வெள்ளி, 5 ஜூலை, 2019

பாசுரம்

பாசுரம் என்ற சொல்லை முன் யாம் விளக்கியதுண்டு எனினும் இது வேறு ஒரு வலைப்பூவிலிருந்து போந்தது என்பது நினைவில் உள்ளது. 

பாசுரம் என்னும் சொல் பற்றிய சிந்தனையை ஈண்டு பதிவு செய்வாம்.

பா என்பது பாட்டு என்று பொருள்படும் தமிழ்ச்சொல் தான்.

சுரத்தல் என்பது வெளிப்படுதல் என்று பொருள்படும்.  அதாவது ஒரு பெரும் பற்றாளரின் வாய்மொழி மூலமாகவோ அவர்தம் எழுத்துக்களின்  மூலமாகவே இறைப்பற்று மேலவாக எழுதரும் பாடல்களே பாசுரம் எனத்தக்கவை.

பா+  சுர +  அம் =  பாசுரம்.

இதில் ஓர் அகரம் வீழ்ந்தது  .  சுர என்பதன் ஈற்றில் அகரம்;  அம் என்பதன் தொடக்கத்தில்  ஓர் அகரம்.   ஓன்று மறைதல் வேண்டும்.  இல்லையேல் ஒரு வகர உடம்படு மெய் தோன்றும்.

மறம் > மற + அர் >  மறவர்.    மற + வ் + அர். 

--  என அறிக.

தாயுமானவர்,   அருட்பிரகாச வள்ளலார் ஆகியவர்கள் பாசுரங்களின் ஊற்றுக்கள் ஆயினர்.

எழுத்துப்பிழைத் திருத்தம் பின்.

பசுவுக்கும் பழைய புதிய சொற்கள்.

பஷ்த்தவ என்பது பசுவைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்.

ஆனால் தமிழில் பசு என்ற சொல் வழங்கிவருகிறது. இதற்கு நேரான நல்ல தமிழ் ஆ என்பது.

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.
ஆவிற்கு நீரென இரப்பினும் நாவிற்கு  ........

தமிழிலக்கியத்தில் வரும் இவ்வரிகளைத் தமிழறிந்தோர் மறத்தலும் ஒண்ணுமோ?

ஆவிற்கு இன்னொரு பெயர் உண்டாக வேண்டுமானால் அதை மிக்க எளிதாகவே உண்டாக்கி விடலாம்.  இதோ ஒரு புதிய சொல்:

பால் + சுரப்பது :
பா + சு    =  ப + சு   =  பசு ஆகிறது.

இதற்குப் பா என்ற நெடிலைக் குறிலாக்கிவிடுதலும்,  சுரத்தலுக்கு   ஒரு சு என்ற குறியை மட்டும் இட்டுக்கொள்வதும் போதும். ஒரு புதிய சொல் கிட்டிவிடுகிறது.

சொல்லொன்று புதிது கிட்டினால் சோறு கொஞ்சம் குழம்புடன் கிட்டினது போலுமே யாம்.

ஒரு சொல் வேண்டுமானால் அதைப் படைக்க, ஒரு குறிலை நெடிலாக்கலாம்;  நெடிலைக் குறிலாக்கலாம். ஒரு முழுச்சொல்லை தலையையும் வாலையும் கிள்ளிவிட்டுக் கூடையில் போட்டுக்கொள்ளலாம்.
ஒன்றுமே இப்படி நிகழ்த்தக்கூடாதாயின் எதையும் உண்டாக்க முடியாது.

புதிய சொற்களைப் படைத்தளிக்க முயல்வோர் ஏனிந்தத் தந்திரத்தைக் கையாளவில்லை?   அறியாமைதான்.

பால் தருவது பசு /  ஆ.

பால்த் தருவ    ல் >ஶ்;    தருவ > தவ    ரு > 0
= பாஷ்த்தவ

=  பஷ்த்தவ.

ஆக, இவ்வாறு சொற்களைப் படைக்க அறிவது திறமை ஆகும். 

எழுத்துப்பிழைகள் இருப்பின் பின் திருத்துவோம்.

புதன், 3 ஜூலை, 2019

ஈனம் ( இழிவு) சொல் தொடர்புகள்.

தமிழில் இகரமும் ஈகாரமும் இழிவு காட்டும் பொருளிலும் வழங்கிவந்துள்ளன.   இழிவு என்பது இளிவு என்றும் எழுதப்படுதல் உண்டு.

இழிவு என்பதன் அடிக்சொல் இள் என்பதுதான்.  இள் என்பது பிற்காலத்து  இழ் என்று மாறிற்று. இதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால்:

பா + தாள் + அம் =   பாதாளம்,  இதில் தாள் என்பது தாழ் என்ற சொல்லின் முந்து வடிவம் ஆகும்.   மேலும் தாள் என்பது கீழிருக்கும் கால்பகுதியையும் குறிப்பதை உணர்க.   பா-   பரந்து ,   தாள் = தாழ்வாக அமைந்துள்ள நிலப்பகுதியையே பாதாளம் என்று சொல்கின்றோம்.  கொள்நன் எனற்பாலது கொழுநன் என்று மாறினமையையும் கண்டு தெளிதல் வேண்டும். ழகர ளகர வேறுபாடின்றி வழங்குவனவாய சொற்களின் பட்டியலும் வரைந்துகொள்க.

இர (  இரத்தல் )  என்ற சொல்லும் ஈ  (  இரத்தற்கு ஈதல் ) என்ற சொல்லும் தொடர்புடையன.  இவை இங்கனம் மாறி ஈவோனின் செயலையும் இரப்போனின் செயலையும் முறையே குறித்தன.   இதன் திரிபு செல்நெறியை  இர >  ஈர் >  ஈ என்று அறிக.  ஈர் என்பது இழுத்தல்;  ஈ என்பது மனம் இரங்கித் தருமாறு ஒருவனை இழுத்தல் என்று உணரவே,  இவற்றின் தொடர்பு புலப்படுவதாகிறது.

உயரத்திலிருந்து நீர்போலும் போலும் பொருள்  இறங்குதல் அல்லது கீழிறங்குதல்  இழிதல் ஆகும்.  தாயின் கருப்பையிலிருந்து அவள் ஈனும் குழந்தையும்  அவணிருந்து கீழிறங்குவதே என்பதைச் சிந்தித்து உணர்தல் வேண்டும்.  ஈ > ஈன்:   கீழிறக்கம் உணர்த்தின.   இதை உணரவே ஈனம் என்னும் இழிவு குறிக்கும் சொல்லும்  கீழிறக்கமே.  இப்போது ஈன் > ஈனு(தல்) ;  ஈன் > ஈனம் (  இழிவு )  - கீழிறங்கிய தரம் குறிப்பது,  என்ற பொருண்மைச் சாயல்களை உணர்ந்துகொள்க.

சிந்திக்காதவன் இதை உணர வழியில்லை.   ஆதலின் தொடர்புகளை நன்`கு சிந்தித்து ஈனம்  என்பது தமிழிற் போந்த சொல் என்பதை உணர்ந்துகொள்க.
இதை ஹீனம் எனல் மெருகுசேர்த்தலே  அன்றிப் பிறிதில்லை.

பிழைகள் பின்விளை திரிபுகள் பின்  சரிசெய்யப்படும்.