சனி, 7 டிசம்பர், 2019

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ (ஆடகம்)

ஆட்சி செய்தல் என்பதைக் கருதுகையில் இது மனிதனை மட்டுமின்றி ஏனைப் பொருள்களையும் ஆளும் பொருளாகவும் ஆளப்படும் பொருளாகவும் உட்படுத்தும்.  நக்கத்திரங்களும் மனிதனை ஆட்சிபுரிவதாகச் சோதிட நூல்கள் கூறும்.  நக்கத்திரம் சொரிகின்ற அல்லது சோர்கின்ற கதிர்கள் நம்மை வந்தடைந்து நம் நடவடிக்கைகளை  ஆதிக்கம் புரிவதனால், சோதிடக் கலைக்கு அப்பெயர் வந்தெய்தியது.

சோர் + து + இடு + அம் =  சோர்திடம் > சோதிடம் ஆயிற்று. அல்லது
சோர்+ திடம் > சோதிடம் எனினுமது.

சோரும் அல்லது சொரியும் கதிரலைகள் நம்மேல் இடப்படுவன, நம்மை ஆள்வன.

மேகநீர் இடைந்து தளர்ந்து உருகி மழையாகச் சோர்ந்து சொரிகிறது...!!!

குளிர்க்கட்டி சோர்ந்து நீரைச் சொரிகிறது.

சொரி <> சோர்.

சேர் > சோர் > சார்.

இவை நிற்க.

இப்போது ஆடகம் என்ற யாம் கருதிய சொற்கு வருவோம்.  இதை ஆள்+தகம் என்று பிரிக்கலாம்.   தகமென்பது தகு+ அம் = தகம். மற்றும் தக+ அம் = தகம்.

தக, தகத்தக என்பது ஒளிவீச்சுக் குறிப்பு.  பொன்னும் தங்கமும் ஒளிவீசுவன.

தகத்தக என ஒளிவீசி நம்மை ஆட்சிசெய்வது,  எனவே:  ஆள் + தக+ அம்.

இது "ஆடகம்"  என்றாகும்.

ஆடகமாவது பொன்.  இது பொன்னில் ஒரு வகை என்ப.

ஆடகம் என்பது ஆடுமிடம் என்றும் பொருள்தரும்.  இது ஆடு+ அகம்  எனப் பிரிப்புறும்.  கூத்தாட்டு அவைக்குழாம் எனினுமது.

ஆக இருபொருளது இச்சொல்.

சிலப்பதிகாரத்திலும் சைவத்திருமுறையிலும் ஆடகப் பொன் பற்றிய குறிப்புகள் உள.

"ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றுமின்றும் என்றுமே என் ஆவியடி நீ"

(கண்ணதாசன் வரிகள் .)

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் திருத்தம்  - பின்.




அரங்கசாமி > ரங்கசாமி

ஆற்றிடைக்குறை நிலத்துண்டில் சீராக அமர்ந்திருப்பவர் அரங்கனார் என்னும்
மாவிண் மன்னவராகிய  ( ஐந்திலொன்றாகிய) முன்னவர்.  அவர் அமர்ந்திருப்பதே அரங்கம்.

அரங்கு  >  அரங்கன் > ரங்கன்.

ரங்கன் > ரங்கசாமி.

சீர் அரங்கம் > சீரரங்கம் > சீரங்கம்.  இரு  ரகரங்களில் ஒன்று வீழ்ந்தது.  திரிபுச்சொல்.


தமிழறிஞர் கி ஆ பெ விசுவநாதமும் இது ( அரங்கு அரங்கசாமி என்பது)  கூறியுள்ளார்.

விண் விசும்பு எனவும்   படும்.
ஐந்து   என்பது :  நிலம் தீ நீர் வளி விசும்பு.  ஆக ஐந்து. ( தொல்.)

விண்ணு > விஷ்ணு.
விசு (தமிழ் )  > விஷ்.
சீரங்கம் > ஸ்ரீ ரங்கம்.  மெருகூட்டுச் சொல்.


விசுவம்  என்பது விசும்பையும் (விண்ணையும்) உள்ளடக்கிய உலக விரிவு.
விசும்பு விசுவம் என்பன ஓரடியின.   விஸ்வம் என்பது மெருகூட்டு.


குறிப்பு: -  இவ்விடுகை பழம்பதிவின் சாரம்.          
இக்கருத்து 2014-5 வாக்கில் இடுகைசெய்யப்பட்டது.

ரோமம்

ரோமம் என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பண்டைத் தமிழர் மயிர் என்று சொல்லப்படும் முடிக்கு உற்றறியும் திறம் இருப்பதாக நம்பினர்.

அதனால் ரோமம் ( றோமம் ) என்ற சொல்லை உண்டாக்கினர். உற்றறியும் உணர்வுக்கு உரிய " உறு"  என்பதையும் அதைக் காப்பது என்னும் பொருளில் "ஓம்"  (ஓம்புதல் ) என்பதையும் இணைத்து அம் விகுதி கொடுத்தனர்.

உறு + ஓம் + அம் -=  உறோமம் என்ற சொல் அமைவுற்றது.

ஆற்றிடையில் அமைந்த நிலத்துண்டும் அரங்கு என்ற பெயரைப் பெற்றதும் ஆங்கு அமர்ந்த தேவன் அரங்கனாகிப் பின் அகரம் தொலைந்து ரங்கன் ஆனதும் போல்  பல சொற்கள் தலையெழுத்திழந்து உலவின.

 சொற்றிரிபு காத்தலும் அரிதே.

உறோமம் என்பதும் தவறாக றோமம் ஆகி, முன் வடிவு உணராமையின் ரோமம் என்று தவறாகத் திருத்தப்பெற்றது.

இவ்வலைப்பூவில் காணக்கிட்டாதெனினும் இது யாம் முன் கூறியிருந்ததே ஆகும்.

உரோமம் என்ற திரிசொல்லும் அழகுடன் அமைவுற்றதே என்றறிக.

ரோம் என்பது பகுதியாகக் கொண்டு அமைப்பை அறிய முற்படின் அஃது இருளிற் பொருளைத் தேடியதுபோலவே இறும்.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப்  பிழைகள் தோன்றின் பின் திருத்தம் பெறும்
வே