திங்கள், 13 ஜூலை, 2020

ஒரேநாளில் 4328 நோய்த்தொற்று [ த-நா]



ஆயிரத்து முன்னூற்றின் இருபத் தெட்டாம்
ஆயிரத்தில் நாலுறழும் கிருமித் தொற்றே
மாயறவு கொண்டவர்கள் திரும்ப வேண்டும்
மாநிலத்தில் இன்றொருநாள்  பெருக்கம்  ஈதே!
தூயவர்கள் பலர்புகழில் துவன்ற நாட்டில்
தொடர்கின்ற துன்பங்கள் அகன்றி டாவோ?
தாயொடுமே பிள்ளைகளும் தழைத்து நின்று
தமிழன்னை தயைபெற்றே எழுதல்  வேண்டும்.


ஆயிரத்தில் நாலுறழ -  நாலாயிரம்
மாயறவு -  மரணம் நீங்குதல்
கொண்டவர்கள் -  கொண்டு +  அவர்கள்
துவன்ற -  கூடிய, நிறைந்த
அகன்றிடாவோ = நீங்கிட மாட்டாவோ?


ஞாயிறு, 12 ஜூலை, 2020

மரபுத் தொடர்: " எந்த மூலை?"

நாம் வழங்கும் சொற்றொடர்களில் சில ஒவ்வொரு
துறையைச் சார்ந்தவையாய் இருக்கும்.  எடுத்துக்
காட்டாக, " என்ன இவர் செய்து சாய்த்துவிட்டார்? 
இப்போது இங்கு வந்து பீத்திக்கொண் டிருக்கிறார்" 
என்பது காட்டில் மரங்களை வெட்டிச் சாய்த்துக்
கொண்டுவந்து அறுத்தெடுத்துப் பலகைகளாக்கும்
தச்சுத் தொழில் சார்ந்த வேலைக்காரர்கள்
பயன்படுத்தி வந்த சொற்றொடராகும்.  இதே
போலும் ஆங்கிலத்திலும் உண்டு. "Are you fighting
 your case or taking a certain course?" என்ற கேள்வியில்  
taking a certain course என்பது  கடலோடிகளின்
பேச்சுவழக்கில் தவழ்ந்து வளர்ந்து மிகுந்து மக்கள்
பிறரிடமும் பரவிவிட்ட சொற்றொடரென்று அறிஞர்
கூறுப. இவற்றைச் சுருக்கமாகத் துறைத்தொடர்கள்
என்று சுட்டலாகும்."taking a certain course" எனற்
பாலதை   ஆங்கில மொழிநூலறிஞர்  natutical term
என்பர்.

தச்சுத் தொழிலில் அறுத்துக் கொணர்ந்த மரம் அல்லது
மரங்கள் அளவிலோ எண்ணிக்கையிலோ குறைந்துவிட்டால்
"இது எந்த மூலை?" என்ற கேள்வி எழும். நான்கு மூலைக்கும்
நான்கு தூண்கள் நிறுத்தவேண்டுமே.  மூன்று தூண்களுக்கே
மரங்கள் உள்ளனவென்றால் பற்றாக்குறையை உணர்த்துவதற்கு
இவை எந்த மூலை என்பர்.  இதற்குப் போதவில்லை என்பதே
பொருளாகும். இப்போதைய வழக்கில் " எந்த மூலை" என்பது
கவலைக்குரிய பற்றாக்குறையைச் சுட்டவே வெளிப்படும்
சொற்றொடராக உள்ளது.

சாய்த்துவிட்டாயோ என்று வரும் மரபு வழக்கினின்று சில
சொற்கள் அமைந்துள்ளன.

செய்து முடிக்க இயன்றதை  சாத்தியம் என்பர்.  இது சாய்த்து+
இயம் என்ற இரு உள்ளுறுப்புச் சொற்களை உடையது.  இயம்
என்பது இ+ அம்  என்ற பகுவிகுதிகளின் இணைப்பு.  இ = இங்கு.
அம் - அமைதல் உணர்த்தும் விகுதி..  சாய்க்க இயன்றது, அதாவது
செய்தற்கியன்ற நிலை என்பதே சாய்த்தியம் > சாத்தியம்
ஆயிற்று.  யகர ஒற்று (ய்)  கெட்டது (௳றைந்தது).    வாய்ப்பாடம்
சொல்லிக்கொடுப்பவர், வாய்த்தியார் > வாத்தியார் ஆனார்'
அதுபோலவே சாய்த்தியம் > சாத்தியம் ஆயிற்று.  சாதித்தல்
என்பதும் சாய்தல் அடியினதே.  சாய் > சாய்தி > சாதித்தல்
என்பது யகர ஒற்று இழந்தது. சாதித்தல் என்பதில் வரும் சாதி
என்பது ஜாதி ( மக்கட்பிரிவு) குறிக்காது.  இது தன்வினை
பிறவினை வடிவங்கள் இரண்டிலும் சாதித்தல் என்றே
இயல்வதாகும்.

இவ்வாறு அறிந்து மகிழ்க..


மெய்ப்பு - பின்னர்.

திங்கள், 6 ஜூலை, 2020

அபிப்பிராயம் பின் வரும்கருத்து.


யாமோர் இடுகையை எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்புக் கொடுக்க முனைந்தேம். அவ்விடுகை சமீபம் என்ற சொல்லைப்பற்றியது. “சமீபம் என்ற அழகான சொல்" என்ற தலைப்பினை அதற்கு இட்டேம். இதைப் படிப்பவர் எவரும் என்ன அழகான சொல் என்று கேட்க மாட்டாரென்பதே எமது துணிபாகும். அந்தச் சொல்லில் என்ன அழகு கண்டீர் என்று எம்மிடம் யாரும் சண்டை பிடிக்க வரமாட்டார் என்பது யாமறிவேம். அழகோ அழகில்லையோ பலர் அவ்விடுகையின் உள்ளுறைவிலேதான் ( substance or content ) கவனம் செலுத்தியிருப்பர் என்பதும் யாம் பட்டறிவுகொண்டு அறிந்து வைத்துள்ளதாகும்.

ஒன்று அழகாக இருக்கிறதோ இல்லையோ, இது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒருத்தி அழகு என்றால் இன்னொருத்தி அழகு இல்லை என்பாள். இதனைக் கருத்து அல்லது அபிப்பிராயம் என்று குறிப்பிடுவர். பேச்சு வழக்கில் இதை "நினைப்பு" என்றும் இதற்கு எதிராக உண்மைநிகழ்வை "நடப்பு" என்றும் வேறுபடுத்தி உரைப்பர். நடப்புக்கு நினைப்பு ஒரு முரணிகழ்வு ஆகும். நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிடுமென்பதற்கு என்ன பொருள்?

சட்டத்துறையில் கருத்துக்கும் நடப்புக்கும் வேறுபாடு கண்டுகொள்ளுமாறு பல விளக்கங்கள் கூறப்படுவதும் வரையறவுகள் வழங்கப்படுவதும் உண்டு.

அபிப்பிராயம் என்ற சொல்லுக்கு வேறுவிதங்களில் அமைப்பு காணப்படுவதுண்டு. இப்போது இச்சொல்லை ஆய்வுசெய்வோம்.

அபி என்பது ஒரு சங்கத முன்னொட்டு. ஆனால் அது உண்மையில் " அதன் பின் " என்ற தொடரிலிருந்து சுருக்குண்டதாகும். அபிவிருத்தி என்ற சொல்லில் அதன் பின் செய்யப்படும் விருத்தி என்று விளக்குக. முன்னாளில் கட்டிய ஒரு வீட்டுக்கு அபிவிருத்தி மேற்கொள்ளுதல் என்பது வழக்கில் கூறப்படுவதாகும். இங்கு வழக்கு என்பது உலகவழக்கு. விருத்தி என்பதோ விரி > விரித்தி என்பதன் திரிபு.

உலகில் ஆதியில் ஏற்பட்ட அபிப்பிராயம், ஒன்றைப் பார்த்து அது அழகியது, நல்லது என்பனபோலும் பாராட்டுக்களே. அடுத்தவன் அதை ஏற்கமறுப்பதாகிய ஒரு புகழ்ச்சி. இது அழகு என்றால் இதனினும் அது அழகு என்று பதில்வரும். ஆகவே அபி+ பர + ஆயம் > அபிப்பிராயம் என்று திரிந்த சொல். அதன் பின் புகழ்தலாவது கண்ட அல்லது கேட்ட பின் புகழ்தல், முதலியவை. பின்னர் இச்சொல் பொதுப்பொருள் எய்தியது. "பொதுவாகக் கருதப்படுவது" என்ற பொருளை அடைந்தது. அகரத் தொடக்கம் இகரமாதல் அதழ் > இதழ் என்பதனால் அறிக.

இவற்றையும் நோக்குக:

பரமன் > பிரமன் > ப்ரம்மன்  ( ப> பி > ப் )   அ > இ திரிபுவகை.

பரமன் - எங்கும் பரந்திருப்பவன்,  கடவுள். பிரமனும் கடவுள் தான்.

தெய்வப்பெயர்கள் ஒரு நடுவண் கருத்தினின்றே உருவெடுத்துப் பல்கியவை. சொல்லாய்வில் இவற்றை ஏற்புழி ஒன்றெனவும் பலவெனவும் கருதி அறிக. தெய்வப்பன்மை மீண்டும் ஒருமையாகிவிடும். இவற்றை விரிக்கும் நூல்களின்வாய் உணர்க. யாமதற்குள் செலவுமேற்கொள்ளவில்லை.



இவ்வாறாகப் பர என்பது பிர என்றானது. பரத்தல், புகழ்தல் , பரவுதலும் இப்பொருளில் வரும். “ அயோத்தியர் கோமானைப் பாடிப்பர" என்று வாக்கியத்தில் வருதல் காண்க.
அபிப்பிராயம் என்பது ஒன்றைக் கண்டபின் அல்லது நிகழ்த்தியபின் வரும் கருத்து. சுருக்கமாகப் "பின்னுரை" என்னலாம் எனினும் பின்னுரைகள் கருத்துமட்டுமேயன்றிப் பிற உள்ளுறைவுகளையும் 'உள்ளடக்கும்'.

பிராயம் என்பது வேறு. அது பிற ஆயம் என்பது ஆகும். ஆய்+அம் = ஆயம். ( ஆனது, ஆவது முதலியவை. )  பிறந்தபின்னரே வயது ஓடத்தொடங்கும். பிறந்தபின் ஆவதுதான் வயது/ அகவை. பிற ஆய அம் > பிராயம். றகரத்துக்கு ரகரம் மாற்றீடு. ௳. ரகர றகர வேறுபாடின்றி இயலும் சொற்கள் பல உள. எழுத்தியலில் றகரம் என்பது இரு ரகரங்களின் இணைப்பு.  ரர>ற.  மலையாளமொழியில் இவற்றின் எழுத்தமைப்புகளைக் கருத்தில் கொள்க. புரிந்துகொள்ளலாம்.
.

இவ்வாறு அறிந்து மகிழ்க.

மெய்ப்பு - பின்பு.