வியாழன், 30 மே, 2019

பாரியை : சொல்லின் திறப்பொருள்.

பாரியை எனற்பால சொல்லை ஈண்டு கண்டு மகிழ்வோம்.

பெரும்பாலும் இல்லத்தில் தங்கி வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்பவள் இல்லாள். அவள் தங்கி இருப்பது பெரிதும் அவள்தன் மனையில். அங்கு செய்தற்குரிய அனைத்தும் அவள் செய்கிறாள். ஆகவே
அவள் " மனைவி". கணவனின் இவ்வுலகச் செலவுக்கு ( பயணத்திற்கு) அவளே துணை ஆவாள். ஆதலின் அவள் "வாழ்க்கைத்துணை". இதைச் சுருக்கித் "துணைவி" என்றும் சொல்வர். இவ்வுலகத்தில் கணவனுக்கு வேண்டிய துணைமை அனைத்தும் தருபவள் ஆதலின் அவள் தாரம் ஆகிறாள். தரு+ அம் = தாரம். வாழை தரும் பழக்குலை "தார்". பிள்ளைப்பேறு தருபவள் ஆதலின் "தாரம்" எனப் பட்டாள் என்றும் கூறுவதுண்டு.

இவற்றுள் பலவும் வீடு என்னும் வட்டத்தின் குறுக்கத்தில் எழுந்த சொல்லமைப்புகளே. ஆனால் உலகில் அனைத்திலும் கணவனுடன் அவள் இணைந்தே பயணிக்கிறாள். பாரில் இயைந்திருப்பவள் ஆதலின் அவள் "பாரியை" ஆகிறாள். இது பாரியா, பாரியாள் என்றெல்லாம் ஆனமை உலகவழக்குத் திரிபுகள். இவற்றுள் பொருளொன்றும் சிறப்பு எய்திற்றிலது.

ஞாயிறு, 26 மே, 2019

இதர என்ற சொல்


இதர என்ற சொல்லை இன்று கண்டு மகிழ்வோம்.

பதறுமனத்துடன் யானிருக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

என்ற வாக்கியத்தில் இதர என்ற சொல் வந்திருப்பதைக் காணலாம்.

இதர என்பது இங்கு மற்ற என்னும் பொருளில் வந்திருப்பதைக் காணலாம்.

இதர என்ற சொல்லின் அமைப்பு:

இது+ அற = இதர.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

இங்கு தகரம் இரட்டிக்கவில்லை. அதாவது: இதர என்பது இத்தர என்று வரவில்லை. இது + உடன் என்று இத்துடன் என்று இரட்டித்ததுபோல் இரட்டிக்கவில்லை.

இச்சொல்லில் வந்த றகரம் ரகரமாக மாறியுள்ளது. பல சொற்களில் இவ்வாறு மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டு:

தம் + திறம் = தந்திரம். இதில் திறம் என்பது திரமானது.

இங்கு திறம் என்பது தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு சொல்லின் விகுதியாக வருங்கால் அல்லது ஒரு கூட்டுச்சொல்லின் இறுதியாகவருங்கால் இவ்வாறு நிகழ்தல் காணலாம். இதர என்பது ஒரு கூட்டுச்சொல்லின் அல்லது சொற்றொடரின் திரிபு.

மன் + திறம் = மந்திரம். (மன்னுதல்: நிலைபெறுதல் நன்மைகளை

நிலைபெறுவித்தல் நோக்கமாகச் சொல்லப்படுவது மன்னும் திறத்ததான மந்திரம். )


இதர என்றால் இது அற, எனில் மற்ற என்பதாம். அறிந்து மகிழ்க.

தட்டச்சுப் பிழைத் திருத்தம் பின்.





புதன், 22 மே, 2019

நக்க சாரணர் என்போர் யார்?

அணுகுதல் என்பது அடுத்துச் செல்லுதல் அல்லது அணிமையிற் போதல் என்று விளக்கலாம்.  அணுக்கம் என்ற சொல்லும் அணுகு+ அம் =  அணுக்கம் என்று அமையும். இதில் ககரம் இரட்டித்தது.  "க்+ க் + அ"  என்று சேர்த்தால் க்க என்று  வருகையில்,  அது சேருமுன் இரண்டு ககர ஒற்றுக்கள் ( அதாவது இரண்டு ககர மெய்கள் ) வருதலை அறியலாம். இதைத்தான் இரட்டித்தல் என்று சொல்கிறோம்.  அணுகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதியாகும்.  அணு என்பதே இதிற் பகுதி என்றாலும்  அதை இன்னும் பிரித்து அண்+  உ என்னலாம்.  அப்போது உ என்பது வெறும் சாரியையே  ஆகும்.  ஆனால் அணு என்பது அதனினும் சிறுமை இல்லாத ஒரு பொருளைக் குறிக்க வருங்கால் ஈற்றில் நின்ற உகரத்தை ஒரு விகுதி எனல் வேண்டும்.

அணுகு என்பது உகரத்துக்குச் சுட்டடிப் பொருள் கூறுவதானால் அடுத்து முன் செல்லுதல் என்று கூறல் வேண்டும்.  இங்கு அடிச்சொல்லான அண் என்பதிலிருந்தே  அணம் என்ற தொழிற்பெயர் விகுதி அமைந்தது.  இவ்விகுதி வரும் சொல் :  கட்டணம்.  இன்னொன்று உட்டணம். மற்றொன்று பட்டணம். பல பட்டுகளுக்கு அருகில் அமைந்த சிறுநகரே பட்டணம் ஆகும்.  1930 வாக்கில் எழுதப்பட்ட தமிழ் நூல்களில் சென்னை,  பட்டணம் என்று குறிக்கப்பெறுதல் காணலாம்.  பெரிதும் நாகர்கள் வாழ்ந்த பட்டணம் நாகப் பட்டணம் எனப்பட்டது.  நாகப்பட்டணம், நாகூர், நாகர்கோயில் முதலான இடங்களில் நாகர் மிக்கிருந்தனர் என்று தெரிகிறது.   கடற்கரை ஓரப் பட்டணம் பட்டினம் எனப்பட்டது.  போன்மைச்  சொல்லாக்கமே இதுவும் ஆகும்.   பேச்சு வழக்கில் பலர் பட்டணம் என்றே பட்டினத்தையும் சொல்வர்.  பட்டினம் என்ற சொல் நன்`கு பதிவுபெற்ற வழக்குகள்:  பட்டினப்பாலை;  பட்டினத்துப் பிள்ளையார், காவிப்பூம்பட்டினம்.  இவற்றுள் அண்+அம் என்ற விகுதிகள் வராமல் இன்+ அம் என்பன அமைவுற்றன.  நாகர் யார் என்பதில் ஒருமித்த கருத்து ஆய்வாளரிடை இல்லை.  நாகர் என்போர் நாகத்தை வணங்கியோர் என்று சிலரும்  நாகர் என்போர் ஓரினத்தினர் என்று வேறுசிலரும் கருத்துரைத்துள்ளனர்.  எவ்வாறு ஆயினும் ஒரு சோழ மன்னன் ஒரு நாகக் கன்னிகையை  மணந்துகொண்ட பின் அவர்கள் தமிழரசர்களின் பாங்கில் மிகுந்த பற்றன்பு   (விசுவாசம் )  உடையோராய் மாறிவிட்டனர் என்ப.  நாகர் எங்கும் பரவி இருந்தனர். வட இந்தியாவில் நாகபுரி  ( நக்புர் ) ~ யிலும் இருந்தனர்.  இவற்றை நீங்கள் ஆய்வு செய்வீர்களாக.

இவை நிற்க,  அணம் என்ற விகுதி உணர்க.   ஓரிடத்தைச் சார்ந்து  அணுக்கமாக வாழ்ந்த அவர்கள் சாரணர் என்று குறிக்கப்பட்டனர்.   சார் + அணம் + அர் =  சாரணர்.  இதில் மகர ஒற்று வீழ்ந்தது.   இவர்கள் உடலில் நல்ல நிறமுடையோராய் இருந்தனர்.   ஆதலால்   " நக்க சாரணர் "  எனப்பட்டனர்.  நகுதல் :  ஒளி வீசுதல்.  Gregarious people with good skin colour என்பதே நக்க சாரணர் என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு.  ஒளிவீசும் நட்சத்திரங்கள் உண்மையில் நக்கத்திரங்களே.  இருளில் நகுவன அவை.  புகு >  புக்க; நகு > நக்க; தகு > தக்க; பகு > பக்க.

பலர் ஒக்க இருக்குமிடமே ஒக்கம்:  மாறோக்கத்து நப்பசலையார் என்ற சங்கப் புலவர் பெயர் காண்க.   ஒகுதல் என்ற சொல் வழக்கிறந்தது.  ஒக்குதல் என்ற பிறவினையும் ஒக்குவித்தல் என்ற பிறவினையின் பிறவினையும் இருக்கின்றன.

  ஒக்கம் = கிராமம்     கிராமமமா?   இது கமம் என்ற பழந்தமிழ் சொல்லின் திரிபு.

எகு ( இது இப்போது இல்லை) > எகுதல் >  எக்குதல்..  எக்கி ஒன்றை எடுத்தல்.
தன்னை நீட்சி  செய்துகொள்ளுதல்.  எகு > எக்க..

அணுக்கமாக நின்று  அல்லது அணவி நின்று தொண்டு செய்வோரைச் சாரணர் என்றது மிக்கப் பொருத்தம்தான்.

இன்று ஓர் எல்லைக்குள் நின்று சிந்திக்காமல் விடுதலைப் பறவைபோலும் எண்ணியவிடத்துப் பறந்து கருத்துக்களை வீசியுள்ளேன். எனக்கு ஆனந்தம்; உங்களுக்குச் சற்று கடினமானாலும் கூடுமானவரை தமிழைச் சுவைப்பீராக. கடினத்தை மறப்பீராக.

மீள்பார்வை பின்