செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரத்து > ரத்து இன்னும் சில விளக்கம்.

ரத்து அல்லது இரத்து என்பதை அறிவோம்.

இறுதல் என்றால் முடிதல்.  இதிலிருந்து தோன்றிய எச்ச வினைகள்  :  இற்று :  இது வினை எச்சம்.  இற்றுப் போயிற்று என்பர்.  பெரும்பாலும் இரும்புப் பொருள் பற்றிப் பேசுகையில் இச்சொல் பயன்படும். (  சட்டியில் தூர் இற்றுப் போய்விட்டது என்பது காண்க.)   இற்ற என்பது பெயரெச்சம்.  மூவசைகளால் இற்ற இறுதியடி என்பது காண்க.  பெயரெச்சம் பெயரைத் தழுவி நிற்பது. வினையெச்சம் வினையைத் தழுவி நிற்பது.

இறு என்ற வினைச்சொல் தி  விகுதி பெற்று இறுதி என்ற சொல்லைப் பிறப்பிக்கிறது.   சவ  ஊர்வலம் இறுதி ஊர்வலம் எனப்படும்.   மாநிலங்கள் அவையில் இறுதிக் கூட்டம் என்பது காண்க.

ரத்து என்பது து என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயர்.  வினைச்சொல்லினின்று உண்டாகும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.  தொழில் என்றது இங்கு வினைச்சொல்லை.

இறு+ து >  (  இறு+ த் + து )  >   இரத்து  > ரத்து.

இச்சொல் திரிபு அடைந்துள்ளது.  விகுதி வந்து புணர, ஒரு தகர ஒற்று (த்) தோன்றியது.  பகுதியின் ஈற்றில் நின்ற றுகரம் றகரமாக மாறிப் பின் ரகரமாகத் திரிந்துள்ளது.  இரவு என்பது ராவு என்று தலையிழந்து முதல் நீண்டு பேச்சு வழக்கில் வருவது போல, இரத்து என்பது தலையிழந்து நல்ல வேளையாக முதலெழுத்து நீளாமல் ரத்து என்று நின்றுவிட்டது.

இதைப் பாருங்கள்:

இரக்கமுள்ள ஆய்  (  அதாவது அம்மன் ) :  இரக்க ஆய் >  இரக்க ஆயி > ராக்காயி.  தலையிழந்து முதல் நீண்டுவிட்டது.  இரக்கமுள்ள அம்மா > இரக்க அம்மா > ராக்கம்மா.

இரவில் வந்து கடிக்கும் ஒரு சிறுவகைக் கொசு இராக்கடிச்சி > இராக்கச்சி > இராக்காச்சி.  நடுவில் வந்த டி என்னும் வல்லெழுத்து மறைவு. கச்சி காச்சி ஆனாலும் கா(ய்)ச்சுவதற்கு ஒன்றுமில்லை.  ராக்காச்சி என்பது தலையிழந்த சொல்.

கேடு > கே > கேது  (   இராசிநாதன் பெயர் அல்லது கிரகத்தின் பெயர்).
பீடுமன்(னன்)  > பீமன் > வீமன்.

கேடுது >  கேது
பீடுமன் > பீமன் என்றும் காட்டலாம்.

வல்லெழுத்து மறைவு கண்டீர்.

இரக்கம் என்பது ரட்சம் என்று மாறும்.  பக்கி என்பது பட்சி என்று மாறும்.

ரட்ச ரட்ச ஜெகன்மாதா......

அருட்பெரும் உலக அம்மை.

இரக்கம் > ரக்கம் > ரட்சம் > ரட்சித்தல்.

ரட்சகர் ஏசு என்ப.

எனவே

இறத்து > இரத்து > ரத்து.

இறு என்பது இர என்று மாறுதல்போல்  வரு + து > வரத்து (போக்குவரத்து )  என்றும் திரிதல் காண்க.

சின்னாளில் மறுபார்வை


எழுந்திரு > எழுந்திரி மற்றும் இரு இரி திரிபுகள்

எழு என்பது அழகான செந்தமிழ்ச் சொல். இதிலிருந்து எழும்பு என்ற வினைச்சொல் பிறந்தது.  ஒரு வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல் தோன்றியுள்ளது இதிலிருந்து அறியலாம்.  பு என்ற விகுதியும் வினைச்சொல்லாக்கத்திற்கு உதவுவதை இது தெளிவிக்கிறது .  எழும்பு என்பது சில தமிழ்க்குடிகளிடை "ஒழும்பு"  என்று வழங்குகிறது.  எகர ஒகரத் திரிபு முன்  அறியப்பட்டதே எனினும்  எழும்பு என்பதே பெரிதும் தமிழ்ப் பேச்சினரிடையே பெருவரவினதாகும்.

இந்தப் பாடல் வரியைப் பாருங்கள்:

"அலைகடல் சேரும் வான்போல எழும்பும்
நாமே பார்மேல் ஈடிலா காதலர்"

என்பது காண்ணதாசன் சொல்லழகு. (  எதுகை மோனை அழகை விடுத்துக் கருத்தழகு ஒன்றையே கொண்டு இவ்வரி செல்கிறது.  எழும்பு என்ற சொல் இங்கு கவின் சேர்க்கிறது.  மண்டி என்ற சொல்லைப் பாரதி பயன்படுத்திய பாங்கு போன்றது இது. " ( .......வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.....)."

படுக்கையிலிருந்து எழுவதையும் எழும்பு என்பர்.  பு விகுதி இன்றி எழு என்று மட்டுமே இதைக் குறிக்கலாம்.  எ-டு:  எழு - விழி - நட"  என்ற தொடர் காண்க. ( "விழி - எழு - நட"  என்பதுமது.

எழு என்பதிலிருந்து எழுந்திரு என்ற கூட்டுச்சொல் அமைந்து,  அது பின் எழுந்திரி என்று மாறிவிட்டதுடன், மேலும் எந்திரி என்றும் திரிந்தது.  இங்கு திரிபுகள்:  இரு என்ற ஈற்றுச்சொல் இரி என்று மாறியது.  அஃதேயன்றி  ழுகரம் மறைந்து இடைக்குறையுமானது. எழுத்துத் தமிழை நோக்கப் பேச்சில் வரும் திரிபுகள் மிகுதியே ஆகும்.

ழுகரம் மறைந்து மேலும் திரிபுகளால் தாக்குண்ட இன்னொரு சொல்லை இங்குக் காண்பதும் விளக்கத்திற்கு உதவும்.

ஒரு வாதத்தில் ஒருவன் சரிவு அடையுமாறு இழுத்தல் சர்ச்சை ஆகும். இது சரி ( சரிவு ),  இழு ( இழுத்தல் ), விகுதி ( சை ) முதலியன வந்த சொல்லாக்கம்.

சரி + இழு + சை >  சரி + இ + சை > ச(ர் இ) ( இ )  சை > சர்ச்சை.

ரிகரத்தின் ஈற்றில் நின்ற இகரம் வீழ,  சரி என்பது சர் ஆனது.
வருத்தகம் என்பதில் ருகரத்தின் உகரம் வீழ்ந்து வர்--  ஆனது போலுமிது.
(வருத்தகம் >  வர்த்தகம்).  வருத்துதல் > பொருள் வரச் செய்தல். வரு> வருத்து என்பது வரத்து என்று திரிந்து வருந்து - வருத்து என்ற பிறவினையுடன் வேறுபடும்.   எ-டு:  நீர்வரத்து,  போக்குவரத்து.  வரு என்பதே பகுதி.

இழுச்சை என்பதிலும் ழு முன்பே ஒழியப் பின் இகரமும் மறைந்தது.

மனம் இடுதலைக் குறிக்கும் இடுச்சை என்பது இச்சை ஆனது காண்க.  ழு, டு என்பன மறைதல் இயல்பு.

வழுக்கணை என்பது  வக்கணை ஆனதும் காண்க. (  அணைப்பதும் அணைத்து வழுக்கிச் செல்லும் பேச்சு)

வக்கணைப் பேச்சுக் காரி  பெரிய வாய்வீச்சுக் காரி என்பதுண்டு.


இரு என்பது இரி எனச்  சேரலர் பேச்சில் வரும்.

இன்னும் திரி என்று முடியும் பதங்கள் பல உண்டு எனினும் இத்துடன் முடிப்போம். நீங்கள் ஓய்வு பெற்றபின் தொடரலாம்.

தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

,






வெள்ளி, 20 டிசம்பர், 2019

பல்வேறு சொற்புனைவுகள். இவற்றுள் "இரு(2)" எப்படி வந்தது?

இருக்கிறான் இருந்தாள் முதலிய முற்றுக்களில் முன்நிற்கும் இரு என்னும் வினை இன்று இடம் குறிக்கும் உருபாகவும்  இல்லம் குறிக்கும் சொல்லாகவும் உள்ள "இல்" என்பதினின்று வந்தது என்பதே முடிபு  ஆகும்.

இல் >  இரு.  (வினைச்சொல் : இருத்தல்).

இடமென்ற சொல்லும் இடு என்பது மிகுந்தானதே  ஆகும்.   இடு + அம் = இடம் என்பதறிக.  இஃது அம் என்னும் விகுதியேயன்றி ஐ என்னும் விகுதியும்  (<மிகுதியும்) பெறும். இடு + ஐ = இடை. அப்போது  இரு இடங்கட்கு இடைப்பட்டது -  நடுவிலது -  என்றொரு சிறப்புப் பொருளையும் உணர்த்தவல்லது. தமிழின் ஏனை  இனமொழிகளில் (திராவிட மொழிகளில் ) இஃது இடம் என்றே பொதுப்பொருள் கொண்டிலங்கு மென்பதும்  அறிக.

இடைபடுதல் ("மூக்கை நுழைத்தல்" என்பது அணியியல் வழக்கு) என்ற வினைச்சொல்லும் உளது.  இடைப்படுதல் என்பது இடையே  வந்திருத்தல் என்பதுபோல் பேச்சில் வருதல் அறியலாம்.

இடு > இரு என்பவற்றின் அணுக்கமும் உணர்க. மடி > மரி என்பது  போலவே இத்திரிபுமாம்.

ஒன்றினோடு இன்னொன்று (வந்து) இருக்குமாயின் அது ஒன்றிற்கு அடுத்த
"  இரு "  அல்லது இரண்டு ஆகும்.  இருத்தல் என்ற வினையடியாகவே இரண்டிற்கும் எண்ணுப்பெயர் வந்துள்ளது காணலாம். ஒன்றை அண்டி இருப்பதே இரு+ அண்டு =  இரண்டு ஆகும்.  அண்டி இரு ( ஒன்றை அண்டி இரு) என்பது முறைமாற்றிச் சொல் அமைந்துள்ளது.  இவ்வாறு  சொல் அமைத்தல் பிற்காலத்தில் பல சொற்களில் பின்பற்றப்பட்டுள்ள முறையாகும்.  தொல்காப்பியனார் காலத்திலே " தாரம் தப்புதல்"  ( மனைவியை இழத்தல் ) என்பது " தப்பு + தாரம் "  > தபுதாரம் என்று குறிக்கப்பட்டது.  ( தப்பு > தபு  என்பது தொகுத்தல் அல்லது இடைக்குறை).   அவிழ்க்கும் இரு கைகளை உடைய பெண்டிரின் சட்டை,  இரு+ அவிழ் + கை >  இரவிக்கை ( ழகர ஒற்று இடைக்குறை)  ஆனது காண்க.  நிறுவாகத்தைக் காக்கும் இல்லமானது  :  கா + இல் >  இல்+ (ஆ) + கா = இலாகா ஆனது திறமையே. பலராலும் உணர்ந்திட முடியாத மறைவுப்புனைவு ஆகுமிது.  { இல்லம் ஆகும் காப்பதற்கு > இல்  ஆ கா}

ஆசு பட இருக்குமிடம்  :   இரு+ ஆசு + இ = இராசி.   இதுவும் முறைமாற்றுப் புனைவே. கிரகம் -  கிருகம் என்பது  இரு+ அகம் >  இரகம் > கிரகம் அன்றி வேறில்லை.  இரகம் என்பது சிரகம் என்று மாறிப் பின் சி என்பது  "கி" ஆகி,     கிரகமானது என்று விளக்கினும் அதுவே.  இராசிநாதன் இருக்கும் இடமே இரு அகம் > கிரு அகம் > கிரகம்.  (  இறகு > சிறகு ).(சேரல் > கேரளம்)

ஆசி என்பது நன்மை நடக்குமாறு  பற்றுக்கோட்டினை வழங்குவதே.  ஆசீர்  என்பது சீராகுக என்பதன் முறைமாற்றுப் புனைவு.  இதன் ரகர ஒற்று மறைந்து ஆசி ஆனது.  ஒரு  முண்டு ( துண்டு, துண்டுத்துணி)  தலையினை ஆசுபடப் பற்றி நிற்க,  அது முண்டாசு ஆகும்.  ஆசீர்வாதம் என்பதில் வாதம் என்பது வாதநோயைக்  குறிக்காது.  வருக தமக்கு ஆகும் சீர் என்பது வாக்கியம். இது  ஆ + சீர் + வா + தம் ஆனது.  வா = வருக; தம் = தமக்கு;  ஆ  =  ஆகும் ;  சீர் = நன்மை.

ஆகும் சீர் :  ஆசீர்,  இது ஆகு + ஊழ் =  ஆகூழ் என்ற பழம்புனைவு போன்றது.  ஆகுபெயர் என்பது இலக்கணக் குறியீடு.

வட்டமாகவோ நான்மூலையாகவோ மாவால் உருச் செய்து அதை சுடுகல்லில் ஒட்டி எடுப்பது:  உரு+ ஒட்டி =  உரொட்டி >  ரொட்டி. இது வேறுவழியிலும் விளக்குறலாம் ஆகையால் இருபிறப்பி ஆகும்.  வகர உடம்படு மெய் சொல்புனைவில் வேண்டியதில்லை.  சொல்லுருவில் துய்யது உரு+து மொழி,  அரபு கலந்தமையின். து விகுதி எனினும் ஒக்கும். படைவீடுகளில் பேசப்பட்டது என்பது கதை.  தெற்குக் கணத்தில் வழங்கிய மொழி தெற்காணம் = தெக்காணம், > தக்காணம் > தக்காணி.

பல்வேறு சொல்லாக்க முறைகளை அறிந்தோம்.

எழுத்துப் பிசகுகள் பின் திருத்தம்பெறும்