வியாழன், 23 ஜனவரி, 2020

எதிர்க்கட்சிகள் பற்றி.

பழைய கவிதை கண்டெடுத்தது இன்னொன்று.
முன் இட்டது இங்கு உள்ளது:   https://sivamaalaa.blogspot.com/2020/01/blog-post_22.html



தூணாவர் மக்களாட்சிக் கெதிர்க்கட்சி என்று
தோன்றியதோர் தூயகருத் தொலித்திடுவர் நாட்டில்;

மாணாத செயல்களிலே மனம்கெட்டு மாட்டி
மக்கள்தரும் ஆதரவை மாயுறுத்தும் காலை

ஓணான்போல் பார்த்தபடி உட்கார்ந்தி ருக்க
ஒல்லுவதோ அரசினர்க்கு கொள்ளாமை கண்டு

நாணாமல் அவர்களையே நன்மன்றில் நிறுத்தல்
நல்லரசு எந்தநாளும் செல்லுவழி அன்றோ.


==============================================================

மாணாத  -  சிறப்பில்லாத, பொருந்தாத.
மாயுறுத்தும் -  அழிக்கும்; குழப்படி செய்யும்.

ஓணான் - பல்லிபோன்ற ஓர் சிற்றுயிரி ( சிறுபிராணி)
ஓல்லுவதோ - முடியக் கூடியதோ

கொள்ளமை = நன்மையாய் இல்லாமை.; கொள்ளத்தக்கதாய் இல்லாமை.
நன்மன்றில் -  தீர்ப்புத் தரும் மன்றத்தில்.அல்லது மக்களின்முன்.
செல்லு(ம்)வழி -  செல்லுவழி

அல்லவோ?.  அன்றோ என்றும் வழங்கும்  .  பழைய  வெளியீட்டில் இது  "ஆமே"  என்று முடிந்தது.  ஆமே =  ஆகுமே.  குகரம் தொக்கது.

ஓர் தூயகருத்து என்று கவிதையில் வரலாம். உரைநடையில் ஒரு தூயகருத்து  என்றே வரும்.- இதற்கான உரிமத்தை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார் வழங்கியுள்ளார்.

இது 2015ல் எழுதியது.  இன்னொரு நாட்டின் நடப்பு பற்றியது.
இது இங்கு உள்ளதா என்று தேடிப்பார்க்கவில்லை.

படித்து மகிழ்வீர்.

புதன், 22 ஜனவரி, 2020

கண்டெடுத்தது (கவிதை)

 சேர்த்துவைத்த பழவரைவுகளை அப்புறப் படுத்திக் கொண்டிருக்கும்போது முன்னர் எழுதிவைத்திருந்த இரண்டு   கவிதைகள் கிட்டின. அவற்றுள் ஒன்று
உங்களை இப்போது வந்தடைகிறது.

கண்டெடுத்த அக்கவி இதுவே

ஆம் ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில் ஆதவன் என்றிட
ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற தூழலில் சிக்கி.



ஒரு நாட்டின் கட்சிக்கு ஏற்பட்ட நிலைக்கு
இரங்கி எழுந்தது இக்கவி.

ஆக்கிய  ஆண்டு :  2015..  அடுத்து இன்னொன்று இன்னோர் இடுகையில்
படிதது மகிழுங்கள்.






ஞாயிறு, 19 ஜனவரி, 2020

அவத்தையும் அவஸ்தையும்.

அவத்தை என்ற உருக்கொண்டு பின்னர் அவஸ்தை என்று உருமாற்றம் அடைந்த சொல் பிறந்த விதம் அறிவோம்.

பச்சை நெல்லை சுடுநீரிலோ நீராவியிலோ வைத்து வேவித்தால் அது அவியல் ஆகிவிடுகிறது.  இப்படிச் செய்யாமல் அதே நெல் புழுக்கமான இடத்தில் காற்றோட்டமின்றி வைக்கப்பட்டுவிட்டால் அதுவும் ஒருவகையில் அவிந்து பயனற்றுப் போகிறது. குளிர்ப்பெட்டியில் நெடுநாள் இருந்த காய் முதலியவையும் அவிந்து  சுருங்கிப் பயனற்றுப் போகிறது.  இப்படித் தாமாக அவிந்துவிட்டவை  அவம் அடைகின்றன. இவை உணவுக்கு ஏற்றவை அல்ல.

எனவே அவம் என்ற சொல்லுக்குக் கேடு (கெடுதல்) என்ற பொருள் உண்டாயிற்று. அவம் என்ற சொல் பேச்சு வழக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. சில நூல்களில் உள்ளன.

இது ஆன விதம் இவ்வாறு:

அவி > அவிதல் :  வினைச்சொல்.

இங்கு தல் என்பது தொழிற்பெயர் விகுதி.  அவி என்பதே வினை.

அவி என்பது அம் விகுதி பெற்றால்  அவி + அம் = அவம் ஆகிறது. அவி என்பதன் ஈற்றில் நின்ற இகரம் கெட்டு   (அவ்)+ அம்= அவம்  என்று நின்று  வ் + அ ஆனவை புணர்ந்தபின் அவம் என்ற இறுதிவடிவம் பெறுகிறது.  அவ் என்பது ஒரு சொல்லன்று. அது ஒரு புணர்நிலை இடைவடிவம் ஆகும்.  பொருள் உடையதே சொல். புணர்நிலையில் ஏற்படும் இடைவடிவம் பொருள் காட்டுதல் இல்லை ஆதலின் அதனை ஒரு சொல் என்று நாம் குறிப்பதில்லை. சில சொற்கள் இவ்வாறு இடைவடிவம் அடைவதில்லை. எடுத்துக்காட்டாக அறு என்ற சொல்லினின்று ஆறு என்ற சொல் ( நதி ) உருவாகுகையில் எந்த இடைவடிவமும் இல்லாமல் முதனிலை நீண்டு திரிபுற்று  "ஆறு" ஆகிவிடுகிறது.  மாறாக,   குவியல் என்ற சொல் உருவாக்கத்தில் குவி என்பது மாற்றம் ஒன்றும் அடையாமல் ஒரு யகர உடம்படு மெய் ஒட்டப்பெற்று அஃது அடுத்து வரும் அல் என்ற விகுதியில் முதனிலையுடன் புணர்ந்து  அவியல் என்ற சொன்னிலையைப் பெற்றுவிடுகிறது.

அறு + அம் என்பவை பகுதியும் விகுதியும் புணர, உகரம் கெட்டு, அற் என்று இடைவடிவம் கொண்டு,  அம் வர  ற் + அ = ற ஆகி,  அறம் என்றாகும். இறுதி நிலை உயிர் கெடுகிறது. வருநிலை அகரம் றகர ஒற்றினைப் பற்றி முழு றகரம் ஆகிவிடுகிறது.

இவ்வாறே  அவம் என்ற முழுச்சொல் அந்நிலையை அவி என்ற வினையினின்று எய்தியவாறு கண்டுகொள்க.

அவத்தை என்ற சொல்லும்,  அவி என்ற வினையினின்று அமைந்த விதம் அறிக.

அவி + அத்து + ஐ. >  அவ்( இ ) + அத்து + ஐ >  அவ் + அத்து + ஐ >  அ (வ்+அ)த்து+ ஐ > அவத்தை  ஆயிற்று.  வினைச்சொல்லீற்று இகரம் கெட்டது.  வகர ஒற்று வருநிலை அகரத்துடன் இணைந்தது.

கொதிநீர்  ஆவி உடலிற்படும்படியான எரிவு ஒத்த துன்பமே அவத்தை ஆகும். அத்து என்பது ஓர் சொல்லாக்க இடைநிலை. இதனை அவம் + தை = அவத்தை என்றும் தை விகுதி என்றும் காட்டினும் அதுவேயாகும்.

வேகும் ஆவியிற் பட்டதுபோலும் துன்பம். இது ஒப்பீட்டில் உண்டான சொல்.

அவஸ்தை என்ற வடிவம், உயர் > உயர்ச்சி >   உசத்தி > ஒஸ்தி ஆனதுபோலும் அவத்தை அவஸ்தை ஆனது.  ஸ் என்றது மெருகு  அல்லது கவின்பொடிப் பூச்சு ஆகும்.

வடவெழுத்து ஒருவினால் உண்மைச் சொல் வெளிப்படும் என்றார் தொல்காப்பிய முனிவர்."  பல்புகழ் நிறுத்தப் படிமையோன் "  அன்னவர்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுத் திருத்தம் பின்.