செவ்வாய், 17 டிசம்பர், 2019

இலத்தீனில் தமிழ்ச்சொற்கள்

வாழ், வாழ்வு  என்ற சொல்லுடன் விவோஸ்  (வைவோஸ்)  என்ற இலத்தீன் மொழிச்சொல்லுக்கு உள்ள தொடர்பு முன்பு   ஈங்கு விளக்கப்பட்டது உண்டு.

இலத்தீனில் பல தமிழ்ச் சொற்கள் உள. எவ்வாறு தமிழ் இலத்தீனில் புகுந்தது என்பதை ஆய்வாளர்கள் கூறக்கேட்டுணர்க.

அதுபற்றியும் முன் யாம் எழுதியதுண்டு.

இப்போது இன்னொரு  சொல்லை அறிந்துகொள்வோம்.

விழி என்ற சொல்லும் விஸுஸ்  என்று இலத்தீனில் வரும்.

பாழை என்பது பாடை என்றும் திரிதற்கொப்ப விஸுஸ் என்பது விடரே என்றும் திரியும்.  இதிலிருந்துதான் விடியோ என்ற சொல் ( காணொளியைக் குறிப்பது)  வந்துள்ளது.  ஆதலால் தமிழ் "விழி"  (காண் - காணுதல்)  என்பதே வீடியோ என்ற புதுமைப்பொருளுக்குப் பெயரிட வழி செய்துள்ளது என்பதை அறிதலும் மகிழ்வுறுத்துவதே ஆகும்.

வாய் என்ற தமிழ்ச்சொல் வழி என்றும் பொருள்தரும். இது "வயா" என்று இலத்தீனில் புகுந்து பொருள்மாறாது அந்த வழியையே குறிக்கும்.

வேளாண்மை விளைச்சலில் தொடர்புடையோரே காராளர்.  காக்கும்கை காராளர் கை என்று ஒரு பழைய வெண்பா முடியும்.  இந்தக் கரு   (கார்)  என்ற பகுதி கிரிஷி என்ற சொல்லினுள் உள்ளது.  திடல் என்றோ வயல் என்றோ பொருளறியப்படும்  எகர் என்பதிலிருந்து "ஆக்ரிகல்சர்" என்ற சொல் பிறந்ததாய்க் கொள்ளப்படினும்  ஆக்ரி (agri) என்பதில் ஆ என்பதை விலக்க, மீதமுள்ள கிரி  (-gri)  என்பது கிரிஷி என்ற சொல்லில் இருப்பது காணலாம். தமிழிலும் ஆ-  என்பது  ஆகாயம் என்பதில் முன்னொட்டாய் ( prefix )உள்ளது. மூலச்சொல்  காயம் என்பதே.  சூரியன் நிலவு முதலிய காயும் இடம்.   ஆ என்ற முன்னொட்டு  ஆதல் குறிப்பது.  ஆ என்பது வினைத்தொகையிலும் வரும். எடுத்துக்காட்டு:  ஆபயன்.  ( பயனுடையது ஆவது).  (  ஆ என்பதை  மாடு என்று பொருள்கொண்டு,  ஆபயன் எனில் பால், தயிர் வெண்ணெய் என்று  கொண்டாரும் உளர்.

ஆகிரி(agri) என்பதில் ஆ முன்னொட்டு என,  கிரி என்பது வேளாண்மைப் பொருளதாகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


எழுத்துப்பிழைகள் பின் திருத்தம்பெறும்.

புதன், 11 டிசம்பர், 2019

முன் கவிதை நினைவுகள்

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் வாழ்ந்து மறைந்த இனுக்கா (என்னும் பெயரிய )  கரடி நினைப்பு வந்துவிட்டது.  பாவம் இந்தத் துருவக் கரடி. இது வெள்ளை நிறப் பனிப்புலக் கரடியாகும். யாமெழுதிய அகவற் பா முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.   அந்தப் பா சென்று முடிந்தது இவ்வாறுதான்:

என்றினிக் காண்போம் இனுக்காக் கரடியே
மென் துணை புரந்தாய் நீயே
நன்றினி நினைத்துப் புலம்புவ தன்றியே

அந்த விலங்கியல் தோட்டத்தில் நட்பார்ந்த மென்மைசேர் துணையாய் அஃது இருந்ததை " மென் துணை புரந்தாய் நீயே " என்ற வரி நினைவுபடுத்தியது.

பனிவளர் மலைப்பகுதி பற்றியும் ஒரு கவிதை எழுதியிருந்தேன். அது:

"கட்டிப் பனிமலைகள்
காணும் இடமெங்கிலும்
ஒட்டிச் செலவியலா
ஒப்பில்  குளிர்வதைப்பே" 

அங்கு ஒரு நரி கிடந்தது:

பனியிற் சுருண்டபடி
படுத்திருக்கும் நரிதான்
தனிமைத் துயர் அறியா
தலைமை விலங்கினமோ

என்று வருணித்திருந்தேன்.

தனித் துயரும் தனிமைத் துயரும் தீர்க்கும் மருந்து தமிழ்க் கவிதைதான்.
கவலையைத் தீர்ப்பதும் கனித்தமிழ் கவியே.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

குரைப்பவர் குரைக்கட்டும் புதைப்பவர் புதைக்கட்டும்

உகத்தினின்று சுகத்தினைப் பெற்றோம்
ஓர்ந்துணர்ந்  துரைத்திட்டேம் யாம்! ---- கண்டார்
அகத்தினில் ஆத்திரம்  புறத்தினில் குதித்தனர்
அழித்தனர் எம்மிடுகையை.

அழிப்பதன் முன்பலர் ஆயிரம் வாசித்தார்
அதனை அறிந்துவிட்டார்.---- அது
குழிப்புதையல் அன்று கோல வெளிப்பாடு
குரைக்கட்டும் கவலை இல்லை.