திங்கள், 22 ஜூன், 2020

பெருமானும் பிராமணரும்

[Re-posted after Edit.]


ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சில இணையதளங்களில் பிராமணர் என்ற சொல்லின்  தோற்றம் பற்றிய ஆய்வுகளும் உரையாடல்களும் 
நடைபெற்றன. அதில் பலர் பெருமான் என்ற சொல்லினின்றுதான் இச்சொல் முகிழ்த்தது என்று கருத்துத்தெரிவித்திருந்தனர்.

இந்தச் சொல் நீண்டகாலமாகவே ஆய்வு செய்யப்பட்டுப் பல்வேறு முடிபுகள் முன்வைக்கப்பட்ட சொல்லாகும்.

ஆபி ட்யூபா என்ற பிரஞ்சு அறிஞர் தம் ஆய்வில் இது " ஏப்ரகாம் " என்ற சொல்லினின்று திரிந்துற்றது என்று கூறினார்.

இப் பிராமணர் என்ற சொல்பற்றிப் பிறர் கருத்துக்களை யெல்லாம் இவண் தொகுத்துரைப்பதென்றால் இடுகை நீண்டு படிப்போருக்கு உறக்கமே வந்துவிடுமாதலால்
அவையெல்லாம் ஒருபுறமிருக்க, நாம் நேரடியாகவே நம் ஆய்வினைத் தொடங்கிவிடுவோம்.

பெருமான் என்ற சொல் பிரான் என்றும் பெருமாட்டி என்ற சொல் பிராட்டி என்றும் திரியும். பெரு - பிரா என்ற முதலசைத் திரிபுகளைக் கவனிக்கவேண்டும். இவ்வாறே பெருமான் - பிராமான் > பிராமனன் என்று இச்சொல் திரிந்துவிட்டது. இதில் 0னகரம் என்ற எழுத்தே வந்திருக்கவேண்டும். ணகரத்துக்கு வேலையில்லை. ஏனென்றால் பெருமான் என்ற மூலத்தில் ணகர ஒற்று இல்லை. இன்றைய நிலையில் பிராமணர் என்றே தமிழில் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருதலால், இந்த மரபினை நாம் போற்றவேண்டியுள்ளது. ஆனால் இந்த மாற்றீடுதான் ஆய்வாளர்களைத் திசைதிருப்பி விட்டதென்பதை உணர்க.

------என்று முடிக்கவே, பிரம்மன் என்ற சொல்லும் பெருமான் பிரம்மன்(திரிபு) என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.

பெருமான் என்பதும் திரிசொல்லே. அது பெருமகனென்பதன் திரிபே என்று உணர்க.

ஞாயிறு, 21 ஜூன், 2020

தொற்று நோய் நீங்கிச் சிங்கப்பூர் மேலெழும்



நளியிரு முந்நீர் தாண்டி

நம்சிங்கை வந்த நோயோ




வெளிநாட்டு வேலை யோரை

விதப்புறப் பற்றிக் கொண்டு




களிநடம் ஆர்த்த தன்றே.

காலத்தில் நீங்கி வீழும்




ஒளியுறும் மீண்டும் நாடே

உங்களுக் கையம் வேண்டாம்.







பொருள்:-

நளியிரு முந்நீர் - நடுக்கடல்.

வேலையோர் - ஊழியர்

களிநடம் - மகிழ்ச்சி நடனம்

ஆர்த்ததன்றே - செய்ததல்லவோ

விதப்புற - பெரிதும், தனியாக.

காலத்தில் - நாட்கள் செல்லச்செல்ல





சனி, 20 ஜூன், 2020

ஆடு மேய்களம் இலடாக்கு.



ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார் வாழும் இடமே
ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை திடமே
ஆடுகொடு மனத்தராய் அரசுகளில் வல்லோர் ஊன்று கடமே
ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் செல்லார் எனில் மடமே.


பொருள் 

1.ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார்
 வாழும் இடமே - அமைதியாக ஏழைகள் ஆடுமேய்த்து 
வாழ்க்கை நடத்தும்  இடமாகும்; 
 ( இல்லார் - ஏழைகள்)

2.ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை  - 
இலாடாக்கு என்னும் இந்நிலப் பரப்பில் ஆடவேண்டியவை 
ஆடுகளே; 
 ( அதுதான்இறைவன் அமைத்தவழி என்பது).

3. திடமே   ஆடு   கொடு மனத்தராய் அரசுகளில்
 வல்லோர் ஊன்று கடமே - ( இப்போது)  அவ்விடம் 
வளைந்த  மனத்திடம் வாய்ந்த வல்லரசுகள் 
அசையாமல் நிற்கும் மலைப்பகுதி  ஆகிவிட்டது!!

(ஊன்றுதல் - நிலையாக நிற்றல் .
 கடம் - மலைப் பகுதி. 
 எ-டு: வேங்கடம் - வெப்பமுள்ள மலைப்பகுதி) 

திடமே  ஆடு(ம்) கொடு மனத்தர் -  மிகுந்த மன 
அழுத்தமுடன்  செயல்படும் கொடிய நெஞ்சினர்.
  (  போரினை விரும்புவதால் ).


4.  ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் 
செல்லார் எனில் மடமே. -   இந்த வல்லரசுப்
படையினர் அங்கிருந்து செல்லாவிட்டால் 
அது மடமையாய் முடியும்.  
( அழிவை உண்டாக்குவது மடமை என்பது 
கருத்து. மடம் - மடமை)


இக்கவிதையை நுகர்ந்து இன்புறுவீர்.

மெய்ப்பு - பின்
Edited 5.31 am 22.06.2020