வெள்ளி, 7 டிசம்பர், 2018

எளிதில் அமைப்பறிய முடியாத சொற்கள்.



இவையெல்லாம் நோக்கியவுடன் அமைப்பறிய மாட்டாதவை.

தபால்: அஞ்சலக ஊழியர் தன் பால் ( தன்னிடம் ) கொண்டுதருவதே தபால்.


என்மட்டில் இஃது ஒரு திறமுடைய சொல்லமைப்பு ஆகும். ஒரே எழுத்தை நீக்கி ஒரு சொல்லை உருவாக்கிவிட்டனர். தன் பால் என்பது ஒரு காரணமாகவும் அஞ்சல் என்பது புதியபொருளாக வும் போதருகிறது. ஆகவே காரண இடுகுறி ஆகும். இச்சொலலாக்கத்தால் வேறு சில மொழிகளும் பயன் கண்டன.

தந்தி :    தொலைச்செய்தி அலுவலகத்தின் ஊழியர் தந்து செல்வது தந்தி. 


அடிச் சொல் தா என்பது என்றாலும் தந்து என்ற எச்ச வினையி லிடுந்து நேரடியாய் அமைந்த சொல். ஏவல் வினை யிலிருந்து அமையாமல் எச்சத்திலிருந்து சொல்லமைதல் பிறமொழிகளிலும் காணப்படுவதே.

வதந்தி: வருவோர் கூறிச்செல்வதும் பெரும்பாலும் ஆதாரமற்றது ஆனதுமாம் செய்தியே வதந்தி. 
வ = வந்தவர்; தந்தி : தந்துசென்றது.

இறுதியில் நின்ற தி-யை விகுதி எனினும் திரும்பியது என்பதன் குறிப்பு எனி -னும் இழுக்கில்லை என்க. வந்தவர் தந்து ( சொல்லித்) திரும்பிவிட்டார்,  இப்போது பலராலும் சொல்லப்படுகிறது என்பதாம்.


சில சோதிடச் சொற்கள்:


சோதிடம் :


நக்கத்திரங்கள் என்னும் நட்சத்திரங்கள் ஒளியைச்சொரிகின்றன, . அஃது மட்டு மின்றி நன்மை தீமைகளையும் சொரிகின்றன. இச்சொல் சோர்தல் என்றும் திரியும். இரண்டுக்கும் கொட்டுதல். வடிதல் முதலிய பொருளுண்டு. வானுலாவும் ஒளிவீச்சு உடுக்களும் கோள்களும் அவ்வொளியை நமக்குச் சொரியவே செய்கின்றன.

சொரி > சோர்.

சோர் > சோர்தி > சோதி > ( ஜோதி> ஜ்யோதி ).

இடையில் வருமெழுத்துக்கள் மறைந்து புதிய சொற்கள் உருவாகும். எடுத்துக்காட்டுகள்:
நேர் > நேர்மித்தல் > நேமித்தல். 1
சேர் > சேர்மித்தல் > சேமித்தல்.

இன்னும் பல. இப்படி அமைந்ததே சோதி ( சோர்தி ) என்ற சொல்.
சோர்தி >  சோதி.  ர் என்ற ஒற்று மறைந்தது.
உயர்த்தி என்பது ஒஸ்தி ஆகிவிட்டால் அயலாகிவிடாது.  அதுபோலவே சோதி என்பது ஜோதி ஆயதறிக.

சோதியை சோர்தி என்று எழுதிப் படித்துக்கொண்டிருங்கள். அதனால் முட்டை உடைந்தா  போய்விடும்?

இந்த வான்வடி சோர்தி, இன்ப துன்பங்களையும் சேர்த்துச் சொரிகின்றன நம்மேல்.(இந்த நம்பிக்கை தான் சோதிடத்துக்கு அடிப்படை ) . இது மெய்ப்பிக்கவும் பொய்ப்பிக்கவும் இயலாதது. காட்டுக்குச் சென்ற காளைமாடு கதிர்மறைந்து கண் காணாத வரை கழறிக் கொண்டிருந்தாலும் பயனில்லை. காலத்தை முன்னறியக் கலைகள் அறிவியல் வேறு நம்மிடமில்லை.  சோதிடம் போன்றவை, மனிதனின் கையில் விரும்பினால் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளத் தக்க ஆயுதங்கள். கத்தியால் பழத்தை வெட்டி உண்பவன் அதைக் கடித்து உண்பவனைச் சாடவேண்டியதில்லை.  எப்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வ தென்பது உங்கள் விருப்பமாகும்.

இராசி : ஆசிட்டு இருக்குமிடம்
இரு+ ஆசி= இராசி ஆகும்

.ஆசு + இ = ஆசி. ( ஆசீர் என்பது வேறு ).


ஆசு என்பது பற்றிக்கொண்டிருத்தல்.  ஆசிரியன் என்பதற்கும் இதுவே அடிச் சொல்.


அடிக்குறிப்பு:


1 ( நியமித்தல் என்பது நில் > நி (கடைக்குறை ) > நி அம் இத்தல் .
நியமித்தல் ஆனது என்று கூறுவர்.நி+ அமைத்தல் = நியமைத்தல் > நியமித்தல். என்றும் கூறலாம். அதே. நிற்குமாறு அமைத்தல். மாறாமல் நிலைபெறுவித்தல். 


பிழைத்திருத்தம் பின்,

வியாழன், 6 டிசம்பர், 2018

இடைக்குறைகள் தெளிவாகத் தெரிவதில்லை

"இங்கே பப்பு வேகாது , நாம் வேறு கடையில் போய்ப் பார்ப்போம்"  என்று ஒருவன் இன்னொருவனிடம் சொல்லும்போது  பப்பு என்பது நமக்கு என்னவென்று தெரிகிறது.  பருப்பு என்ற சொல்லைத்தான் பப்பு என்று பேசினவன் குறுக்கிச் சொல்கிறான்.

பருப்பு என்ற சொல்லின் எழுத்து ஒன்று :  ரு -  இச்சொல்லில் மறைந்து பப்பு என்று வருவது காணலாம்,  வேகாது என்ற சொல்லும் இதை உறுதிப்படுத்துகிறது.

சில வேளைகளில் இடைக்குறைகள் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை.

மண்ணுதல் என்பது கழுவுதலை அல்லது குளித்தலைக் குறிக்கும்.  ஒளிவீசும் மணிக்குப் பெயர் அமைத்தகாலை அதனை  மண்ணி என்றுதான் சிந்தித்திருப்பர். காரணம் இந்தக் கல் தேய்த்துப் பளபளபாக்கப்பட்டுக் கழுவப்பெற்றதால் ஒளிவீசத் தொடங்கிய கல். அது பின் மணி என்று சுருங்கிவிட்டது.  இச்சொல் பிறவியில் ஓர் இடைக்குறை.  அதன் முழுவடிவம் மறைந்துவிட்டது.

BROADBAND DISRUPTION, WILL CONTINUE WHEN RESTORED







புதன், 5 டிசம்பர், 2018

மானிடன் மனிதனின் இடத்தில் இருப்போன் ஆனால் மனிதனல்லன்?

இவன் மனிதன்;  அவன் மானிடன்.

என்ன வேறுபாடு?

எம்மைப் பொறுத்த வரை, இவற்றுள் ஒரு வேறுபாடு இல்லையென்றே தோன்றுகிறது.

மன்+ இது + அன்=  மனிதன்;    மன் > மான் > மான்+ இடு+ அன், அல்லது மான்+ இடன்:  மானிடன்!

மனிதனின் இடத்தில் உள்ளவன் மானிடன் என்று வேறுசொல்லால் குறிக்கப்பெற்றாலும் அவனும் மனிதனே.

தலையமைச்சன்   இடத்தில் உள்ளவனும் தலையமைச்சன் தானே?  சில வேளைகளில் தலையமைச்சன் விடுப்பில் போனதால் இவன் அவனிடத்தில் தற்காலிகப் பணிபுரிகிறானோ?  அப்படியானால் தற்காலிக மனிதர்கள் என்று ஒரு வகையுமுண்டோ?

மனிதன் என்றால் ஓர் ஆளாய் இருப்பவன்; அதாவது விலங்காக இல்லாமல்.
மானிடனும் அவ்வாறானவனே.  இடத்தில் இருப்பவன் என்று விளக்கினாலும் அவனும் மனிதனே.  தொடக்கத்தில் இவை ஏன் இப்படி வேறுபாடாய் அமைந்தன என்று தெரியவில்லை.  இச்சொல் வடிவ வேறுபாடுகள் இவையன்றி பொருண்மையிலோர் அகல்வு இல்லை.

முற்பிறப்பில் ஒரு கழுதையாய் இருந்து இப்போது மனிதனின் இடத்தில் வைக்கப்பட்டதனால் " மானிடன்" என்று கூறுவது சிறக்கவில்லை.

சிலர் மனிதன் என்ற சொல்லை விரும்பவில்லை. சொல்லில் இடைநிலையாக இது என்ற அஃறிணைச் சொல் வருகிறதே என்றால், இங்கு அது வெறும் சொல்லாக்க இடைநிலையே அன்றித் திணை ஏதும் குறிக்கவில்லை.  சொல்லாக்கத்தில் வெறும்  நிரப்பொலியாகவே இது என்பது தோன்றுகிறது.  சொல்லுக்குள் கிடக்கும் இடைநிலைக்குத் திணை, பால், எண், இடம், வேற்றுமை என்று ஒன்றுமில்லை. சொல்லுக்கு உருவம்தர வெறும் பொம்மைப் பஞ்சடைப்பே  ஆகும். சிறந்த பொருள் காணப்படுமாயின் ஓர் இடைநிலைக்கும் பொருள்கூறுதலில் கடிவரை இலது என்று கொள்க. வந்துழிக் காண்க.

மனிதனை மனுஷ்ய, மனுஷா என்றெல்லாம் ஒலித்தால் அது ஓர் இன்னொலியாய்த் தோன்றவே, அவ்வாறு மாற்றினர் என்று தெரிகிறது.
இஃது வெறும் ஒலிமாற்று எனலாம். அயலொலி புகுத்தல்.


நீங்கள் இதையும் விரும்பக் கூடும்:

https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_4.html
அனுமான் என்ற சொல்.  இதில் மாந்தன் ( மான்+து+ அன்) என்ற சொல்லின்
முன்பகுதி  கடைத்தரவாக இருத்தல் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2018/11/blog-post_23.html
 இங்கு மந்தி  ( மன் + தி )  என்னும் சொல் விளக்கப்பட்டுள்ளது.

மந்தி :  மன்+ தி =  மன்றி என்று அமையாது.  அந்தப் புணரியல் சொல்லாக்கத்துள் பின்பற்றப்படவில்லை.  அது முழுச் சொற்கள் புணர்ச்சிக்கான கட்டளை ஆகும்.   இச்சொல்லில் மன் என்பதை நிலைமொழி என்று கூறிக்கொண்டாலும் தி என்பது வருமொழி ஆகாது என்பதுணர்ந்துகொள்க.  தி என்பது பெரிதும் தனிப்பொருள் இல்லா விகுதி. தனிச்சொல்லானாலும் தன் பொருளிழந்து வெறும் ஒட்டு ஆகிவிட்டது என்றால் அது வருமொழியன்று.
இரு முழுச்சொற்களெனினும் அவை தனித்தனிப் பொருள் குறிக்காமல் மூன்றாவது ஒரு பொருள் குறித்தால் அது புதிய சொல்லாக்கமே.  எடுத்துக்காட்டு:

சொம் + தன் + திறம் > சொதந்திரம் > ( திரிபு) சுதந்திரம்  :  ஒரு நாடு தன்னைத் தான் ஆண்டுகொள்வதென்பது புதிய பொருள்.
சொம் என்பது சொத்து என்பதன் அடிச்சொல்லுமாம்.
திறம் என்பது திரம் என்று திரிந்து வெறும் பின்னொட்டு ஆனது.

குறிப்பு:

சொம் + தம் =  சொந்தம்.  ( மெலித்தல் விகாரம் )
சொம் + து =  சொத்து  (  வலித்தல் விகாரம் )