வியாழன், 11 ஜூன், 2020

அரசனும் அரணும்.( ராஜன் - ராணா - ராணி.)

இங்குத்   தலைப்பில் கொடுத்துள்ள  சொற்களின் முகிழ்புலங்களைக் கூடுமானவரை சுருங்கத் தெரிந்துகொள்ள முனைவோம்.

கூறியன மீண்டும் கூறப்படாதொழியுமாறு, அரசன் என்ற சொல்பற்றி அறிய
இவ்விடுகையைப் படித்தறியப் பரிந்துரைப்போம்:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html  -   அரசன்.

அரசன் என்பதன் அடிச்சொல் அர் > அர ķĺĺò
என்பதுதான். உடனிருப்பவர்களையும் நாட்டு மக்களையும் அடக்கி ஆளும் வலிமை பெற்றவனே அரசன். குடிவாழ்நரை இடர்களிலிருந்து பாதுகாக்கும் நன்மையையும் அரசனே செய்தான்.  அயலார் உட்புகுந்து மக்களைத் துன்புறுத்தாமல் அவன் பார்த்துக்கொண்டான்.  இவற்றுக்காக அவன் கோட்டைகளையும் அரண்களையும் நிறுவினான்.

அர் என்ற அடியினின்றே அரண் என்ற சொல்லும் தோன்றியது. அரண்களை உருவாக்கி  ஆட்சி இனிது செல்லுமாறு பார்த்துக்கொண்டமையின், அவன் அரணியன் (  "அரணன்"  "அரணான்" )  ஆவான். அவனுடன் இருந்த அவன் அரசி அவனின் ராணி ஆனாள்.   அரண் >( அரணி ) > ராணி > இராணி..

அயன்மொழித் திரிபு  ராணி என்பது.   அரண்களை ஆட்சி புரிந்தோர் அரசர் குலத்தோரே ஆதலின்,  அரசி ராணி எனப்பட்டதும் அவர்கள் வாழ்ந்த பெருமனை அரண்மனை எனப்பட்டதும் பொருத்தமாய் அமைந்தன.

அரங்கன் என்ற சொல் ரங்கன் என்று தலையிழந்தது. . இதுபோலவே ராணி என்ற சொல் தலையிழந்து அவ்வாறாயது..

அரசனும்  ராணா  ( அரணன் - வழக்கழிந்த சொல்வடிவம்)  என்றும் அரசி,  ராணி மகாராணி என்றும் சுட்டப்பெற்றனர்.

இற்றை ஆய்வில் திராவிட அல்லது தமிழின மக்களே அரசுகளை நிறுவினர் என்று கருதப்படுகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


( இடைவெளி கடைப்பிடித்து நோயினின்று
காத்துக்கொள்ளுங்கள் ).

மெய்ப்பு - பின்

இது  ( ķĺĺò )  என்ன குறிப்பு என்று தெரியவில்லை. கள்ளப்
புகவர்கள் இதைப் பதித்துள்ளனர். ஏன் என்பது தெரியவில்லை.
என்ன நடக்கும் என்று பார்ப்போம்.



புதன், 10 ஜூன், 2020

செது என்னும் அடிச்சொல்.

இன்று சேதம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இது தமிழில் உள்ள வழக்குச்சொல் தான்.

"சேதம் இல்லாத இந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா"

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடலில் வருகின்றது.

தான் - இடமென்றும் பொருள். தான் இருப்பது இடம். எதை எங்கு இடுகிறோமோ அது அதற்கு இடம்.   தான் > தானம்> ஸ்தானம். இந்தச் சொல் எங்கும் பரவி, துருக்கிஸ்தான் என்னும் ஊருக்குமப்பால் சென்றுள்ளது.  அது நிற்க,

ஒரு பொருளைச் செதுக்கினால் அல்லது வெட்டினால் அது செதுக்கம் அடைகின்றது.  செதுக்கு+ அம் = செதுக்கம்.  செதுக்கமென்பது ஒரு புத்துருவாக்கச் சொல். முன்னர் எவரும் கையாண்டிருக்கலாம்; எமக்குக் கிட்டவில்லை. அல்லது புதிய கருத்துக்குப் பயன்பாடு செய்யலாம்.

ஆனால் முன்பே வழக்கில் உள்ள சொல் சேதம் என்பது.   செதுக்கு என்பதில் உள்ள கு என்ற வினையாக்க விகுதியை விலக்கிவிட்டால் அடிச்சொல்லே மிஞ்சும்.  அது செது என்பது.

செது என்பது முதனிலை (முதலெழுத்து) நீண்டு அம் விகுதி பெற்றால் அது செது + அம் = சேதம் ஆகின்றது. ஒன்றைச் செதுக்கினால் அது உருவில் குறைவு பட்டுவிடும்.  ஏற்கெனவே இருந்த நிலை முழுமையானால் செதுக்கியபின் உள்ள நிலை சேதமாகின்றது.  நகை முதலியவற்றில் செய்யும்போது எடையில் குறைவுபடுதலைச் சேதாரம் என்பர்.   செது+ ஆரம் = சேதாரம் ஆகின்றது. புல்முதலியவற்றை மேலாக வெட்டுதலைச் செத்துவது என்பர். இந்தச் சொல்லை அகரவரிசைச் செந்நாப்புலவன்மார் விடுபாடு இழைத்து  தவறிவிட்டனர் என்று தெரிகிறது. அது அவர்கள் சேகரிப்பில் இல்லை. புல்வெட்டும் மூத்த தமிழரிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம். உங்களிடம் உள்ள அகராதியில் தேடிப்பாருங்கள். அகர முதலாகச் செல்லுக்குப் பொருள்கூறுவது  அகர + ஆ(தல்) + தி (விகுதி). > அகராதி.

செது > செத்து > செத்துதல்.

சா ( சாதல் ) என்ற வினைச்சொல் வினை எச்சமாகும்போது சத்து என்றுதான் வரவேண்டும்.   சத்து > செத்து என்று வருதல் திரிபு.  செ என்பது இதன் வினைப்பகுதி அன்று. ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகள் சத்து என்று அதனை எச்சமாக்குதல் காண்க.

செத்துதல் என்பதில் தகரம் இரட்டித்து வினை அமைந்தது.

எனவே செது என்பது ஒரு பகுதி வெட்டுப்படல்  அல்லது பகுதி அழிதலைக்
குறிக்கும் அடிச்சொல்.

தட்டச்சுச் சரிபார்ப்பு - பின்னர்.


திங்கள், 8 ஜூன், 2020

சுழல் -- சொல்லின் தோன்றுதல் எடுத்துக்காட்டுகள்

சுழல் என்னும் தமிழ்ச் சொல்லின் தோற்றத்தினை (தொடக்கத்தினை) அறிந்துகொள்வோமாயின் இதுவரை நேயர்கள் சிலருக்குப்  பிடிபடாதிருந்த
நெறிமுறைகள் சில விளக்கத்தை அடைந்துவிடும்.

ஒரு வினைச்சொல் பெயர்ச்சொல் ஆகும்போது திரிபுகளை அடைதல் நீங்கள் அறிந்ததே. விகுதி சேர்ந்தும் சேராமலும் வரும். சில சமயங்களில் முன்னொட்டுப் பெறுதலும் கூடும். பெரும்பாலன விகுதியுடன் வந்து தோன்றும்.  சொல் மிகுந்து நிற்க உதவுவதே விகுதி. விகுதி என்பதும் மிகுதி என்ற சொல்லின் திரிபு ஆதலின் , சொல் நீண்டுவிடும் நிலையே அது என்பதும் அறிக. இச்சொல், மிஞ்சு > விஞ்சு என்பது போன்ற திரிபு.

வீதி என்ற சொல்லும் அகலம் என்ற சொற்பொருளும் உடையது.  மிகு> விகு> வீ> வீதி என்பது காண்க. இங்கு தி என்பது இச்சொல்லின் விகுதி அல்லது இறுதிநிலை. தொகு> தோ> தோப்பு போலுமே.  விளக்கம் எளிதாம்பொருட்டு இங்கு தரப்பட்ட விளக்கம் சற்றே வேறுபட்டிருக்கலாம் ஆயினும் முன் (பழைய இடுகைகளில் ) கூறியவற்றுக்கும் இதற்கும் ஆழ்ந்து நோக்கின் வேறுபாடின்மை அறியலாகும். ஓர் ஒற்றடிப் பாதையினும் வீதி அகலமானது. ஓர் ஒழுங்கையினும் அது அகலமானதே. இவ்வாறு நினைத்துத்தான் செல்லும் அகன்ற பாதை என்னும் பொருளில் வீதி என்ற சொல்லும் வழங்கலாயிற்று.
இவ்வாறு நோக்க, விகுதி என்ற சொல்லும் வீதி என்ற சொல்லும் உறவின எனப் புலப்படும்.

பெயர்களில்  தொழிற்பெயர்களை அல்லது வினையினின்று பிறந்த  பெயர்களை  விகுதி அல்லது இறுதிநிலை பெற்றனவென்றும் பெறாதனவென்றும் பிரிக்கலாம். படி(தல்) என்னும் வினையிற் பிறந்த பாடி என்னும் சொல் முதனிலை அல்லது சொல்லின் முதலெழுத்து,  நீண்டு ( ஆகவே திரிந்து )  அமைந்த சொல்லாகும். ஏறத்தாழ வீடுகள் ஒரே மாதிரியாக அமைந்து (படி அமைந்து )  தொழிலும் வாழ்க்கை முறையும் அவ்வாறே படியமைந்து,  மக்கள் வாழும் ஊர் பாடி ஆகும்.  எடுத்துக்காட்டு:  ஆயர் பாடி.

ஆனால் இவ்வாறு தொழிலின் அல்லது ஒரு வினைச்சொல்லினடியாய்த் தோன்றி இடத்தின் பெயராய் முற்றி நின்றமையின் அதனைத் தொழிற்பெயர் என்னாது இடப்பெயர் என்று விளக்குவோரும் உண்டு. ஆனால் இவ்வாறு இதனை இடப்பெயர் என்று வகைப்படுத்திவிடில் அது படி என்னும் வினையினின்றே உருவெடுத்தது மறைவு படும்.  இவ்வாறு மறைவுண்டது காணார் அது தமிழோ அன்றோ என்று அலமருவர்.  ஆதலின் இலக்கணம் எழுதியோர் எவ்வாறு அதை வகைப்படுத்தினர் என்பது நமக்குத் தேவையற்றது ஆகும். மறைந்ததை வெளிப்படுத்தி அதனைத் தொழிற்பெயர் என்பதே சொல்லமைப்பியலுக்கு உதவுவதாகும். தொழிற்பெயர் என்ற பெயரும்கூட என்னவென்று கூறியபின்னரே புரியும் பெயராய் இருத்தலின் அதனை வினைத்தோன்றுபெயர் என்று புதியபாணியில் சுட்டுதல் இன்னும் நல்லது ஆகும்.  ஆனால் அஃது வினையாலணையும் பெயர் என்ற இன்னொரு பகுப்புடன் மயங்குமாதலின், இம்மயக்கு விலக்க, தொழிற்பெயர் என்பதையே ஏற்றுக்கொள்வதுதவிர வழியில்லை என்பதறிக.

அடுக்குகளாய் அல்லது மடித்து மடித்துக் கட்டப்பெற்ற கட்டடமும் மாடி என்ப்படுகிறது.  மடி > மாடி. முதனிலை திரிந்த தொழிற்பெயர். இங்கு வந்த திரிபு முதலெழுத்து நீட்சி. இதுபின்  அம் விகுதி பெற்று மாடம் என்றாகும்.மாடம் என்பதில் மாடி அல்லது மடி என்பதன் ஈற்று இகரம் வீழ்ந்து அம் விகுதி பெற்றது. மடி என்பதன் மகரம் நீண்டது காண்க. இந்த இகரம் வீழாதாயின்  மாடம் என்று வராமல் மடியம் என்று வந்துவிடும்.  இப்படி ஒரு சொல் அமையவில்லை என்று தோன்றுகிறது.  புதிய மடிப்புள்ள பொருள் எதற்கும் இன்னும் தமிழில் பெயரில்லையாயின் இந்த அமையாச் சொல்லை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள வசதி இன்னும் உள்ளது.  பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி முதனிலை நீட்சி பெறாது குறுகி அமைந்த சொற்களையே இன்று காணத் தொடங்கினோம்.  விளக்கத்தின்பொருட்டு நீட்சிபெற்றனவாகிய சில சொற்களைப் பற்றி உரையாடினோம்.

சாவு > சவம்  அல்லது சா> சவம் என்பது சில இடுகைகளில் உதாரணமாகக் காட்டப்பெற்றுள்ளது.  தோண்டு > தொண்டை என்ற முதனிலைக் குறுக்கமும் காட்டியுள்ளோம். இவைபோலுமே சுழல் என்ற சொல்லும் இவ்வாறு ஆயிற்று:-

சூழ் என்பது வினையடி. ( சூழ்தல் ).
சூழ் >  சூழ்+ அல் >  சுழல்.    இது குறுகி அமைந்தது.  நீர்ச்சுழல், காற்றுச்சுழல் முதலியன குறிக்கும்.
சூழ் + அல் = சூழல்.  இது சுற்றுச்சார்பு என்று பொருள்தருவது.  விகுதி புணர்த்தி இயல்பாய் அமைந்தது.

சூழ் > சுழி என்பதும் குறுக்கமே.  இகரம் விகுதி.

இவ்வாறு வினையைக் காட்டாமல்,  சுள்> சுழி,  சுள்> சுழல் என்று காட்டுதலும் ஆசிரியர் சிலரால் கொள்ளப்படும் முறையாகும். அஃது இன்னொரு வகை விளக்கம். எளிதின் உணரப் பயன்படும் வழி மேற்கொள்ளத் தக்கது ஆகும்.

வேறொரு சூழலில் சந்திப்போம். 


தட்டச்சுச் சரிபார்ப்பு - (மெய்ப்பு) - பின்னர்.