ஞாயிறு, 20 ஜனவரி, 2019

வேடம்: டகரத்துக்கு ஷகரம்.

சில மொழிகளில் ட என்பதும் த என்பது ஷ என்றும் ஸ என்றும் ஒலிக்கும். இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

இதை நீங்கள் சில அன்றாடச்  சொல்வழக்குகளி   லிருந்து  அறிந்துகொள்ளலாம்.

ஒத்நீல் என்ற பெயர் ஒஸ்நீல் என்று ஒலிக்கப்பெறுகிறது.
ஒத்மான் என்று  எழுதிவைத்து விட்டு ஒஸ்மான் என்று அழைக்கிறார்கள்.

சில மொழிகளில் ஓர் எழுத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிகள் இருக்கின்றன.  ஆனால் தமிழில் ஓர் எழுத்துக்கு ஓர் ஒலியே உள்ளது.  இது மொழிமரபு..

டி ஐ ஓ என் என்ற எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலப் பின்னொட்டுக்கு ஷன் என்ற ஒலித்தரவு உள்ளது.  சிட்டுவேஷன் என்பதை எழுதிப் பார்த்தால் டி என்ற எழுத்துக்கு ஷ என்ற ஒலி வரும்.

வேடம் என்ற சொல் பின்  வேஷம் என்று மெருகு பெற்றுள்ளது. டவுக்கு ஷ வந்தது.   சரிதானே? சிற்றூரார் இதனை வேசம் என்று சொல்வர்.  தமிழிலும் டகரத்துக்கு  மெலித்த சகரமும்  அயல் ஒலி ஷகரமும் பயன்பாடு கண்டுள்ளன.   இது தமிழின் ஒலிமரபுக்கு ஒத்ததன்று என்பது நீங்கள் அறிந்ததே.  பிராமணரான தொல்காப்பியனாரே அதை ஒத்துக்கொள்ளவில்லை என்பர்.  வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ என்ற நூற்பாவை நோக்குக.

வேஷம் என்பது வடசொல்.  வேடம் என்பது தமிழ்ச்சொல்.  தமிழ் நாட்டில் இருக்கும்போது வேட்டி கட்டிக்கொண்டால் இங்கிலாந்துக்குப் போனவுடன் கால்சட்டை போட்டுக்கொள்ளலாம். மனிதன் அவன் தான்.  வேடம் வேறுவேறு.

சமஸ்கிருதம்  மேலைத்தரவு என்று நினைத்தால் வேடம் என்பதன் மூலம் வே என்ற தமிழே.   அது உள்நாட்டு மொழி என்பதனால் வே என்பது இரண்டுக்கும் பொதுவான அடிச்சொல் என்னலாம். ஏனென்றால் அடுத்தடுத்து வாழ்ந்த குகை மாந்தர்கள் இந்த ஒரே வே என்ற அடிச்சொல்லைப் பகிர்ந்து பேசி இருக்கலாம்.

வேடு என்பது பானையின் வாயில் கட்டப்படும் மூடுதுணி ஆகும்.  தயிர்ப்பானைக்கு வேடு கட்டிப் பூச்சி புழுக்கள் உள்ளே போய்விடாதபடி காப்பது பண்டை வழக்கம். இப்போதெல்லாம் ஒரு மூடியைப் போட்டு வைக்கின்றனர். தயிர் வந்துவிடுகின்றது.  உறைமோர் ஊற்றித்தான் அது வரும்.

வே என்பது மேல் துணியால் போர்த்துவதைக் குறிக்கும்.  அதுபின் வேய் என்று நீண்டு  வேய்தல் என்று வினைச்சொல் ஆகும்.   முடியை வேய்ந்து கொண்டவனே  வேய்ந்தன் >  வேந்தன் ஆனான். யகர ஒற்று விடப்பட்டதற்குக் காரணம் மூலச் சொல் வே என்பதுதான்.  வே என்ற அடி, சொற்களில் பதிவு பெற்றிருந்தாலும் தனிச்சொல்லாக இன்று வழங்கவில்லை. இறந்துவிட்ட பாட்டி மாதிரி ஆகிவிட்டது.

வே > வேள் என்பதும் அன்னது.  அவனுக்கு முடி இல்லை என்றாலும் ஒரு துணியைத் தலையில் கட்டிக்கொண்டுதான் அவையில் அமர்ந்தான். அதனால் வேள் ஆனான்.  வே என்ற அடிச்சொல் பல்பொருள் ஓரடிச் சொல் ஆகும்.  அதற்கு வெம்மை என்ற பொருளும் உள்ளதன்றோ?  வேளான்மை  வேட்டல் வேள்வி  வேட்பு என்பன பிற.

சீனமொழியில் ஓரெழுத்துக்கு ஒரு சொல் ஒரு பொருள். ஒரு சொல்லொலி எடுப்பிலும் படுப்பிலும் பொருள் வேறுபடும்.  ஆரோகணம் அவரோகணம் மாதிரி.   சில கூட்டுச் சொற்களும் உள.  அவ்யோங்க்  என்பது போல.  தமிழில் சொற்கள் விகுதி பெற்றுச் சமத்கிருதம்  ( குறிப்பு:   த் <> ஸ் )  போல் மிகும். இம்மிகுதியே விகுதி எனப்பட்டது.  மிஞ்சு >  விஞ்சு என்பதுபோலும் திரிபு.

வே > வேய்
வே >  வேள்
வே > வேள் > வேடு >

வேடு > வேடம்.

இன்னும் பல.  பிற பின். நன்றி.

பிழைகள் இருப்பினும் புகுத்தப்படினும் பின் திருத்தம் பெறும்.

கூஜா சொல்லமைப்பு

டகரம் அயற்றிரிபாய் ஜகரமாகு மென்பதை முன்னர் உணர்த்தியுள்ளோம்.

இது தமிழ் சங்கதத் தாவல்களில் மட்டுமின்றிப் பிற மொழிகளிலும் வரும்.

படி ( படித்தல் )   :   பஜி.

பாண்டுரங்க நாமம்
பஜி மனமே.  (பாடல்.)

இது படி அல்லது பாடு என்று பொருள்தரும்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

கடை: கடைதல்.

கடை + அம் >   கடம்  > கஜம்.  (  கடைந்ததுபோலும் முகம்),   வழக்குப்பொருள்: யானை.

பிற மொழிகளில் இதுபோலும் திரிபு உண்டு.   எடுத்துக்காட்டு:

எஜ்  (  பொருள்:  நான் )  குர்திய மொழி.
எஜம் (  அவஸ்தான் )
அடம்  ( பழைய பாரசீக மொழி).   இது அகர எகரத் திரிபு,

ஆங்கிலத்தில் ஏ  ஆ இரண்டும் இடத்திற்கேற்ப மயங்கும்,

ஏப்  ( எழுத்துக்கூட்டலில் ஆப் ).

ஆ - ஏ தொடர்பு பல மொழிகளில் உண்டு.

மேஜர்  (  மெய்ஜ் அர்)    குரிதியம்
மேற்றத்  அல்லது மேட்டத்.       உருசிய மொழி.

ஹாட்யாய்  =  ஹாஜ்யாய்    தாய்லாந்து மொழி  ட் > ஜ்

இங்கு ஜ என்பது ட என்று  திரிந்தது. டவுக்கு அண்மிய ஒலிச்சொற்களும் மேலே காட்டப்பட்டன.

முன் காலத்தில் (  ஏறத்தாழ இருநூறு ஆண்டுகட்கு முன் வரை )  சிற்றூர் மக்கள் தொன்னைகளில் கஞ்சி உண்டனர்.  இவை ஓலைகளால் திறமையாகக் கைப்பின்னலாகச் செய்யப்பட்டவை.  தண்ணீர் கீழ் ஒழுகிவிடாமல் அழகாகப் பின்னப்பட்டிருக்கும்.  இவற்றைப் பொருட்காட்சி சாலைகளில் கிட்டினால் பாருங்கள்.  நமக்கு இப்படி ஏதும் பின்னத் தெரியவில்லை. காட்டுவாசிகட்கு நன்றாகத் தெரிகிறது.  பழங்காலத்தில் கூஜாக்களும் இப்படித்தான் ஓலைகளால் உருவமைக்கப்பட்டன.  கூடுபோல் பின்னினர்.  பின்னர் மண்ணாலும் பளிங்கினாலும் வெள்ளியினாலும் பொன்னாலும் செய்யப்பட்டன.  காலம் இடம் இவற்றைத் தீர்மானித்தன.

கூடு ( வினைச்சொல்)  கூடுதல். ஒன்றுசேர்த்துப் பின்னுதல்.

கூடு >  கூஜ் > கூஜா.  அல்லது கூடா  ( கூடு+ ஆ)  > கூஜா.

ஆ தொழிற்பெயர் விகுதி.   கூஜா என்பது அயலிலும் வழங்கும் சொல்.

திருத்தம் பின்
திருத்தம் பின் என்றால் எழுத்துப்பிழைத் திருத்தம்,  தன் திருத்த மென்பொருள் கோளாற்றினல்  பின்னர் வந்து சேரும் பிழைகள்,  வெளியார் தலையீட்டினால் புகுத்தப்படும் அனுமதி இல்லாத திருத்தம் என்பவைதாம்.   கருத்தில் திருத்தம் செய்யவேண்டிய நிலையைக் குறிக்கமாட்டாது.

குறிப்பு:

கோளாறு + இன் + ஆல் = கோளாற்றினால்.  கோளாறு எனில் அறிஞர் சரியென்று கொண்டதை (  கோள் ) (  அறு >) ஆறு -  அறுத்து முரண்படுத்துவது என்பது பொருள் .

மறுபார்வை:   21.11.2019ல் செய்யப்பட்டது.




சனி, 19 ஜனவரி, 2019

எமன் அமைப்பில் ( ஜனநாயகம்) மக்களாட்சிமை இல்லை!

ஒரு நாட்டில் எதிர்கட்சிகள் கூடி மக்களாட்சித் தன்மை அழிந்துவருகிறது என்று ஓலமிட்டனர்.

நாட்டில் ஒரே எமன்  இருந்தால்  அது சரியில்லை.  ஒரே எமன் எல்லாவற்றையும் முடிவு செய்வது போல இருப்பதால் மக்களாட்சி முறைக்கு அது எதிர்த்தன்மை உடையது என்று எதிர்க்கட்சிகள் முழங்கின.

எதற்கும் ஒரு மாற்று மருந்து இருக்கவேண்டுமே!

சரி, ஒரு குழுவை அமைத்து நாட்டை நடத்துவோம்.  ஒரே எமன் போய் ஒரு நாட்டை ஆளுவது போல் இல்லாமல்  எமக்குழு ஒன்று  ஆட்சியில் இருப்பதுபோல் இருந்தால் எந்த உயிரை எப்போது வாங்குவது என்று எளிதாகவே  முடிவு செய்து விடலாம்.  எல்லா உயிர்களும் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்.

செய்தியாளர்களுக்கு இது மாறுபாடாகத் தோன்றியது.  ஒரே எமன் நடமாடுவதையே இப்போது  செரிமானம் செய்துகொள்ள முடியவில்லை. ஒரு குழு நடமாடினால்  எம நடமாட்டம் பல மடங்காக அல்லவோ கூடிப்போகும்?

இப்படி அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

குழு எமன்`களா  அல்லது ஒற்றை எமனா என்று பரிந்துரை செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தார்கள்.

எமன் அமைப்பில் மக்களாட்சித் தன்மை இல்லைதான்.  என்ன செய்வது என்பதுதான் புரியவில்லை.  பல எமன்`கள் முறைக்கு  எப்படி வாக்களிப்பது என்று மக்களுக்கும் மருட்சியாகவே இருந்தது.