திங்கள், 3 ஆகஸ்ட், 2020

Thii (தீ ) and Day : சொற்கள் ஏன் திரிகின்றன?

சொற்கள் திரிபு அடைதல்:

ஒரு மொழியின் சொல் இன்னொரு மொழிக்குத் தாவுமாயின் அது திரிந்து வழங்குவதே பெரும்பான்மை. திரிபு இன்றி வருமாயின் இவ்விரு மொழிக்காரரும் நாவசைவுகளில் ஓர் இயைபு அல்லது ஒத்தியல்வு உடையவர்கள் என்று நாம் எண்ணிக்கொள்ளலாம். தமிழ்ப்பெயர்களை நாவினால் ஒலிக்க நம் மலாய் மக்கள் சீனர்களை விடத்  திறனுடையவர்களாக இருக்கிறார்கள். இதைப்போலவே சீனச்சொற்களைப் பலுக்கச் சில தமிழர்கள் தாளம்போட வேண்டியிருக்கிறதன்றோ? கருநாடக இசையை நன்றாகப் பயின்று கீர்த்தனைகளை ஒரு மலேசியச் சீனர் தாளத்துடனுடன் சுரங்களுடனும் பாடுகிறார். இவர் புட்டபர்த்தியிலுள்ள சத்யசாயி மண்டபத்துக்கும், போய் கச்சேரி செய்துள்ளார். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு விதிவிலக்கு என்று சொல்வதில் தவறில்லை. இது ஒரு சிறுபான்மை நிகழ்வாகும்.

சில தமிழ்ச் சொற்கள் ஐ என்ற எழுத்தைக்கொண்டு முடியுமானால் பிறமொழியினர் அதை ஏகாரம் கொண்டு முடிப்பதே இயல்பு.  தோசை ( ஐ) எனற்பாலது  தோசே (ஏ) என்றே பிறரால் முடிக்கப்படும்..  ஐ - ஏ திரிபைக் 
கவனித்துக்கொண்டு எத்தனை சொற்களில் இவ்வாறு திரிகிறது என்று ஆராய்வேண்டும். அவ்வாறாயின் மலை என்பது மலே என்று திரியவேண்டுமே!  ஆமாம். Malay என்றே திரிந்து நம் முன்னே ஒரு சொல்லே
இருக்கின்றதே. இனி மாப்பிள்ளை என்பதை மாப்ளே என்றுதான்  பிறரால் சொல்லநேரும். உலகில் வகுப்பறையில் மட்டும் கற்று வெளிவருவோன் 
செய்யும் ஆய்வு பெரும்பாலும்  புண்ணியமற்றது! அகண்ட கலந்துறவாடல் இருந்தாலே இயலும். மூளையின் இயக்கமும் ஒருங்கிணையவேண்டும். இல்லையென்றால் அறிந்து ஒன்றை வெளியிடுதல் இயலாததாகிவிடும்.
சின்னையா என்பதை சின்-னா-யா என்பானாகில் மொழியிடை ஐகாரம் ஆகாரம் ஆகிவிட்டது. கீதை என்று தமிழன் சொல்வானாகில்  கீதா, கீத்தா,கீட்டா என்றுதான் பிறன் முயல்வான்.

ஐகாரம்  ஏகாரமாதலும்  சில சொற்களில் ஆகாரமாதலும் கண்டோம்.   இனி ஈகாரம் (ஈ) ஏகாரமாதல் காண்போம்.

ஈ > ஏ திரிபு:

தீ என்பது நெருப்பு என்று பொருள்தரும் ஒரு தமிழ்ச் சொல்.  இதிலிருந்தே  நாள் என்று பொருள்படும் ஆங்கிலச் சொல் வந்தது  ஆசிரியர் ஒருவர் ஆய்ந்துவெளியிட் டிருந்தார். தீ எரியும்போது வெளிச்சம் கிட்டுகிறது.  நாள் அல்லது பகலில் சூரிய வெளிச்சம் உள்ளது. ஆதலால் தீ என்பதிலிருந்து டே என்ற நாள்'குறிக்கும் சொல் வந்திருத்தல் பொருத்தம்தான்.

ஆனால் டே என்ற ஆங்கிலச்சொல் பண்டை ஆங்கில மொழியில் (Old English)(OE) "டேக்" என்று இருந்தது. பண்டை செர்மானிய  ( Old Germanic ) மீட்டுருவாக்கத்தில் அது "டேகஸ்" என்றிருந்தது.பழைய ஃப்ரீசிய  (Frisian )  மொழியில் அது  "தி" /  " தெய்" என்று இருந்தது.  இந்தக் கட்டத்தில்தான் அது  தீ என்ற தமிழுடன் பொருந்துவதாகின்றது. ஆனால் மேலை ஆய்வாளர்களுக்கு இதில் வரும் தீ அல்லது "தி" /  " தெய்"    எங்கிருந்து தோன்றியதென்று முடிவாகக் கண்டு  பிடிக்க இயலாமல்  அதை " obscure"   என்று விட்டுவிட்டனர்.ஆகவே இந்தோ ஐர்ப்ப்பிய மூல மீட்டுருவாக்கத்தில்டேக் என்பதில் உள்ள் டே என்பதை விட்டு,  இறுதி"ஏக்" என்பதுதான்  (  ட் + ஏக் ) மூலமாக இருக்கலாம் என்றுஊகித்து முடித்தனர். அவர்களுக்குத் தீ என்றதமிழ்ச்சொல் உலகில்  இருப்பது தெரியவில்லை.தெரியாதது தொல்லைதான். என்ன செய்வது.

சொற்களை ஆய்வதென்பதும் எளிதானதன்று. தீ என்பதிலிருந்து டே வந்ததென்று சொன்ன தமிழா- சிரியர் எப்படி அதை நிலைநாட்டியிருந்தார் என்பது இப்போது எனக்கு மறதியாகிவிட்டது. ஆனால் அவர்  முடிவை யான் மறக்கவில்லை. I do not have his book. I read it in a library.ஆனால் இந்தோ ஐரோப்பிய மீட்டுருவாக்கத்தில் (Proto IE) "தியா" என்றால் எரிதல்,  அதாவது நெருப்பு எரிதல்.
தமிழிலும் அது எரிதல்தான். எரிந்தால் வெளிச்சம். வெளிச்சம் என்பதே பகல். பகல்தான் டே.  தீ தான்  தியா ஆகி உலவியது.  ஆகவே இது ஈ-  ஆ திரிபு. தீ என்பதில் உள்ள ஈகார ஈறு திரியாமல் ஆகாரம் வந்திணைந்த எழுத்துப்பேறாயினும் அமைக.

Have a nice day. Take care.


தட்டச்சு மெய்ப்பு பின்னர்.

சனி, 1 ஆகஸ்ட், 2020

இரத்தம் - "ரெட்" (ஆங்கிலம்)

இதில் இரு சொற்களை ஒப்பாய்வு செய்வோம்.

ஆங்கிலத்திலுள்ள சிவப்பு என்று பொருள்படும் "ரெட்
என்னும் சொல், பலரும் அறிந்ததே.

இரத்தம் என்ற சொல்லில் உள்ள இகரத்தையும்
 இறுதிநிலையில் அமைந்த "தம்" என்பதையும் 
எடுத்துவிட்டால் நடுவிலிருப்பது "ரத்"  (ரெட்) என்பதே.

இந்தோ ஐரோப்பிய மூலமொழி எனப்படும் 
புனைவாக்கத்தில் இதை ஏறத்தாழ "ரெத்" என்றே 
கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆங்கிலத்துக்கு அது 
ஸ்காட் மொழியிலிருந்து வந்தது என்பர். 
ஸ்காட் மொழிக்கு அது ஸ்காண்டிநேவிய வட்டாரத்தி
லிருந்து வந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது. 
அவ்வட்டாரத்தில் ரெயனிர் ரோவன் என்று பலவாறு 
திரிந்து வழங்கியுள்ளதாம்.

இலத்தீனில் அது "ருப்ரம்" என்னும் அழகான வடிவமாய் 
உள்ளது. சிவப்புக் கல்லுக்கு "ரூபி" என்று நாமறிந்ததே.
 இலத்தீனிலே அது  "ரூஃபூஸ்",   "ரூபர்"  " ரூபிகுண்டஸ்" 
என்றெல்லாம் வேற்றுமைப்படும். ரகர வருக்கம் 
முன்னிலையில் இருந்தபடி இருக்க, வால்கள் - விகுதிகளில்
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழில்போல சமஸ்
கிருதத்திலும் இலத்தீனிலும் வேற்றுமைகள் வரும்: 
தமிழில், மேசை, மேசையை, மேசையோடு, மேசைக்கு 
என்றெல்லாம் உருபுகள் வருவதுகாண்க. வேற்றுமை 
இல்லாத (இவ்வாறு சொல்லிறுதி மாறியமையாத) 
மொழிகள் பல உலகில் உள்ளன. அது நிற்க.  ஆங்கிலத்தில்
இது உள்ளதென்றாலும் மெத்தக் குறைவு.  எடுத்துக்காட்டு:  
ஹி >  ஹிம் என்பது காணலாம். எழுவாய், பயனிலை 
என்ற  எந்நிலையிலும் மலாய் முதலிய 
மொழிகளில் சொல்லிறுதி மாற்றமென்பது இலது.

இரத்தம் என்பதன் மூலம் அரத்தம் என்பதே. இதை 
மொழிநூலார் கூறியுள்ளனர்.  அர் என்பதே சிவப்பு என்று 
பொருள்படும் அடிச்சொல். அர்+ அத்து + அம் = அரத்தம்.  
அத்து என்பது அது என்ற சொல்லின் தகர இரட்டிப்பு
வடிவம். இங்கு சொல்லாக்க இடைநிலையாய் வருவது.  
கணித்தல் குறிக்கும் கணிதம் என்ற சொல்லில் இது 
என்பது இடைநிலையாய் வந்தது போலுமே இஃது 
என்றறிக.  கணி + இது + அம் = கணிதம். ஓர் இகரம்
கெட்டது. துகரத்தில் உகரமும் கெட்டது. அரத்தம் 
என்பதிலோர் உகரம் கெட்டது.   அர் + அத் +
 (த்+உ) +அம் > அர் அத் த் அம் >  அரத்தம் எனவறிக.

அர் என்ற அடிச்சொல் வந்த மற்ற சொற்கள்:   
அர் அன் > அரன்; அர் அத்து ஐ > அரத்தை. என்று 
கூறுவர்.  அரன் : சிவன் குறிக்கும் சொல்.


அர் ஆனாலும் இர் ஆனாலும் ஒன்று  தலையிழந்து
ரூ ஆகி, பின் வெவ்வேறு இறுதிநிலைகளை 
ஆங்காங்கு வேண்டியவாறு திரித்துக்கொண்டு 
சொற்கள் பல்கியுள்ளமை இதனால் அறியலாகும்.
 இதில் இ-ஐரோ.  மூலமொழி மீட்டுருவில்
தகர ஒற்று கண்டிணைபுற் றிருப்பது சிறப்பே 
என்றுமுடிக்க.

அரத்தம் இரத்தம் என்ற வடிவங்களில் நடுவாகிய
ரத் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் ஏகி 
 ஆங்கு இடம்கண்டிருப்பது நாம் 
மகிழ்வதற்குரியதாகும்.

மெய்ப்பு - பின்.





மது உண்பவர் உண்ணட்டும்.

நச்சுநீர் உட்கொண்டு நம்மனோர் மாய்வரென்றால்
இச்சை   மதுவுண்ணல் ஏன்தடுப்பீர்----  சொச்சமின்றி
உண்ணட்டும் தீயமது  உள்ளவரை வாழ்கஏதும்
பண்ணின் பயனர் அவர்.

நச்சுநீர் -  நோய் நுண்மிகளை ஒழிக்கும் நீர்க்கலவை
நம்மனோர் - நம் மக்கள்.
மாய்வரென்றால்  - (சிலர் மாண்டுவிட்டனர் என்பது
தகவல்  ).

இச்சை - விருப்பம்.
ஏன் தடுப்பீர் - தடுக்கத் தேவை இல்லை என்பது.

சொச்சம் இன்றி  --  கோப்பையில் உள்ள மது
எல்லாவற்றையும்.

தீயமது - கெடுதல் என்று அறிஞர் சொல்லும் மது.

உள்ளவரை வாழ்க  -  மது உண்டலால் ஆயுள்
குறையுமென்றால், குறைந்த வரை வாழட்டும்;

ஏதும் பண்ணின் ( பண்ணட்டும்) - அது மது உண்போருக்கு
உரிமை ஆகட்டும் என்றபடி.

பயனர் அவர் -  அதைப் பயன்படுத்துவோர் அவர்களே.
அதனால் வரும் உடற்கேட்டையும் விளைவுகள்
பிறவற்றையும் அவர்களே அடையட்டும் என்றவாறு.

பிறர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்களேதாம்
தீர்மானிக்க வேண்டும்.  நாம் தீர்மானித்து வெற்றி
காணுதல் இயலாதது.

மது அருந்துவதால் குடும்பச்சண்டைகள் வரலாம்.
மதுவைத்  தடைசெய்தால் கள்ளச்சாராயம் அதன்
இடத்தை மேற்கொள்கிறது. பிறகு அதைத் தடுக்க
இயலாது. சில நிகழ்வுகளையே பிடிக்கமுடியும்.
பல நல்லபடி நடந்தேறி, கள்ளத்தனம் உடையார்
காசு ஈட்டுவர்.

உலகத்தைக் கட்டுப்படுத்தி வெற்றிகாண்பவன்
 எவனும் இன்னும் பிறக்கவில்லை.  மதுவுண்ணல்
என்பது ஒரு நாய்வால்.

மெய்ப்பு பின்

News references:


You may have better or different views. Pl feel free to comment.

யாம் கூறுவது ஏற்புடையதன்று எனின் தங்களின்
கருத்துகளைப் பதிவு செய்யலாம். பின்னூட்டம் இடுங்கள்.
எம் கருத்தே சிறந்தது என்று யாம் கூறவில்லை.