ஞாயிறு, 27 டிசம்பர், 2020

ப - சில சொற்களில் பரவற் கருத்து.

 ஒரு சிறுபிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, ஒரு சொல்லின் எல்லா எழுத்துக்களையும் வாசித்தபின்னரே அச்சொல்லின் பொருளை அப்பிள்ளை உணர்கின்றது. இதுவே வாசித்துப் பொருளுணர்தற்குப் பொருத்தமானது ஆகும். ஆனால் சொல்லின் ஆதிப்பொருளை அல்லது ஆக்கப் பொருளை உணரவேண்டுமானால்  -    அதாவது சொல்லாய்வில் ஈடுபட வேண்டுமானால் -  அதன் முதல் ஒன்றோ இரண்டோ எழுத்துக்களை நோக்கினால் அது புரிந்துவிடுகிறது. அது எப்படி என்று நீங்கள் கேட்கவேண்டும். ஏனெனில் நாம் காண முற்படுவது ஆதிப் பொருண்மையையே. சொற்களைப் பிறப்பித்தோர், ஓர் அடிப்பொருளை அடைந்தே சொல்லின் உருவாக்கத்தைக் கண்டறியத் தொடங்கினர் . மாறாக,  பெரும்பாலும் ஒரு சொல்லை முன்வைத்துக்கொண்டே அச்சொல்லின் தோற்றத்தை முழுமையாக அறிந்துவிட முடிவதில்லை.  ஒரு சொற்குடும்பத்தையே ஒருசேர நோக்கித்தான் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

உலகில் பொருள்கள் பலவும் பல்வேறு உருவில் உள்ளன. சில உருண்டையாய் உள்ளன.  சில சப்பட்டையாய் ( இடப்பரவலாய்) உள்ளன. இன்னும் உருவங்கள் பல. இடப்பரவலாய் உள்ள உருப்பொருளும் உருவற்ற பொருளும் பற்றிய பல சொற்களும் பகரத்திலே தொடங்குதல் காணலாம்.  இதனைச் சில எடுத்துக்காட்டுகளால் நாம் உணரமுடிகிறது.

பரமன்   -  பர  -  எங்கும் பரவலாய் உள்ள ஆனால் காணவியலாத உலகாளும் ஒரு பொருள்.  [  பர என்ற இரண்டு எழுத்துக்களை அறிந்தவுடன் சொல்லின் ஆக்கம் தெரிந்துவிடுகிறது ]

பலகை -   பல  -   சப்பட்டை நிலையில் உள்ள ஒரு மரப்பொருள். இடப்பரவல். காரணம் ஆய்ந்தாலே தெரிகிறது.

பனி  -  பன் -  பரவலாக வான் தெளிக்கின்ற சிறு குளிர் திவலைகள்  

பலி    -   பல் -  ஒன்றுக்கு மேற்பட்ட உயிர்களைப் பலவிடங்களிலும் கொல்லும் முறை.  ( இடப்பரவலும்  செயற்பரவலும் காலப்பரவலும் )

 (ஆறிலும் சாவு, நூறிலும்  சாவு -  பழமொழி).இது காலப்பரவல்.

பரிப்பெருமாள் -  பரி -  எங்குமுள்ள பெருமாள். இடப்பரவல், காலப்பரவல்.

பர > பரி.  பரி என்பது குதிரையையும் குறிப்பதால் குதிரையில் வரும் பெருமாள் என்றும் கூறுதல் உண்டு. இது கடவுள் தன்மையை விளக்காமல் ஒருவாறு தொன்மப் பாணியை முன்வைக்கிறது.

பரிபாடை   பரவலாக பயன்படுத்தப் படும் பேச்சு.

பரணி -பர.  மேலே இடப்பரவலாக அமைக்கப்படுவது.

பார்  - பரந்த இவ்வுலகம்   (வியனுலகம்)

பார் (<   பர )

பஞ்சு  பறந்து ( பரந்து)  பரவும் மெல்லிய பொருள்

ப > பர் > பர > பார்.

பர் > பல்.

பல் > பன். இவ்வாறு அடிச்சொல்லும் திரியும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்பு.

பரந்தாமன்.

"   அத்துவித வத்து " என்ற தொடரைவைத்துப் பாடினார் தாயுமான சுவாமிகள். அத்துவிதமென்பதற்கு நேரடியான இன்னொரு தொடர்:  அத்வைத வஸ்து என்பதாகும்.கடவுள் வேறு மனிதனாகிய "நான்"  வேறு உணர்வோமானால் அது துவைதம் என்பர். 

கடவுளும் நான் என்னும் மனிதனும் ஒன்று என்போமானால் அது அத்வைதம்  ஆகும்.  இரண்டல்லாத ஒருமைநிலை அதுவாகும். இயேசு கூறிய நான் கடவுள் என்ற கொள்கை உண்மையில் நமது வேதங்கள் கூறிய அத்வைத (வேதாந்த)மே ஆகும். இக்கொள்கையை அவர் இந்தியாவிற்கு வந்து சொல்லியிருந்தால் யாரும் அவரைக் குறுக்கையில்* அறைந்திருக்கமாட்டார்கள் என்று நாம் திடமாகச் சொல்லலாம்.

கடவுள் பேரான்மா  அவர்போலவே அமைந்த  நாமோ  ஒவ்வொருவரும் ஒரு சிற்றான்மா.  கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாற்றல் அல்லது ஒன்றைச் செய்து உருவாக்கும் ஆற்றல் உள்ளோனாய் இருப்பதற்குக் காரணமே நாம் கடவுளிலிருந்து போந்ததே ஆம்.

கண்ணன் ஓர் அவதாரம் அல்லது தோற்றரவு என்பதே மகாபாரத நூல் கூறுவது.    இதையும் தாண்டி அவரே கடவுள் என்பது கருத்து. தாமே கடவுளும் ஆனவர் - பரந்தாமர்.

இப்போது பரந்தாமன் என்ற சொல்லை ஆய்வோம்.  இச்சொல்லில் பரம் என்ற சொல்லும் தாம் என்ற சொல்லுமிருப்பதால்,  அவர் தாமே பரம் ஆகிறார். பரம் என்பது கடவுள் எனற்பொருட்டு.  தாம் என்பது தாம் என்று நாம் பயன்படுத்தும் சொல்லே ஆகும்.  தாமே பரம் என்ற சொற்றொடர்,  பரம் தாம் என்று மாறி அமைந்தது. இது அன் விகுதி இணைந்து  பரந்தாமன் ஆகிற்று,  இஃது முறைமாற்று அமைப்பு.

பரம் + தாம் + அன் = பரந்தாமன் 

வேறு பொருள்:  பரந்த ஆகாயத்தில் உள்ளவர்.  பரந்த + ஆம்+ அர்.  ஆம் என்பது ஆகாயம் என்பதன் இடைக்குறை.  ஆகும் என்பதன் தொகுப்பும் ஆவது இச்சொல். அன். அர் என்பன ஆண்பால் பலர்பால் (உயர்வுப் பன்மை ) விகுதிகள்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 *  குறுக்கை -  சிலுவை என்பதற்கு இன்னொரு பெயர். இச்சொல்லுக்கு குறுக்கை என்பதை ஞா.தே, முதலிய அறிஞர் வழங்கினர்.  குறுக்கை என்பதன் பழைய பொருள் வேறு சில.

வெள்ளி, 25 டிசம்பர், 2020

நடிகை சித்திரா ( தமிழ்நாடு) மரணம்

எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார்

எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்

அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார்

மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்

வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!

சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை

அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் எனச்சொல்வார்

நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே!

உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;

நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ?



பொருளுரை:


எதிர்காலம் முற்றறிந்த இப்புவியோர் யாவருள்ளார் - இந்தப் 

நில உலகில் எதிர்காலம் முழுவதும் அறிந்த மனிதர்கள்  

யாருமில்லை;


எதிர்காலம் அறிவாரே ஆமாகில் கடவுளவர்  -  எதிர்காலம் 

அறிந்துவிட்டால் அவர் கடவுள் என்னலாம்;


அதனாலே மணவாழ்விற் புகுமுன்னே கணித்தறிவார் - இதன்

காரணமாகத்தான் திருமணத்துக்கு முன் சோதிடம் 

பார்க்கிறார்கள் (பொருத்தம் முதலியவை).


மதியுரையால் எதிர்வரவை முதலறிந்து மணம்புகுவீர்.-  சோதிடர்

அறிவுரையைப் பெற்று எதிர்கால வரவுகளை முதலில்

அறிந்துகொண்டு திருமணவாழ்வில் புகவேண்டும்; ( இதனால்

நீங்கள் இழப்பது சோதிடருக்குத் தரும் கூலி மட்டுமே; இது

பெரிய இழப்பு அன்று.)


அறிமுன்னம் இல்வாழ்வின் நெறிபுகுந்தால் மரணமுதல்-

இதனை அறிந்துகொள்ளும் முன்பே கல்யாணம் செய்துகொண்டு

குடும்ப வாழ்க்கை நடத்தினால் (துன்பம் ஏற்படக்கூடும்,  அதைத் 

தவிர்க்க )  மரணயோகம் இருக்கிறதா,  

என்பது தொடங்கி;


வருதுன்பம்  அளவிறந்த பெருந்தொகையே அறிந்திடுக!---

வாழ்க்கையில் காணப்போகும் இன்னல்கள் பற்பல, அவற்றை

அறிந்துகொள்ளாவிட்டால் எவ்வாறு, தெரிந்துகொள்ளுங்கள்.


சிறுதிரையின் நடிமகளாம் சித்திரையின் நொடிமறைவை -  

சின்னத்திரை நடிகை சித்திரா விரைந்து மரணம் எய்தியதை;


அறிந்தபலர் இருந்துதிகழ் அணியுலகு இதில்வாழ்ந்தீர். ---

தெரிந்துகொண்டு இவ்வழகிய உலகில் இருந்து நல்லபடி

வாழ்கின்றீர்கள். ( இந்த உயிரிழப்புக்கு உங்களால் செய்ய

முடிந்தது ஒன்றுமில்லையே!)  அதாவது சோதிடமாவது அதை

மற்றியிருக்குமே! ஒருவேளை அதைக் கண்டறிய முடிந்திருந்தால்.


கொலையென்பார் இலையென்பார் கொலைதனைத்தான் 

எனச்சொல்வார்---அது கொலை என்றும்,  இல்லை என்றும்,  

தற்கொலை என்றும் (பலவாறு ) சொல்வர்;


நிலைகாணின் தலைகடந்த அலைகள்பல எழுந்துளவே! --

நிலவரத்தைப் பார்த்தால் தலைக்குமேல் அலைகள் தோன்றியுள்ளன;


உளசொலவு நிலைத்திடவும் பிறசொலவு விலக்கிடுக;  -  உண்மை

சொல்லுதலை நிலைநிறுத்துங்கள்;  பிறவற்றைச் சொல்வதை

விலக்குவதே நன்று;


நிலவுலகில் வருவனவே  அறியுறைவார் நிகருளரோ? - இந்தப்

புவியில் வருவதை அறிந்து வாழ்பவர்கட்கு நிகரானவர் யார்

உள்ளனர், யாருமில்லையே.