சனி, 7 மார்ச், 2020

துலாக்கோலும் தராசும்

அளந்து தருவதற்கான கருவிக்கு எப்படிப் பெயரிடுவது?

ஒரு பாத்திரத்தில் அரிசியை எடுத்தால் அது எந்த அளவினது என்று மதிப்பிடலாம்.  அதற்கு ஒரு பட்டறிவு வேண்டும். எனினும் அஃது ஒரு மதிப்பீடு மட்டுமே. அவ்வரிசியை ஓர் ஒப்பிடு கோலில் ஏற்றி அளந்து அறிந்தாலே அரிசியின் எடை தெரிகிறது. சோறு சமைக்கும்போது ஓர் அளவு குவளை வைத்துக்கொண்டு  " ஒரு குவளை, இரண்டு குவளை" என்று சமைப்பவர் அளந்து இடுவார். ஆனால் அது அளவுகருவியன்று. கோலின் ஒரு புறத்தில் ஓர் எடைக்கட்டியும் மற்றொரு புறத்தில் அரிசியையும் வைத்து நடுவிற் பிடித்துத் தூக்கி  அறியும் கோல் துலைக்கோல் அல்லது துலாக்கோல் எனப்பட்டது.  துலாக்கோல் உண்மையில் எடையைத் துலக்கும் ஒரு கோலே ஆகும்.

துலக்குகோல் > துலைக்கோல்.
துலக்குக்கோல் > துலாக்கோல்.

துலக்குதல் என்ற சொல்லில்  குகரம் ஒரு சொல்லாக்க விகுதி.  துல் + கு = துலக்கு.   மூழ் > மூழ்கு என்பதிற் கு என்பது வினையாக்க விகுதியானதுபோல் துலக்கு என்பதில் கு என்பதும் விகுதியே. இப்படி அமைந்த இன்னொரு சொல்: விளக்கு(தல்)  ஆகும்.   விள்> விள்ளுதல் ( வெளிப்படுத்தல்).   விள் > விள் + கு = விளக்கு.  விளக்கு என்பதில் விள் - பகுதி. அ - இடைநிலை.   க் என்றுவந்தது சந்தி அல்லது புணர்ச்சி.   கு என்றது விகுதி. துலக்கு என்பதும் அன்னதே.

துலக்குதல் : பல் துலக்குதல் என்பதிலும் அதே சொல் வருகிறது.

எளிதில் அறிய இயலாத ஒன்றை ஒப்பீடு மூலம் அறியலாம்.

சமன்செய்து சீர் தூக்கும் கோல் என்றும் விளக்குவதுண்டு.

அரிசி போலும் அளக்கப்படும் பொருளைப் பிறனுக்கு விற்பதற்கு அல்லது பண்டமாற்றாய்த் தருவதற்கு (  " தரு " )     ஆகும் கோல்  ( "ஆசு" )   தராசு எனப்பட்டது. 

தருதலுக்கு   ஆகும் ஒப்பிடுகருவி.
தரு +  ஆ + சு (விகுதி).
தரு என்பது வினைச்சொல்.  ஆ என்பதும் வினைச்சொல்.  சு என்பது விகுதி.
தராசு.
ஆசு - பற்றுக்கோடு.  ( பற்றிக்கொள்ளுதல்).  தருதற்கு பற்றுக்கோடு ஆகும் கருவி எனலுமாம்.

தர+ ஆசு =  தராசு எனினுமது.


சு விகுதிச் சொற்கள்:   பரிசு.   விழைச்சு.
சு விகுதி இடையிலும் வந்து வேறு விகுதி ஏறும்.   அலை > அலை+ சு + அல் = அலைச்சல்.  இதேபோல் விளைச்சல். குடைச்சல்.  நமைச்சல்.

நீர்ப்பாசனம் என்ற   கூட்டுச்சொல்லில்  பாய் + சு + அன் + அம் >  பா(ய்)சனம் > பாசனம்.  நீர் பாய்ச்சுதல். யகர ஒற்று மறைவு.

யகர ஒற்று மறைந்த இன்னொரு சொல்:  வாய் + தி >  வாய்த்தி > வாத்தி(யார்).  வாய்ப்பாடம் சொல்பவர்.

பாய் > பாய்ம்பு > பாம்பு.  யகர ஒற்று மறைந்தது.   (முனைவர் மு வரதராசனார்.)

இவற்றை அறிக. மகிழ்க.



வெள்ளி, 6 மார்ச், 2020

தொம் > தொந்தி

தொங்கு என்ற சொல்லில் தொம் என்பதே அடிச்சொல்.

தொம் + கு =  தொங்கு.

தொங்கு(தல்) வினைச்சொல்.   தல் என்னும் விகுதி பெற்றால் விகுதி ஒழிய முன்னிற்பது வினை. வினை என்பது செய்கை. தொங்குதல் என்பது வினைக்குப் பெயராகிறது, இதனைத் தொழிற்பெயர் என்று இலக்கணியர் சொல்வர்.

தொம்பல்

இது தொம் > தொம்(பு + அல்) = தொம்பல்   ஆனது.  பு  மற்றும் அல் என்பன விகுதிகள்.  இரு விகுதிகள் பெற்ற சொல் இதுவாகும்.  கலப்பையில் தொங்கிக்கொண்டிருக்கும் ( ஒட்டியிருக்கும்) மண் அல்லது சேறு.

(சேர்ந்துகொண்டிருப்பது சேர் > சேறு.   ( இது வீர் > வீறு போன்றமைந்த சொல்). வைரஸ் என்ற சொல்லின் அடியும் இதுவாகும். விரைவு என்பது ஓர் உள்ளாற்றலால் முடுகி அல்லது விரைந்து சென்றடைதலைக் குறிக்கும்.

இதைப்பின் தனியாக விளக்குவோம்.  இங்கு    விர் > வீறு என்பதை மட்டும் ஒப்பிட்டுக் கொள்க.) 

தொம் > தொம்பு > தொப்பு

தொப்பு தொப்பு என்று நனைந்துவிட்டோம் என்பது காண்க

தொப்பு - துணி நனைந்து தொங்கும்படியாக


தொப்பு > தொப்பை
தொப்பு > தொப்பி.  ஒரு நடுப்பகுதி வெளிவந்த தலையணி.
தொப்பு > தொப்பூழ்.

தொம் என்பதற்கு தொ என்பது அடிச்சொல்.  ஆகவே மூலம்.

தொ >  தொடு,   ப > படு  போல. இதைத் தனியாக விளக்கவேண்டும். தொடும்போது உங்கள் கை இருக்குமிடத்திலிருந்து நீட்டப்பெற்று எதையும் தொடுகிறது.  நீள்வது வெளிவருவதே போன்றது. இருக்குமிடம் விட்டு வெளிவருவது.

தொடு > தொடை.

உடலைவிட்டு நீண்டு கீழாக  வெளிவந்தது.


தொம் > தொம்தரவு. > தொந்தரவு.  ( விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதுபோல ஒன்றைச் செய்து வருத்துவது ),


தொந்தி   ( தொம் தி )   -  வெளித்தள்ளித் தொங்குவயிறு.


விளக்கும்பொருட்டு ஒன்றை ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களால் சொல்லநேரும்.  வெளித்தள்ளுதல் தொங்குதல் எல்லாம் அதே.

தொம்பைக்கூத்து, தொம்பைநாற்று  இவை கூட்டுச்சொற்கள்.


அறிக மகிழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின்.

செவ்வாய், 3 மார்ச், 2020

கபிலர் என்னும் புலவர்பெயர்.

எப்பொருளாயினும் அதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதற்கு ஒரு திடமான மனம் வேண்டும்.   ஒளிவு மறைவு என்பதற்கு மற்றொரு சொல் "கட்பு"  என்பதாகும்.

கட்பு என்ற சொல் எப்படி அமைந்தது என்பதை முதலில் பார்க்கலாம்,

கள்ளம் என்ற சொல் எதையும் ஒளிப்பதையும் பொய்மையையும் குறிக்கும்.  கள்ளர் என்பது திருடர் என்றும் பொருள்படுவது.  இச்சொல் கருப்புநிறத்தவர் என்றும் பொருள்தரும்.  கள்ளி என்பது திருடி அல்லது மறைத்தவள் என்றும் குறிப்பதுடன் கள்ளிச்செடி, கள்ளிப்பலகை முதலியவையையும் குறிக்கும். இவற்றின் அடிச்சொல் கள் என்பதுதான்.  கள் ஒரு குடிதேறலையும் குறிக்கும்.

கள் என்பது அடிச்சொல் என்றோம்.  இச்சொல்லுடன் ஒரு "பு" விகுதியைச் சேர்த்தால்  கள்+பு =  கட்பு என்ற சொல் உருவாகின்றது.

ஒளிவு மறைவோ அல்லது தீய  பண்புகளோ இல்லாதவர்,  அல்லது எதையும் வெளிப்படையாக அணுகி ஆய்பவர்  என்று பொருள்தரும் ஒரு பெயரை அமைப்பதற்கு:

கட்பு + இலர்  =  கட்பிலர் என்ற சொல் அமையும்.

இச்சொல் மெய் நீக்கப்பட்டால்  அல்லது நாளடைவில் இடைக்குறைந்தால்

கபிலர் என்றாகிவிடும்.

கபிலர் என்ற சொல்லுக்குத் தமிழிலும் சங்கதத்திலும் வேறு பொருள்பல கூறலாம் எனினும் அவற்றை இன்னோர் இடுகையில் காணலாம்.

இடைக்குறைச்சொற்கள் பல ஆய்ந்து முன் கூறியுள்ளோம். பழைய இடுகைகள் காண்க.   நகுலன் என்ற பெயரும் நற்குலன் என்ற சொல்லின் இடைக்குறையாகி நற்பொருளே தரும். வல்லவர் என்ற சொல்லும் வலவர் என்று வருமே. பல்லோர் என்பதும் அர் விகுதி ஏற்குங்கால் பலர் என வருதல் கண்கூடன்றோ? இவையனைத்தும் நீங்கள் ஒப்பிட்டு அறிதற்கானவை.

இதைக் கபி -  குரங்கு  என்று பொருள்படும் சொல்லினடித் தோன்றியதாகக் கொண்டு பொருளுரைப்பாருமுண்டு.   அதையும் பின் காண்போம்,

கபிலர் என்ற பெயருள்ள புலவர்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளனர்.    சங்கப்புலவர் கபிலர் என்பவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய "குறிஞ்சிப்பாட்டு" பாடியுள்ளமையால் இப்பெயர் முதன்மை பெறுவதாகிறது.

தட்டச்சுப் பிழைகள் திருத்தம் பின்