திங்கள், 18 மே, 2020

பண் - பலபொருளுள் நிந்தை

பண் என்ற சொல் தமிழறிந்தோரிடையில் அறியப்பட்ட இனிய சொல்லே ஆகும். இதற்குப் பல பொருள். என்றாலும் பெரும்பாலும் பண் என்றால் பாட்டு என்ற பொருளில் அது மக்களிடை  வழக்குப் பெற்றுள்ளது. இஃதன்றி பண்பாடு, பண்பட்ட, பண்படுத்துதல் என்பன போலும் சொல்லாட்சிகளிலும் அது உணரப்படுகிறது.


பண் என்பதற்குப் பல பொருள் இருத்தலால்,  பயன்படுத்துதற்குக் கடினமான சொல்லானாலும்,  அதன் பல்வேறு பொருள்களில் ஒன்றிரண்டு மட்டுமே நினைவில் அல்லது பொருண்மையறிவில் வைத்துக்கொண்டுள்ளபடியினால் , நடைமுறையில் இச்சொல்லால் நமக்குத் தொல்லையொன்றுமில்லை என்பதே உண்மை. மறதியும் சிலவேளைகளில் நம் கடினத்தை நீக்கிவிடுதல் கூடும்.

பண் என்பது நிந்தனை என்ற பொருளுடையதாகவும் உள்ளது. இப்பொருளின் இதைப் பயன்படுத்திய  இந்நாளைய  ஆசிரியர் யாரும் நம் நினைவில் இல்லை.

இப்பொருள் எவ்வாறு ஏற்பட்டது எனக் காண்போம்:

பள் >  பள்ளம், தாழ்வு.
பள் > படுகை, தாழ்வு.
பள் > பண்> பணிதல் ( தாழ்நிலை மேற்கொள்ளுதல் அல்லது அடைதல்)


நிந்தனை செய்யப்படும் ஒருவன்,, பிறர் காட்சியில் தாழ்நிலையில் எண்ணப்படுகிறான். பணிதலுறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
பள் > பண் ஆவதனால், பண் எனற்பாலது நிந்தனை என்றும் பொருல் படும்.

பள் ( அடிச்சொல் ) > பண் > பணிதல், பணிவு.

ள் என்ற ளகர ஒற்று உடைய சொற்கள் ணகர ஒற்றாக மாறுவது சொல்லியல் விதிப்படியாகும்.

சந்தி என்னும் சொல்புணார்ச்சியிலும் மற்றும் ஏனை இடைச்சொற்களின் சேர்க்கையாலும்  ள் என்பது ண் ஆகிவிடும்.  எ-டு:

மாள் > மாண்டார்.


ஆள் எனற்பால பெண்பால் விகுதியும் ஆண் என்ற வடிவத்தையடைந்து  பின் ஆண்பால் விகுதியுமாகும்.

 ஆள் > ஆண்
ஆண் >  ஆன்.  ( எ-டு: வந்தான் ).

புணர்ச்சியில்:  ஆள் - ஆண்ட, ஆண்டு. ( எச்ச வினைகள்)
இங்கு வினைப்பகுதுயுடன் சேர்ந்தவை இடைச்சொற்கள்.

ஆள் என்ற சொல்லே  ஆட்சியுடைமை அல்லது ஆளுகையைக் காட்டும். அதனின்று திரிபுற்ற ஆண் என்ற சொல்லில் இப்பொருள் சிறக்கவில்லை.


ஆண்மை என்ற சொல்:

இது இருவகையிலும் பெறப்படும்.  எ-டு:

ஆள் + மை =  ஆண்மை.
ஆண் + மை = ஆண்மை.

சொல்லாண்மை, நகராண்மை என்று வரும் சொற்களை  ஆள்+மை = ஆண்மை என்றும்   ,  ஆண்தன்மை என்று குறிக்கும்போது  ஆண்+மை என்றும்  பிரித்தலே சரி.

சொல்லமைப்பில்:  ஆள் - ஆண்டவன்.

பிளவுக் கருத்து:  பாள் > பாண்டம்.

                                    பாள் > பாளம் என்பதும் பிளவுக் கருத்தே.

இதுகாறுங் கூறிய சிலவற்றால்,  பண் என்பது ஏன் நிந்தை என்ற பொருளிலும் நிகண்டு மற்றும் அகரவரிசைகளிலும் காணப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.


தட்டச்சுப் பிழைகள் பின் கவனிப்பு.

5.30 மாலை 19.5.2020 -  சில தட்டச்சுப் பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டன.

வெள்ளி, 15 மே, 2020

நுண்ணுயிர் கொரனாவிடம் மனிதன் தோற்பானோ?

முன்னூ  றாயிரத் தின்மேல் அழிந்தனர்
இந்நாள் இதுவே உலகப் பெரும்போர்
எந்நாள் இருள்முகில் நீங்குமோ அறியோம்
நன்னாள் புவிமேல் நண்ணுதல் அரிதே.

அறிந்ததும் இலையே முன்னிது வகிலம்
தெரிந்து விலகிடப் பட்டறி விலதே
பரிந்து பேசிடும் தாயொடு தந்தையர்
இழந்து தவிப்பவர் எல்லை மிகுந்தனர்

தமிழறிந்  திலங்கிய தகைசால் பெரியோர்
இமிழ்கடற் கப்பால் இருந்தனர் பலபேர்
குமிழ்பல முளைத்த மகுட  முகிப்புழு
உமிழ்நஞ்   சூடுரு வியதோ அறியோம்.

வழக்கம் போல வந்திலர்  அன்னவர்
இளக்கம் அடைந்தது என்மனம் இவணே
துலக்கம் பெற்றிவ் வுலகினைப் பேண
கலக்கம் விலக்கும் கரைகண் காணுமோ?

கண்ணுறக் காணா நுண்ணுயிர் தன்னொடு
மண்ணர  சன்மனி தன் தொடுத் திடுபோர்
விண்ணவர் நகைக்க வியன்புவி திகைக்க
மன்னவன் மனிதன் தன்னிலை தாழ்வனோ?


பதப்பொருள்:

முந்நூறாயிரம் -  3 இலட்சம்
இருள்முகில் - கார்முகில், கருமேகம்.
(முன்னர் காரிருள் என்பதில் மாற்றம்)
நண்ணுதல் - வருதல். நெருங்குதல்
அறிந்ததும் இலையே முன்னிது வகிலம் -அகிலம்
முன் இது அறிந்தது இல்லை.
பட்டறிவு - அனுபவம்
எல்லை மிகுந்தனர் - தாங்கும் எல்லையைக்
கடந்துவிட்டனர்
இலங்கிய - விளங்கிய
தகைசால் - நற்பண்பு நிறைந்த.
இமிழ்கடல் - அலையோசைக் கடல்
மகிடமுகி - கொரனாவைரஸ் (நோய்நுண்மி)
இளக்கம் - வலிமை இழந்த நிலை, நெகிழ்வு
புழு - இங்கு நோய்நுண்மி.
துலக்கம் - தெளிவு. ஒளி
மண்ணரசன் -  பூமியை ஆளும் மனித வருக்கம்.
(ஓருமை பன்மைக்கு நின்று பொருள் உணர்த்தல்)
விண்ணவர் - உயர்ந்தோர்.  விண் - உயர்வு.
வியன் - விரிந்த
மன்னவன் மனிதன் -  நிலைபேறு உடையவனான
இம் மனிதன்.
தன் நிலைபேற்றினை இழந்து வீழ்வானோ?
(போர் தொடுப்பவன் மனிதன், அவனே வீழ்வானோ?
நோய்நுண்மி வீழாதோ? என்பது ).

மண்ணரசன் தொடுத்த போரில் தன் ஆட்சி இழந்து
வீழ்வானோ என்று முடிக்க.

மன் என்பது நிலைபேறு குறிக்கும்.  அரசன் என்ற
சொல்லின் இக்கருத்து இல்லை. அதனால் மன்னன்
என்ற சொல் பெய்து முடிக்கப்பட்டது.





வியாழன், 14 மே, 2020

தொல்காப்பியர் இன்னொரு பெயர் திரணமாதக்நி?

தொல்காப்பியருக்கு திரணமாதுக்கினி  என்ற ஒரு பெயரும் சொல்லப்படும்.

இவர் தம் நூலை அரங்கேற்றிய போது  பேராசானாக விளங்கிய
அதங்கோடு ஆசான்  தொல்காப்பியரை அரசவையில் தமக்குச் சமமானவராகவும்  தக்கவராகவும் ஏற்றுக்கொண்டார். அப்படி இல்லாவிட்டால் இருவரும் எப்படி ஒன்றாக அவையில் அமர்ந்து  ஒருவர் இலக்கணத்தைச் சொல்ல இன்னொருவர் கேட்பது? அரசன் தந்த வேலை ஆதலால் இருவரும் ஒத்துப்போனால்தான் காரியம் நடைபெறும்.  ஒருவர் இக்காலத்தில்போல் இணையதளத்தில் சொல்லி இன்னொருவர் வீட்டிலமர்ந்து படித்துக்கொள்வதானால் இந்த ஏற்பாடு தேவையில்லை அன்றோ?  இருவருக்கும் அரசன் தரும் சம்பளமும் தேவை. அவை பெரும்பாலும் பொன்னும் மணியுமாய் இருந்திருக்கும்.

இது நடைபெற்றது இடைச்சங்கத்தின் இறுதி என்பதே சரியான கொள்கை.


ஆசான், தொல்காப்பியரை திறனில் மாதக்க நீர் என்று போற்றிக்கொண்டாடினார்  என்று அவையில் உள்ளவர்கள் நினைத்தனர். அதுவே உண்மையும் ஆகும்.

இதிலிருந்து திறனில் மா + தக்க + நீ  என்ற பெயர் அமைந்து, பின் அயல் நாவுகளும் அறிந்து போற்றியதால் திரணமாதக்கநி என்று பேதமுற்றுச் சுருக்கம்பெற்றுப் பெயராயிற்று.

திரணமாதக்கனி என்பதும் காரணப்பெயர்தான்.

சீனி என்பது சில தமிழின மொழிகளில் ஜீனி என்று வருதல் காண்க

பழம் + நீ  = பழநி என்பதும் நீ  என்பதில் முடிந்தது  காண்க, பின் குறுகிற்று.


 அந்தக் காலத்துப் பெரும்புலவர்கள் தங்கள் இயற்பெயர்களால் அறியப்படவில்லை என்பர் ஆய்வாளர் சிலர். எடுத்துக்காட்டு:


வள்ளுவர் >  வள்ளுவக்குடி
தொல்காப்பியர் >  காப்பியக்குடி
பாணினி > பாணர் குடி  (பாண்+ இன் + இ)
வால்மிகி > வால்மிகக் குடி.  வான்மிகி என்ற வடிவமும் வழங்கும்.

இப்பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளிலும் வழங்கியிருக்கக்கூடும்.
அதாவது : பாணினி என்பது பாண் குடியினர் என்றும் பாட்டில் வல்லவர் என்றும் இருபொருளில் அந்தக்காலத்தில் வழங்கியிருக்கலாம். இதை அறிய வழியில்லை,

பாணினி என்ற பெயரின் அமைப்பைப் போலவே பாடினி என்ற சொல்லும் அமைதல் காண்க. எடுத்துக்காட்டு:  காக்கை-பாடினியார். பாணர்கள் தமிழ் நாட்டில் இருந்தவர்கள். பாட்டு எழுதிப்  பாடிப்  பிழைப்போர்.

பாண் இன்  இ
பாடு  இன் இ


அவர்களில் ஒருவரே சங்கதத்துக்கு  Sanskrit  இலக்கணம் வரைந்தார் .Sanskrit was then known by a different name. Does not matter here.

காப்பியக் குடியினர் பலர் புலவர்களாய் இருந்தனர். எடுத்துக்காட்டு: பல்காப்பியனார் ,  இவர்களுள் தொன்மையானவர் தொல்காப்பியனார்,

பழம் பண்டிதர்களை அறிக  மகிழ்க 

தட்டச்சுப் பிறழ்வு - பார்வை பின்.

( தமிழ் எழுத்துருவாக்கி வேலை செய்யவில்லை )


மகுடமுகி  ( கொரநாவால்  ) இவை குறைவான தொகையினரால் இயக்கப் படுகின்றன  போலும் .

உங்களைப்  பாதுகாத்துக் கொள்ளுங்கள்.