திங்கள், 18 நவம்பர், 2019

உபயம் சொல் இருபிறப்பி.

கோவிலுக்குப் போனால் உபயம் என்ற சொல்லைக் கேட்கமுடிகிறது.

இன்று எல்லாத் தெய்வங்களுக்கும் பூசனைகள் செய்தற்குக் கோயில் பயன்பாட்டினை மொத்தமாக ஒருவர் மேற்கொண்டால் அதை உபயம் என்று சொல்வர்.

இச்சொல்லை இருவிதமாக ஆய்ந்து கூறலாம்.

உ + பயம் =  உபயம்.

இங்கு வந்த பயம் என்ற சொல் பயன் என்பதன் மறுவடிவமாகும்.   பயம் > பயன்.   அல்லது பயன் > பயம். இந்தப் பயம் என்பது அச்சம் அன்று. பயம் ஆவது பயன் தருதல் பயன் படுதல்.  இதற்குரிய வினைச்சொல்:  பயத்தல்.

"என்ன பயத்ததோ சால்பு" என்ற திருக்குறள் தொடரை நினைவுகூர்க.

இது போலும் இறும் வேறு சொற்கள்:  திறம்  >< திறன்;  அறம் ><  அறன்.

உ என்பது முன் என்று பொருள்தரும்.  இது சுட்டு.

உபயம் என்பதை வேறுவிதமாகச் சொல்வதானால்  "முற்பயன்பாடு" என்னலாம்.  பயன்பாட்டுக்கு முன்னரே இடம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது புரிந்துகொள்க.


இனி,  உ+ வை + அம் = உவையம்   இதில் ஐகாரம் குறுகி :  உவயம் >  உபயம் ஆகும்.  முன்னரே வைக்கப்பட்ட நிகழ்ச்சி.  வகர - பகரப் போலித் திரிபு.  போல இருப்பது போலி.

இச்சொல் இருவழிகளிலும் பொருள்தந்து ஒன்றே முடிபாய் நிற்றலின் இருபிறப்பி ஆயிற்று.

எழுத்துக்களும் சங்கதமும்


குறிப்பு:  சமஸ்கிருதத்துக்கு எழுத்துமைப்பு இருத்தலாகாது என்று பண்டை அறிஞர் தீர்மானித்தனர்.  மந்திரக் குரல் ஏற்ற இறக்கங்களையும் அளவுகளையும் அழுத்தம் மென்மை முதலியவற்றையும் வெளிக்கொணர எழுத்துக்கள் இயலாதவை என்பது அன்னோரின் கருத்துப்பிடியாய் இருந்தது என்று அறிக.  எழுத்தின்மையால் பல மறந்தும் இறந்தும் தொலைந்த பின்னேதானே எழுத்தினாலும் நன்மை உண்டு என்ற இணக்க அறிவும் ஏற்பட்டது.   வேதவியாசனின் தொண்டு உள்ளவையும் அழிந்துவிடாமலும் திரிந்துவிடாமலும் இருக்க ஒரு மருந்தானது.  சமஸ்கிருதத்திலும் பல்லாயிரம் ஒலிவடிவ நூல்கள் அழிந்தன. எழுத்தில்லாத பொலினீசிய மொழிகளிலும் சொற்கள் பல தொலைந்தன அறிக.  சீனாவின் கிளைமொழிகள் ஒலித்திரிபுகளால் விளைந்தவை. காரணங்கள் உள   . மண்டரின் எழுத்து மொழி இது விரியாமல் நிலைப்படுத்தியது    (18.11.2019)..

ஞாயிறு, 17 நவம்பர், 2019

சிறுமமே சிரமம்.

நம் முன்னோர் பல துன்பங்களைப் பெரியனவாய் மதிக்கவில்லை. சிலவற்றுக்கு ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் அவற்றைத் துருவி
ஆய்ந்தனர். சில உலகிற்குப் பெருமை தருவன என்றும் நினைத்தனர்.

அவர்களிடையே துன்பங்ககளின் சிறுமை பெருமை பல்வேறு கருத்துக்களையும் ஆன சொற்களையும் தோற்றுவித்தன. ஒரு சொல்லை  ஆய முற்படும் இதனில் சுருங்கக் கூறியுள்ளேம்.

இன்பங்களையும் இவ்வாறே  பெரிய சிறிய என்றனர்.

சிறிய துன்பங்கள் ஒன்றன் இடை இடைத் தோன்றி நீங்கின.  இடையிடை வருவன இடைஞ்சல்,  இடையூறு  என்றனர். முதல் இடை கடை என்று வேறுபாடின்றிச் சில துன்பங்கள்  " சிறுகு" எனப்பட்டன.  இவைகள் சிறு தொல்லைகள். ஒரு செயல்பாட்டு முன்னும் வரும், பின்னும் வரும் இடையும் வந்து குடையும் கொஞ்சம்.

சிரமம் என்பது சிறு துன்பமே.  இச்சொல் தன் பண்டை வடிவத்தில் "சிறுமம்" என்றிருந்ததற்கான சுவடுகள் அச்சொல்லிங்கண்ணே உள.  சிறுமம்  பின் சிறமம் ஆகிப் பிறழ்திருத்தமாகச் சிரமம் ஆயிற்று.  சிறுகு என்பதன் ஒப்புமையாக்கமாகவே சிறுமம் ஆகிய சிரமம் வந்துற்றது.  றகர ரகர வேறுபாடிழந்த சொற்களின் பட்டியலில் சிறுமம் > சிறமம் > சிரமமும் இடமறிந்து  புகுந்து நிற்றற்பாலது.

துன்பமோ சிரமமோ வருங்கால் நகுக.

அறிந்தீர் மகிழ்ந்தீர்.   

தட்டச்சுப் பிழைக்கு மறுபார்வை பின்.