ஆய்ந்தறிவோம்.
அது கஷாயம் என்ற சொல்தான். பாயசம் குடிக்கப்
பலர் விரும்பும் இந்நாளில் யார் கஷாயம் குடிக்க
விரும்புவார்?
கஷாயம் எத்துணை கசப்பாய் இருக்கும் என்பது
உண்மையில் யார் அதைத் தயாரிக்கிறார்கள்
என்பதைப் பொறுத்ததே ஆகும். சித்தவைத்தியரே
அதைத் தயாரித்தால் மிகக் கசப்பு உடையாதாய்
இருக்குமென்று நாம் எண்ணலாம்.
கஷாயம் என்பது உண்மையில் கச ஆயம் தான்.
கசப்பாய் ஆயது கசாயம்.
இச்சொல்லில் முன் நிற்பது கசத்தல் என்ற
வினைச்சொல்.
கச என்பது கஷ என்று திரிந்துவிட்டதால் பலருக்குத்
தடுமாற்றமாய் உள்ளது. வடவெழுத்து என்ற அயல் ஒலி
நீக்கி, உரிய ஒலியோடு (எழுத்தொடு) புணரின் அது சரியான
சொல்லாகிவிடும். தொல்காப்பியம் சொல்வது இது,
ஆயம் என்பதையும் இவ்வாறு அறியலாம்:
ஆதல் - வினைச்சொல்.
ஆ வினைப்பகுதி.
ஆ + அம் = ஆயம், யகர உடம்படுமெய் தோன்றியது..
ஆய என்ற எச்சவினையினின்று இதை அறிய:
ஆய + அம் = ஆயம், இங்கு ஆய என்பதன் ஈற்று அகரம்
கெட்டது.
ஆய் என்ற வினை எச்சத்திலிருந்து அறிவதானால்,
இன்னும் எளிதாகிவிடும். ஆய்+அம் = ஆயம்.
எச்சங்களிலிருந்து பிற பாலி, சங்கதம் போலும்
மொழிகளில் சொற்கள் பல பிறந்தனவென்று சொல்வர்
ஆய்வாளர்.
சொற்களில் ஒவ்வொன்றும் வினைப்பகுதி, விகுதி
என்று இணைந்து தோன்றியிருக்கும் என்பது
இலக்கண ஆசிரியர்கள் கருத்து. இலக்கணம்
காணப்படுமுன்னரே சொற்களும் மொழியும்
தோன்றிவிட்டமையால், இப்படிக் கருதுவது
மொழிவரலாற்றுக்கு முரண்பட்ட தவறான
கருத்து அல்லது கொள்கை. இலக்கியம் அல்லது
மொழியில் காணப்பட்டதற்கே உண்மை கண்டு
இலக்கணம் உரைக்கவேண்டும். விடப்பட்டதை
சொந்தபுத்தியில் அறிக.
பெய்ப்பு பின்.