ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

அகிலம் இன்னொரு விளக்கம்.

அகிலம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உரைக்கலாம். ஒரு சொல் முடிபு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தோன்றியிருக்கலாம் அல்லது தோன்றியதாக அறிஞர்கள் விளக்குவதற்கான உள்வசதிகளைக் கொண்டிருக்கலாம்,

அ+கு+ இல் + அம்.


அ  என்பது அவ்விடம் என்னும் சுட்டு.

கு  என்பது சேர்விடம்.

மனிதன் அகிலத்திலன்றி வேறிடம் இல்லாதவன்,

இல்  -  இல்லம், இருப்பிடம்


அம்  -  அமைவு குறிக்கும் விகுதி.

எனவே இருப்பிடமாகு இவ்வுலகம்.


இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்:

http://sivamaalaa.blogspot.com/2015/02/blog-post_11.html.


அங்கிருப்பது உலகம்தான்.   அகு இல் அம்
இங்கிருப்பதும் உலகம்தான்.  இ (உல) கம் > இகம்.
உலகம்  அங்கும் இங்கும் ஐக்கியமானது.   அ+ இ+ கு + இயம்.  அயிக்கியம் > ஐக்கியம்.

இச்சொற்கள் எளிய அமைப்புகள் தாம்,

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

சாதுரியம்.

சாதுரியம் என்ற சொல் அறிவோம்.

முதலில் அறிய வேண்டியது சதசத சொத்சொத என்ற  ஒரு வகை " இரட்டைக் கிளவிகள்". கிளவி என்றால் சொல்.  கிளத்தல் - சொல்லுதல்.

சத சத என்பதும் சொதசொத என்பதும் கெட்டியில்லாத பொருளைக் குறிக்கிறது.

இந்த இடத்தில் மண் சொத சொத என்றிருக்கிறது என்பர்.  திண்மையற்ற நிலை.

சத சத என்பதும் அதுதான்.

கெட்டியில்லாத எந்தக் கலவையும் தரையில் எறிந்தால்  சத் அல்லது சொத் என்ற ஒலியுடன் விழும்.  தெறிக்கும்.  மண்ணும் நீரும் கலந்திருப்பதும் கலவைதான்.


இவ் வொலிக்குறிப்புகளிலிருந்து தோன்றிய சில சொற்கள்:

சதி  -    மென்மையானவள்;  பெண்.

சதியுடன் பதிந்து வாழ்பவன் பதி.   இதிலிருந்து சதிபதி.

சதி<> சது.

சது > சதுப்பு.   (சதுப்பு நிலம்)  மெதுமண் நிலம்.

சது >  சதை.   எலும்புபோலன்றி மென்மையானதாகிய தசை.

சொத >  சொதி :   மென்மையான தேங்காய்ப்பால் கலந்த உண்ணும் குழம்பு.

சது  >  சாது.  மென்மையான ஆள்.   ஆண்டி.

சது >  சத்து:  உள்ளடங்கிய மென்மையான  உறைவு.


மென்மாந்தனாகிய ஒரு சாதுவுக்கு உரிய தன்மையைத்தான் சாதுரியம் என்பர்.

சாது + உரி + அம் =  சாதுரியம்.

மென்முறையில் ஒன்றைச் சாதித்துக்கொள்பவன் சாதுரியமுடையவன்.வேறு விளக்கங்களும் இச்சொல்லுக்கு உள. அவற்றைப் பின்னொரு முறை காண்போமே.


குறிப்பு:

சாதுரியம் என்பதில்  (  சாது + உரி(ய) + அம் )=  என்னும் சொல்லமைப்பில் வலி மிகாது  அதாவது வல்லெழுத்துத் தோன்றாது,  இதற்கு  உதாரணம்:  முடிகுடி என்ற சொல்.  முடிமன்னர்குடி என்பது இதன்பொருள்.  குறுமன்னர் குலம் என்பது  குறுமுடிகுடி என்று வலிமிகுதலின்றியே வரும்.  அன்றியும் சொல்லமைப்புக்கு வாக்கிய இலக்கணம் உரியதன்று.



தட்டச்சுத் திருத்தம் பின்.




நோய்கள் பரவினாலும் தமிழ்ப்பற்று.

நோயணுக்கள் விஞ்சி  நுழைவரும் எவ்விடத்தும்
பாயடைவு கூட்டும்‌  மகுடமுகி ---- தூயரையும்

விட்டுவைத்தல் இல்லையே வேறிருந்து   காக்கதனை
குட்டறிந்  திந்நாள்  குலவாமல்  ----- மட்டுறுத்திப்


பட்டறிவா   ளர்வாழ்வார்  பாட்டும்  தமிழுமே
எட்டுவதால் மேன்மையே என்றென்றும்   -------ஒட்டியிங்கு

வந்தே மகிழ்கின்றார்  வாழ்க தமிழன்பர்
தந்தேம் இடுகைகள்  இங்கு.


பொருள்

நுழைவரும் எவ்விடத்தும் --  புகுவதற்கு இயலாத
எந்த இடத்திலும்.  (நுழைவு அரும்)

பாயடைவு -  பாய்ந்து சென்று அடைந்துகொள்ளுதல்.

மகுடமுகி  -  கொரனாவைரஸ்.  (கோவிட் 19)


காக்கதனை -  தன்னைக் காத்துக்கொள்க.


குட்டறிந்து  -   மறைதிறவுகளை அறிந்து

குலவாமல் -  நெருங்கிப் பழகாமல்.

பட்டறிவாளர்  -   அனுபவசாலிகள்

எட்டுவதால் -  (வருவோரைச் ) சென்று சேர்வதால்;

தந்தேம்  -  தந்தோம்

நோய்ப்பரவலால் பல இன்னல்களை அடைந்தாலும்
பாட்டுக்காகவும் தமிழுக்காகவும் அன்பர்கள் வந்தே மகிழ்கின்றனர்
என்பது கருத்து.  வாழ்க தமிழ்