சனி, 20 ஜூன், 2020

ஆடு மேய்களம் இலடாக்கு.



ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார் வாழும் இடமே
ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை திடமே
ஆடுகொடு மனத்தராய் அரசுகளில் வல்லோர் ஊன்று கடமே
ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் செல்லார் எனில் மடமே.


பொருள் 

1.ஆடுகளை அமைதியொடு மேய்க்கின்ற இல்லார்
 வாழும் இடமே - அமைதியாக ஏழைகள் ஆடுமேய்த்து 
வாழ்க்கை நடத்தும்  இடமாகும்; 
 ( இல்லார் - ஏழைகள்)

2.ஆடுவன இலடாக்கிலே  ஆடுகளே  அல்லால் இல்லை  - 
இலாடாக்கு என்னும் இந்நிலப் பரப்பில் ஆடவேண்டியவை 
ஆடுகளே; 
 ( அதுதான்இறைவன் அமைத்தவழி என்பது).

3. திடமே   ஆடு   கொடு மனத்தராய் அரசுகளில்
 வல்லோர் ஊன்று கடமே - ( இப்போது)  அவ்விடம் 
வளைந்த  மனத்திடம் வாய்ந்த வல்லரசுகள் 
அசையாமல் நிற்கும் மலைப்பகுதி  ஆகிவிட்டது!!

(ஊன்றுதல் - நிலையாக நிற்றல் .
 கடம் - மலைப் பகுதி. 
 எ-டு: வேங்கடம் - வெப்பமுள்ள மலைப்பகுதி) 

திடமே  ஆடு(ம்) கொடு மனத்தர் -  மிகுந்த மன 
அழுத்தமுடன்  செயல்படும் கொடிய நெஞ்சினர்.
  (  போரினை விரும்புவதால் ).


4.  ஆடுதலை நிறுத்துவரோ அமைதியுடன் 
செல்லார் எனில் மடமே. -   இந்த வல்லரசுப்
படையினர் அங்கிருந்து செல்லாவிட்டால் 
அது மடமையாய் முடியும்.  
( அழிவை உண்டாக்குவது மடமை என்பது 
கருத்து. மடம் - மடமை)


இக்கவிதையை நுகர்ந்து இன்புறுவீர்.

மெய்ப்பு - பின்
Edited 5.31 am 22.06.2020


வெள்ளி, 19 ஜூன், 2020

விகாசித்தல் - விரிவடைதல்.

எந்தச் சொல்லையும் அது எப்படிக் காதுகளில் வந்து ஒலிக்கிறது
என்பதை மட்டும் வைத்து  அதன் தோற்றுவாயை முடிவு செய்துவிடமுடியாது.பல அளவைகளால் அவற்றை முடிவு செய்வதுதான் சொல்லாய்வு என்பது. இதற்கு ஓர் உண்மையான எடுத்துக்காட்டினை
யாம் எம் நண்பர்களிடம் கூறுவதுண்டு.

பெரியசாமி என்ற ஒரு தமிழர் ஓர் அமெரிக்கன் குழும்பில் வேலைக்குச் சேர்ந்தார். அவர் பெயர் சற்று நீட்டமாக இருக்கிறது என்று அழைக்க இடருற்ற அவருடைய  அலுவல் தோழர்கள் அவரைப் பெரி என்று அழைத்தார்கள். ஆகவே பெரியசாமி மிஸ்டர் பெரி ஆகிவிட்டார்.  மிஸ்டர் பெரி என்ற நிலையில் இந்தத் தமிழர் தம் சக அலுவலரிடையே மிகவும் விரும்பப் படுபவர் ஆனார்.  அதற்கு அவர் பெயரும் ஒரு காரணியாகிவிட்டது.பெரிதும் ஓரசைச் சொற்களால் ஆன மொழியுடையார் நா ன் கு  ஐந்து அசைச் சொற்களைப் பெயராகக் கொண்ட தமிழரையும் ஏனை இந்திய வழியினரையும் விளிப்பதில் சிரமம் அடைவது உண்மை. மிஸ்டர் பெரி ஒரு வெள்ளைக்காரன் என்று அவரைத் தெரியாதவர்கள் நினைத்தனர்.

தமிழ்ச் சொற்கள் இன்னொரு மொழிக்குப் பரவினால் எவ்வாற்றானும்  இடர்ப்பட்டு மாறி ஒலிக்குமென்று உணரவேண்டும்.

அதனால்தான் ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளின் முன்னரே தொல்காப்பியனார் " திரிசொல்" என்றொரு சொல்வகையைக் கூறினார். திரிசொல், ஒலித்திரிபு மட்டும் கொண்டதன்று. இதைப் பின்னர் ஓர் இடுகையில் விளக்குவோம். எம் பழைய இடுகைகளிலும் ஆங்காங்கு விளக்கம் காண்க

இன்று விகாசித்தல் என்ற சொல்லை விளக்குவோம். இதன் அடிச்சொற்கள் (அதாவது: வினைச்சொல் அடிகள் தொடங்கி  ) மிகு(தல்),  ஆ(சு){ ஆதல்} ,  வினையாக்க விகுதியான இகரம் முதலியவை.

மிகுதல்::  மிகு என்பது விகு என்று திரியும். இது  மிஞ்சு > விஞ்சு என்ற திரிபு போலுமே ஆகும்.

ஆசு என்பது பற்றுக்கோடு என்று பொருள்படும் சொல்.  பற்றுக்கோடென்பது பற்றிக்கொள்ளுதல்.

ஆசு என்பது ஆசிரியர் என்ற சொல்லிலும் உள்ளது. ஆசான் என்பதும் அது.  ஆசிடையிட்ட எதுகை என்ற யாப்பிலக்கணக் குறியீட்டிலும் உள்ளது. இவற்றை இங்கு விளக்கவில்லை. பழைய இடுகைகளிற் காண்க. தமிழ்ப்புலவராகிய எம் குரு அப்பாத்துரைச் செட்டியார்,  தமிழ் ஆசான் என்ற என்ற இதழின் ஆசிரியரும் ஆவார். இவர் அலுவலகம் சிங்கையில் பழைய ஆரிய சமாஜ் அலுவலகத்தில் கீழ்மாடியில் இருந்தது.  ஆதனால் ஆசான் என்ற சொல் எமக்கும் பிடித்ததுதான்.   ஆசு+ஆன்:  ஆன் என்பது ஆண்பால் ஒருமை விகுதி.

மிகு > விகு.
ஆசு.
இ - வினையாக்க விகுதி.
விகாசித்தல் : இதன் பொருள் விரிவு அடைதல். பூத்தல்.

விகாசித்தல் என்ற தமிழ்ச்சொல், முயற்சித்தல் என்பதுபோல்  ஒரு தொழிற்பெயராகிய ஈற்று ஆசு என்பதிலிருந்து  முகிழ்த்துள்ளது. விகாசித்தல் என்பதன் நிலையுறுப்பு:  விகு ( திரிசொல்).  வருவுறுப்பு: ஆசு ( இயற்சொல்). விகுதி:  இ ( இகரம் ).

அறிக, மகிழ்க.


மெய்ப்பு:  பின்பு. 19.6.2020
தட்டச்சு பிறழ்வு:  5.42 மாலை 20.6.2020 சரிபார்க்கப்பட்டது.

















குறிப்புகள்:

அக ஊழியர் -  சக ஊழியர் (திரிபு). இன்னொரு எடுத்துக்காட்டு:  அமணர்- சமணர்.

புதன், 17 ஜூன், 2020

இரங்கல்



போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம்

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே
நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
றாரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே


உரை:

போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம் -
இந்தக் கடினமான காலத்தில் பலர் போரில் இறந்தனர், பலர்
நோயினால் சென்றுவிட்டனர்;

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே - 
இத்திறத்தார் அனைவருக்கும் நம் நெஞ்சுருக்கம் உரித்தாகுக.

நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
று  -  ( இவர்கள் உறவினர் நட்பினர் முதலானோர்)  அதனால்
அடைந்த துக்கத்தினின்று மீண்டு நிலையான மனத்திடத்தினைப்
பெறவேண்டுமென்று; 

ஆரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
-  அருள் நிறைந்த இறைவன் அடிகளின் முன் நின்று வணங்கி
( இறைஞ்சிக்கொண்டு) விழுந்தேம் யாம்

என்றவாறு.

ஆர் அருள் - வினைத்தொகை.