது இடமன்று. என்னைப் பிடிக்கக் காவல்துறைக்கு என்ன அதிகாரம்" என்று வாதிட்டாள். வீதி, வீடு என்ற இரு பதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், வீதியை ஒட்டிய வீட்டின் தோட்டப்பகுதியும் "தெரு" என்று சட்டம் சொல்லிய பகுதியினுள் அடங்கும் என்று முடித்து, அவளைக் குற்றவாளி என்று தீர்மானித்தது. இவ்வாறு தீர்ப்புச் செய்யாவிடில் விபசாரத்தைப் பொது இடங்களிலிருந்து தொலைக்க முயலும் அந்தச் சட்டம் வலிவில்லாமல் போய் மக்கள் பாதிப்புறுவர் என்பதால் தெரு என்பது அதனை ஒட்டிய வீடுகளின் நிலப்பகுதிகளையும் உட்படுத்தவேண்டுமென்று மன்றம் முடிவுசெய்தது. ( Mischief Rule )
இதன்படி தெருவை ஒட்டிய நிலமும் தெருதான். இந்தச் சட்டத்துக்கு இப்படித் தீர்ப்பு. ஆனால் வீட்டை விற்க முயலும் வீட்டுக்காரனுக்கு உதவும் நிலச்சட்டத்துக்கு அது பொருந்தாது. அவன் வீட்டுடன் சேர்ந்த நிலத்தையும் விற்கும் அதிகாரம் உடையவனே ஆவான்.
தெரு என்ற சொல்லையும் வீடு என்ற சொல்லையும் கையாளும் ஒரு சொல்லாய்வாளன் வீட்டு நிலத்தையும் தெருவில் அடக்க இயலாது. இத்தகைய வாய்ப்பு ஓர் அகரவரிசை செய்வோனுக்கோ சொல்லாய்வு செய்வோனுக்கோ வாய்ப்பதுண்டா?
தொன்ம வரலாறுகளில் "பத்துத்தலை இராவணன்" என்றால் பத்துத் தலங்களை ஆண்ட இராவணன் என்னலாமா? வேலைத் தலையில் நடந்தது என்றால் வேலை செய்யுமிடத்து நடந்தது என்பதுதான் சரி எனலாமா? "பறந்து சென்றான்" என்பதை விரைந்து சென்றான் என்பது சரியாகுமா? ( சலவைத் தொழிலன் ஆட்டுத் தலைக்குப் பறந்தது போல " என்ற பழமொழியை நோக்குக ). ஒரு கதையில் வரும் எதையும் பொருந்தப் பொருளுரைப்பதற்கு ஆய்வாளனுக்கும் நீதிபதிக்கு உள்ளது போலும் செல்வழி உள்ளது என்று சொல்லலாம் என்று தெரிகிறது.
சொல்லின் உண்மைப் பொருளை மட்டுமே வைத்துப் பொருள்கூறுதல் (Literal Interpretation ), அடுத்து அப்படி மட்டுமே பொருள் கூறும்போது பொருந்தாமை நிகழ்ந்தால் உகந்தபடி பொருத்தமாய் உரைப்பது ( Mischief Rule ) , கெடுதலான பொருள் போதருமானால் ,1 உண்மைப்பொருள், 2 பொருந்தும்பொருள், 3. கெடுதலான பொருளை விலக்கி உரைத்தல் ( Golden Rule ) ஆகிய மூன்றையுமே ஏற்புழிக் கையாளுதல் எனபனவற்றுக்கும் இயற்கையிலே மொழியாசிரியனுக்கும் அதிகாரம்* உள்ளது என்று முடிப்பது சரி என்று தெரிகிறது.
அறிக் மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
*விடுபட்ட சொல் சேர்க்கப்பட்டது. 21012021