திங்கள், 26 நவம்பர், 2018

அக்குள் ( கமுக்கட்டு ) அமைப்புச் சொல்.

அருகிலும் உங்கள் உடலின் உள்பக்கமாகவும்  உள்ள ஓரிடத்திற்கு ஒரு பெயரை அமைக்கவேண்டின் அதை எப்படி அமைப்பது?

கமுக்கட்டு என்பது மார்பு என்னும் முக்கியப் பகுதிக்கு அருகிலே இருக்கிறது.  எனவே அருகு என்ற  சொல்லை இட்டுக்கொள்ளவேண்டும்.

அருகு.

தோளின் உள்பக்கத்தைக் குறிக்கவருகிறோம்.  ஆகவே உள் என்பதையும் இடவேண்டும்.

அருகு + உள்.

இரண்டையும் சேர்த்தால்  " அருக்குள்" என்று வரக்கூடும்.

இங்கு அருகுள் என்று வராமல் ககரம் இரட்டித்தது.  இதுபோன்று இரட்டித்த வேறுசொற்களைப் பார்ப்போம்:

புகு + அகம் =  புக்ககம். ( மணமாகிப் பெண் புகுந்தவீடு.)  இது நீங்கள் அறிந்ததுதான்.

இதுபோலவே  அருகு என்பது அருக்கு என்று இரட்டித்தது.

எனவே அருகிலும் உள்பக்கமாகவும் இருப்பது அருக்குள்.

அருக்குள் என்பதில் ஓர் இடைக்குறை ஏற்படுகிறது.

அருக்குள் >   அக்குள்.

இதற்கு உதாரணங்கள் வேண்டின்:

சறுக்கரம் >  சக்கரம்.
வருக்கரம் > வக்கரம் > வக்கிரம்.
தடுக்கை > தக்கை.  ( தடுத்துநிற்கும் செருகுபொருள் ).
பகு + குடுக்கை = பக்குக்குடுக்கை > பக்குடுக்கை.அல்லது:  பகுகுடுக்கை(வினைத்தொகை ) > பக்குடுக்கை.

இப்போது ஒரு புதிய சொல் மொழிக்குக் கிட்டிற்று.  அதுதான் அருகு உள் என்பது அக்குள் என்றாயது ஆம்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

அத்தியாயம்

முன் அத்தியாயம் என்ற சொல்லினமைப்பை விளக்கியிருந்தேம்.  கள்ளமென்பொருள் அதை நீக்கிவிட்டது. 

இப்போது அதை மறுபார்வை இடுவோம்.

ஓர் அத்தியாயம் முடிந்தால் இன்னொன்று தொடங்குகிறது.  இருப்பினும் ஒரு நூலில் அத்தியாயங்கள் இயைந்தே இருக்கின்றன.

அற்று =  முடிந்து;

இயை = இணைவது.

அம் =  விகுதி.  இவ்விகுதி வேறுமொழிகளிலும் பரவி வாழ்கிறது.

அற்றியையம்

=  அத்தியாயம்.

அற்று என்பது அத்து என்று வருவது தமிழ்ப் பேச்சில்.

எ-டு:  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.

திரிபுகள் :   ற்ற > த்த

ல > ர.   இது வழக்கமான  திரிபு.

இத்திரிபுகள் பல சொற்களில் வந்துள்ளன.

சனி, 24 நவம்பர், 2018

போகாத இடந்தனிலே.......


வரவேண்டாம் என்`கின்ற கோவிலுக்குள்----- பெண்ணே

போகேனென்றே நீங்கிப்  போயின் என்ன?

தரமாட்டேன் பார்த்தருளை  என்னும்தெய்வம்---- கண்டு

தாரணியில் நீயும்பெறும் தண்மையாதோ?

 

வேறிடங்கள் கைதொழவே பெண்கட்குண்டே -----நங்காய்

வேண்டாத ஒண்தலத்துள் வீழ்தலென்னோ?

கூறிடமோ பெண்மைநீங்கு தேவனென்றார் ---- அந்தக்

கூற்றினுக்கும்  ஓர்மதிப்புக் கூர்ந்தாலென்னோ?

 

போராடிப் புண்பட்டு மீறிச்சென்று  ----- ஆங்கும்

புண்ணியங்கள் மேல்வருதல் எண்ணலாமோ?

வேரோடிப் போய்விட்ட உள்ளமைப்பை----முட்டி

வெற்றியொன்றும் சேர்வதிலை மெள்ளப்பாரே.
 
யாப்பியற் குறிப்புகள்:
இந்தச் சிந்து கவியில் ஓரடிக்கு மூன்று சீர்களும்  முதலடியும் மூன்றாம் அடியும் தனிச்சொற்களும் பெற்று வருமாறு அமைக்கப் பட்டுள்ளது. சில சீர்கள் நாலசைச் சீர்களாக வந்துள்ளன.  பொதுவொரு நாலசையே என்று காரிகை சொல்வதாலும் பண்டித ந,மு வேங்கடசாமி நாட்டார் முதலியோர் நாலசைச்சீர்களும் வரும் என்பதாலும் இதனுண்மை உணர்க. இப்பாடல் ஒரு பெண்ணை முன்னிலைப் படுத்தியுள்ளது, 
என்னோ என்பதில் ஓ அசை.