சனி, 15 ஜூன், 2019

அந்தித்தலும் சந்தித்தலும்.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகத் திரியும் என்பதைப் பல இடுகைகளில் முன்னர் கூறியுள்ளாம். இவை மறுதலிக்க இயலாச் சான்றுகள் உடையவை.

எடுத்துக்காட்டு:   அமணர் >   சமணர்.
அட்டி >  சட்டி.  அடுதல்:  சுடுதல். சமைத்தல்.   அட்டி என்பது வழக்கிறந்த சொல்.

அந்தித்தல் என்பது சுட்டடிச் சொல்.   இதில் அகரம்  அ எனற்பாலது,  அங்கு என்று பொருள்படுவது.

இங்கிருப்பது அங்கு சென்றால் அங்கிருப்பதனோடு கூடுதலும் உளது. அங்கு ஏதுமின்றி எதிலும் கூடாமல் ஒழிதலும்  அதாவது முடிதலும் உண்டு.

எதையும் சொல்பவன் அங்கு என்பதுடன் வேறு எவ்விடத்தையும் மேலும் குறிக்காமல் கருத்தினை முடித்துவிடுதலும்  இறுதியையே அறிவிக்கும்.

அ >  அன் >  அன்+ து >    அன்று ( உண்மையில் இது அந்து என்பதன் வேறன்று, சொல்லாக்கத்தில்.)

அ > அன் து :  அந்து ( புணர்வற்ற  எழுத்து மாற்று ).
அ > அன் து :  அன்று  ( புணர்வின் காரணமான திரிபு).

அந்து என்பதை ஆங்கில எழுத்துக்களால் வரைந்தால் அன்`து என்றே வரும்;  அந்து என்பதும் வேறன்று.   0ன் =  ந்.

அங்கு போய் மற்றொன்றுடன் இணைந்தால்  அதுவே  அந்தித்தல்.  இதுபின் சந்தித்தல் என்று மாறிற்று.

அங்குபோய் எதனுடனும் கூடாமல் முடிதல் அந்துதல்.    அன்றுதலும் அது.

அன்று என்பதும் முடிந்த நாள்.  இந்நாள் எதனுடனும் கூடாமல் முடிந்தது.

அ இ என்பன சுட்டுக்கள்;  அன்,  இன் என்பன சுட்டு வளர்ச்சி.   இன்னென்னும் இறுதி ஏற்றன.  இது  (ன் என்பது மொழியில் பண்டை விகுதியாகும்).

நீ > நீன்  > நீனு என்பதில் 0ன் என்பது ஒரு விகுதி.   0னுவில் ஏறிய உகரம் ஒரு சாரியை.

யா >  யான் என்பதிலும் இன்னொற்று ஒரு விகுதியே.

மா =  விலங்கு;
மா > மான் என்பதில் 0னகர ஒற்று விகுதியாகி ஒரு புதிய சொல்லைப் பிறப்பித்தது.

கா =  காடு;   கா> கான் ( காடு என்பதே).  விகுதி பெற்றும் பொருள் மாறாமை.

சந்தித்தல் என்பதன் சொல்லாக்கம் உணர்க.

பழைய இடுகை அந்து என்பதையும் வாசிக்கவும்.  https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html


பிழைபுகின் திருத்தம் நிகழும்.

வெள்ளி, 14 ஜூன், 2019

வீட்டுக்குச் செலவு மனத்துக்கு அமைதி.

வீட்டு  முகப்பு  நாட்டும் அழகை நல்கிடாவிடில்
காட்டும் பணத்தைக் கணக்கி னின்று வெளிக்கொணர்ந்திடாய்.

ஓட்டில் புதுமை சுவரில் புதுமை ஓங்கும் புதுமைகள்
கூட்டும் வண்ணம் கட்டு மானம் உதிக்கச்செய்திடாய்

கனிந்த மனத்துத் திணிந்த அமைதி காலம்காலமாய்த்
தணிந்தி டாமல் தகுதி காணச் செலவுசெய்குவாய்.



செவ்வாய், 11 ஜூன், 2019

பிரிதலும் பிரியமும்

இப்போது பிரியம் என்ற சொல்லினை ஆய்வு செய்வோம்,

பிரிதல் என்ற தொழிற் பெயரும் பிரியோம், பிரியேன் எனவரும் வினைமுற்றுக்களும் இன்ன பிற வடிவங்களும் வேறாகுதல் கருத்தை உடையனவாய் உள்ளன. ஆயின் அயலென்று கணிக்கப்பெற்ற விருப்பம் குறிக்கும் பிரியம் என்ற சொல்லானது எதிர்மறைப்பொருளை உடையதாய் உள்ளது.

பொருண்மையில் எதிராயினும் இரண்டும் ஓரடியிற் றோன்றிய சொற்களாய் உள்ளன. உடன்பாடும் எதிர்மறையும் குறிப்பினும் ஆணும் பெண்ணும் ஒரு கருவறையினில் தோன்றியதுபோலவே இச்சொற்கள் தோன்றியுள்ளன.

காதலர் பிரியோம், பிரியோம் என்பதிலிருந்தே அவர்கள் " பிரியோம்" என்னும் உறுதி உடையவர்கள் என்று பிறர் அறிந்துகொண்டனர். பிரியோம் என்னும் உறுதியே பிரியம் ஆனது.

இது அடிச்சொல்லினின்று அமைந்த ஓர் எதிர்மறைப் புனைவு ஆகும். மொழி என்றால் பலவகைகளிலும் சொற்கள் ஏற்பட்டுப் பயன்பாட்டுக்கு வருவதே இயல்பு நிலை ஆகும். எல்லாச் சொற்களிலும் பகுதி விகுதி இடைநிலை என்று வரவேண்டுமென்பது உலக இயல்பும் சொல்லமைப்புச் சூழ்நிலைகளும் அறியான் ஒருவனின் கருத்தன்றிப் பிறிதில்லை. சில குழந்தைகள் அறுவையின் வழிப் பிறந்தவர்களாய் இருப்பதுபோலும் இது. எல்லோருக்கும் இயல்புவழி வாய்ப்பதில்லை.

இவ்வாறு எதிர்மறையின் காரணமாய் அமைந்த இன்னொரு சொல் தீட்டு என்பதாகும். தீண்டுதலால் ஏற்படுவதே தீட்டு ஆகும். தீண்டுதலால் ஏற்படும் குற்றம் என்ற பொருளில் தீண்டு என்பது வலிமிகுந்து தீட்டு ஆயிற்று. தீண்டுதல் குற்றம் எனவே தீண்டாமல் இருக்கக் கடவது என்ற குறிப்புப் பொருளும் இதனின்றே தோன்றிடு மென்பது காண்க. ­இதன் அடிச்சொல் தீள் என்பதே.

தீள் + து = தீண்டு> தீண்டுதல். ( வினையாக்கம் ) மெலித்தல் புணர்வு.
தீள் + து = தீட்டு ( வலித்தல் விகாரம் ).
தீள் + து + அல் = தீட்டுதல் ( வினையாக்கம். வலித்தல் புணர்வு )
தீள் + சை = தீட்சை ( நெற்றியில் தீட்டித் தகுதி வழங்குதல் ). இதில் சை என்பது தொழிற்பெயர் விகுதி. இதுபோல் அமைந்த இன்னொரு சொல்: திரள் + சை = திரட்சை > திராட்சை. ( கொடிமுந்திரிப் பழம்) திர என்பது திரா என்று திரிந்தது.
பரீட்சை என்ற சொல்லும் சை விகுதி உடையதே.

பரி + இடு + சை = பரிச்சை ( பரிந்து இடப்படும் தேர்வு ). பேச்சுமொழிச் சொல்.
பரி + ட் + சை = பரிட்சை ( இடு என்பது ட் என்று மட்டும் குறுகிற்று ). > பரீட்சை. ( அயல் திரிபு ) ரிகரம் ரீகாரமானது. திரட்சை எனற்பாலது திராட்சை என்று போந்தது போலும்.

பெரும்பாலும் வல்லெழுத்துக்கள் நீக்கம்பெறும். கேடுது > கேது. பீடுமன் > பீமன்.

இவை எல்லாம் எண்ணி மகிழத்தக்க ஆடல்கள்.

பிழைத்திருத்தம் பின்னர்.






ர்