செவ்வாய், 7 மே, 2019

சொல்லிக் கட்டுவது சொக்கட்டான்


இன்று சொக்கட்டான் என்ற சொல்லின் அமைப்பினை அறிந்துகொள்வோம்.

இதைச் சுருக்கமாகவே சொல்லிவிடலாம்.

இந்த ஆட்டத்தில் ஒரு தொகையையோ பொருளையோ சொல்லி முன்வைத்து பகடைகளை உருட்டத் தொடங்குவர்.

ஆகவே சொல்லிப் பணம் கட்டுவது அல்லது பொருளைக் கட்டுவது தான் சொல்+ கட்டான் = சொற்கட்டான் ஆனது.

நாளடைவில் இது திரிந்து சொக்கட்டான் ஆயிற்று. ஆகவே தொல்காப்பியரின் சொல்லியலின்படி இது ஒரு திரிசொல் ஆகும்.

சொற்கட்டான் > சொக்கட்டான்.

இதுபோன்று அமைந்த இன்னொரு சொல்: சிக்கட்டான் என்பது ஆகும். சிக்கட்டான் என்பது ஒரு பேச்சுமொழிச் சொல். எழுத்துத் தமிழில் இது காணக் கிட்டிற்றிலது.

சில் + கட்டான் = சிற்கட்டான் > சிக்கட்டான்.

இச்சொல்லும் ஒரு முன் இடுகையில் விளக்கப்பட்டுள்ளது.

சிறு + கட்டு + ஆன் = சிக்கட்டான் எனினும் அது. இதில் றுகரம் வீழ்ந்தது.

காரணம்: சில் = சிறு. எண்ணிக்கைச் சிறுமையும் உருவச் சிறுமையும் எனச் சிறுமை இருவகை.

உருட்டும் பகடையைச் சொக்கட்டான் எனின் அது ஆகுபெயர்.

எனவே சொக்கட்டான் என்பதை அறிந்து மகிழ்க.

மீள்பார்வை பின் நிகழும்.



ஞாயிறு, 5 மே, 2019

கொப்பரைகள் இரண்டு - எவை எவை?

இன்று கொப்பரை என்ற சொல்லைப் பார்ப்போம்.

நாம் இங்கு கொப்பரை என்று நோக்கப்போவது காய்ந்த தேங்காயின் உள்ளீடு ஆகும்.

தேங்காயின் மட்டை நார் முதலிய நீக்கப்பட்டால் அதன் கொழுவிய பகுதி உள்ளிருப்பதே.

அக்கொழுவிய பகுதி  காய்ந்து இறுகியே கொப்பரை ஆகிறது.

கொழுவிய மெல்லீடு காய்ந்து சுருங்கிவிடும். கெட்டியாகும்.

கொழுப்பு+ அரு(வு) + ஐ.

அருவுதல் :  உருவில் அல்லது அளவில் குறைதல்.

கொழுப்பரை >  கொப்பரை என்பது இடைக்குறை.

 இது விழுபுலம் என்பது விபுலம் என்றானது போல்வது   ஆகும்.

கொப்பரை என்பது கொதி கொள்கலத்திற்கும் பெயராய் உள்ளது.  ஆயின்  இது  கொதிப்பரை   ( கொதித்து அருவுதல் கொள்வது ) என்பதன் இடைக்குறை ஆகும்.

இரு சொல்லமைப்புகள் ஓர் முடிபு கொள்ளுதலின் காரணம்,  அவற்றை வேறுபடுத்திய எழுத்துகள் இடைக்குறை ஆனமையே ஆகும். ஒன்றில் தி என்பதும் இன்னொன்றில் ழு என்பதும் மறைந்தன.

கொழுப்பு அருவுதலும் கொதிப்பினால் அருவுதலும்  என இவ்விரண்டில் கொதித்து அருவுதல் கொள்கலத்தில் இடுபொருளே. பின்னது கொள்கலத்தைக் குறித்தல் ஆகுபெயராகும்.

தமிழில் இடைக்குறைச் சொற்கள் பல.  அவற்றுள் சில ஈண்டு விளக்கப்பட்டன

மீள்பார்வை பின்

சிக்கட்டான் குழந்தை / பிள்ளை (வழக்கு)

சிலருக்கு உடலில் ஒரு "கட்டு" ( கட்டுதல், கட்டப்பட்டதுபோன்ற உடல் ) இருப்பதாகப்  பேச்சில் வழங்குகிறது.  கட்டான அளவு,  கட்டான உருவம் என்று சொல்வதுண்டு.

பிறந்து ஓர் அகவை கடந்த குழந்தைகளில் சில உடல் "கொழகொழ" என்று சற்றுப் பருமனாக இருப்பதுமுண்டு. சில இன்னும் மென்மை மாறாவிடினும் இந்தக் கொழகொழப்பு இல்லாமல் அல்லது குறைவாக இருப்பதுபோல் காணப்படுதலும் உண்டு. இதுபோலும் குழந்தைகட்குக் "கட்டு" இருப்பதாகக் கூறுவதுண்டு.

சிறிதாகவும் கட்டாகவும் இருக்கும் குழந்தையைச் சிக்கட்டான் குழந்தை என்பர்.

" ஒரு சிக்கட்டான் குழந்தையுடன் அவள் பூசைக்கு வந்திருந்தாள்" என்று கூறும்போது இந்தச் சொல் நினைவு கூர முன்னிற்கின்றது.  இச்சொல் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

சிறு + கட்டு +  ஆன்
=  சிறுகட்டான்
=  சிக்கட்டான்.

இந்தத் திரிபில் று எனற ஓர் எழுத்து மட்டும் கெட்டது அல்லது மறைந்தது.

சிறு >  சி > சி+ கட்டான் = சிக்கட்டான்  என்றாகும்.  இலக்கணத்தில் இது இடைக்குறை எனப்படும்.

சிறு என்பதன் மூலம் சில் என்பதே.

சில் > சிறு.

ஆகையால் சிறு என்பதிலிருந்து புறப்படாமல் சில் என்பதிலிருந்து தொடங்கலாம்.

சில்  > சி.  (  இது கடைக்குறை ).
சி + கட்டு + ஆன் = சிக்கட்டான்

என்று விளக்கினும் இதிலோர் கருதத் தக்க வேற்றுமை இல்லை என்பதறிக.

மீள்பார்வை பின்னர் நிகழும்.