கவி கா.மு ஷெரிப் ஒரு சிறந்த கவிஞர். சீறாப்புராணத்திற்கும் உரை வரைந்துள்ளார் இவர். இவரெழுதிய இருகுரலிசைப் பாடலில் பெண்- ஆண் பாடுவதாக வரும் இரு வரிகளை இங்குக் காண்போம்.
பெண்: குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்குக் கற்றீரோ?
ஆண்: உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே!
இந்த உரையாட்டுப் பாடல் நன்றாகவே உள்ளது.
இதில் வரும் குதர்க்கம் என்ற சொல்லையும் அதற்கு முன்பாக தர்க்கம் என்னும் சொல்லையும் இங்கு ஆய்ந்து காண்போம்.
சொல்லுக்குச் சொல், வார்த்தைக்கு வார்த்தை தருதலே " தருக்கம் " ஆகும்.
தருதல் என்பது வினைச்சொல்.
தருக்கு என்ற அடிச்சொல் தருதல் என்பதனடித் தோன்றியதே ஆகும். பதிலுக்குப் பதில் பேசிவிட்டால், " நல்லாக் கொடுத்தான் பாரு!" என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இத்தகு சொல்லாடல்களின் தொடர்பில் தருதல் என்பது முன்மை பெறும் கருத்தாகும். தருக்கு என்பதில் தரு - பகுதி; கு என்பது விகுதி ஆகும்.
தருக்கு என்பது உலகவழக்கில் தருதல் என்ற அடிப்படைக் கருத்தைக் கடந்து அகங்கரித்தல், ஊக்கமிகுதல் என மட்டுமின்றி சில தொடர்புடைய மனவுணர்வையும் நடத்தையையும் குறிக்கலாயிற்று. பல சொற்கள் இவ்வாறு பொருள்விரிவுறும். தருக்கு என்பது செருக்கு என்று கூறுதலும் கூடும். வீண்வார்த்தையாடுதலை மக்கள் விரும்பாமையே இத்தகு பொருள்விரிவுக்குக் காரணம்.
தருதல் என்ற வினையடிப் பிறந்த சொற்கள் ஏராளம். அகப்பை அல்லது சட்டுவத்துக்குக் கூட இவ்வினையிலிருந்து பெயர்கள் ஏற்பட்டுள்ளன. அது தருவி, தறுவி என்பனவாகும். சட்டியிலிருந்து குழம்பைத் தருவிப்பது அகப்பை அன்றோ? தரு என்பது தார் என்று திரிந்து, தாரம் என்று மனைவியையும் குறிக்கும்.
இப்போது தருக்கு என்பதற்கே திரும்புவோம். இது அம் விகுதி பெற்றுத் தருக்கம் என்றாகும். அப்போது வாதத்தையும் ( சொல்லாடல்) குறிக்கும்.
தருக்கம் என்பது தர்க்கம் என்றும் குறுக்கி எழுதவும் பேசவும் படும்.
இந்நிலையில் சிறு சிறு தருக்கங்களைக் குறிக்க ஒரு சொல் எழுந்தது. அது " குதர்க்கம்" என்ற சொல். குதர்க்கம் என்பது குறு தருக்கம் என்பதன் குறுக்கமாகும் குறு என்ற சொல், றுகரம் இழந்து கு என்று நின்றது, இது கடைக்குறை ஆகும்.
குறு > கு
கு + தர்க்கம் > குதர்க்கம்.
குதர்க்கம் பேசியும் ஒருவரை மயக்கலாம் என்கிறார் கவி.
மெய்ப்பு பின்பு