வெள்ளி, 18 ஜனவரி, 2019

சக்தி சத்தி என்பவை

இன்று   சக்தி  என்ற சொல்லின் அமைப்பை அறிந்துகொள்வோம்.

இச்சொல் தமிழில் பண்டைக் காலம் தொட்டு வழங்கி வந்தாலும்  சக்தி என்ற சொல்வடிவம்  சங்க இலக்கியங்களில் காணக் கிட்டுவதில்லை. பழந்தமிழில் சக்தி என்பது சத்தி என்றும் பக்தி என்பது பத்தி என்றும் முக்தி என்பது முத்தி என்றுமே வழங்கின.

பக்தி என்பது முன் பற்றி > பத்தி என்பதுதான்.

பற்று :  தெய்வப்பற்று.  பற்றி :  பற்றுடன் இருத்தல்.  இது பத்தி என்று திரிந்து
வழக்குப்பெற்ற போது பற்றி என்பது வழக்கிறந்தது.

பத்து  ( பற்று)  எனவே வழங்கியிருக்கலாம்  ஆனால் பத்து என்பது ஒருவிதச்
 சொறியையும் குறித்த காரணத்தால் வேறுபடுத்தப் பத்தி என்று திரியவேண்டியதாயிற்று.

முக்தி என்பது முற்று > முத்து > முத்தி > முக்தி என்பதே.
இது முது > முத்து >  முத்தி >  முக்தி  எனினுமாம்.

முத்தி என்பது  சிறுபிள்ளைகட்குப் பெரியோர் கொடுக்கும் முத்தத்தையும் குறித்ததால் முக்தி என்பது பின்னாளில் திரிந்து  இறைப்பற்று முதிர்வில் அடையும் வெற்றிநிலையைக் குறித்தது.

ஆனால் சக்தி என்பது சற்று வேறு விதமாக அமைந்தது.  எப்படி என்று பார்ப்போம்.

சக்தி என்பதன் முந்து வடிவு சத்தி என்பது.

முருகப் பெருமானுக்குச் சத்திவேல் என்றும் பெயருண்டு.

சத்தி என்பது முந்துவடிவில்  சத்து என்பது,

சத்து என்பதோ முன்வடிவில்  தத்து என்பதாம்.

தத்து என்பது தன்னுடையது என்று பொருள்படும்.

தன் து  >  தத் து > சத்து >  சத்தி >  சக்தி  ஆகும்.

தான் >  தன் :    தன் து.   அதாவது தன்னது, தன்னிலிருந்து வெளிப்படுவது.

து என்பது உடையதாதல் என்பதை உணர்த்துவது,

குழாம் > குழாத்து:   குழாமினுடையது.
உடை > உடைத்து :  உடையது.
முதல் >  முதற்று  முதலாக உடையது.   முதல் து என்பதே இது.

ஆகவே  தத் து என்பது தன்னில் இருப்பது;  ஒரு பொருளில் அல்லது உயிரியில் இருந்து வெளிப்படுவது.   உயிரி -  பிராணி.

தன் >  த  என்பது கடைக்குறை.

த + து =  தத்து > சத்து .

தகரம் சகராமாய்த் திரியும்.

தனி > சனி  (  தனித்தன்மை வாய்ந்த கிரகம்)
தம் >  சம்.    தம் என்பது பன்மை;  தம் என்பது இரண்டு அல்லது  அதற்கு மேற்பட்ட தன்-கள் சேர்ந்தது   ஆகும்.
தங்கு  >  சங்கு    (  ஓர் உயிரி தங்கி இருக்கும் கூடு)
இவ்வாறு பல உள.

தத்து சத்து என்பவற்றில் இடை வந்த தகர ஒற்று புணர்ச்சியினால் வந்தது.

அம்மனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் சத்தி  அல்லது சக்தி.
அதாவது அம்மன் தன்னிலிருந்து வெளிப்படுவது தன்னதாய்க் காட்டுவதும் ஆகும்.

இவ்வாறு  உணர்ந்துகொள்க.





வியாழன், 17 ஜனவரி, 2019

வன்மை பயில்வார்

நாயினைப் பூனையை வீட்டுள் பழக்கியவன்
பாய்புலி சிங்கம்பால் தோற்றானே-----சாய்வறிந்தான்
வாய்க்குச்சோ றிட்டாலும் வன்மை பயில்வாரைத்
தோய்க்குநட் பில்லை துணி. 

பாய்புலி -  வினைத்தொகை:  பாயும்புலி
சாய்வு - எப்பக்கம் எது என்னும் தன்மை
வன்மை -  வலக்காரம்  (பலத்தகாரம் )
தோய்க்கு -  தோய்க்கும். ஈடுபடுத்தும்.
அன்புத் தொடர்பில் ஈடுபடுத்தும்.
துணி -  துணிவுகொள்;  அல்லது வெட்டிவிடு
( இருவாறு பொருள் கொள்ளலாம்).
துணித்தல் :  வெட்டுதல்.

சிங்கம் :  அரிமா.
சிங்கம் பற்றிய சொல்லமைப்பு அறிய:
 https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_88.html


புதன், 16 ஜனவரி, 2019

ழகர ளகர லகரப் போலிச் சொல்

சில சொற்களில் எழுத்து மாறினாலும் பொருள் மாறுவதில்லை. இவற்றை இலக்கணியர் போலி என்று குறித்தனர். போலி எனின் போல இருப்பது என்பதே நாமறிவதாகும்.  தமிழில் போலிச் சொற்கள் போதுமான அளவில் கிடைக்கின்றன.

பழம் என்ற சொல் போலியாகப் பலம் என்று வரும்.  சென்னை நகரில் மாம்பழங்கள் மிகுதியாகக் கிடைத்த இடத்திற்கு  மாம்பழம் என்ற பெயரையே வைத்தனர்.  மாம்பழம் என்பது பழத்தைக் குறித்துப் பொருள்மாறாட்டம் ஏற்படுத்தியதால் அதை மாம்பலம் என்று மாற்றிச்சொல்லிப் பொருளில் ஏற்பட்ட குழப்படியைத் தவிர்த்தது ஒரு திறனே  ஆகும்.

பழம் என்பது பயம் என்று ஒலிக்கப்படுவதும் உண்டு.  இலந்தைப் பயம் என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.

மரத்தின் பயனே பழம் என்பதை உணர அதிகம் தெரியவேண்டியதில்லை. பயனாவது மரம் பயப்பது.  மரம் வெளிக்கொணரும் பொருள்.

பழம் பயம் பலம் பழன் பயன் பலன் என்று பல வடிவங்களில் இச்சொல் போதரும் என்றாலும் எழுத்தில் இப்போது பழம் என்பதே திருத்தமான வடிவம் என்று எழுதுவோரும் படிப்போரும் நினைத்துக்கொள்கிறார்கள்.  திருத்தமான வடிவம் என்று ஒன்று உலகில் இல்லை. பலராலும் இது சரி என்று ஒப்புக்கொள்ளப்படுவதே திருந்திய வடிவம்.  ஒரு சொல்லில் இருப்பதெல்லாம் வாயொலிதான்.  வாயினால் ஒன்றை உச்சரிப்பதன் தேவை பொருளைக் கேட்போனுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை. சொல்வதைச் சரியாக உணர்த்துவதே சொல்லின்  வேலை; அதையது செய்து வெற்றிபெறுமாயின் அது ஏற்றுக் கொள்வதற்  குரிய   தாகிவிடும்.

ழகர ஒலி இல்லாத மொழிக்குப் பழம் என்ற சொல் தாவிச் செல்லுமாயின் அது பலம் என்ற வடிவைத்தான் மேற்கொள்ளவேண்டும்.  சங்கத மொழியில் ( சமஸ்கிருதத்தில் )  ழகரம் இல்லை.  ஆகவே அங்குப் பலம் என்ற சொல்லே ஏற்றுக்கொள்ளப்படுவ தாயிற்று.  பலம் பின்னர் இந்திக்கும் அங்கிருந்து உருதுவிற்கும் சென்றது.  பலத்தின் பொருள் பழமே.

ஞானத்தை வழங்குபவன் முருகப்பெருமான்.

ஞானத்தைப் பயப்போன். 

ஞானத்தைப் பயனாகத் தருவோன்,  எனவே அவன்  ஞானப்பழம் எனப்பட்டான்.  அவனை வணங்கினால் ஞானமுண்டாம்.

அரக்கு என்பது முத்திரை இடுவதற்குப் பயன்படும் உருகுபொருள்.   அது  வெம்மையில் உருகிப் பின் குளிரில் கட்டியாகிவிடும்.  கட்டியான பின்   அது சற்றுக் கடினமான மேல்தோல்போல் காகிதம்  முதலியவற்றில் ஒட்டிக்கொள்வது.  அதனால் அது தோலி எனப்பட்டது. ----   அதன் தோலாம் தன்மையினால்.

தோலி என்பது பின் தோழி என்றும் திரிந்தது.  இந்தத் தோழி என்பது திரிபுச் சொல்.  தோழன் என்பதன் பெண்பால் அன்று,  வேறு சொல்.  இந்தத் தோலின் திரிபாகிய தோழி பின் தோளி என்றும் திரிந்தது.  ஆகவே இச்சொல்லும் முந்நிலையிலும்  தோலி -  தோழி - தோலி என்று வந்துள்ளது.  இவற்றில் எதுவும் இப்போது வழக்கில் இல்லை. பழைய நூல்களில் காணின் அறிந்து மகிழ்வீர்.