திங்கள், 9 டிசம்பர், 2019

சாமி என்பதற்கு இன்னொரு பொருள்.

சாமி என்ற சொல்லை முன் சிலமுறை விளக்கியதுண்டு.  அதிலொன்றை இங்குக் காணலாம்.

https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html


இதுவேயன்றி  இன்னொரு பொருளும் அறியக்கிடக்கின்றது.


சாய்தல் /.  சாய்த்தல் :  இது பேச்சு வழக்கில் இன்னுமுள்ள சொல்.  இது சாயாது என்றால் நடைபெறாது என்பது பொருள்.  " எப்படி முயன்றாலும் சாய்க்க முடியாது என்றால்  "  முடிக்க இயலாது என்பதுதான்.   ஜம்பம் சாயாது என்பதுமுண்டு.

சாய் > சாய்த்தியம் > சாத்தியம் என்பது இயல்வது குறிக்கும்.

வாய்ப்பாடம் சொல்பவர் என்னும் பொருளிய வாய்த்தியார் என்பது வாத்தியார் என்று வந்தமை காண்க.  உப அத்தியாயி என்ற உபாத்தியாயி (  இலக்கணம் சொல்லிக்கொடுப்பவர் ) என்னும் சொல் வேறு. பலருக்கு இதிற் குழப்பம்.

இனி சாமி என்பதன் இன்னொரு பொருள்.

சாய் > சாய்மி  > சாமி :   வேண்டுதல்களைச் சாத்தியமாக்கும் தேவன் என்ற பொருளும்  காணலாம்.

சாய்  >  சாம் > சாமி எனினும் அது. பழநூல்களில் இது சாம் என்று காணப்படுகிறது.

சாய் > சா(யு)ம் இ > சாமி என்று பழங்குடியினரிடை வழங்கின எளிதான சொல் இது.  சாயுங்காலம் > சாய்ங்காலம் என்று யகர ஒற்று மறையாமலும் வரும்.

சில ஒலிகள் மறைதலுக்கும் வேறுசில வெளிப்பட்டு வருதலுக்கும் மனிதனின் நாவுதான் காரணம். ஒரு மொழி பேசுவாரிடை இவ்வாறு நிகழ்ந்தால் அம்மொழிக்குரியது என்ற முத்திரை ஏற்படுகிறது.  மொழி காரணமன்று. இந்த மொழி என்பது நாம் வைத்த பெயர்தான்.

இங்கு சில சொற்கள் தரப்பட்டுள்ளன.  வாசித்து மகிழ்க.

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பகிரங்கம் என்னும் சொல்

இங்கிருப்பதை அங்கு போய்ச் சொல்வது,  என்றால் உமக்குத் தெரிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறீர் என்றுதான் அர்த்தம். இக்கருத்தினின்று
பகிரங்கம் என்ற சொல் புனைவுற்றது.

பகிர்தல்,
அங்கு
அம் விகுதி அமைப்பும் குறித்தது.

பகிரங்கம்   -   பகிர் + அங்கு + அம்.

மிக்க எளிமையாய் அமைந்த சொல்.

அறிந்து மகிழ்க.

சொல்லியல் நெறிமுறைகள்: கழுதைச் சொல்

கழுதை என்ற சொல் ஓர் ஒலிக்குறிப்புச் சொல் ஆகும்.

கழுதை காழ் காழ் என்றுதான் கத்துவதாகச் சொல்வர்.  ஆனால் கழுதைஎன்றசொல்லில் கழு என்பது பகுதியாகவும் தை என்பது விகுதியாகவும் உள்ளன. ஆகவே அது "கழு கழு" என்று கத்துவதாகச் சொல்லலாம் என்றால் பொருத்தமாகத் தோன்றவில்லை.

கத்துமொலி  காழ் என்பதுதான். சொல்லமைப்பில் காழ் என்பது குறுக்கப்பட்டு, கழு என்று அமைத்துள்ளனர். அதுவே சரியென்றும் சொல்லவேண்டும்.

இனி, கழு+ தை என்று பகுதியையும் விகுதியையும் புணர்க்கும் போது, கழுத்தை என்று வலிமிக்கு வராமல் கழுதை என்று மெலிந்தே (அதாவது தகர ஒற்று இரட்டிக்காமல்)   சொல்லில் வருகிறது.  இதே வலிமிகாமையை விழுது, பழுது,  முதலிய வேறு சொற்களின் அமைப்பிலும் காணமுடிகின்றது.

சொல்லமைப்பில் புணரியல் ( சந்தி) இலக்கண விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நிலைமொழியும் வருமொழியும் புணர்வது வேறு.  அடிச்சொல்லும் விகுதியும் இணைவது வேறு.  விகுதி  வருமொழி அன்று.

மேலும் ஒரே பகுதி விகுதி, இருவேறு விதமாக இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைப் பிறப்பிக்கலாம். எடுத்துக்காட்டு:

அறு + அம் = அறம்.
அறு + அம் =  அற்றம்.

குறு + அம் =  குறம்.  ( குறி சொல்லுதல்)
குறு + அம் = குற்றம் (  குற்றச்செயல்.)  (  சிறுமைசேர் செயல்).

குறு = குன்று.  சிறிய மலை.
குறு = சிறு(  மை )

அறிவீர் மகிழ்வீர்

தட்டச்சுப் பிழைகள் -   திருத்தம் பின்.