வெள்ளி, 22 நவம்பர், 2019

கடற்பரப்புக் குறிக்கும் சொற்களும் பிறவும்.

பரவை என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடல் என்று பொருள். கடல் மிகப் பரந்தது (பரப்பு உடையது ) என்று     நம் முன்னோர்கள் 6எண்ணியதால் இச்சொல் மொழியில் எழுந்தது.  இதேபோல் கடவுளும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பரவி நிற்பதாக உணரப்படுபவர் என்னும் கருத்தினால்  அவர்க்குப்  '"பரம்பொருள்"   என்ற பெயர் ஏற்பட்டது. இதன் முதலாகிய பரம் என்பதும்  "பரன்" என்று மாறி அக்கடவுளுக்கு ஆண்பாற் பெயரானது.  இன்னும் பரம் என்பதே  அன் விகுதி பெற்று  பரம்+ அன் = பரமன் என்று அக்கடவுளையே குறித்தது.

மனிதர் உள்ளிட்ட மரம் செடி கொடி விலங்குகள் என எவற்றின்பாலும் அன்பும் அருளும் உடையவனாகிப் பரந்த நோக்குடன் வாழ்ந்தவன் :  பர >  பார் > பாரி எனப்பட்டான். ( முல்லைக்குத்   தேர்   கொடுத்தோன்   )

கடலைக் குறிக்கும் பரவை என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லே மீனவரைக் குறிக்கும் சொல்லாம்  "பரதவர்:" என்ற சொல்லும்.  மீன்விலைப் பரதவர் என்பதும் காண்க.  இது பர + து + அ + அர் என்ற உள்ளீடுகளை உடைய சொல்லாகும்.  இதில் வல்லொற்று வரல்வேண்டும் என்று வாதிட்டாலும், அது  பயனின்மை கருதிப் பின் குறைவுறும். அஃதன்றியும் பரத்தவர் எனின் பரத்துக்கு உரியோர்  என்று பொருள்பட்டு   பொருள்  மயக்கம் விளைக்குமென்றும் அறிக.  பரதவர் என்பதே ஏற்புடை வடிவம்.   [பரத்துக்கு  =  கடவுட்கு]

முப்புறமும் கடல் சூழ்ந்த ---   கடல் நாகரிக ----  நாடு என்பதே பாரத நாடாயிற்று.
பரதவ மக்களின் நாகரிகத்தில் ஓங்கிய நாடே பாரத நாடு.  பாரதம் என்பதும் அது.  இம்மக்கள் அரசோச்சிய பண்டை நிகழ்வுகளை நினைவுகூர்வதும்   மகாபாரதம் ஆகும்.

மறுபார்வை பி ன்

திங்கள், 18 நவம்பர், 2019

நந்தலாலா : லாலா இசை வருவித்தல்

நந்தலாலா என்பது வட இந்திய மொழிகளில் இன்பொருள் தருதல்போலவே தமிழிலும் இனிய பொருளைச் சேர்க்கவல்ல தொடர்.

நம் தலைவர்.
நம் தலை  >  நந்தலா.

தலை என்பது தலா என்றும் திரியும்.

தலா பத்துக் காசு என்பது தலைக்குப் பத்துக் காசு என்பதே.

கவிஞன்  மன்னவா வா\கொஞ்சவா வா என்று எழுதினால் சில சொற்களை இணைத்து இசை வருவித்தலே ஆகும்.  சில வேளைகளில் இனிமையும் சேரும்.

நம் தலா > நந்தலா-லா -  லாலா லாலா!

இப்படி வந்துறும் லாலாவிற்கும் பொருள்கூட்டிக்கொள்ளுதல் இயல்பு.

உபயம் சொல் இருபிறப்பி.

கோவிலுக்குப் போனால் உபயம் என்ற சொல்லைக் கேட்கமுடிகிறது.

இன்று எல்லாத் தெய்வங்களுக்கும் பூசனைகள் செய்தற்குக் கோயில் பயன்பாட்டினை மொத்தமாக ஒருவர் மேற்கொண்டால் அதை உபயம் என்று சொல்வர்.

இச்சொல்லை இருவிதமாக ஆய்ந்து கூறலாம்.

உ + பயம் =  உபயம்.

இங்கு வந்த பயம் என்ற சொல் பயன் என்பதன் மறுவடிவமாகும்.   பயம் > பயன்.   அல்லது பயன் > பயம். இந்தப் பயம் என்பது அச்சம் அன்று. பயம் ஆவது பயன் தருதல் பயன் படுதல்.  இதற்குரிய வினைச்சொல்:  பயத்தல்.

"என்ன பயத்ததோ சால்பு" என்ற திருக்குறள் தொடரை நினைவுகூர்க.

இது போலும் இறும் வேறு சொற்கள்:  திறம்  >< திறன்;  அறம் ><  அறன்.

உ என்பது முன் என்று பொருள்தரும்.  இது சுட்டு.

உபயம் என்பதை வேறுவிதமாகச் சொல்வதானால்  "முற்பயன்பாடு" என்னலாம்.  பயன்பாட்டுக்கு முன்னரே இடம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது புரிந்துகொள்க.


இனி,  உ+ வை + அம் = உவையம்   இதில் ஐகாரம் குறுகி :  உவயம் >  உபயம் ஆகும்.  முன்னரே வைக்கப்பட்ட நிகழ்ச்சி.  வகர - பகரப் போலித் திரிபு.  போல இருப்பது போலி.

இச்சொல் இருவழிகளிலும் பொருள்தந்து ஒன்றே முடிபாய் நிற்றலின் இருபிறப்பி ஆயிற்று.