புதன், 2 டிசம்பர், 2020

வினை மற்றும் பெயரில் விளைந்த வினைகள் (முயற்சித்தல்)

இக்காலத்தில் பார் என்ற சொல்லின் உண்மைப்பொருளைப் பெரிதும் மக்கள் கவனிப்பதில்லை. இதற்குக் காரணம் நோக்குதல் என்ற சொல் ஓரளவு மக்கள் மொழியிலிருந்து (பேச்சு) நீங்கிநிற்பதுதான். நாம் ஒன்றைக் கூர்ந்து "பார்க்குங்கால்" அதை நோக்குதல் என்றே சொல்லவேண்டும். பார்வை பரந்து செல்லுமாயின் "பார்த்தான்", "பார்த்தேன்" என்றெல்லாம் பார் என்ற வினைச்சொல்லினடிப் பிறந்த முற்றுக்களையும் பார்த்த, பார்த்து என்ற எச்சவினைகளையும் பயன்படுத்தலலாம்.


பார்வை பரந்து செல்லுதல் என்று குறிப்பிட்டோம். பர (பரத்தல்) என்ற வினையினின்றுதான் பார் என்ற வினைச்சொல் விளைந்தது. பரத்தல் என்பதும் வினை குறித்தது, பார்த்தல் என்பதும் வினைகுறித்தது, எனவே வினையினின்று இன்னொரு வினை தோன்றுவதற்கு இதுவும் ஓர் உதாரணம் ஆகும்.


பர > பார்.


ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றுவதுண்டா என்று யாரும் வினவின் இந்தச் சொல்லமைப்பினை நீங்கள் சுட்டிக்காட்டுவது சரி.


இன்னும் பல வினைகள் வினைகளிலிருந்தே திரிந்துள்ளன. அவற்றை எல்லாம் பட்டியலிட்டால் பெருகும். இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மட்டும் காண்போம்.


இறுதல் என்றால் முடிந்துவிடுதல் என்று பொருள். இதைக் கண்டுகொள்வது எளிது. இறுதி என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்ளலாம்.


இறு என்ற வினைச்சொல்லிலிருந்து இற என்ற சொல் தோன்றியது. இறத்தல் என்றாலும் முடிவுதான். ஆனால் உயிருடன் வாழ்வோன் அல்லது வாழும் ஓர் உயிரியின் முடிவு. இச்சொல் ஒரு சிறப்புப் பொருளில் வருகின்றது. இறுதல் என்பது பொதுப்பொருள்:


இறு > இற.


இறத்தல் என்பதும் பின்னர் பொருள் விரியத்தான் செய்தது. உயிரற்றவை இறுதியடைதலையும் குறிக்க விரிந்தது. -டு: ஒரு சொல் வழக்கிறந்தது. இது "வழக்கு" என்பதை உயிருள்ளதுபோல் பாவிக்கிறது. --- உயிர்ப்பொருள் போல் ஒப்புமையாக வைக்கப்படுகிறது.


முயற்சித்தல் என்ற வழக்கில் உள்ள சொல்லைப் பார்ப்போம்.


முயல் (முயலுதல் ) என்பதே வினைச்சொல் ஆம். சி என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து, அஃது முயற்சியாகும். தொழிற்பெயரானபின் இகர வினையாக்க விகுதி பெற்றும் அது முயற்சித்தல் ஆகுதல் இயலாது என்றனர் தமிழ் வாத்தியார்கள். எனினும் தமிழ்ப்பேரகராதி இதனை பேச்சுமொழிச் சொல் என்று குறித்து பதிவு செய்துள்ளது. இது இப்போது அறிஞர் மொழிநடையிலும் இடம்பெற்றிருப்பதால் தொழிற்பெயரானபின்னும் மீண்டும் வினைச்சொல் ஆதலுக்கு ஓர் எடுத்துக்காட்டாகிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இதன் எழுச்சியை மறுக்கின்ற முயற்சியால் பயனொன்றும் இல்லை என்றே நாம் சொல்லவேண்டும். முயற்சியெடுத்தல் என்பதன் இடைக்குறை என்றும் கொள்ளலாம். (யெடு) என்பது குறைவுற்றது என்று முடித்தல் கூடும்.


மெய்ப்பு பின்னர்

திங்கள், 30 நவம்பர், 2020

குசேலா என்ற பெயர்.

 குசேலா (குசேலன்) என்பதில் இரு சொற்கள் உள்ளன.  ஒன்று குச என்பது. இன்னொன்று ஏலா என்பது.  குச என்பது இவர் குயவர் வழியினர் என்பதை உணர்த்தும். குய என்ற சொல் இன்றும் குச என்றே திரிந்து வழங்குகிறது. இது தமிழ்ச்சொல். ஏலா என்பது விளிப்பெயர். இதன் எழுவாய் வடிவம் ஏலன் என்பது. இது ஏடன் என்பதன் திரிபு.  இதன் பொருள் தோழன், நண்பன் என்பதே. எனவே, இஃது ஓர் இயற்பெயரன்று என்பது தெளிவாகிறது.

வியாசர் இதனைக் காரணப்பெயராய்க் கதையில் அமைத்துள்ளார்.

பிற்காலத்தில் குசேலன் பிரம்மம் என்னும் பெருமானை உணர்ந்து வாழலானார். பிரம்மத்தை உணர்ந்தவனே பிராமணன்.  ஆதலின் இவர் வாழ்ந்த காலத்தின்பின்பு இவர் பிராமணர் என்றே குறிக்கப்படலாயினார்.. குசேலனின் தொடக்கத் தொழிலை இலைமறைகாய்போல் பெயரில் அமைத்தது வியாசரின் கதைசொல்லும் திறனையே கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ்ச்சொற்கள் சில திரிபுகளுடன் எவ்வளவு அழகுள்ளவையாக அமைந்துவிடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். தொடக்கத்தில் எத்தொழில் உடையரேனும் பின்னர் அவர் தெய்வத்தொண்டராய் மாறுதற்கு இவர் வாழ்ந்த காலத்தில் வழியிருந்தது என்பது தெளிவு.   கண்ணன் அரசானதும் இதையே மீண்டும் வலியுறுத்துகிறது,  வியாசன் மீனவத் தொழிலினின்றும் கவியானதும் இதையே தெளிவுபடுத்துகிறது.

மக்கள் அனைவரும் ஒருவரே போல் வேறுபாடின்றி வாழ்ந்தனர். இதனைக் கூர்ந்துணரலாம் என்பதறிக.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

பிறழ்வுகளைச் சரிசெய்தல் பெரிய வேலையாய் உள்ளது. நீங்கள்

பின்னூட்டமிட்டு உதவினால் நன்றியுடையேம்.


கலைத்தல், கலத்தல், கலயம்.

 முன் காலத்தில் ஐயம் இட்டுண்பது ஓர் அறச்செயல் என்று கருதப்பட்டது. இதற்கான அறக்கலயங்களை வீட்டுக்கு வெளியில் திண்ணையில் வைத்திருந்தனர். இரந்து நிற்போரைக் காணின் கலயத்தில் இட்டுவைத்திருந்த அரிசியை அள்ளிப்போட்டு  அன்புடன் அனுப்பிவைத்தனர்.  இந்தப் பாத்திரங்களில் பலவகை அரிசிகளும் கலந்து வைத்திருந்தனர். குறுநொய் (குருணை), பிறவும் இருக்கும். அதனால் இவ்வகைப் பாத்திரங்கள் "கலயம்" எனப்பட்டன.

பாற்கலயங்களும் பயன்பாட்டில் இருந்தன.

ஐகாரம் குறுகி அகர இறுதிபெற்றாலும்  அம் விகுதிபெற, யகர உடம்படுமெய்  சொல்லாக்கத்தில் தோன்றும்.

கலைத்தல் > கலை > கல > கலயம்.  கலையம் > கலயம்.

நிலைத்தல்  நிலை > நிலையம் > நிலயம்.


கல + அம் = கலயம்

மலை + அம் >  மலையம், மலயம். [மலயமாருதம்]

வினை+ அம்>  வினையம் > வினயம்.

இல்லை  > இலை. 

இலை+ அம் > இலயம்.  (அழிவு). [ இல்லையாதல் ]. லை - ல : ஐகாரக் குறுக்கம். னை - ன என்பதும்  அது.


சொல்லாக்கத்தில் ஒரே அடியிலிருந்து வெவ்வேறு இடைநிலைகள் பெற்றுச் சொற்கள் அமையும்.

கல+ அம் > கலயம்

கல+ அம் > கலவம்.

கலம் என்பதே கலயம் என்று வந்தது என்றும் ஆசிரியர் சிலர் கருதுவர். உயிர்மெய்யெழுத்துத் தோன்றுதல்:  இவ்வாறு சொல்வதன் கருத்து யாதெனின் கல என்பதே இரு வடிவங்கட்கும் அடி எனல் ஆகும்.

மண் கலந்து, நீரும் கலந்து குழைத்துச் செய்யப்படுவதால்,  கல+ அம் = கலயம் என்பதுமாம். வெவ்வேறு வகை மட்கலப்பினால் கலையத்தின் தரம் மாறு படுமா என்பது குயவர் பெருமக்களிடம் உசாவி அறிக.

ய ச திரிபு: கலயம் > கலசம்.

வாயில் > வாசல் என்பது எடுத்துக்காட்டு. 

முடிமுகி நோய்நுண்மி பரவாமல் காத்துக்கொள்க. (கொரனா)

மெய்ப்பு பின்னர்.

சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 01122020