மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா? என்பது
சிலருக்குப் பெரிய கேள்வியாகத் தெரியலாம்.
யாரோ ஒரு பாடலாசிரியர் இப்படி எழுதினார்:
" மந்திரத்தால் எந்த நாளும்
மாங்க்காயும் வீழ்வதில்லை;
தந்திரமும் தோற்பதில்லை
தாரணி மேலே"
இதுவே பாட்டின் பகுதி. ஒரு பாடல் மிக்க அழகுடன்
மிளிர்ந்தாலும் அதன் பொருள் அனைத்தையும் யாம்
ஏற்பதில்லை. யாம் முழுப்பொருளையும் பேதப்படாமல்
ஏற்றுக்கொண்ட சில பாடல்கள் உள்ளன. யாம் ஒரு
பகுதியையே ஏற்றுக்கொண்டு மறு பகுதியை
ஏற்றுக்கொள்ளாத பாடல்கள் சில உள்ளன. யாம்
முழுமையாக ஏற்றுக்கொண்டு, அப்பொருளழகில்
தோய்ந்துவிட்ட சில பாடல்களும் உள்ளன.
யாம் பொருளை ஏற்காதபோதும், அப்பாடலின் எதுகை
மோனை சந்தம் என்ற பல வெளியழகுகளில் நின்று
மயங்கிய பாடல்களும் உள்ளன. எம் சொந்தக் கருத்துகளை
வெளியிடாமல் ஒரு பாடலுக்குப் பொருள் கூறியதும்
உண்டு. பாடலின் பொருள் யாது என்பதுதான் அதில் விடயம்.
நம் சொந்தக் கருத்து யாது என்பது அதில் எழவில்லை.
எம் சொந்தக் கருத்தை அப்பாடல் சொல்லவில்லையே
என்று அப்பாடலை யாம் வெறுப்பதில்லை. எம் சொந்தக்
கருத்தை அந்தப் பாடல் சொல்கிறதே என்று அதனைக்
கொண்டாடுவதுமில்லை. எமக்கு ஒத்துப்போகும் கருத்து
அதில் உள்ளது. அந்தப்பாடலைப் கேட்குமுன் யாமும்
அந்தக் கருத்தையே கொண்டிருந்ததால் அப்பாடல் எமக்கு
அறிவுறுத்திய புதிய கருத்து ஒன்றுமில்லை.
ஆனால் பிறன் ஒருவற்கு அது பயன்பாடு உள்ளதாகலாம்.
அதை யாம் மறுப்பதற்கில்லை. அது அவனுக்குப்
பயன்படுகிறதா இல்லையா என்பதை அவன் தான்
தீர்மானிக்க வேண்டும்.
இப்போது தந்திரமும் தோற்பதில்லை என்ற பாடலின்
பகுதிப் பொருளைப் பார்க்கலாம். தந்திரம் செய்து
அது தோற்றுப்போன பல நிகழ்வுகள் உலகில் உள்ளன.
ஒரு பெரிய மரக்குதிரைக்குள் படைவீரர்கள் பலர்
ஒளிந்துகொண்டு போய் ஒரு பகைநாட்டினுள்
புகுந்தபின் அந்த நாட்டைத் தாக்குதலுக் குள்ளாக்கி
அங்குள்ள படைஞரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட
தந்திர நடவடிக்கையில் "தந்திரம்" பலித்தது. ஆகவே
தந்திரம் தோற்கவில்லை என்று கூறலாம். ஆனால்
தந்திரங்கள் எப்போதாவது வெற்றி பெறலாம்.
பிற நிகழ்வுகளில் தோற்றுவிடலாம். எப்போதும்
வெற்றி என்று எதிர்பார்க்கமுடியுமோ?
இப்போது இன்னொரு நிகழ்வினைக் காண்போம். ஒருவர்
மருத்துவரிடம் நோய் விடுப்பைப் பெறுவதற்காக ஒரு
தந்திரம் செய்தார். வாயை வெந்நீரால் கொப்பளித்து
விட்டுக் கொஞ்சம் நேரத்துக்குள்ளாகவே உடல் வெப்பம்
அறியுமிடத்தில் சென்று வெப்பமானியை வாய்க்குள்
வைத்துக்கொண்டார். அந்த வெப்பமானி அவருக்குக்
காய்ச்சல் இருப்பதாகக் காட்டியது.அங்கிருந்த தாதி
அதைப் பதிவு செய்துகொண்டு அவரை மருத்துவரிடம்
அனுப்பினார். மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு,
"காய்ச்சல் அதிகமாக இருக்கிறதே" என்றார்.
உடனே மருத்துவர் அவரிடம் இருந்த வெப்பமானியை
எடுத்து இந்தப் போலி நோயாளியின் வாய்க்குள் வைத்து
வெப்பத்தை அளக்கவே அது உடல் வெப்பத்தைக் குறைத்துக்
காட்டியது. காய்ச்சல் ஒன்றும் இல்லை என்று சொல்லிய
மருத்துவர், அவருக்கு வேலையிலிருந்து விடுப்பு
எதுவும் அளிக்காமற்போகவே, போலி நோயாளியின் தந்திரம்
தோற்றது. இதை வைத்துப்பார்த்தால், தந்திரமும்
தோற்பதில்லை என்ற கருத்தை ஏற்கமுடியவில்லை.
தந்திரமும் தோற்பதில்லை என்ற வாக்கியத்தில்
மும் - உம் என்பதற்கு ஏதும் பொருள் உள்ளதா?
எந்த நாளும் மாங்காய் வீழ்வதில்லை, என்பதற்கு
எப்போதும் வீழ்வதில்லை, ஆனால் எப்போதாவது
வீழ்வதுண்டு என்று பொருள் கொள்ளலாம்.
அப்படிச் சொன்னால் திறமுடையோர் மந்திரம்
சொன்னால் அது பலிப்பதுண்டு என்று கூறி
மந்திரத்தின் திறத்தை நிலைநாட்டிவிடலாம், சிலர்
ஏற்காவிடினும். அதே " எந்தநாளும்" என்ற தொடரை,
தோற்பதில்லை என்பதற்கும் வருவித்துரைத்து,
" எந்த நாளும் தோற்பதில்லை, ஏதாவதொருநாள்
தோற்பதுண்டு, எப்போதாவது வெல்வதுண்டு
என்று முடிவு கட்டிவிடலாம். அப்படியானால்
பாடல் வரிகள் நிலைநாட்டிய கருத்து இங்குமில்லை,
அங்குமில்ல்லை என்று ஆகிவிடுகிறது. இவ்வாறு
கூறவே, பாவலரின் கருத்துக்கும் அவரெழுதிய
நடப்பு நிலைக்கும் சுற்றுச்சார்புக்கும்,
இவ்வுரைகள்பொருந்துமா என்பது இன்னொரு
கேள்வியாய்த் தனித்து நிற்கும்.
இனி, மந்திரம் என்பதென்ன? அதன் சொல்லமைப்புப்
பொருள் யாது, தந்திரம் என்பதென்ன, அதன் சொற்
பொருள், அமைப்பில் யாது, பயன்பாட்டில் யாது? என்று
விளக்கி, மந்திரமென்பதும் தந்திரமென்பதும்
உண்மையில் யாது யாது என்று விளக்கி, பொருளைத்
திறமுடையோர் திசைமாற்றிவிட்டுவிடலாம். நேரம் கிட்டினால்
இதையும் வாதிட்டு நாம் ஒருநாள் மகிழலாம்.
நன்றி.
மெய்ப்பு பின்னர்.
எழுத்தில் திருத்தங்கள் வேண்டின்
சுட்டிக்காட்டினால் நன்றி.
இவை பின் கவனிக்கப்படும்.
உங்கள் கருத்துகளைப்
பின்னூட்டமிடவும்.
This post has been hacked, apparently after posting.
original restored
Some websites experienced downtime in
Singapore.
Edited again: 17.8.2020