சனி, 5 ஜனவரி, 2019

சிற்பி என்ற சொல்.

ஒரு பெரிய பொருள் மாதிரியிலே சிறியதாய்ச் செய்யப்படுவதே சின்னம்.

இங்கு இதில் உள்ள அடிச்சொல் சின்-  என்பதுதான்.   சின்னப் பையன், சின்னப்பா,  சின்னராசா, சின்னக்குட்டி எனப் பல கூட்டுக்கிளவிகள் உள்ளன காண்க.

எம் நெருங்கிய உறவினர் வளர்த்த நாய்க்குச் சின்னக்குட்டி என்ற பெயரைக் கொடுத்திருந்தேம்.   பெரியவகைப் பொன்மீட்பி நாய்   (  கோல்டன் ரிற்றீவர்) என்றாலும் ஒரு சின்ன உருவினதாய்த் தன்னைப் பாவித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடும் -  எம்மைக் கண்டவுடன்.  தாரா என்ற பெயர் இருந்தாலும் சின்னக்குட்டி என்றவுடன் நாலுகால் பாய்ச்சலில் வந்து மோதி நிற்கும்.  அண்மையில்தான் இறந்துபோயிற்று.

சின்ன என்ற சொல் அன்புகலந்த சொல் என்பது எம் நினைப்பு.  அது உண்மை என்பதையே மேலே யாம் தந்துள்ள வழக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

சின் என்பதன் அடிச்சொல் சில்  என்பதாகும்.

சில் > சில   ( பன்மை விகுதி  அ  )
சில் > சின்

புணரியல் அமைப்புகள்:

சில்+ நாள் =  சின்னாள்   (சின்னாட்கள் )    =  சில நாட்கள்.
(  எதிர்ச்சொல்:   பன்னாள்)

சில் + மயம்,  சில் + மையம்:   உலகாகிய பெரிய மயத்தில்  எது  உள் நிற்கிறதோ அதுவே சிறிய மயத்திலும் நிற்கின்றதென்பதால்,  சின்மயம் என்பது .  ஆன்மாவையும் அதன் சுற்றியக்கச் சார்புகளையும் உட்படுத்தும்.

௳யம்   - மையம்:   முன்னது ஐகாரக் குறுக்கம்.

சின்மதி,  சின்முத்திரை என்ற வழக்குகளும் உள.

சில் >  சிறு.
சில் > சின் > சின்னம். ( மாதிரி சிறியது)
சில் > சின் >  சின்ன
சில் < சின் >  சின்னம்  ( சிறுமை என்றும் பொருள்.)
சின் >  சின்னா   (  சிறிய குருவி).   சின்னா என்ற கோழிக்குஞ்சு -   கதை.

சின் > சின்னா பின்னம்.    இங்கு ஆ என்பது ஆகும் என்ற சொல்லின் தொகை.

இங்குள்ள மற்ற தொடர்புள்ள இடுகைகளையும் நோக்குக.

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_49.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

https://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_25.html

சிற்றம்பலம்.

சிற்பரை   :  சில் + பர + ஐ.    அம்மன்.  { பரன் > பரை ( ஐ) }   ஐ = கடவுள்.  இது
பெண்பால் விகுதியுமாகும்.

சில் என்பது ஏராளமான சொற்களில் கலந்துள்ளது.

முன் காலத்தில் சிலைகள் சிறிதாகவே செய்து வலவர்களான பின் பெரிய சிலைகளை அவர்கள் வடித்தனர்.   இது திறன் பெருக்கம் ஆகும்.

சில் >  சிற்பு > சிற்பம் > சிற்பி .
சிற்பன்,   சிற்பரன் என்பவும் காண்க,

சிற்பி என்ற சொல் பின் பெரிய உருவங்களை வடிப்போனையும் குறிக்க விரிந்தது.

ஒப்பீடு செய்து உணர்க.


திருத்தம் வேண்டின் பின்.

அடிக்குறி:

பொன்மீட்பி :  பொன்போலும் பொருட்களை மீட்கும் நாய்.  இவை பொன் நிறத்தினவாய் உள்ளன. பிற நிறத்தன உளவா என்பது தெரியவில்லை.
 

வெள்ளி, 4 ஜனவரி, 2019

நிவர்த்தி சொல்லமைப்பு.

நிவர்த்தி :  பெயர்ச்சொல்
நிவர்த்தித்தல்  -  பெயர்ச்சொல்.

நிவர்த்தி என்பதொரு புலவர் புனைவாகும்.  இது அமைந்த விதம் உரைப்போம்.

நில்  :  நிற்றல். இதில்  லகரம் போய்,  நி என்று கடைக்குறை ஆனது.

வரு :  வருதல்.   வருத்தி :  வரும்படி செய்தல்.

இது   வர்த்தி ஆனது.

வருந்துதல் குறித்த சொல்லின் வேற்றுமை

இது வருந்து என்ற சொல்லின் வேறானது,  வருந்து,  வருத்து என்பன இதனின்று போந்தவை.

நிவர்த்தி: 

ஒரு சாமி கும்பிடுமிடத்தில் பெண் போகக்கூடாது என்று  என்று விதி உள்ளது.  அங்கு ஒரு பெண் தெரியாமல் போய்விட்டதனால் சாமிக்குற்றம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் அங்கு தொழுமிடம் மாசுற்றது என்று பூசாரி கூறுகிறான்.  அந்த மாசை அகற்றிப் பழைய நிலையை வரும்படியாக அவன் சில சடங்குகளை நடத்துகிறான்.

மாசுற்றது தொடராமல் நிற்கவும்   ( நி  )
பழைய தூய்நிலை வருமாறு செய்யவும் :   ( வரு > வருத்தி > வர்த்தி,   அல்லது வர் > வரத்தி >  வர்த்தி ,   அல்லது வரு>  வர் > வர்த்தி  )  ( வர் )

தி : தொழிற்பெயர் விகுதி.

இப்போது இணைக்க:   நி + வர் + தி :  நிவர்த்தி.

எப்படிச் சொன்னாலும் அதுவே.

இந்தத் திரிபுகளைக் கவனிக்கவும்:

வா   -   ஏவல் வினை
வரு -   வினைப்பகுதி     (  வரு > வருகிறான். வருவான் ).
வ  -   வரு> வ:    ( வ >  வந்தான் ).  ( இங்கு வா என்றபாலது வ என்று குறுகிற்று).
வ  >  வர்:   பேச்சுத் திரிபு..    வர்றான், வர்ரியா
வரு > வார்:   வாராய்,  (விளி )
வார்  :   வாரான், வாரார்  (எதிர்மறை ).
வா > வார் > வாரி :   நீர்வரத்து.  நீரலைகள் வரத்து உடைய இடம்:  கடல்.
வரு +  உடு + அம் =  வருடம்.  கணக்கில் மீண்டும் மீண்டும்  வருதலை உடுத்த அல்லது கொண்ட கால அளவு.   உடு என்ற சொற்பயன்பாடு இலக்கியத் தமிழினைக் கொணர்ந்து முற்படுத்தும் அழகினது ஆம்.  இரண்டு உயிர்கள் வரின் ஒன்று தொலையும்.  ஆக ஓர் உகரம் தொலைந்தது காண்க.
வரு > வர்ஷ:  குறித்த காலத்தில் வருவதாகிய மழை.
வரு >  வரத்து:   து தொழிற்பெயர் விகுதி.    (போக்குவரத்து ).(  நீர்வரத்து  ).

நில் நி:  இது நின்றுபோனதையும் நிலையானதையும் தனித்தனியாகவோ இணைத்தோ  குறிக்கும் கடைக்குறை. நிறுத்துதலையும் சுட்டவல்லது.

வர்த்தி :   வருவித்தல்.

அதுவே நிவர்த்தி என்றறிக.





அடிக்குறிப்பு


விதத்தல்,  விதந்துரைத்தல்  என்பன பண்டைத் தமிழில் நன் `கு  வழங்கிய சொல்.   விதம் என்பது அதனின்று அமைந்த சொல்லாகும்.

வித +  அம் =  விதம்.  வித என்ற  வினையில் இறுதி அகரம்.   அம் என்ற விகுதியில் துவக்கம் அகரம்.  இவற்றுள் அகரத்தின் இரு முளைப்பில் ஒன்று அகற்றப்படும்.    வித் + அம் =  விதம் ஆகு.    விதந்து கூறுதலாவது சிறப்பாக எடுத்துரைத்தல்.

விதம் என்பது சிறப்பான ஒரு அல்லது இன்னொரு தோற்றம்.

தட்டெழுத்துப் பிழைகள் இருப்பின் பின் திருத்தம் பெறும்.

வியாழன், 3 ஜனவரி, 2019

அவசரம் ஒரு விளக்கம்

இப்போது அவசரம் என்ற சொல்லைப் புரிந்துகொள்வோம்.
இச்சொல்லில் அவம்  எனற்பால தொரு சொல்லும் சரம் எனற்பாலதொரு சொல்லும் இணைந்துள்ளன.  ஆகவே இதைக் கூட்டுச் சொல் என்று கூறலாம். அதாவது இருசொல்லொட்டுக் கிளவி ஆகும்.  ( ஆங்கிலம்:   compound word             ).

அவம் என்ற சொல்லை நுணித்துப்  பார்க்கின்  ( focus செய்யின்)  அதன் பகுதி  அவி என்பது புரியும்.

அவி + அம்   =   அவம்.

சில சமயங்களில் நெருப்பில் இடாமலே சில இலைகள், கீரைகள் காய்கறிகள் வெம்மையினால் அவிந்து விடுதல் காணலாம்.   அவிதலின் பின் பயன்பாட்டுக்கு ஒத்துவராதனவாகிவிடும்.   ஆகவே  நாம் வைத்திருந்தவை அவமாகிவிட்டன.

அவி அம் > அவம் என்பதில் அவி என்பதன் இகரம் கெட்டது அல்லது தொலைந்தது.    அதனால் அது அவ் என்ற தற்காலிக உருவைஅடைகிறது.  வ்+ அ =  வ ஆதலால் அ (வ் + அ ) ம் =  அவம்   ஆகிறது.

அவல் (  அவி + அல் ) என்பதும் இத்தகு அமைப்பினதே.   அவியல் என்ற சொல் இகரம் கெடாது நின்று இன்னொரு சொல்லைத் தந்தது அறிக.

மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு வெண்பாவில்:

" நாடகமே செய்தற் கிசைந்தாய்  அதற்கிசைய
ஆடுவம்வா நாணம் அவம் "  என்பார்.

இதற்கு நாணம் கெடுதல் தரும்,   வேண்டா என்று பொருள்.

இனிச்  சரம் என்பதென்ன?

ஒரு மலையிலிருந்து நீர் சரிந்து விழுந்து அருவியாகிறது.  நீர் சரமாக ஒழுகுகின்றது.   சரம் என்பது சரி+ அம். இதுவும் ரிகரத்தில் நின்ற இகரம் கெட்டு அம் என்னும் விகுதி பெற்று அமைந்த சொல்லே ஆகும்.  திருமண வீட்டில் சரமாக அலங்கார விளக்குகள் ஒளிர்கின்றன.   வரிசையாக இருத்தலால்   சரம் என்று சொல்கிறோம்.  சரஞ்சரமாய்க் கோத்து வைத்தேன் என்று பேசுவதைக் கேட்டிருக்கலாம்.  நீர் போன்றவை சரமாகவே ஒழுகும் ( சரியும்). இதனாலே சரம் என்பது வரிசை என்ற பொருண்மை பெற்றது.

அவசரம் அல்லது விரைவில் சரம் கெட்டுப்போகிறது.  வரிசை ஒழுங்கு இல்லையாகிறது. இதன் காரணம் விரைதல் அல்லது வேகமாதல்தான்.

விரைவும் அதன் காரணமாகிய வரிசைக் கேட்டிலும்  இது வரிசைக்கேடு என்ற சொல்லமைப்புப் பொருளைக் கொண்டு, அதைக் குறிக்காமல் அதன் காரணத்தைக் குறித்துப்    பொருள்தாவல் மேவிய சொல்.

இதன் அமைப்புப் பொருளில் இது இல்லையாதலின் இது திரிசொல் ஆகும்.
தொடர்புடைய வேறுபொருள் மேய நிகழ்வினால் என்றுணர்க.

இப்படி அமைப்புப் பொருளில் விலகி நின்று தொடர்புடைய வேறுபொருள் சுட்டிய சொற்கள் மொழியில் மிகப்பல.  அவ்வப்போது வந்துழிக் காண்க.

மறுபார்வை பின்.