ஞாயிறு, 3 நவம்பர், 2019

சிருஷ்டி காட்டும் சொல் அமைப்புத் தந்திரம்

உருள் >  உருட்டு,   திரள் > திரட்டு என்றெல்லாம் தமிழில் வினைச்சொற்கள் முடிகின்றன. இவற்றைப்  பார்க்கும்போது ஒரு சொற்படைப்பாளனுக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது.  "ட்டி"  என்று ஒலிக்கும்படியாக ஏன் ஒரு சொல்லைத் தோற்றுவித்தலாகாது? என்பதுதான் அது.

இறைவன் உலகின் உள்ளிருக்கும்படியாக ஒன்றைத் தோற்றுவிக்கின்றான். அதைப் புதுவிதமாகச் சொல்லவேண்டும்.

உள்ளிரு என்பதை எடுத்துக்கொண்டான்.

உள்ளிரு  >  (முறைமாற்ற )  >  இரு + உள்.

இரு + உள் +(  து + இ.)

இவற்றுள்,  இ என்பது இறுதி  வினையாக்க விகுதி.
து என்பதும் வினையாக்க விகுதிதான்.

இரு + உள்  + தி.

து+ இ இரண்டும் இணைய, தி என்றாகும்.

ள் + தி  =  டி என்றாகும்.

அகர வருக்கத்துக்கு   சகர வருக்கம் மிக்கப் பொருத்தமான  திரிபினை வழங்கும்.

எ-டு:  அமணர் >  சமணர்.
             அட்டி >  சட்டி   ( அடுதல் :  சமைத்தல்)
             எட்டி > செட்டி.
             அமை > சமை.
              அவை > சவை > சபை.

இரு + உள்  + தி  >  சிருட்டி.

சிருட்டி > சிருஷ்டி > சிருஷ்டித்தல்.

இல்லாத ஒன்றை இவ்வுலகின் உள்ளிருக்கும்படி செய்தல்.

சிருஷ்டி :  நல்லபடி அமைந்த சொல்.

எழுத்துப்பிழைகளிருப்பின் திருத்தம் பின்பு.


சனி, 2 நவம்பர், 2019

துரை என்ற சொல்

தன் கீழ் பணிபுரிவார் அ ல்லது பணிந்து நிற்பார் யாராக இருந்தாலும் அன்னவர்களை நல்லபடி பயன்படுத்திக் கொள்பவர் யாரோ அவரையே துரை என்னலாம். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவர்களுள் இத்தகைய திறன் உடையவர்களே துரைகளாக நேர்மிக்கப்ப்  பட்டனர். துரை என்பது  பதவிப் பெயர் அன்று எனினும் அவர்களைத் துரைகளாக மதிக்கத் தமிழர் அறிந்திருந்தனர்.

துர என்ற அடிச்சொல்லிலிருந்தே துரை என்ற முழுச்சொல் வருகிறது. துர+ ஐ = துரை ஆகும்.

பாரம் தாங்குவோனுக்குத் துரந்தரன் என்றும் துரந்தரி என்றும் பெயருண்டு. இது துர+அம்   (துரம்) என்பதிலிருந்தே வருவதால்  நிறுவாகப் பாரத்தைச் சுமக்கும் ஒரு பண்பு நலனையும் துர என்னும் சொல் கொண்டுமுன் நிறுத்துகிறது.

துர என்பதன் அடிச்சொல் துரு - ( துருவு  - துருவுதல்) ஆகும். எதையும் துருவிச் சென்று ஆய்தல் அல்லது நடைபெறுவித்தல் என்ற தன்மையும்கூட இதில் அடங்கியுள்ளது.

துரத்துதல் என்ற வினைச்சொல்லும் நீங்கிச் செல்வோனை விடாது பின்செல்லும் வினைத்திண்மையைக் காட்டவல்லது.

dura -  giver, granter, one who  unlocks.  Skrt. இதுவும் பொருந்தும் பொருளையே கொண்டுள்ளது.

துரப்பணம் என்பது   துளையிடுகருவி.  துர+பு+ அணம்.

ஒன்றை விரட்டிச் செல்கையில்  நாமும் முன்னைய இடத்தை நீங்கிச் செல்வதால்  தொலைவாகச் சென்றுவிடுவோம்.   இதிலிருந்து    துர+ அம் = தூரம் என்ற சொல் தோன்றுகிறது.  இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

தொல் > துர் > துர.> தூரம். 
லகர ரகரத் திரிபு.
தொல் > தொலைவு.

இவை எலாவற்றுக்கும் அடிப்படை தமிழின் துருவுதல் என்ற வினையே ஆகும்.

அறிக மகிழ்க.




 

புதன், 30 அக்டோபர், 2019

மாரன் சுகுமாரன் மாறன் என்பவை

தமிழில் மாரன், மாறன் என்று இரு ஒலியணுக்கமுடைய  சொற்கள் உள்ளன..

இதில் மாறன் என்பது பாண்டியனைக் குறிக்கும் சொல்.  சுருக்கமாகச் சொன்னால் :

மறு +  அன் = மாறன்:   அதாவது எதிரிகளை மோலோங்க விடாமல் போரில் மறுத்து நின்று வெற்றியை ஈட்டிக்கொள்பவன் என்று பொருள்.  முதனிலை  மகரம்  மா என்று நெடிலாக நீண்டது. வீரம் என்று பொருள்படும் மறம் என்பது முதனிலை நீளவில்லை. முதனிலை  நீண்ட சொற்கள் பல. அவற்றைப் பழைய இடுகைகளில் கண்டு மகிழ்க.

மாரன் என்ற சொல்  மரு+ அன் எனற்பாலது முதனிலை நீண்டு அமைந்தது ஆகும்.

மரு > மருவு:   தழுவுதல் குறிக்கும் வினைச்சொல்.

மரு +  அன்  =  மாரன்
பொருள்:  தழுவி நிற்போன். கணவன்,   காதலன்,  என்றெலாம் விரித்துக்கொள்க.

சுகுமாரன் என்பதன் முந்துவடிவம்  உகு மாரன் என்றிருந்தது தெளிவு.  உகுதலாவது  இலைபோல் வீழ்தல்.  காதலினால் வீழ்தல்.  மாரன் என்பது மேற்சொன்னதே  ஆகும்.

உகுமாரன் > சுகுமாரன்.

இது அமண் >  சமண் என்பதுபோலும் திரிபு. இவ்வரிசையில் பல காட்டியுள்ளேம்.
பழைய இடுகைகள் காண்க.

தட்டச்சுப் பிழை - திருத்தம் பின்.