செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

உயர்ந்த உள்ளம் இவருக்கு.

 உலகுக்  குதவுவதே உண்மை அரசியலாம்

பலகற்  றுயர்ந்த பண்பும் அவரிடத்தே.

யாரும் புகழும் பாரிலுயர் பண்பாளர்.

மருத்துவர் இவரை மதித்துப் போற்றுவீர்!



https://www.ndtv.com/india-news/doctor-turned-politician-zr-thiamsanga-in-mizoram-helps-woman-deliver-baby-2277818?browserpush=true



ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

அனவரதம் - எப்பொழுதும், இடையீடின்றி.

 அனவரதம் பிறந்த விதத்தை சுருங்கச்சொல்லி 

விளங்கவைக்க  முற்படுதல் நன்று. நம் தமிழ் 

மக்கட்கும் நோய்நுண்ணுயிர்ப் பரவலால் 

வாசிக்கக் கிட்டும்நேரம் குன்றிவிட்டது.


அனவரதம் என்றால் அனைத்து நாளிலும் 

வருவது.


அனை -  அன.

வரு (வது)  -  வரப்பெறுவது:    வர.

து  -   ஒன்றன்பால் விகுதி, இங்கு  வருபொருள் குறித்தது.

இதனைச் சொல்லாக்க இடைநிலை எனினுமாம்.

அம் -  அமைதல் குறிக்கும் விகுதி.


அன + வர + து + அம் : >   அனவரதம்.


அம்மை என் மனத்துள் அனவரதமும் பொருந்தி நிற்கின்றாள்

என்ற வாக்கியத்தில் இச்சொல்லின் பயன்பாடு காண்க.


இச்சொல் அமைந்த காலத்தில் புதிய சொல். இன்று இது

பழைய சொல்லே.  நன்கு திரித்து அமைக்கப்பட்டுள்ளது.

அறிக மகிழ்க.



குறிப்பு:

( இது பெயர்களிலும் வருவதுண்டு. எ-டு:

அனவரத விநாயகம்.)


விநாயகம் :  வி+ நாயகம்; மற்றும் வினை+ஆயகம்.

ஐகாரம் குன்றி வினாயகம் ஆம்.

வி நாயக என்பதில் வி என்பது விழுமிய என்று 

பொருளாம்.  வி முன்னொட்டு என்பாருமுளர்.

சனி, 8 ஆகஸ்ட், 2020

சிங்கப்பூருக்குத் தேசிய தின வாழ்த்துக்கள்

எந்தநாள் என்றாலும் இதற்கீடாய் நில்லாதே

இனிமை  எலாம்தரும் தேசிய தினமே---நாம்

இருக்கின்ற இந்நாடு நம்பூ வனமே. 


சொந்தநாள் என்றினிச் சொல்வதற்   குண்டென்றால்

சோர்வகல் சுனைநீர் சுரந்தஇந் நாளே----- வளம்

சுருங்காப் பெருங்கலி சூழ்வதிந்   நாளே.


சார்பின்மை வீடுண்டு சோர்வின்மை உண்டதனால்

மார்புண்டு வீறுண்டே மாண்பும்  உள்ளிலே----நல்ல

மதியுண்டு நிதியுண்டு மகிழ்வும் இல்லிலே.


தொழிலுண்டு எழிலுண்டு தொட்டதில் பொன்னுண்டு

தோன்றிடும் எண்ணமெலாம் ஊன்று திண்ணமே---- இனங்கள்

துவண்டிடாத் தூண்கள் நாலு  நிற்கும் வண்ணமே


சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே

சீருடன் வாழ்கவென்று பாடி  யாடுவொம்

கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி  யாடுவோம்.


சிங்கைக்குத் தேசிய தின வாழ்த்துகள்.


பொருள்:

சுனை -  நீர் சுரக்குமிடம்.

பெருங்கலி - பெரு மகிழ்ச்சி.

கலி - துள்ளுதல்.

சார்பின்மை - யாரையும் நத்தி வாழாமல்

தானே பொருள்தேடி வாழ்தல்.

சார்பின்மை வீடு - சொந்த வீடு.

மார்பு உள்ளிலே - நெஞ்சில்.

இல்லிலே - வீட்டிலே

ஊன்று - நிலை(த்தல்)

நாலு - நான்கு இனங்கள்